உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனக் கிறுக்கல்கள் 6

 ” ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் “

நேற்றைய பயணத்தின் வழியில் கண்ணில் பட்ட தேவ வாசகம் தான் மேற்குறிப்பிட்டிருப்பது.. ஒரு வார்த்தை வார்த்தையாக மட்டும் நம்மிடம் தங்கிவிடுவது இல்லை என்பதற்கான உதாரணமாய் இந்த வாசகத்தைக் கருதுகின்றேன்..

எதன் மீதும் நம்பிக்கையற்ற நம்பிக்கையின் மீது விழும் வெயில் காலச் சூரியக் கதிர்களை, கண்கள் கூச வாங்கிப்பழகிய வெளிச்சத்தின் முடிவில், காண்பதெல்லாம் இருளென்ற எளிய அறிவை எடுத்தாளுகையில், கைவிட்டுப் போகும் பொறுமையின் அளவை சோதிக்கின்றவர்களாய் நாமே தான் இருக்கிறோம்..

அந்தவகையில் நம் கையில் வந்து சேரும் ஒரு வாசகமோ, ஓர் உரையாடலோ, அல்லது ஒற்றை வார்த்தையோ, அது நம் இருப்பை அசைத்துப் போடுகின்ற ஒன்றாய் இருக்கும் பட்சத்தில் ஆழ்ந்த கவனமும், அதை மீறிய நிதானித்தலும் தான் நின்று பழகுதலுக்கான வழித்துணையாய் மாறிப்போகின்றது இல்லையா?

எத்தனையோ பதிவுகளைத் தாண்டியும் சென்னையைப் பற்றி மீண்டும் இங்கே பதிவாக்கிட மனம் எடுத்துவரும் இந்த எழுத்துக்களுக்கு என்னால் தடை போட முடியவில்லை. எதிர்பாரா ஒரு பயணத்தின் வழியில் இணைந்துகொண்ட பெளர்ணமி நிலவில் கவிதை  நிகழ்வு (PLEATS), தவறவிட்ட நிகழ்வுகளுக்காய் வருந்திக்கொண்டிருக்கையில் நானறியாது ஒரு விருந்துவைக்குமென்று நினைக்கவேயில்லை.

தொடர் உரையாடல்களை நிகழ்த்திப் பழகிய நமக்கு, எப்போதும்  நம் உரையாடலைக் கேட்க இரண்டு காதுகள் தேவைப் பட்டுக்கொண்டே இருக்கின்றன, அப்படி தான் என்றோ. இல்லையென்றோ எடுத்துச் சொல்ல, ஒன்றை மற்றொன்றாய் இல்லை மற்றதில் இருந்து வேறொன்றாய் பார்க்கத் தெரிந்து, அதற்கான ஒரு  வடிவத்தை கையில் எடுக்கின்றவர்கள் கலைஞனாகவோ மொழியைக் கையில் எடுக்கின்றவர்கள் கவிஞனாகவோ மாறிப்போகின்ற வித்தையை தொடர்ந்து எழுத்தோ, வாசிப்போ, உரையாடலோ, ஓவியமோ நமக்குத் தந்துகொண்டே இருக்கிறது..

’ உன் எழுத்து கவிதையில் சேராது ‘

‘ இது கவிதையாகவில்லை ‘

‘ உன் கவிதையிலிருந்து இரண்டு பத்திகளை எடுத்திருந்தால் இது கவிதையாகியிருக்கும் ‘

‘ எண்டரை எடுத்துவிட்டால் உன் கவிதையில் நல்ல உரையாடலுக்கான/ கதைக்கான கரு இருக்கிறது ‘

