உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

போதுமானதாய் இருக்கிறது

 

அழுகைக்குப் பின்
ஆரத்தழுவும்
அன்னையின் அன்பு
போதுமானதாய் இருக்கிறது
குழந்தைக்கு..

தயக்கங்கள் தட்டிவிட,
இயலாமையின் இடைவெளியில்,
கைகோர்க்கும் நண்பனின் துணை
போதுமானதாய் இருக்கிறது
நட்புக்கு...

தப்பிப் பிழைத்த தருணங்களில்,
தவித்து அழும் வேலைகளில்,
தனிமையை உணரும் பொழுதுகளில்,
தன்மானம் சிறைபடும் நிமிடங்களில்,
ஆறுதல் தர, ஆற்றாமையை சொல்ல
நல்ல உறவு
போதுமானதாய்  இருக்கிறது
வாழ்க்கைக்கு...

வாழ்ந்து தீர்க்க வேண்டிய
வாழ்க்கை நிறைய இருந்தும்
வெற்றி தந்த மகிழ்ச்சி
போதுமானதாய்  இருக்கிறது
மனதிற்கு...

முன்னாள் காதலின்
வருகையை,
நலம் விசாரிப்புகளோடு
நிறுத்திக்கொள்ள
போதுமானதாய் இருக்கிறது
இதழுக்கு..
கடந்து செல்லும் வாகனத்தில்
ஜன்னலோர இருக்கைக்குள்,
கையசைத்து புன்னகைக்கும்
குழந்தையின் சிரிப்பில்
கரையும் நிமிடம்
போதுமானதாய் இருக்கிறது
பயணத்திற்கு... 

தேடி தேடி கோர்த்தாலும்,
வந்தமரா வார்த்தைகள்,
எதிர்பாரா கணத்தில்
வசதியாய் வந்தமரும் நேரங்கள்
போதுமானதாய் இருக்கிறது,
நல்ல கவிதைக்கு...

வெற்றுப் பார்வைகளில்,
நீளும் மௌனங்களில்,
சொல்லத் தெரியா வார்த்தைகளில்,
வலி உணர்ந்த நிமிடங்களில்,
என ஏதோ ஒன்றைத் தொலைக்க
தூக்கம்
போதுமானதாய் இருக்கிறது,
அடுத்த நாளின் விடியலுக்கு...

இயலாமைகள் இடம்பிடிக்க
இல்லாமைகள் கொடிபிடிக்க,
முயற்சிகள் வடம்பிடிக்க,
இதுதான் இயல்பு என்று
வரும் வழி செல்கின்ற
புரிதலுக்குள் புதைந்து போகின்ற
வாழ்க்கை
போதுமானதாய் இருக்கிறது
மனிதனுக்கு...

ஆம்,
புரிதலுக்குள் புதைந்து போகின்ற
வாழ்க்கை
போதுமானதாய் இருக்கிறது....
மனிதனுக்கு...





13 கருத்துகள்:

Unknown சொன்னது…

பிரமித்தேன் சகோ அருமை அருமை ....
நல்ல கவிதைக்கு சான்றாய் உங்களின் இந்த படைப்பு போதுமானதை இருக்கிறது

Unknown சொன்னது…

பிரமித்தேன் சகோ அருமை அருமை ....நல்ல கவிதைக்கு சான்றாய் உங்களின் இந்த படைப்பு போதுமானதை இருக்கிறது

Unknown சொன்னது…

தமிழ் மனதில் இணைத்து வாக்களித்தேன் சகோ

கோகுல் சொன்னது…

தேடி தேடி கோர்த்தாலும்,
வந்தமரா வார்த்தைகள்,
எதிர்பாரா கணத்தில்
வசதியாய் வந்தமரும் நேரங்கள்
போதுமானதாய் இருக்கிறது,
நல்ல கவிதைக்கு...
//

எதிர்பாராமல் வந்தமரும் வார்த்தைகளே எதிர்பாப்பை ஏற்படுத்துகிறது.
அருமையான கவிதை.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

நீங்கதான் அந்த ரவா கவிதைகளா சார்ரி..ரேவா கவிதைகளா..அடடே தெரியாம போச்சே! என்னது எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா? இந்த பதிவ மட்டும் இப்ப படிச்சேன் ..செம காமெடி.. நேரம் கிடைக்கும்போது மற்றதையும் படிக்கிறேன். சிரிக்க வைத்த சீமாட்டிக்கு நன்றிகள் :)

Unknown சொன்னது…

முன்னாள் காதலின்வருகையை,நலம் விசாரிப்புகளோடுநிறுத்திக்கொள்ளபோதுமானதாய் இருக்கிறதுஇதழுக்கு.//////////////

வேற என்ன பன்ன முடியும்?அருமை. கலக்கிட்டீங்க.

Rathnavel Natarajan சொன்னது…

அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

சௌந்தர் சொன்னது…

வார்த்தைகள் கவிதைக்கு போதுமானதாய் இருக்கிறது....

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை... அருமை...
கவிதை இன்னும் வேண்டுமானதாய்த்தான் இருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

உண்மைதான்... இப்படி எல்லாவற்றிற்கும் இந்த மனநிலை அமைந்துவிட்டால் அதுவே போதுமானதாய் இருக்கும்...

உள்ளத்தை ஊடுருவும் கவிதை!

நிரூபன் சொன்னது…

மனித மனம் எப்போது பரிபூரணத்துவம் அடைகின்றது என்பதனை அருமையாக விளக்கியிருக்கிறீங்க.

எவனோ ஒருவன் சொன்னது…

புரிதலுக்குள் புதைந்து போகின்ற
வாழ்க்கை
போதுமானதாய் இருக்கிறது....
மனிதனுக்கு...

உண்மை தான் ரேவா! போதுமானதாய் இல்லை என்றாலும் வேறு வழி இல்லையே :-)

வழக்கம் போல அருமை.

மாலதி சொன்னது…

வாழ்ந்து தீர்க்க வேண்டிய
வாழ்க்கை நிறைய இருந்தும்
வெற்றி தந்த மகிழ்ச்சி
போதுமானதாய் இருக்கிறது
மனதிற்கு...//அருமை.