உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

புற உலா

 

ஒரு மாற்றம், அந்த மாற்றத்தைத் தொடர்ந்து நம்மை தொடர்பற்ற நிலைக்குத் தள்ளும் ஏதோ ஒரு தொடர்பின் ஆதாரச் சிக்கல் என அத்தனையும் ஒரே இடத்திலிருந்து கவனிக்கையில் இருக்கும் நெருக்கடியை, எப்போதும் போல் அல்லாத வேறு சில பயணங்கள் குறைத்துவிடும் தானென்பதை சில பயணங்கள் தந்த அனுபவங்களின் வழியாய் உணர்கிறேன்.

சிக்கல் பின்னப்படும் காரணமும், அது சிக்கலாக்கிக் கொண்ட கவனிப்பின் முதல் பிழையும், நாம் உணர எடுக்கும் நேரமும் எந்தளவு என்பதைப் பொறுத்து பிணக்குகளின் பிணைப்பை யூகித்துவிட முடியுமென்றே நினைக்கிறேன்.. எப்போதும் எதையும் துளிக் குறைவில்லாது தரத் தவறாத வாழ்வில், நாம் கையாள்வதைப் பொறுத்து முக்கியத்துவம் பெற்றுவிடுகிற எதுவொன்றும் காலநகர்வில் அப்படி இல்லாமல் போவதின் முகம் நமக்குப் புதிதானது.. 

அது ஒரு மீள் கட்டுமானத்தையோ அல்லது இண்டிரீயர் வொர்க்கையோ, நம்மிடம் கோரும் தருணத்தின் நியாயத்தின் மீது சரியான நியாயம் இருப்பதையே உணர்கிறேன்.

இங்கே நான் வசிக்கும் பகுதியில் திங்கள், வியாழனில் காய்கறிச் சந்தைகளை கிராம மக்களும், வியாபாரிகளும், போடுவது வழக்கம்.. அந்த வாரத்தின் இரு நாட்களில் ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுக்கொண்டு நான் கிளம்பிவிட தயாராகும் தருணம் எனக்குத் திருவிழா..

பார்த்த முகங்களும், அதன் பின் நாம் யூகித்து முடித்துவிட்ட பாவங்களும், ஒரே எண்ணத்தை வேறு வேறு தட்டில் படைப்பதைப் போன்ற கிளிஷே காலங்களிலிருந்து எனக்குப் பெரும் விடுதலை கிடைப்பது இந்த நாட்களில் தான்.. 

நேற்றைக்கும் அப்படியான ஒரு திங்கள் தானென்று நினைத்திருந்தேன்.. அகத்தோடு நாம் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் சில மனித உறவுகளின் உரையாடல்களை, புறம் நமக்கு சில காட்சிகள் வழியாய் அதை வேறொன்றாய் விருந்துவைப்பதை கவனிப்பு மனதோடு அதை கடப்பவருக்கு புரியுமா? இல்லை நாம் கவனிக்கவேண்டுமென்று அத்தனையும் நடக்கிறதா, என்ற குழப்பம் ஏற்கனவே என்னிடம் உண்டு..

நேற்று பழக்கப்பட்ட வீதிகளின் பின் அறுந்து தொங்குகிற சுவாரஸ்யத்தை, கால்கள் தாண்டி நடப்பதை உணர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கையில், ஒரு பால் குரல்...

நீ என் அம்மா
நான் உன் அத்தை
நாம ரெண்டு பேரும் இப்போ சமைச்சு விளையாடுவோமா?

சட்டென்று என் அக உரையாடல் உடைகிறது. மனம் அந்த பிம்பங்களை கவனிப்போடு ஒட்டிப்பார்க்கிறது..

இன்னொரு குரல்...

ஏண்டீ அங்க கதை பேசுற இன்னும் சமைக்கலயா?.... (இதுவும் ஒரு பிஞ்சின் குரல்)

குழந்தைகளின் உலகம் தான் எத்தனை குரல்களால் நிறைந்து, பின் அதன் ஏதுமற்ற ஒற்றைத் தன்மைக்கு தன்னை இழுத்துவந்துவிடுகிறது இல்லையா..

(யோசிக்கிறேன்)

ஓர் ஆணின் கட்டளையை, அல்லது அவள் வளர்ந்து பார்க்கிற இடத்திலிருக்கும் அதிகார த்வனியை, அவள் சட்டென்று ஏற்கிறாள். அதன் கனம் அறியாமல்..

இன்னொரு குழந்தை..

வாங்க சமைச்சிட்டேன்... எப்பவும் கோவம் தான்...

(அவர்களுக்குள் சிரித்துக் கொள்கிறார்கள்.)

மண் சாதமென பரிமாறப்படுகிறது.. பொரியல் சில கற்கள்.. குழம்பு சில துளி நீர்..

ஒரு பால்யத்தில் தவறவிட்ட சுவையை இன்று நான் வேறொரு மூன்று ஜோடி கண்களின் வழியே தரிசித்துக்கொண்டிருக்கிறேன்.

எதுவுமற்ற எளிய அஸ்திவாரத்தின் பின், எழும்பி நிற்கும் எதுவொன்றும் என்னளவில் அதீத கெட்டித்தன்மை வாய்ந்தது என்று எப்போதும் உணர்பவள்  நான். இந்த காட்சியின் வழியே மீண்டும் பார்வை திடமாகிறது..

அவர்களுக்குள் உண்பது போன்ற பாவணை நடக்கிறது.. பாத்திரங்களை கழுவது யாரென்ற கேரக்டர் வெரிபிகேசனை நான் கவனிக்கையில், நீங்க கை கழுவுங்க, நான் எடுத்துட்டு போறேனு அம்மாவா தன்னை ஏற்றுக்கொண்ட பிள்ளை பேசுகிறாள்..

அத்தையாய் தன்னை ஏற்றுக்கொண்டவள் திடீரென்று தோழியாகிறாள்.. இரு டீ நானும் வரேன்..

(சிரிக்கிறேன்)

குழந்தைகள் உலகம் தான் எத்தனை எத்தனை மாறுபாடுகளை, நிறச்சாயங்களை, உறவு பேதங்களை உடைத்தெறிந்துவிட்டு அதன் ஆதாரத்தைப் பிடித்துவிடுகின்றனர்.. என்னளவில் இது எனக்கு பெரிய பாடம்

 நம் ஆரம்பமே பிள்ளைகளுக்கு புகட்டுகிற பாடம் என்னது? என்ற கேள்வியில் கவனிப்பா? இல்லை சொல்லித் தருவதா? என்ற கேள்வியில் கவனிப்பு முதல் இடத்தைப் பிடித்துவிடுகிறது என்றே நினைக்கிறேன். இரண்டு மூன்று வயதைக்கூடாத் தாண்டாத பிள்ளைகள் தன் மனதிற்குள் ஏற்றுக்கொண்டுவிட்ட இந்த நிறத்தை, பின்னாளில் அவர்கள் வாழ்வில் என்னவாறெல்லாம் வனையக்காத்திருக்கிறாள்கள் என்ற எண்ணம் இப்போதே எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது..

காட்சிக்கு வருவோம்..

சாப்பிட்டு முடித்துவிட்டார்கள்.. பாத்திரங்கள் கழுவப்பட்டு அடுக்கப்பட்டுவிட்டது..

மூவரும் கை பிணைத்து ஆடுகிறார்கள்.. ஒரு ஆணென மாறிய பெண், அத்தையாய் இருந்து தோழியான பெண்.. அம்மாவான இன்னொரு பெண் மூவரும் கைபிணைத்து ஆடுகிறார்கள்.. அவர்கள் சிரிப்பொலியில் ஏனோ கண்ணகி மதுரையை எரிக்க காரணமாய் இருந்த முத்தும் மாணிக்கமும் சிரிப்பின் வழி தெறித்தோடுகிறது..

" இந்த அறிவு தான் எத்தனை ஆபத்தானதென்று உள்ளுக்குள்ளே கேட்டுக்கொள்கிறேன்.."

அசையாத ஒரு உருவம் அவர்களை கவனிப்பதை உணர்ந்துகொண்டவர்கள்,

ஏய் அங்க பாருடி அந்த அக்கா நம்மளயே பாக்குறாங்க என்கிறாள் ஆணானவள்.
ஆமாம் டீ இது அம்மாவானவள்
வாங்க டீ ஓடிரலாம் இது அத்தையானவள்..

மூவரும் என் கண் மறைந்து அவர்கள் கூடு புகுந்தனர்.. நான் இந்த சம்பவங்கள் கொடுத்த கணத்தோடு மனித முகங்களும், வித விதமான உணர்வுகளும் மொய்த்துத் திரியும் காய்கறிச் சந்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறேன்..

எதிர்படும் ஒரு சாலையில் இருபுறமும் நீண்டிருக்கும் வெள்ளைக்கோடுகள் எனக்கு இன்று வேறாய் தெரிவது ஏன்? என்று என்னையே கேட்கிறேன்..

எது அன்பு? எதுவரை அதன் கனம், எது அதன் மீறல்.. தீராத பயணங்களைக் கொண்டிருக்கிற சாலைகளில் இருபுறமும் கிளிக்கப்பட்டிருக்கும் வெள்ளைக் கோடுகள் பேசும் சமாதானம் என்ன?

எல்லா பயணமும் விடைதேடுவதாய் இருக்க, கேள்விகளை சுமந்து நம்மை நோக்கி வரும் முகங்களை வெறும் முகங்களாக மட்டுமே பார்ப்பதா?

அந்த குழந்தைகள் வழியே நடந்தேறிய புறக்காட்சியின் தெளிவை, அகத்தின் அடர்த்தியைப் பொருத்திப் பார்த்துவிடுகிற மனதை வெறும் அகம், புறம் நடந்தேறும் பரிமாற்றமென்று மட்டும் சொல்லிவிடமுடியுமா?

புரியாததென்று எதுவுமில்லை என்பதின் ஆதாரத்தை நாம் தொலைத்துவிட்டு, எதையும் புரியாததாகவே பார்க்கப் பழகிவிட்ட இலகு மனிதர்களின் கனம் இந்த உறவு முறைகளுக்குள் பெரும் சுமை தான்.. என்னளவில் அடர்த்தியின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடியாத அல்லது பொருத்திப் பார்க்க முடியாதவர்கள் எனக்கு வேடிக்கை மனிதர்களே..

அவர்களை இந்த குழந்தைகளைப் போலே கடந்துசெல்லவே ப்ரியப்படுகிறேன்.

ஒரு மாற்றம், அந்த மாற்றத்தைத் தொடர்ந்து நம்மை தொடர்பற்ற நிலைக்குத் தள்ளும் ஏதோ ஒரு தொடர்பின் ஆதாரச் சிக்கலென, அத்தனையும் ஒரே இடத்திலிருந்து கவனிக்கையில் இருக்கும் நெருக்கடியை, எப்போதும் போல் அல்லாத வேறு சில பயணங்கள் குறைத்துவிடும் தானென்பதை சில பயணங்கள் தந்த அனுபவங்களின் வழியாய் உணர்கிறேன்.


புறவுலா தொடரும்..

- ரேவா

0 கருத்துகள்: