உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 29 செப்டம்பர், 2010

எனக்கானவன் எவனோ?


*விடை தெரியா,
விதி அறியா ஒன்று நம் வாழ்வு....
இதில் என் பயணத்தில்
 தன் கதை எழுதும்
என் நாயகன் எவனோ?
அவனுக்காய்....

* நான் போகும் பாதை எங்கும்
தோல்வி என்னும் இருள் சூழ,
வெற்றி என்னும் வெளிச்சத்தை
எனக்கு அறிமுகம் செய்யும்
என் விடியல் எவனோ?

* உண்மையாய் ஓர்
உயிரை நம்பி ஊனமான
என் மனதிற்கு,
மறுவாழ்வு தரும்
என் நாயகன்  எவனோ?

* சூழ்ச்சியில்  உலகம் சுற்ற,
சூசகமாய் பலர் என்னை சுற்ற,
புரியாமலே போன
என் காதல் வாழ்வை,
எனக்காய் திருப்பி தரும்
என் காதலன் எவனோ?

* அன்பை மட்டும்,
மூலதனமாய் கொண்டு என்னை
மட்டும் சுற்றும் என்
சூரிய குடும்பத்தின் நாயகன் எவனோ?

* விசாரிப்புகள்,  "நலம்" என்னும்
விஸ்வரூப பொய்யை சுமக்க,
மனம் வாடி நிற்கும் என் தனிமை
காலங்களுக்கு வர்ணம் திட்டும்
என் வானவில் எவனோ?

* கண் எல்லாம் கனவாக,
என் காட்சியெல்லாம் நினைவாக
எனக்கு திருப்பி
தரும் என் லட்சியனாயகன்  எவனோ?

* அன்னையின்  அன்பை,
தந்தையின் கண்டிப்பை,
தோழமையின் நட்பை,
உறவுகளின் பாசத்தை,
ஒரே உறவில் தரும்
என் "அட்சய" நாயகன் எவனோ?

* ஆறடுக்கு மாளிகையேயானாலும்,
இல்லை ஆறாடி நிலமேயனாலும்,
எனக்காய் தன் தோள் கொடுக்கும்
என் தோழன் எவனோ?

* புரியாமலே போன
என் எதிர்காலவாழ்வில்
எனக்காய் எதிர்நீச்சல் போடும்
என் நாயகன் எவனோ?

* தோழமையாய்,
என் அன்னையாய், என் காதலாய்,
என் கனவாய், என் கணவனாய்,
என் சமுகமாய் என்னுள்
நிறையும் என்னவன் எவனோ?

* எனக்கான ஒருவன்
தனக்கான ஒன்றை
கண்டறியும் நாளும்
எதுவோ?
 

அன்புடன் 
ரேவா

Flower Image

0 கருத்துகள்: