உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

Wall ஆல் வந்தது

 

ரொம்ப நாள் கழித்து மனது சொன்ன ஒரு விசயத்தை எழுத்தில் ஏற்றுவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாவும், நிறைவாவும் இருக்கு..முகனூல் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தருது.. சிலருக்கு தன் துயரங்களின் வடிகாலாகவும், சிலருக்கு துயரங்கள் ஆரம்பமாகும் இடமாகவே கூட முகநூல் இருக்கு..ஆக யார் எங்க இருக்காங்கங்கிறது அவரவரின் தெளிவைப்பொறுத்த விசயமா இருக்க, இந்த முகனூல் வால் எல்லாத்துக்கும் முக்கியமான விசயமா மாறிப்போயிடுது இல்லையா, என் எண்ணத்தில், அசைபோடலில் இருக்கிற விசயத்தை எழுத்திலிட்டு சுவற்றில் பதிவு செய்தவுடனே அது எனக்கு சொந்த மில்லாத ஒன்னா போயிடும் பட்சத்தில் வாழ்க்கையும் அப்படி ஒன்னாத்தான் எனக்கு தெரியுது, அடடா ரேவா ஏதோ அட்வைஸ்ஸோ இல்லை வேற ஏதோ சொல்லப்போறான்னு நினைச்சா அப்படி எதுவும் இல்லவே இல்லை... இது முழுக்க முழுக்க என் பால்யத்தின் கரைகளை வேடிக்கை பார்க்கும் பதிவு தான் எனக்கு...

பொதுவா நம் உலகம் நம்ம சுற்றியிருக்கிற ஒரு 10, 20 குடும்பங்களோட முடிஞ்சு போயிடுறது இல்லாட்டியும் கூட ஆரம்பிக்கிற இடம் இதுவாத்தான் இருக்கும்.. அப்படி என்னை சுற்றியிருக்கிற ஒரு 20 குடுத்தினக்காரர்கள் மத்தியில் என் சிறுவயது நட்பாய், பகைவீழ்த்தியாய், சொத்தாய், என் எண்ணங்களை கை வழி பயணத்தின் மூலம் பிரதிபலிக்கிற ஒரு கரும்பலகையாய் எனை வளர்த்தது என் வீட்டிற்கு எதிரிலுள்ள காம்பவுண்ட் வால் தான்... ஒரு 15 குடுத்தினதாரர்களை மொத்தமாய் அடைத்து வைத்திருக்கும் அந்த கட்டடத்தில், என் போன்ற பிள்ளைகளுக்கு பெரிய அரணாய் இருந்ததே அந்த வால் தான்...

எப்போதும் பள்ளி முடிந்து சாயங்காலம் வீடு தேடி ஓடிவருகையில், இன்றைக்கான தன் களம் தயாராகிவிட்டதென்ற மகிழ்ச்சியில் வாஞ்சையாய் எனை பார்த்து அந்த சுவர் புன்னகைப்பதைப்போல் எப்பவும் எனக்கு தோன்றும்... பிள்ளைகளோடு சேர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டில் கண்களை மூடிக்கொள்ள, தோள்கொடுத்து நான் சாய்ந்துகொள்ள முதல் நட்பாய் இருந்தது அந்த காம்பவுண்ட் சுவர் தான்...

இன்றைக்கு சில நெல் மணிகளோடு ”அ” வென்ற எழுத்தை எழுதிப்பார்ப்பது சம்ரதாயமாய் மாறிவிட்ட சூழலில் என் முதல் அ வை முழுதாய் சுமந்து நிற்கும் அந்த சுவரை, என் பால்யத்தின் நீட்சியாகவே பார்க்கின்றேன்...

முதன் முதலாய் வந்து சேரும் முதல் அத்தனையையும் சேர்த்துவைத்திருக்கிற அந்த சுவற்றை வெறும் செங்கலென கடந்து செல்பவர்கள் மத்தியில் எனக்கு எப்போதுமே அச்சுவர் அப்படியாய் இருந்ததே இல்லை..

ஒரு நீளச்சுவரில் ஆளுக்கு இவ்வளவென்று பிரித்துக்கொண்டு, தனக்கான தன்னை வெளிக்காட்டிக்கொள்ள பெரும் உதவியாய் இருந்ததும், பங்கிட்டுக்கொள்வதிலிருக்கும் சந்தோஷத்தை குடும்ப அல்லாது சொல்லிக்கொடுத்த ஒரு உயிரற்ற ஜீவன் அச்சுவர் மட்டுமே..ஓடிப்பிடித்து விளையாடுதலில் ஜெயித்தவர்களின் பெயர்களை தாங்கி நின்று, அடுத்த போட்டிக்கு வென்றுவிட வேண்டுமென்ற உத்வேகத்தையும், அழகழகான வண்ணமலர்களை வரைந்து, பார்வை நீருற்றி அதை வதங்கவிடாமல் பாதுகாத்து, அனைத்துக்கும் உயிர்கொடுத்து பார்க்கச் சொன்ன தன்மையையும் எனக்குச் சொல்லிக்கொடுத்தது அச்சுவர் மட்டுமே...

கெளரவச் செங்கலால் எழும்பி நிற்கும் மனிதர்களைக் காட்டிலும் எனக்கு எப்போதும் அச்சுவரில் தனிப்பிரியம் தான்.பொய் வேசம் பூணத்தெரியாதது கூட அதன் மீது தனிப்பிரியம் வரக்காரணமாய் இருந்திருக்கலாம்... ஒவ்வொரு வயதின் முதிர்ச்சியிலும் ஆசைப்பட்ட, அசைப்போட்ட பல விசயங்கள் அங்கிருந்தே ஆரம்பித்தது, சாக்பீஸ்ஸைப்பிடித்து அ வென்று சொல்லி அனைவரையும் கவனிக்க வைத்த இடத்தில் நான் ஒரு ஆசிரியராய் ஆகவேண்டுமென்ற எண்ணம் துளிர்த்தது... அழகாய் வரைகிறாயென்று எதிர்வீட்டு அத்தை சொன்ன பொழுதொன்றில் ஓவியராய் வந்துவிடவேண்டுமென்ற ஆசை வளர்ந்தது... கண்டதில் காணாத ஒன்றை கண்டு சொல்லயில் கவிஞராய் வந்துவிடவேண்டுமென்ற கனவும் தொடர்ந்தது, இப்படி படிப்படியாய் ஆசைகளின் மேகக்கூட்டங்களை அத்தனையும் வாங்கிக்கொண்டு நான் வாழ்வில் என்னவாய் ஆகப்போகிறேனென்ற எண்ணத்தை தெரிந்துவைத்துக்கொண்டு ஒரு மர்மப்புன்னகை புரியும் தீர்க்கதரிசியாகவே எனக்கு தெரிகிறது அச்சுவர்...

பிள்ளைக்கண்ணீரை, பால்யக் கனவை, முதல் முதலில் ஆண்னென்பவன் என்னிலிருந்து வேறுபட்டவனென்ற உணர்வை, நட்புக்குள் கட்டுப்பாடு விதிக்க கற்றுக்கொண்ட எல்லைக்கோட்டை எனக்கு கொடுத்ததெல்லாம் அச்சுவர்... உயிரற்ற ஒன்றை போகின்ற இடமெல்லாம் தூக்கிச்சுமத்தல் கஷ்டமென்று தான் அந்த பாழாய்ப்போன கடவுள் நினைவைப்படைத்தானே என்னவோ, எப்போதெல்லாம் என் கண்ணீர் உடைபட்டு தெரிக்குமோ அப்போதெல்லாம் சாய்ந்துகொண்டு என் கண்ணீரை வாங்கியதும், இன்றும் அந்த ஈரக்கண்ணீரை ஒவ்வொரு மழை நாளின் போதும் தரிசிக்க கொடுப்பதும் எனக்கு வியப்பாய் தான் இருக்கும்..

வயதுகளை கடந்தும், வயோதிகத்தில் முதிர்ந்தும் போனாலும், சில கட்டுமானங்களால் மீள் தோற்றத்திற்கு திரும்பிவிடும் இச்சுவர் எப்போதும் எனக்கு பாஸிட்டிவ் வைப்ரேஷனை தரத்தவறுவதே இல்லை...

இதோ இப்போதும் தீபாவளி பண்டிகைக்காய், இன்னும் தான் வளர்த்துவிடக் காத்திருக்கும் புது புதுப்பிள்ளைகளுக்காய், வெள்ளை உடையெடுத்து போட்டுக்கொண்டிருக்கிறாள்... இவ்வெள்ளை வர்ணமென்னவோ என் வாழ்க்கைகான வசந்தம் வந்துவிட்டதாகவே என்னை நம்பச்சொல்கிறது....

அச்சுவரோடு நானும் வந்து அமரக்காத்திருக்கும் அவ்வர்ணத்திற்காய் எழுப்பிவைக்கிறேன் என் எண்ணச்சுவரை......-ரேவா


7 கருத்துகள்:

சே. குமார் சொன்னது…

வயதுகளை கடந்தும், வயோதிகத்தில் முதிர்ந்தும் போனாலும், சில கட்டுமானங்களால் மீள் தோற்றத்திற்கு திரும்பிவிடும் இச்சுவர் எப்போதும் எனக்கு பாஸிட்டிவ் வைப்ரேஷனை தரத்தவறுவதே இல்லை...

-----

அருமை ரசித்துப் படிக்க வைத்தது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எண்ணசுவரில் வர்ணம்[ங்கள்] பிடிக்கட்டும்....

Siva sankar சொன்னது…

நிச்சயம் வசந்தம்
வரும் ரேவா
அழகான பகிர்தல்....
நன்றி!

Bagawanjee KA சொன்னது…

உங்களை கவிஞராய் 'ஆள்'ஆக்கிய அந்த wall தீண்டாமை சுவரென்று யாராலும் இடித்து விட முடியாது !இந்த சுவரில் கவிதைகள் தொடரட்டும் !ரசிக்கிறோம் !
த.ம 2

Bagawanjee KA சொன்னது…

உங்களை கவிஞராய் 'ஆள்'ஆக்கிய அந்த wall தீண்டாமை சுவரென்று யாராலும் இடித்து விட முடியாது !இந்த சுவரில் கவிதைகள் தொடரட்டும் !ரசிக்கிறோம் !
த.ம 2

இந்திரா சொன்னது…

தெளிவான எண்ணச்சுவர்..
வர்ணங்கள் சேர வாழ்த்துக்கள் தோழி..
:)

இந்திரா சொன்னது…

//கருத்துரை மதிப்பிடல் இயக்கப்பட்டது. அனைத்து கருத்துரைகளும் வலைப்பதிவின் ஆசிரியரால் ஏற்கப்படவேண்டும்.//

ச்சே.. இந்த பிரபலங்களே இப்படித்ததான்.
:(