உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 15 அக்டோபர், 2024

மழையின் பொழுதுகள்..




     



                கண்களை மூடிக்கொண்டு மனம் ஒரு தியானத்திற்கு தயாரவது என்பது என்னளவில் என்றைக்கும் நடந்தது இல்லை.. தியானத்திற்காக உட்கார்ந்த இடம் ஒன்றாகவும், யோசனை அளவில் உட்கார்ந்து இருக்கிற இடம் வேறொன்றாகவுமே எப்போதும் இருந்திருக்கிறது. இதை மற்றவர்களிடம் கேட்டு அவர்களுக்கும் அப்படி தான் நடந்திருக்கிறது என்று தெரிந்த பிறகு தான், அப்பாடா என்ற ஒரு குரல் உள்ளிருந்து வந்தது. அதையும் மீறி கண்களை மூடி ஒரு தியானம் வசப்படும் இடம் என்பது, மழைக் காலங்களில் வெயில் தங்கிப் போன சுவற்றின் மீது, தங்க அடம் பிடிக்கிற மழையின் வாசத்தை நாசி முழுக்க  உள்ளிழுக்கும் போது நடந்திருக்கிறது.  அப்படி கண்களை மூடினால் கருத்தில் நிற்கிற ஒரே புள்ளி அந்த மழை வாசம் மட்டும் தான். 

                    மழை வந்தால் மொட்டை மாடியில் மட்டுமே பார்க்க முடிகிற ஜந்து நான். மழை நீரை சேமிக்கவென்று வீட்டில் அப்பா ஏற்படுத்திக் கொடுத்த நீளக் குழாய் வழியே, ஆர்வமாய் தவழ்ந்து வருகிற பிள்ளையை அள்ளியெடுத்து கொஞ்சுகிற ஒரு அன்பின் சாயலை எப்போதும் மழை பெற்றுவிடும்.. மழை வந்தால் மழை நீரில் மட்டுமே குளிப்பேன் என்ற சிறுவயது அடத்தை மணம் இப்போது கொள்ளுமா என்பதும்  சந்தேகம் தான். வீட்டுச் செடிகளின் மீது மழைக் கழுவி விட்டுப் போன பின்னும் தங்கியிருக்கிற வாசம் மழைக்கானது மட்டும் தானே.. 

                மழை நின்ற பின் அந்த சிமெண்ட் தரைகளில் கொஞ்சம் கொஞ்சமாய் மழையின் சுவடுகள் மறைய ஆரம்பித்தாலும், அந்த குளிர் ஈரத்தை மிச்சம் வைத்திருக்கும் தரையில் படுத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் குளிர் உடலுக்குள் ஏறி, மூக்கின் நுனி மேல் மழையின் கரத்தை பெற்றுவிடும் போது உடல் முழுதும் ஒரு மழையின் பெட்டகமாக மாறியிருப்பதாய் உணர்ந்திருக்கிறேன். 

                   மழை வந்தால் மாடியின் மறைப்பில் ஒரு பிளாக் காபி + இசை + பிடித்த புத்தகம் என்று என் வீட்டு மழைக்கு துணை இருக்கிறேன் என்று நானே சொல்லிக்கொள்கிற பைத்தியக்காரத்தனமும் நடந்தது உண்டு.. 

                    இன்றைக்கான மழையை மனம் நேற்றிலிருந்தே எடைபோட தொடங்கிவிட்டது.. மழைக்குப் பழகத் தொட்டுப் பார்க்கிற விரல்கள் போய், பயந்து விடுவிக்கிற விரல்களை சில நேரங்களில் இந்த மழை பெற்றுக்கொண்டது எப்படி என்ற கேள்வி மனதிற்குள் வரமால் இல்லை.. 

                எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு சுயநலம் தன் மாபெரும் இருக்கையை இயற்கைக்கு முன்பு போட்டுக்கொண்டு உட்காரும் போதெல்லாம் இது நடக்கிறது தான்.. ஆனால்  மழையால் வளர்ந்த எனக்கு மாபெரும் கவலையாக மாறியிருப்பது எல்லாம், யப்பா.. இந்த புத்தகங்களை மட்டும் காப்பாத்திட்டா போதும் மத்த எது போனாலும் மசுரே போச்சுன்னு மனசு சொல்றதை திரும்ப திரும்ப அச போட்டுட்டே இருக்கிறேன். சோழர்கள், மாமல்லபுரம், கோபல்ல கிராமம், பாறை ஓவியங்கள்ணு கண்ணுக்குள்ள படுற எல்லா புத்தகத்துக்குப் பின்னாடியும் ஒரு தனிமனிதனோட சேர்ந்த கூட்டு வாழ்க்கை இருந்திருக்கு.. அதுக்குள்ள காற்றும் மழையும் சேர்ந்தே தானே இருக்கு.. அப்போ அந்த புத்தகத்தை தொடுறது அந்தக் காலங்களை தொடுறதும் தானேன்னா, அந்த அழிவில்லாத இயற்கைய தொடுற மாதிரி தானே.. 

                இதோ இங்க மழை வேகம் எடுத்திருச்சு.. கிரவுண்ட் ஃபுளோர் மக்களை பரிதாபமாக பார்க்கிற மக்களின் கண்கள் ஏனோ வதைக்கத் தொடங்குகிறது.. ஆனால் மழைக்கு கண் உண்டு..  நம்புறேன்..  ஆனா ஒண்ணு அழையா விருந்தாளி போல சட்டென்று வருகிற மழைக்கும், இந்த தேதியில் புயல் உருவாகி இருக்கு, மழை இத்தனை சென்டிமீட்டர்ல பெய்ய வாய்ப்பு இருக்குன்னு தீர்மானங்களோட தகவல் வழியா வந்து சேருற மழைக்கும் வேறு வேறான மனநிலை தேவைப்படுது தான்..


      

வியாழன், 10 அக்டோபர், 2024

சென்னையில் ஒரு மழை நாள்..




 நேற்று இரவில் இருந்து சென்னையில் நல்ல மழை.. ஆட்டோவை புக் செய்துவிட்டு வெளியில் வந்து பார்த்த பிறகே மேலே இருக்கிற அந்த ஸ்டேட்மெண்டை சொல்ல முடிந்தது. ஓர் உணர்வு ஸ்டேட்மெண்டாக எப்படி உருமாறியது ?

கனம்..
சென்னைக்கு வந்து கிட்டதட்ட இரண்டு வருடங்களைத் தொடப் போகிறேன். இது ஒரு பெரும் ஓட்டம்.. நெஞ்சு விம்ம விம்ம ஏங்கித் தவித்த நிமிடங்கள் எதுவும் மறப்பதற்கில்லை.. ஆனால் நான் இருக்கிறேன் என்கிற கரம் முதலில் மழையில் இருந்து தான் எனக்கு நீண்டது..
சென்னையில் ஆஸ்பெட்டாஸ் போடப்பட்ட மாடி வீடு.. கதவைத் திற காற்று வரும் என்று நித்யானந்தாவை எல்லாம் கூப்பிடாமலே வருகிற காற்று. கண் விழிப்பதற்குள் என்னை தேடி வந்துவிடுகிற வெயில், மழை நாளில் அயர்ந்து தூங்கி விட்டால் நான் வந்திருக்கேன் எவ்வளவு தெனாவட்டா தூங்குறன்னு சடசடவென்று தலைக்கு மேல் அது ஆடுகிற நடனம், இவை எல்லாம் என் பித்து. முப்பத்தைந்தை தாண்டிய பிறகே எனக்கே எனக்கென்ற தனியறை.. அழ, சிரிக்க, மணி பார்க்காமல் விழித்திருக்க , வேண்டும் போது எனக்குள் நானே நுழைந்துகொள்ள ,என்னை எதுவுமற்று ஏற்றுக்கொள்ள , என்னை நானாய் இருக்க அனுமதிக்கிற, குறிப்பாக என்னை வெளியில் தள்ளாத கதவுகளை கொண்ட வீடு..
சென்னை என்னை நிறைய முறை செவிட்டில் அறைந்திருக்கிறது.. ஆனால் திரும்ப திரும்ப மனித அனுபவங்களை தனிப்பட்ட முறையில் தருகிற இடமாக எனக்கு சென்னை மட்டுமே இருந்திருக்கிறது. அந்த சென்னையில் எனக்கென ஒரு வீடு..வாடகை வீடு தான் என்ற போதும் என் வாழ்வின் முக்கியமான ஆத்ம நண்பன் அந்த வீடு.. விசாலமான படிக்கட்டுகள்.. ஏற ஏற வானத்திற்கு போகிற வழியாய் என்னை யோசிக்கவைத்திருக்கிறது. காற்றுக்கு பஞ்சமில்லை.. வெயிலுக்கு குறைவே இல்லை.. கோடைகாலங்களில் அதன் கதகதப்பு சொல்ல முடியா அவஸ்தையும்.. ஆனாலும் பரவாயில்லை என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொள்வது உண்டு..
அப்படி ஒரு வீட்டை தான் காலி செய்து வேறொரு வீட்டிற்கு வந்திருக்கிறேன். காலச் சூழ்நிலை.. Just Go With a Flow Reva என்று வலிக்காத மாதிரி எனக்குள் நானே நடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன்.. வந்த வீட்டில் ஒட்டமுடியவில்லை.. ஒரு 8 வருடம் முன் மதுரை வீட்டில் பூக்கவே பூக்காதென்று நினைத்த ரோஜா நாளை எப்படியும் விரிந்திரும் என்று அம்மா ஃபோன் பண்ணி சொன்ன போது, சென்னையில் ஒரு தனியார் வங்கியில் நினைத்துப் பார்க்க முடியா சம்பளத்தோடு வந்த வேலை.. எனக்கு எதிரி வெளியில் இல்லை.. ரோஜா மலர்ந்தது.. செக்க செவேல் என்று இருந்த அதன் இதழ்கள்.. போதும் இந்த பிறப்பு என்று நினைக்கிற பைத்தியம் நான்.. வாழ்வின் முதல் முறை இந்த வீடு மாற்றத்தை சந்திக்கிறேன்..
சொல்ல முடியாத படி நெஞ்சில் ஏறிக்கொண்ட வலியை யாரிடம் தான் சொல்ல.. சொன்னால் தலையில் அடித்துக்கொண்டு “நீயெல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை “ என்கிற பதில் தான் வரும்.. ஆனாலும் அது என்னோடு தொடர்புகொண்டது..
இன்றைக்கு காலையில் புதிய வீட்டில் இருந்து வேலைக்கு வரும் போது வீதியெங்கும் மழை நீர் தேங்கி இருக்கிறது.. சொல்லத் தெரியாத நெஞ்சின் கனம்.. போட்டுக்கொண்ட வேஷத்தை களைப்பது எப்படி..
கூடவே இருந்த ஆத்ம நண்பனை இழந்ததைப் போலவே உணர்வு.. இனிமேல் தலைக்கு மேல் சட சடக்கும் சத்தம் இல்லை.. விழித்ததும் ஹலோ ரேவா என அழைக்கும் இளம் - வெயில் இல்லை.. ஜன்னலோரத்தில் காற்றோடு கலந்து வருகிற கொய்யா மரத்தின் வாசனை இருக்கப்போவதே இல்லை.. மழையை இனி வீதியில் பார்ப்பேன். நலம் விசாரிப்பேன்..
சில பருவங்கள் நம்மை எதற்காய் பக்குவப்படுத்துகிறது என்று தான் தெரியவில்லை.. எல்லாவற்றையும் சுருட்டி வைத்துக்கொண்டு எதுவும் இல்லாத மாதிரி கடப்பது தான் பக்குவமா? Seriously I don’t know..
But இந்த மழையில் நான் ஏதோ ஒன்றை இழந்து இருக்கிறேன்..
ஆனால் இன்றைக்கு ஏறிய ஆட்டோ அண்ணன், சிஸ்டர் என்னோட ஆட்டோ நம்பரை காட்டுங்க என்றார்.. எனக்குள் சிக்மெண்ட் பிராயட் விழிக்கத் தொடங்கினார். ஏன் எதுக்கு என்று கேள்விக்கு பின் தான் காட்டினேன். கண்கள் மலர சிரித்தார்.. என்னோட போட்டோ காட்டுங்க.. “அடேய் எனக்குன்னே வருவீங்களா டா” என்று தான் முதல் மைண்ட் வாய்ஸ் கைக்குலுக்கியது.. ஆனாலும் காட்டினேன்.. அவரிடம் ஏமாற்றம் “ சே, பழைய போடோல நான் நல்லாவே இல்லை மாத்துங்கன்னு சொன்னேன் அதேயே தான் வச்சுருக்காங்க, என்று சொல்லியபடி வண்டியில் இருந்து கீழே இறங்கி, ஆட்டோ கதவை திறந்துவிட்டு உள்ள போங்க , என்றதும் அவர் நார்மல் பெர்சன் தானா என்ற சந்தேகம் எக்ஸ்ட்ரா நார்மல் பெர்சனாக என்னை எண்ண வைத்தது. “ சரி போவோம் “ என்று என் ஆசான் வடிவேலு வாக்கு உடன் இருக்கையில் என்ன பயம்.. உள்ளே நுழைந்தேன்.. ஆட்டோ அண்ணன் “தங்கச்சி, ஆட்டோ வாங்கி பூஜை போட்டு நான் எடுக்கிற முதல் சவாரி “ என்றார். அதற்கு மேல் என் கட்டிடம் தகர்ந்தது. இருவரும் இலகுவானோம் . அரைமணி நேரத்தில் அவ்வளவு பேசினோம். மழையின் சத்தத்தை மிஸ். செய்தது முதற்கொண்டு அவரிடம் பேசினேன்.. இறங்கும் இடம் வந்தது . வாழ்த்தை சொல்லி இறங்கினேன். அவர் முகம் மறக்காது.. இன்றைய மழைக்கு முருகேசன் என்று பெயர்.
இந்த பிரபஞ்சம் எப்போதும் எடைக்கு எடை இட்டு நிரப்ப தெரிந்தது.
நான் காத்திருக்கிறேன்..
- ரேவா