உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 19 செப்டம்பர், 2011

யாரேனும் கேளுங்கள்...

நான் அற்று நீ
மட்டும் நீயாய்
மாறிய நொடி
எப்படி இருந்தது உனக்கு ?

பிரியம் கொண்ட
நம் காதலுக்குள்,
பிரியம் தொலைக்க வைத்த
உன் ஆளுமையை,
அன்றே தான் நீ உணர்ந்தாயா?...

பிரியச் சிலுவைக்குள்
அகப்பட்ட என் பாசம்,
முள்ளில் சிக்கிய
சேலையாய் மாறியதை
நீ அறிந்தாயா?...

என் விருப்பங்களும்,
வெறுப்புகளும்,
உன் அனுமதியில் இருக்கவேண்டும்
என்ற உன் ஆண்மைத்திமிரை,
அன்பாய் நான் பாவித்தது உனக்கு
புரியாதா? 

பெண் என்ற
வரையறையை வகுத்திட்ட
வர்க்கத்திலே,
தனிரகம் என்றே உன்னை நினைத்திட்டேன்...
நீயோ,
தர்க்கம் செய்தால் தாவிக் குதிக்கிறாய்...
நட்பு வட்டம் கூடாதென்று கட்டளை இடுகிறாய்...
சிரித்து பேசினால் வேஷம் என்கிறாய்...
கோபமாய் பேசினாலோ பொறுமையாய்
இருப்பதுவே பெண்ணுக்கு அழகென்கிறாய்...
தனிப்பட்ட என் விருப்புக்கும் தடை இடுகிறாய்...

உயிர் அற்று போகும் வலிகளை தந்து
அன்பென்று ரசிக்கிறாய்
 நீ...
ரணங்களை சுகங்களாய் மாற்றிட
சுயம் தொலைக்கிறேன் 
நான்...

உன் கட்டளைகளும் கட்டுப்பாடுகளும்
என்மீதான காதல் என்றே
அறிந்திருந்தேன்...
ஆனால் அனைத்தும்
உன் ஆண்மையின் இயலாமை
என்றே உணர்ந்தேன்,
உன்னிடம் உரைத்தேன்....

கடைசியாய்,
காதல் பேசிய உதடுகள்
கனல் அள்ளி வீசியது....
வஞ்சித்து விலகியவர்
இடத்தில் என் பெயரும் வந்தது..

உன்னை நீங்கி வாழ்தல்
சாத்தியம் இல்லாத சத்தியம்
என்றே உணர்ந்தாலும்,
நான் என்ற என்னை
நானாகவே இருக்கவிடாத உன்னை,
ஆண் என்று மார்தட்டும் உன்னை
நீங்குதல் பிழையல்ல
என்றே பிரிந்தேன்...

வருடங்கள் தொலைந்தாலும்,
இளமையது கரைந்தாலும்,
நான் மட்டும் விவாகரத்து
ஆனவள்...
நீ....
புதுமாப்பிளை...

இது என்ன நியாயம்
யாரேனும் கேளுங்கள்...

34 கருத்துகள்:

Unknown சொன்னது…

கலக்கல் கவிதை சகோ!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உலக மக்களிடம் கேட்க்கப்பட வேண்டிய கேள்விதான்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

காதலிக்கும் வரைதான் பெண் முன்னிலைப்படுத்தப்படுவார்...

திருமணத்திற்க்கு பின் ஆண்மையே விஞ்சி நிற்க்கும்....

கவிதை உண்மை பேசுகிறது....

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

உங்கள் கவிதைகளில் மிக சிறந்த கவிதை இது,,,
காதலிக்கும் பலரிடம் பார்க்கும் நிகழ்வுகள் இவை,,,
வாழ்த்துக்கள் தோழி,,,,

SURYAJEEVA சொன்னது…

அனைத்து நாணயங்களிலும் இரு பக்கம் உள்ளது... நிலவின் ஒரு பக்கம் மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகிறது... இதை பேசுவது ஆணாதிக்கம் என்றே பொருள் படும் என்று அறிந்தே பின்னூட்டம் இடுகிறேன்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அய்யய்யோ மனசு வலிக்குதே.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உண்மையை சாட்டையாக வீசி இருக்கிறீர்கள்!!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ்மணம் இணைச்சி ஓட்டும் போட்டாச்சு...

எவனோ ஒருவன் சொன்னது…

ஆணாதிக்கம் - ஆண்கள் மனதில் பெண்கள் அடக்கப்பட வேண்டும் என்ற விசத்தை ஊற்றியவர் யாரோ!!!! ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்தினால் தான் வாழ்க்கை சுபமாகவும் சுகமாகவும் இருக்கும்.

நேற்று கூட வாரமலரில் ஆணாதிக்கத்தைப் பற்றி 'இது உங்கள் இடத்தில்' படித்தேன். இரு சக்கர வண்டியில் அலுவலகத் தோழியின் பின்னால் அமர்ந்து செல்வதைக் கூட அவன் மனம் இடம் தராமல் தான் தான் ஓட்டுவேன் என்று அவன் ஆதிக்கம் அதிகம் பேசி இருக்கின்றது. அப்பெண்ணோ அதற்கு சம்மதிக்காமல் சென்று விட்டாள் லிப்ட் தராமல். கடைசியில் ஆட்டோவிற்கு 100 ரூபாய் அழுது இருக்கிறான்.

பகிர்விற்கு நன்றி தோழி :-) அருமை.

எவனோ ஒருவன் சொன்னது…

இப்போது பெண்ணாதிக்கமும் சில இடங்களில் தலை தூக்க ஆரம்பித்து விட்டது என்று நினைக்கின்றேன் :-)

ஒருவரின் உணர்வுகளை மற்றவர் மதிப்பது தான் இனிமையான வாழ்விற்கு வழி.

K சொன்னது…

வணக்கம் ரேவா மேடம்! நல்லதொரு கலக்கலான, சமூகத்தின் மீது ஓங்கியறையும் யதார்த்தமான கவிதை தந்திருக்கீங்க! வாழ்த்துக்கள்!

நிகழ்வுகள் சொன்னது…

ம்ம் இறுதி வரிகள் "நச்"

Unknown சொன்னது…

விக்கியுலகம் கூறியது...

கலக்கல் கவிதை சகோ!

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

Unknown சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

உலக மக்களிடம் கேட்க்கப்பட வேண்டிய கேள்விதான்...

அனைவரும் பதில் அளிக்க கூடிய கேள்வியும் கூட நண்பரே...

Unknown சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

காதலிக்கும் வரைதான் பெண் முன்னிலைப்படுத்தப்படுவார்...

திருமணத்திற்க்கு பின் ஆண்மையே விஞ்சி நிற்க்கும்....

கவிதை உண்மை பேசுகிறது....

நன்றி நண்பரே...உங்கள் உண்மையான மறுமொழிக்கும் உண்மையை உள்ளபடி சொன்ன உங்கள் மனதிற்கும் ...தொடர்ந்து வாருங்கள்..

Unknown சொன்னது…

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) கூறியது...

உங்கள் கவிதைகளில் மிக சிறந்த கவிதை இது,,,
காதலிக்கும் பலரிடம் பார்க்கும் நிகழ்வுகள் இவை,,,
வாழ்த்துக்கள் தோழி,,,,

மிக்க நன்றி நண்பா... காதலிக்கும் பலரிடம் பார்க்கும் நிகழ்வுதான்...

ஆயினும் காதல் கடைசிவரை தொடர்ந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாது என்று நினைக்கிறேன்...நன்றி உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

Unknown சொன்னது…

suryajeeva கூறியது...

அனைத்து நாணயங்களிலும் இரு பக்கம் உள்ளது... நிலவின் ஒரு பக்கம் மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகிறது... இதை பேசுவது ஆணாதிக்கம் என்றே பொருள் படும் என்று அறிந்தே பின்னூட்டம் இடுகிறேன்..

முதலில் மிக நன்றி உங்கள் மறுமொழிக்கு...நாணயத்தின் இருப்பக்கம் அனைவரும் அறிந்ததே...பொதுவாக நடக்கின்ற விடயங்களை தான் இங்கே பகிர்ந்தேன்.. ஆளுமைகள் இரு உறவிலும் இருக்கத்தான் செய்கின்றன, மறுப்பதற்கில்லை... ஆயினும் தனக்கான சுயம் சுத்தமாய் தொலைக்கப்படும் இடத்திலும், சந்தேக சாட்டை கொண்டு வார்த்தை வீசும் இடத்திலும் பாதிப்புகள் அதிகம்...அது நாணயத்தின் எந்த பக்கம் என்று பார்ப்பவர் பார்வையைப் பொருத்தும், அவர் அவர்க்கான அனுபவத்தின் கிடைத்தலை பொருத்தும் அமையும்...இதை ஆணாதிக்கம் என்ற வரையறைக்குள் நான் பார்க்கவில்லை நண்பரே...கருத்துக்கள் மாறுபடும்...உங்கள் மறுமொழி எனக்கு மகிழ்ச்சியே...

ஆனாலும் பதில்க்கு பதில்பேசினாலும் பெண்ணுக்கு இத்தனை திமிரா என்று அடைப்புக்குள் அடைக்க, நாணயத்தின் இருபக்கமும் ரெடி அஹ தான் இருக்கு...இதில் ஆணாதிக்கம் என்று எதைச் சொல்வது...

நன்றி உங்கள் மனமார்ந்த மறுமொழிக்கு..தொடர்ந்து வாருங்கள்...உள்ளதை உள்ள படி சொல்லும் உங்களைப் போன்றோர் வருகையே எங்களை வளப்படுத்தும்...

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

அய்யய்யோ மனசு வலிக்குதே.....

மனோ அண்ணா நோ பீலிங்க்ஸ்...

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

உண்மையை சாட்டையாக வீசி இருக்கிறீர்கள்!!!!

நன்றி அண்ணா :) தன் பாலினம் மேல் வைக்கப்படும் தவறை ஏற்ப்பதர்க்கும் ஒரு மனது வேண்டும்...உங்களுக்கும் இன்ன பிற சகோதர நட்புக்கும் நன்றிகள்

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

தமிழ்மணம் இணைச்சி ஓட்டும் போட்டாச்சு...

ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா...தமிழ்மணம் இணைப்பிற்கும், தொடர்ந்து நீங்கள்
இட்டுச்சுசெல்லும் கருத்துக்கும்...தொடர்ந்து வாருங்கள்

Unknown சொன்னது…

எவனோ ஒருவன் கூறியது...

ஆணாதிக்கம் - ஆண்கள் மனதில் பெண்கள் அடக்கப்பட வேண்டும் என்ற விசத்தை ஊற்றியவர் யாரோ!!!! ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்தினால் தான் வாழ்க்கை சுபமாகவும் சுகமாகவும் இருக்கும்.

/// உண்மை தான் நண்பரே....ஆதிக்கம் இருக்கும் உறவில் அன்பு இருப்பது இல்லை...அது ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி////

நேற்று கூட வாரமலரில் ஆணாதிக்கத்தைப் பற்றி 'இது உங்கள் இடத்தில்' படித்தேன். இரு சக்கர வண்டியில் அலுவலகத் தோழியின் பின்னால் அமர்ந்து செல்வதைக் கூட அவன் மனம் இடம் தராமல் தான் தான் ஓட்டுவேன் என்று அவன் ஆதிக்கம் அதிகம் பேசி இருக்கின்றது. அப்பெண்ணோ அதற்கு சம்மதிக்காமல் சென்று விட்டாள் லிப்ட் தராமல். கடைசியில் ஆட்டோவிற்கு 100 ரூபாய் அழுது இருக்கிறான்.

பகிர்விற்கு நன்றி தோழி :-) அருமை.

/// நானும் அந்த பகுதியைப் படித்தேன் நண்பரே... பெண்ணை தன்னோடு வாழும் சகமனுசியாக கூட எடுக்கத் தயங்கும் இதுபோன்ற சிலர் இன்னும் இருப்பது வருத்தமே...//

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

Unknown சொன்னது…

எவனோ ஒருவன் கூறியது...

