உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 2 ஜூலை, 2013

பயணங்கள் முடிவதில்லை......

                     பயணங்கள் எப்போதும் அழகானவை அதை ஏதாவது ஒரு விதத்தில் கூடுதல் அழகாக்கிப்போக  நம் எல்லாப்பயணத்திலும் ஏதோவொன்று சேர்ந்தே நம்மோடு பயணிக்கிறது. பயணங்களில் ஜன்னலோரத்து மழைதூரலாய் சிலிர்ப்பை ஏற்படுத்தும் சுகானுபவம் குழந்தைகளோடு பயணிக்கையில் மட்டும் கிடைக்கும் ஒன்று...வாழும் காலத்தில் வரங்களை கொடுப்பவர்கள் குழந்தைகளாக மட்டுமே இருக்க முடியுமென்பது எவ்வளவு பெரிய உண்மை...

           எத்தனை ஆழ்ந்த பார்வை அவர்களது, எத்தனை அழகான உலகம்,என்ன ஒரு  நேர்த்தியான சிந்தனை, , தோற்றுபோவதைக்கூட பாவத்தோடு சொல்லும் அந்த பாங்கிற்காகவாவது சின்ன சின்ன சீண்டல்களை செய்யச்சொல்கிறது மனம்.. குட்டி குட்டி பாவங்களில் தான் எத்தனை அழகான வசீகரம், பொதுவாக பயணங்கள் எல்லோருக்கும் பிடித்தமானது அதுவும் ஜன்னலோர இருக்கைகளோடு பயணிக்கையில் கிடைக்கும் சுகம் என்றைக்கும் தனியானது தான்...

          யாருமற்ற சாலை, அடர்மரங்கள் நிறைந்திருக்கும் இடங்களில் கதிரவனை தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் கிளைகள், தன் கீழ் உள்ளவர்கள் மேல் கதிர்களை படவைக்காது பாதுகாத்து சாலையின் இருபுறங்களையும் அரவணைத்திருக்க, பேச எடுக்கும் வார்த்தைகளைக்கூட களைத்துப்போடும் காற்று காதுக்குள் புகுந்து இன்னிசை நடந்த, ஒப்பனை இல்லா புன்னகை எல்லோர் உதட்டையும் மெருகேற்ற, கூடுதல் அழகாய் குழந்தைகளும் இணைந்துகொண்ட பயணத்தில்  இளையராஜாவும் இணைந்துகொண்டால், அடடா, வாழும் நாட்களுக்குள் வந்து விழுந்த சொர்க்கம் தானே.
 

          எப்போதும் எதுவும் மாறாமல் பயணப்படும் இயந்திர வாழ்க்கையில் எப்போதேனும் வந்தமரும் இம்மாதிரியான பயணங்கள் ஏதோ ஒரு மாற்றுவிசையை மனதிற்கு தந்துபோகமட்டும் மறுப்பதில்லை... இன்றைக்கும் அப்படியான பயணம் தான் தங்கையின் கல்லூரி அலுவல் விசயமாய் சிவகங்கையை நோக்கிய பயணம், எதோ ஒரு வித அயர்ச்சி ஆரம்ப நேரத்திலே உடன் அமர்ந்து கொள்ள எதையும் கவனிக்காது பயணப்பட்ட நேரத்தில் தான் உள் நுழைந்தது அக்குட்டிப்புயல், கிட்டத்தட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தன் கட்டுப்பாட்டில் அனைவரையும் கட்டிவைத்தது...உள் தைத்த என் சோகத்தின் அடர் இருளை மறைத்து பிரகாசங்களை வாரிகொடுத்தது அம்மலர்செண்டு...அவள் இறங்குவதற்கான இடம் வந்ததும் தாவிவந்து என் மடி ஏறிக்கொண்டு அக்கா உன் போனை எனக்கு தரியா, உனக்கு சாக்லெட் தாரேன்னு சொன்ன அழகில் இன்னும் இனித்துக்கிடக்கிறது மனம்... எத்தனை அழகான தேவதைகள் குழந்தைகள் அவளை அணைத்துக்கொண்ட அந்த நிமிடத்திலிருந்து கும்மாளமிட்ட மனது கிட்டத்தட்ட என் கட்டுபாட்டை இழந்து துள்ளிக்குதித்ததை நினைத்து நானே வியந்துகொண்டேன்...

       கல்லூரியை அடைவதற்கான இரண்டு மணி நேரப்பயணமும் அந்த இளம் தளிரோடு போனதில் நேரமென்பதே தெரியாமல் போனது... ஒரு வழியாய் கல்லூரியில் வேலைகளை முடித்து திரும்பையில் அதே அயர்ச்சி, பேருந்திற்கான காத்திருப்பும் கூடுதலாய் அயர்ச்சிகொடுக்க, சேர் ஆட்டோவெனும் ஆபத்பாந்தவர்களை!?... நம்பியே ஆரம்பித்தோம் நானும் என் தங்கையும். இருவர் மட்டுமான பயணம் எப்போதும் நிரம்பி வழியும் ஆட்டோவில் நானும் அவளும் மட்டும் என்பதே கூடுதல் கனமாய் தெரிய, ஏதோ சொல்லத்தெரியா பயமொன்று உள் நின்று எக்காளமிட்டது... மனதைச்சுற்றி வட்டமடிக்கும் பல எண்ணங்களில் சுற்றிய எதுவும் லயிக்கவில்லை, ஆனாலும் எதிர் இருக்கை மட்டும் வந்த பயணத்தின் குழந்தையின் முகம் கொடுத்தது இடையிடையே ஆட்டோ ஓட்டு நரின் மொபைல் பேச்சு நிழலை உடைத்து நிஜத்தை காட்டி  கூடுதல் பயம் கொடுக்க, ரேவா நீ என்ன தான் வீராப்பா பேசுனாலும் நீயும் ஒரு பெண்ணுன்னு அம்மா சொல்லும் அந்த வார்த்தை ஏனோ இன்று அதிகம் வலிக்க கொடுத்து காற்றோடு அடி நாசிவரை ஊடுருவி கிளம்ப, இடையிடையே ஓட்டு நரின் பார்வை கண்ணாடி வழியே எங்களை ஊடுருவ, கதை மாந்தர் பலர் கதை சொல்ல ஆரம்பித்தனர் மனதில், திரைகாட்சி மனதில் விரிய, கத்தியில்லாமல் சத்தமில்லாமல் ஒரு சண்டைக்காட்டி மனதோடு மல்லுக்கட்ட, பயணம் ஆரம்பிக்கையில் எடுத்த மூச்சு எங்கோ ஒரு சாலையின் முடிவில் ஒரு மூதாட்டி வந்தமர்கையில் தான் சாவகாசமாய் விட முடிந்தது... அப்பாட்டியும் அவர் பாணியில் எங்களை கடிந்து பேச ஆரம்பித்தார்..

 ஏந்த்தா படிச்ச புள்ளகளா தெரியுறீகளே இப்படியா ஒரு வயசுப்பையன் ஆட்டோல தனியா ஏறுவீக, இப்போ இந்த கிழவிய அவன் தள்ளிட்டு எதாவது பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க காலங்கெடக்கிற கெடயில....ம்ம்ம்ம் நாங்களலாம் அந்த காலத்துலன்னு கூடுதல் பயமேற்றி வெற்றிலை பாக்கை குதப்பலானார்... யாரும் ஆட்டிவிடாமலே ஆடிக்கொண்டிருந்த பயத்தின் ஊசல் பாட்டியின் பேச்சில் கூடுதலாய் ஆடத்தொடங்கியது.. 

       ஒருவழியே நெடுச்சாலைகளை கடந்து மனித நடமாட்டங்கள் ஆரம்பிக்கையில் தான் சாய்ந்து கொள்வதற்கான தைரியம் மனதில் வந்தமர்ந்தது...இறுதியாய் இரண்டு மணி நேரப்பயணம் முடியும் தருவாய் பணம் கொடுத்து திரும்புகையில்  அந்த ஆட்டோ நண்பர் 
தங்கச்சி இன்னைக்கு எம்புள்ளைக்கு பொறந்த நாளுத்தா இந்தா மிட்டாய்ன்னு நீட்டினார்...
மனம் அறுத்துக்கொண்டே பதில் பேசாது வாங்கிவந்தேன் அந்த மிட்டாயை... மனிதர்களை எடைபேடுவதில் நாம் இன்னும் மோசமான மனிதர்களாகவேதான் இருக்கிறோமென்று நினைத்துக்கொண்டேன்...இதோ கணினித்திரைக்கு மிக அருகில் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் மிட்டாய் பேப்பரில் அந்த குழந்தையும் அந்த ஆட்டோக்கார சகோதரனும்....

9 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழும் நாட்களுக்குள் வந்து விழும் சொர்க்கத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன்...

நல்ல மனம் (ஆட்டோ நண்பர்) வாழ்க...

ரசனையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்.. நன்றி..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மனிதர்களை எடைபேடுவதில் நாம் இன்னும் மோசமான மனிதர்களாகவேதான் இருக்கிறோமென்று நினைத்துக்கொண்டேன்..//

மிகவும் மோசமாகத்தான் இருக்கிறோம், அரபி பெண்கள் இப்படி குடித்து கும்மாளம் போடுறாங்களேன்னு எப்பவும் கடுப்போடுதான் இருந்தேன், அவர்களின் மனதில் இருக்கும் அன்பும், வேதனைகளும் தெரிந்த பிறகுதான் எனது மனதில் உள்ள அந்த பிம்பம் மறைந்தது.

சே. குமார் சொன்னது…

//மனிதர்களை எடைபேடுவதில் நாம் இன்னும் மோசமான மனிதர்களாகவேதான் இருக்கிறோமென்று நினைத்துக்கொண்டேன்..//

உண்மைதான்...

நல்ல பகிர்வு...

சங்கவி சொன்னது…

பயணங்கள் அழகான நினைவுகள்..

M. Reva சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...

வாழும் நாட்களுக்குள் வந்து விழும் சொர்க்கத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன்...

நல்ல மனம் (ஆட்டோ நண்பர்) வாழ்க...

ரசனையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

மிக்க நன்றி சகோ உங்களின் உற்சாகமான மறுமொழிக்கும் அன்பிற்கும்....

M. Reva சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

மனிதர்களை எடைபேடுவதில் நாம் இன்னும் மோசமான மனிதர்களாகவேதான் இருக்கிறோமென்று நினைத்துக்கொண்டேன்..//

மிகவும் மோசமாகத்தான் இருக்கிறோம், அரபி பெண்கள் இப்படி குடித்து கும்மாளம் போடுறாங்களேன்னு எப்பவும் கடுப்போடுதான் இருந்தேன், அவர்களின் மனதில் இருக்கும் அன்பும், வேதனைகளும் தெரிந்த பிறகுதான் எனது மனதில் உள்ள அந்த பிம்பம் மறைந்தது.ரொம்ப சரிதான் அண்ணா, ஒருத்தர்கிட்ட பழகுறதுக்கு முன்னாடியே இவஙக் இப்படித்தாங்கிற அபிமானம் ரொம்ப தவறுன்னு நானும் புரிஞ்சுக்கிட்டேன். அண்ணனின் வருகைக்கு நன்றி.. தொடர்ந்து வாருங்கள்....

M. Reva சொன்னது…

சே. குமார் கூறியது...

//மனிதர்களை எடைபேடுவதில் நாம் இன்னும் மோசமான மனிதர்களாகவேதான் இருக்கிறோமென்று நினைத்துக்கொண்டேன்..//

உண்மைதான்...

நல்ல பகிர்வு...

மிக்க நன்றி சகோ உங்களின் வருகைக்கும் வழக்கம் மாற உங்களின் அன்பான பின்னூட்டத்திற்கும்...

M. Reva சொன்னது…

சங்கவி கூறியது...

பயணங்கள் அழகான நினைவுகள்..

ரொம்ப சரி, பயணங்கள் அழகான நினைவுகளைத்தரும் அனுபவங்கள் தான்... உங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி... தொடரட்டும் உங்களின் வருகை...