‘ கொஞ்சமும் உன் கவிதை எனக்கு ரீச்சாகவில்லை ‘

இவையெல்லாம் கவிதையை நேசித்து உள் நுழைகின்றவர்களை பயமுறுத்தும் காவல் தெய்வங்களைப் போல் விழி பிதுங்கி, நா தொங்க நம் முன்னால் எப்போதும் நிற்கும் கேள்விகள். அது புதிய நிலத்திலிருந்து நுழைகின்றவர்களை பயமுறுத்துகின்ற வேலையை எப்போதும் செய்துகொண்டே இருக்கும். அதை மீறி பயணப்ப்டுகின்ற வாசகனை தன் ரசவாதத்தால் கவிஞனாய், கலைஞனாய் மாற்றிப் போடுகின்ற வேலையை எப்போதும் கலை செய்துகொண்டே இருக்கும்.

மேலுள்ள எல்லா கேள்விகளுக்கும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பதிலிருக்கும், அதில் நமக்கேற்ற பதில் என்பது சரியா? இல்லை அவர்கள் பதிலில் எந்த பதில் சரியான பதிலென்ற குழப்பும் கேள்விகளுக்கு, நம்மிலிருந்தே நமக்கு வெளிச்சத்தைத் தருகின்ற உரையாடல் நடக்கின்ற இடம் கிடைப்பது அலாதியானது..அது கவிதைக்கானதாய் இருப்பது என்பது என்னைப் பொறுத்தவரை வரம் தான்..

பெளர்ணமிக் கடல், மேலெழும்பி தன் வண்ணத்தை வெளிச்சமாய் வரைந்துகொண்டே வரும் நிலவும், அதற்கு ஒத்திசையும் வெள்ளி நிறக் கடலும், உச்சியெழுகையில் கிடைக்கும் தோற்றமும் கடல் மணலில் நடந்து பார்க்கும் பக்குவமும் மனப் பாதங்களுக்கு அமைவதைக் கவிதையோடு பொருத்திப் பார்க்கையில் Pleatsக்காக அவர்கள் தெரிவு செய்திருக்கும் இடம் அத்தனை அம்சமாய் பொருந்திப்போகின்றது..

இம்முறை நிகழ்வில் ஷான் கருப்பசாமி, ஜீவகரிகாலன் அண்ணா , வேல்கண்ணன் அண்ணா, அரவிந்த் யுவராஜ், சீனிவாசன் சார், அண்ணன் கவிதைக்காரன் இளங்கோ இவர்களின் கவிதை சார்ந்த பேச்சும் அது அழைத்துப் போகும் பயணதூரமும், அது நமக்குள் கிளர்த்திய அனுபவமும் எழுத்தில் எடுத்துவைக்க முடியாதென்றே நினைக்கிறேன்..

உப்புக்காற்றை உள்ளிழுத்துக் கொண்டே கடல் வாசத்தோடு கவிதை வாசிக்கையில் அலை வந்து வந்து கரை தீண்டிச் செல்கையில் ஏற்படும் உணர்வு தனியானது.  ஷான் அவர்களின் பேச்சும், கவிதை மீதான பார்வையும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.. நிகழ்வில் என்னோடு கவிதை நண்பர்கள் உடன் பயணித்தார்கள்.. இன்னும் இன்னுமாய் கவிதையை நேசிக்கிறவர்கள், புதியவர்கள், வாசகர்கள், என அத்தனை பேரையும் பெளர்ணமிக் கடல் கவிதை வாசிக்க அழைக்கிறது.. நேரமிருக்கிற, விருப்பமிருக்கிறவர்கள் நிகழ்வுகளைப் பற்றி ஒருக்கிணைப்பாளர்களிடம் பேசிக்கொள்ளுங்கள்.

ஒரு வார்த்தை நம் பயணத்தை முற்றிலும் வேறொன்றாய் மாற்றிப் போடுகின்ற கணம், நமக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் நிகழலாம்..

தேவையெல்லாம் யூகிக்கும் மனமும், நுணுக்கி ஆராயும் வித்தியாசமும் தான்..

இன்னும் பேசுவோம்...

-ரேவா

0 கருத்துகள்: