உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 16 செப்டம்பர், 2013

ரகசிய அறை



திறவுகோலது கையிலே இருக்க
திறந்திடும் முன்னே
நின்றிடு

வார்த்தைகளாலான
அறையெனது
உனக்கு பிடித்தச்சொற்களை
உருவுவதில் தொடங்கி
நீடித்துகொள் எனதறையில்
தொடர்ந்தென்னை வார்த்தைகளால் தோற்கடி
தோற்பதில் தான் ப்ரியத்தின்
உயிருள்ளதென்பதை
நானுணர்ந்ததைப் போல்
நீ உணர்
உணவாகும் வரை உயிர் தேடலென்பது
தொடருமென்பது
உணவுச்சங்கிலி கொடுத்தபாடமென்றாலும்
வலிக்க வலிக்க
உனது தேடலை தொடர்
உண்ண உணவது
உயிரினில் அடியினில் கிடக்க
அடிவானமதை கண்டடைந்த போது
உறங்கிப்போ
அதற்குமுன்
முத்தமிடு
சத்தமிட்டு காதலிப்பதாய் சொல்
சாத்தியப்படுகையில் உன் வார்த்தைகளால்
எனதறைக்கு பலம் சேர்
சேர்ந்து வாழ
பிரியமட்டும் போதாதென்பதை
நான் கட்டிய எனதறையை
படித்தறிதலில்
புரி
புரிந்தறிதலில்
தெளி
தெளிந்த பின்
தேடு
தேடியடைந்த பின்
கூடு
கூடிய பின்
களி
களித்தெழ
கழித்திடு
ப்ரியம் முட்டும் வரை
வானம் படை
பிறகு போட்டுடை
முதலில் இருந்து தொடங்கு
முடிவைத்தேடி நெருக்கு
நெருங்கிய பின்
முற்றுபுள்ளியிட்டு
மறுபடியும் தொடர்
தொடர காரணமற்று நீண்டுபோன
இவ்வரிகளுக்கான
திறவுகோலது கையிலே இருக்க
திறந்திடும் முன்னே
நின்றிடு.



-ரேவா 

 

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

தேவைப்படுவதெல்லாம் காரணங்களே...


 
உன் முகம் தேவையில்லையெனக்கு
அப்படியே என்னுடையதும்
பெயர்
மொழி
தொலைபேசி எண் என
எல்லாமே தேவையற்றது தான்
நீ போலியென சந்தேகித்தாலும் கூட
நிமிர்ந்து கிடக்குமிடத்தில் குனிதல்
உன் குணமென சொல்லி
வேஷம் போடுவதை தவிர்
சாயம் வெளுத்த கூட்டங்கள்
நானறிவேன்..
உனக்குள்ளிருக்கும் எதிர்பார்ப்பை
சூன்யப் பெருவெளியில்
சுட்டெறி
குளிர்காய காரணங்களாவது கிடைக்கும்
பொய்களை இன்னொரு நாக்காய்
எடுத்தாள்வதை நிறுத்து
எதையும் நம்புவதாய் இல்லை
நான்
வேறென்ன
பெரிதாய் ஒன்றுமில்லை
முடிந்தால் இவ்வரிகளை
படித்துவிட்டுச் செல்
நான் அப்படியில்லையென்ற பொய்களோடு.. :)


-ரேவா





செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

என்ன செய்ய




பேசுவதற்காகத்தான்
உனை வரச்சொன்னேன்
வரும்வழியெல்லாம் மனம்
பேசியச்சொற்களின் அயற்சி
உனைபார்த்ததும் ஓய்வெடுத்துகொள்ளுமென
சத்தியமாய் நினைக்கவேயில்லை
மெளனமாய் இந்த நிமிடம்
துளி புன்னகையில்லை
சினேக விசாரிப்புகள் இல்லை
நம்மிடையே சூழ்ந்திருந்த
அந்த உன்னத உணர்வும்
இந்நிமிடம் கிடைக்கவில்லை
உன் பார்வையின் வழியே நினைவோட்டம்
கொஞ்சம் நிதானித்து இருக்கலாம் தான்
என்ன செய்ய
பேசமாலே கிடக்கும்
என் சொற்களை



வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

நண்பனாகவே இருந்திருக்கலாம்




காதலெனும் சிறகெடுத்து
நானுனக்கு மாட்டிவிட்டபின்
இலக்கின்றி பறந்தலைந்த பொழுதொன்றில் தான்
எங்கோ தொலைத்திருந்தேன்
என் ஒற்றைச்சிறகை
சில்லு சில்லாய் சிதறிக்கிடக்கும்
பிரியங்களின் வார்த்தைகளிலெல்லாம்
நிறைந்து கிடக்கின்ற முகம்
இறைத்து போட்டபடியிருக்கிறது சபையேறா பேச்சுகளை
கதைசொல்லி களைத்து போகின்ற இடம்
காரணமின்று சிரித்துப்பார்த்த தடம்
எது என்னை உன்னை நோக்கியிழுத்ததென்று
நினைப்பை கொடுத்த களம்
அத்தனையும் தாண்டி
கடல் மணலின் பாதங்கள் பரப்பி விளையாடும்
பிள்ளைமனதாகிப்போகின்ற
ப்ரியத்தின் முன்
வெட்கங்களை உண்டு
வேட்கைகளை நிறைவேற்றும் உன் தளமெனக்கு
அன்னியமாய்பட்ட போதும்
அடுத்தடுத்த எடையிழப்புகளால்
நிலைகுலைந்து போன சுயம்
உன் முகமெடுத்து கொண்ட போதும்
உனது விருப்பங்களுக்கு முன்
பலியிடப்படும் எனது கனவுகளைபற்றியோ
காணாமல் போகும் வார்த்தைகளைபற்றியோ
பற்றற்றுபோன
பற்றுதலை பற்றி
யாதொரு கவலையுமுனக்கு இல்லையென்ற போதும்

தொலைத்திருப்பேனென்று
தெரிந்திருந்தால்
நண்பனாகவே இருந்திருக்கலாம்
நீ

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

மெளனப்பாடல்




 Photo: மெளனம் ஒரு பாடலாகவே 
இருந்தது நமக்கு..
இசைக்குறிப்புகள் பற்றிய கவலையின்றி
தாளம் பற்றிய தயங்கங்களின்றி
சுதி சுத்தமாய் பாடப்படுமோவென்ற பயங்களின்றி
ப்ரியத்தின் வரிகள் சரியாய் 
படிக்கப்பட்டதன் பொருட்டு
இந்த மெளனம் ஒரு பாடலாகவே 
இருந்தது 
ந
ம
க்
கு.....

-ரேவா

மெளனம் ஒரு பாடலாகவே
இருந்தது நமக்கு..
இசைக்குறிப்புகள் பற்றிய கவலையின்றி
தாளம் பற்றிய தயங்கங்களின்றி
சுதி சுத்தமாய் பாடப்படுமோவென்ற பயங்களின்றி
ப்ரியத்தின் வரிகள் சரியாய்
படிக்கப்பட்டதன் பொருட்டு
இந்த மெளனம் ஒரு பாடலாகவே
இருந்தது


க்
கு.....

-ரேவா

திங்கள், 29 ஜூலை, 2013

முத்தவழிச்சாலை


 Photo: இருபக்கமும் அடர்ந்திருக்கும்
அவ்வசீகர சாலை
ஆரம்பத்தில் குறுகளாகி
ஆரம்பித்ததன் வேகத்தின் கணக்கில்
லாவக ஓட்டம் பிடிக்க

அழுத்தம் நிறைந்த பகுதிக்குள்
தடையின்றி செல்ல 
நீலியின் கைகள்
ஏதுவாய் அமைய

தூரமாய் செல்லச்செல்ல
செல்ல கைகளாய் மாறிய
நிழல்
உதிர்ந்த காரணங்களையெல்லாம்
கிளையேற்றி பார்க்கும்
கண்களை கொடுக்க

நிலா
நீ
வானம்
தனிமை
கருமையென அலைந்து பறக்கின்ற
மனதிற்கு
வேகத்தடையெடுத்து வருகிறது
இம்முத்தவழிச்சாலை...

இருபக்கமும் அடர்ந்திருக்கும்
அவ்வசீகர சாலை
ஆரம்பத்தில் குறுகளாகி
ஆரம்பித்ததன் வேகத்தின் கணக்கில்
லாவக ஓட்டம் பிடிக்க

அழுத்தம் நிறைந்த பகுதிக்குள்
தடையின்றி செல்ல
நீலியின் கைகள்
ஏதுவாய் அமைய

தூரமாய் செல்லச்செல்ல
செல்ல கைகளாய் மாறிய
நிழல்
உதிர்ந்த காரணங்களையெல்லாம்
கிளையேற்றி பார்க்கும்
கண்களை கொடுக்க

நிலா
நீ
வானம்
தனிமையென அலைந்து பறக்கின்ற
மனதிற்கு
வேகத்தடையெடுத்து வருகிறது
இம்முத்தவழிச்சாலை...

