உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனக்கிறுக்கல்கள் 12



விளையாட்டுத்தனங்களுக்கு வழியற்றுப் போய்விட்ட மொட்டைமாடி வராண்டாவில் நேற்றைய பருக்கைகளின் கூழ் மெளனம் அப்பாவின் வெள்ளை வேட்டியில் காய்கிறது ஏதோ ஒரு சமாதானத்தின் பெயரில்..

வழக்கம் போல் மாடி நிறைந்திருக்கும் தொட்டிச் செடிகளில்  நிரூற்றும் செய்கையற்றுப் போன இம்மழைக்காலத்தை?! ஒரு சிறுமியின் மிட்டாய் கரைந்த ஏக்கத்தோடு பார்க்கிறேன்.. மழை பூத்திருக்கும் இலையில் சிறுதுளி தருகிற செய்திக்குள், ஈரம் தெளிக்கிறது இருப்பு.

கரைந்து அலகு திறந்து, காய்ந்த வடகங்களை எடுக்க போராடும் காக்கையின் அமாவாசை கனவு எதுவாய் இருக்குமென்று யோசிக்கிறேன்.. அணில் பிள்ளையொன்றின் வரவில், அந்த பக்கம் நகர்ந்து அமர்ந்துகொண்ட காக்கையின் கண்கள், அணிலின் கைகளாய் மாறிப்போன கால்களை வேடிக்கைப் பார்க்கிறது, அதுக் கொறித்துத் தின்னும் அழகில் மிச்சமான தேவைக்கான தீர்வை கண்டெடுக்கிறேன்..

எப்போதும் ஜோடியாய் வந்தமரும் புறாக்கள் தன் க்ளூக் சத்தத்தால் என் கவனத்தை திறக்க, அதுவரை அங்கிருந்த அணில் பிள்ளையின் காய்ந்த பருக்கைக்கான கூழ் மெளனம் பகிர்ந்த சொற்களின் சத்தத்தை பகிர்ந்துகொடுக்கிறது புறாக்களுக்கு..

கொத்தித் தின்பதும், தலை நிமிர்ந்து பார்ப்பதுமான அதன் எச்சரிக்கை உணர்வில், காலம் கழற்றிப் போட்டிருக்கும் இந்த வெயில்  நேரத்திற்கான காலணியைத் தேடுகிறேன்.. திரிதல் போலே ஒரு பறத்தலை எப்போதும் ஏக்கமாகவே வைத்திருக்கும்  என் கனவுகளின் சிறகுகளுக்குள் பொருந்தா வானம் இம்முறையும் வெளிச்சங்களைத் தொடரச்செய்யும் நிழலாக்குகிறது பெரும் வெயிலைக் கொடுத்தப்படி..

எல்லாத் தேடலும், எதுவென்று அறியா பயணமும் கை நகங்களைப் போல வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருந்தாலும்,
அதை வனப்பாக்குகிற நகப்பூச்சுகளின் நிற சேடுகள் நம் நிறத்திற்குப் பொருந்திப் போவதற்கான நவீனத்தை அதீதமாய் நேசிக்கிறேன்..

சின்ன சிக்கலை கையெடுத்து அவிழ்த்துப் பழகா மனதின் சோம்பல், கைக்காட்டி குறை சொல்ல காரணம் தேடுகிறது இன்னொருவர் முகம் பார்த்து, அது சுட்டிக்காட்டுகிறது மூன்று விரலின் தந்திரத்தோடு

ஒப்படைத்தலெனும் சிறைச்சாலைக்குள் குட்டிவானங்களை தரத்தவறாத ஜன்னல் வாழ்வை, துளி தெறிப்பின் மூலம் வெளி நடப்பதை ஓரளவில் விளங்க முடிந்த இந்த சிற்றறிவை இன்னும் ஆழமாக்க முயற்சிக்கிறேன்.. எந்த கண்ணாடியும் நிராகரிப்பதில்லை எனக்கான பிம்பத்தை. இருந்தபோதும் ஆதி வாழ்வில் பழக்கப்படுத்தப்பட்ட டி என் ஏக்குள் ஒளிந்திருக்கும்,  என் குகை மனிதத் திமிர் என்றைக்கும் எனக்கான வளையாத தேடல்.


விளையாட்டுத் தனங்களுக்கு வழியற்றுப் போய்விட்ட மனதில், இசையாகி அசைவுறுகிற பறவையின் குரல்களும், இயற்கைக்கு இயைந்து பழகிய அவைகளின் வரவின் பக்குவ விரலும், நேற்றைய என் பருக்கைகளின் கூழ் மெளனத்தை வெயில் விரித்துக் காயவிடுகிறது..

கொத்தித் தின்னும் இன்னொரு பறவையின் வரவிற்காக...


இன்னும் பேசுவோம்

-ரேவா


0 கருத்துகள்: