உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

இதுபோதுமெனக்கு


உன் முதல் பார்வை
முழுதாய் தொலைத்தது என்னை..

என்னை முழுவதும் படி
இல்லை முடித்ததைப்போல் நடி
காதோடு காதுரசி காதல் மொழி பேசு,
செல்லச்சண்டையில் சித்திரவதை செய்
ஒரு முத்தத்தால் முழுமையாக்கு
என் முந்தானைக்குள் மூழ்கிப்போ

காதல் பேசு
காமம் தாண்டு
இதயம் நுழை...
மெளனம் கொண்டு என் வார்த்தை உடை
உனக்கானவள் நான் என்ற
உண்மையை உணர்
ஊர் உறங்கும் வரை கதை பேசு
நான் உறங்கிப்போக காதல் கொடு
அவ்வப்போது கண்களால் களவாடு
செல்லப்பெயரிட்டு சில்மிஷம் செய்
உன் பார்வை தெளித்து
காதல் கோலமிடு
சாத்தியப்படுகையில் சத்தம்போடு
சத்தத்தின் நடுவே நிசப்தம் தேடு
கண்களால் பேசு
மழைச்சாரலாய் மேனி நனை
அன்பை பரவவிட்டு
காதலை பரவசமாக்கு
காமம் களைந்து காதல் போர்த்து

உன் விழிகள் விதைத்துப்போட்ட
விதையில் துளிர்த்துகொண்டிருக்கும்
இந்த காதலுக்கு
செல்லபெயரிட்டு அன்புசெய்
இதுபோதுமெனக்கு...........

- ரேவா

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை வரிகள்...

/// இந்த காதலுக்கு
செல்லபெயரிட்டு அன்புசெய்
இதுபோதுமெனக்கு... ///

வரலாற்று சுவடுகள் சொன்னது…

ஒரு பெண்ணின் எதிர்ப்பார்ப்புகளை அழகான வரிகளில் நிறைத்துவிட்டீர்கள்! அருமை!

கோவை மு சரளா சொன்னது…

என்னாச்சு ரேவா???
வரிகளில் சொட்டுகிறது
காதல் ரசம்
பெண்ணின் தாபம்.
ஏக்கம் ,ஒட்டுமொத்தமாய்
கொட்டிவிட்டு செல்கிறீர்கள்
பற்றிக்கொண்டது எங்களுக்குள்ளும்

Robert சொன்னது…

மெளனம் கொண்டு என் வார்த்தை உடை // மழைச்சாரலாய் மேனி நனை// உன் விழிகள் விதைத்துப்போட்ட
விதையில் துளிர்த்துகொண்டிருக்கும் // அருமையான சொல்லாடல்கள்!! நன்று....

இந்திரா சொன்னது…

முகநூல்ல சொன்னது தான் இங்கயும்..
(நாங்க எப்பவும் ஒரே பேச்சுதான்)

//சாத்தியப்படுகையில் சத்தம்போடு
சத்தத்தின் நடுவே நிசப்தம் தேடு//

அழகான கோர்வை ரேவா..

அ. வேல்முருகன் சொன்னது…

கனிந்த காதலது
களி கொள்ளட்டும்
இதுபோதுமென
எப்போதும்