சனி, 27 ஜூலை, 2013

என் டைரிக்குறிப்பில் நீ...








காலத்தின் முகம் அணிந்துகொண்டவனுக்கு,

 நானிருக்கும் வரை நலமாய் இருப்பாய் என்ற எண்ணத்திலே எழுத்துகளின் ஊடே உனக்கொரு வலை பின்கிறேன்...எழுத்தில் உன் முகம் பார்க்க, எழுதிட சுகம் சேர்க்கும் உன் நினைவுகளே உற்சாகமெடுத்து ஓடவைக்கட்டும் இனி வரும் வரிகளை..எழுத மறந்து போன நாட்களில் எங்கோ இருந்து எழுதிடச்சொல்கிற இந்த போக்கு எனக்கொன்றும் புதிதில்லையென்றாலும் வாழ்க்கையின் சூழ்ச்சியில் வஞ்சிக்கப்பட்டவர்களில் நாமும் ஒருவரென்பதை இதுவரை சந்திக்காத விழிகளின் கிடைக்கின்ற இருளில் உண்ர்வோம்...

திரும்பிப்பார்த்தலென்பது எப்போதும் லயிப்பான விசயமாய் இல்லாது போகும் இக்காலச்சூழலில் இக்கடிதம் கண்ணில் படும் போதெல்லாம் ரசிப்பிற்கு விருந்துவைக்கும் விசயமாய் மாறிப்போகட்டும் நம் வாழ்க்கைப்பக்கங்களுக்கு.. பிறப்பு குறித்த பிரபஞ்ச ரகசியங்களை உடைக்குமொரு நிகழ்வு இதுவரை நிகழவேயில்லையென்பது நிகழ்ந்தவரை கிடைத்த நகர்வில் இருக்க, எப்படி இருக்கிறாய்? என்ன செய்கிறாய்யென யாதொன்றும் தெரியாதிருக்க, எனை எதை எதையோ செய்யவைக்கிறாய், சின்னதாய் பொய்கோலம் பூண வைக்கிறாய்.. விசித்திர விரிப்புகள் மத்தியில் ஒய்யார  வந்தமர அருபமாய் இருக்கும் என் மனதில் அடிக்கொரு முறை உனை அளவெடுத்துக்கொள்கிறேன்.. எப்போதேனும் எனை நினைப்பாயா? எனைக்குறித்து உன் கொள்ளளவு என்னவாய் இருக்கும் .. உன் நண்பனின் பொல்லாத மனைவியோடு என்னையும் ஒப்பிட்டுக்கொள்வாயா? இல்லை உன் தோழியின் நேசத்திற்குரியவனைப்போல் என்னிடம் நடந்துகொள்ளவேண்டுமென ஒத்திகைசெய்துகொள்வாயா? யாதொன்றிலும் எனக்கு தெரிவில்லையென்றாலும் ஆண்னென்பதின் பதம் என் அப்பாவிற்கடுத்து உன்னிடம் தான் நான் தேடத்தொடங்கவேண்டும்..

தனிமையின் நிறமெனக்கு எப்போதும் பிடித்தது, அது தரும் சுகந்தமும் ஆறுதலும் எனக்கு எதுவுவொன்றும் தந்துவிடாது அதேபோல் உனக்கெப்படி என்னைப்போல் அதிகம் பேசுவாயா? இல்லை அளவெடுத்து வார்த்தைகளை விடுவாயா? பெண் என்பவள் உன் பார்வைக்கு எப்படி?  நீ என்பதில் நான் எதுவரைக்கும்? இப்படி எத்தனையோ கேள்விகள் உள்ளன, உனக்கும் அப்படியாய் இருக்கலாம்.இந்த கேள்விகள் தான்  நான் இருக்கிறேன் என்பதற்கான என் இறுப்பினை உறுதிசெய்யும் காரணிகளாய் இருக்க, என் எதிர்ப்பார்ப்பு உன் வருகைக்கானதாய் மட்டுமென்பதை அறிந்துகொள்.


எழுத்தின் வாயிலாய் உன் முகம் தேடத்தொடங்கியிருக்கும் இந்நாட்களில் இக்கடிதம் உனக்கும் எனக்குமான முதற் புள்ளியை வைத்துவிட்டு கள்ளத்தனமாய் 
சிரிக்கிறது...

,