இப்போது பெண்ணாதிக்கமும் சில இடங்களில் தலை தூக்க ஆரம்பித்து விட்டது என்று நினைக்கின்றேன் :-)

ஒருவரின் உணர்வுகளை மற்றவர் மதிப்பது தான் இனிமையான வாழ்விற்கு வழி.

ஹ ஹ வழக்கம் போல நடுநிலை கருத்தை கொண்டு வந்த நட்புக்கு நன்றி... பெண்களும் தனக்கான உரிமையை பெற துணிந்து விட்டனர்..அடைபட்ட காலம் போய் தனக்கான உரிமைகளுக்காய் போராடுவது பெண்ணாதிக்கமா?.....ஆயினும் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன் நண்பரே....அடுத்தவர் உணர்வுக்கு மதிப்பளிப்பது தான் சுகமான வாழ்விற்கு வழிவகுக்கும்...

Unknown சொன்னது…

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...

வணக்கம் ரேவா மேடம்! நல்லதொரு கலக்கலான, சமூகத்தின் மீது ஓங்கியறையும் யதார்த்தமான கவிதை தந்திருக்கீங்க! வாழ்த்துக்கள்!

அடடே வாங்க ஒரே மாதத்தில் பிரபல பதிவாராய் பதிவுலகை கலக்கி வரும் மணி சார் வாங்க வாங்க...எங்கள மாதிரி பதிவர்கள் பதிவுக்கு வந்தது சந்தோஷம் சார்...கவிதைகொண்டு, வார்த்தைகளால் தான் ஓங்கி அறியமுடிகிறது இந்த பெண்ணால், ஆனாலும் அவலங்களை கண்டு அமைதியைத் தான் போகவேண்டியுள்ளது..நன்றி மணி சார் உங்கள் முதல் வருகைக்கும் மறுமொழிக்கும்..தொடர்ந்து வாருங்கள்

Unknown சொன்னது…

நிகழ்வுகள் கூறியது...

ம்ம் இறுதி வரிகள் "நச்"

நன்றி சகோ :)

Vijayan Durai சொன்னது…

நிதர்சனமான உண்மை வரிகள்.
//காதலின் போது தன்னை மறந்து விடுகிறார்கள்
காதலிக்கும்போது பெற்றோர்களை மறந்து விடுகிறார்கள்,
கல்யாணத்திற்குப்பின்
காதலையே மறந்து விடுகிறார்கள்....//

Unknown சொன்னது…

மாற்றம் ஒன்றுதான் மாறாதது போல.ஏதோ மாற்றம் நடந்திருக்கு:)

அதிகப்படியா அன்பு வச்சா அப்டித்தான்.. நமக்கு பிடிச்சவங்க தேவையில்லாம மற்றவர்களிடம்(முக்கியமா எதிர் பாலினம்) பேசினா பயங்கரமா கோபம் வரும்.

நம்ம நாட்டுல இன்னும் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்யுது.மாற வேண்டிய மாற்றப்பட வேண்டிய ஒன்று.

உலகுக்கு பயந்து தனக்கு மட்டுமே கவிதை வடித்துக்கொள்ளும் பெண்களை பார்த்துருக்கேன்.வருத்தமாத்தான் இருக்கும்.சில கவிதாயினிகள் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை.(Access Denied..!!!This blog is open to invited readers only)

ட்விட்டரில் ஒரு பெண்: உன் விருப்பப்படியே நானும் நடக்க வேண்டுமென்றால் என் விருப்பங்களை எங்கு கொண்டுபோய் தொலைப்பது?

கவிதை மிக அருமை.
வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

////நான் என்ற என்னை
நானாகவே இருக்கவிடாத உன்னை,
ஆண் என்று மார்தட்டும் உன்னை
நீங்குதல் பிழையல்ல
என்றே பிரிந்தேன்.......//////

மொத்த கவிதையையும் சுருக்கியது போல் இந்த வரிகள்...

ரசிக்க வைத்தன ரேவா
,,

Unknown சொன்னது…

விஜயன் கூறியது...
நிதர்சனமான உண்மை வரிகள்.
//காதலின் போது தன்னை மறந்து விடுகிறார்கள்
காதலிக்கும்போது பெற்றோர்களை மறந்து விடுகிறார்கள்,
கல்யாணத்திற்குப்பின்
காதலையே மறந்து விடுகிறார்கள்....//

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் :)

நிரூபன் சொன்னது…

யாரேனும் கேளுங்கள்//

சமூகத்தில் உள்ள பாரம்பரியங்களின் அடிப்படையில் நசுக்கப்படும் பெண்ணின் உணர்வுகள் + குரல் வளையினையும்,
ஆண்களை இந்தச் சமூகம் எந் நிலையில் வைத்திருக்கிறது எனும் உண்மையினையும் சொல்லி நிற்கிறது.

Unknown சொன்னது…

மழை கூறியது...

மாற்றம் ஒன்றுதான் மாறாதது போல.ஏதோ மாற்றம் நடந்திருக்கு:)

// உண்மை தான்...////

அதிகப்படியா அன்பு வச்சா அப்டித்தான்.. நமக்கு பிடிச்சவங்க தேவையில்லாம மற்றவர்களிடம்(முக்கியமா எதிர் பாலினம்) பேசினா பயங்கரமா கோபம் வரும்.
///ஆளுமைகள் ஆட்சி செய்தால் அன்பென்பது செத்துப்போகும் நண்பரே ////

நம்ம நாட்டுல இன்னும் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்யுது.மாற வேண்டிய மாற்றப்பட வேண்டிய ஒன்று.

/// மிக்க நன்றி மழை யோடு வந்த இந்த கருத்து மனதை நனைக்கிறது...////

உலகுக்கு பயந்து தனக்கு மட்டுமே கவிதை வடித்துக்கொள்ளும் பெண்களை பார்த்துருக்கேன்.வருத்தமாத்தான் இருக்கும்.சில கவிதாயினிகள் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை.(Access Denied..!!!This blog is open to invited readers only)
/// ஹ ஹ சமீப காலங்களில் எங்கள் நிலைமை இதுவே....///

ட்விட்டரில் ஒரு பெண்: உன் விருப்பப்படியே நானும் நடக்க வேண்டுமென்றால் என் விருப்பங்களை எங்கு கொண்டுபோய் தொலைப்பது?

// நல்ல ட்விட்டர்....உண்மையும் கூட..//
கவிதை மிக அருமை.
வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி உங்கள் மனமார்ந்த கருத்துக்கு...தொடருந்து என் தளம் வாருங்கள், வருகைக்கு நன்றி....

Unknown சொன்னது…

ஷீ-நிசி கூறியது...

////நான் என்ற என்னை
நானாகவே இருக்கவிடாத உன்னை,
ஆண் என்று மார்தட்டும் உன்னை
நீங்குதல் பிழையல்ல
என்றே பிரிந்தேன்.......//////

மொத்த கவிதையையும் சுருக்கியது போல் இந்த வரிகள்...

ரசிக்க வைத்தன ரேவா
,,

மிக்க நன்றி நண்பா....

Unknown சொன்னது…

நிரூபன் கூறியது...

யாரேனும் கேளுங்கள்//

சமூகத்தில் உள்ள பாரம்பரியங்களின் அடிப்படையில் நசுக்கப்படும் பெண்ணின் உணர்வுகள் + குரல் வளையினையும்,
ஆண்களை இந்தச் சமூகம் எந் நிலையில் வைத்திருக்கிறது எனும் உண்மையினையும் சொல்லி நிற்கிறது.

வழக்கம் போல சரியான புரிதலோடு உங்கள் மறுமொழி.... மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்...

Unknown சொன்னது…

REVATHI MISSING...????

sanjumeek சொன்னது…

நான் என்ற என்னை
நானாகவே இருக்கவிடாத உன்னை,
ஆண் என்று மார்தட்டும் உன்னை
நீங்குதல் பிழையல்ல
என்றே பிரிந்தேன்

ரசிக்க வைத்தன ரேவா