உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனக்கிறுக்கல்கள் 13



நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை
உன்னைக் கைவிடுவதும் இல்லை

 பயணத்தில் சாராம்சத்தைப் பொருத்து என் கண்ணில் பட்டுவிடுகிற வேத வாசகம், அன்றைய மனதின் வேகத்தை அளந்து பார்த்து அதற்கான தகவலைச் சொல்வதைப் போலே எப்போதும் உணர்ந்திருக்கிறேன். இன்றும் அப்படியான ஒரு பயணம், அதே போலொரு மனநிலை,  ஏற்கனவே அறிந்திருந்த வாசகமென்ற போதும், ஒரு உறவின் கயிற்றின் மேல் நடக்க பணிக்கும் இந்த பொம்மலாட்ட காலங்கள், கால்களுக்கு சலங்கைகளை அணிவித்து, ஊரார் முன்  நம்மை நிறுத்திவைத்து அழகுபார்க்கும் ஒப்பற்ற ஒப்பனையை எப்போதும்   நமக்குச் செய்துவிட மறப்பதே இல்லை..

ஒரு வலி, அந்த வலியை பின் தொடரும் நிழலின் கசிந்துருகுகிற இன்னொன்றின் விடுதலை, என எதையும் ஓர் ஒப்பீட்டுக் கணக்கைப் போல், பார்க்க பழகவிட்ட மனதின் அகச்சிக்கல் எப்போதேனும் திணறடிக்கையில், ஒரு பிடித்தமான புறச்சூழலை மனம் நாடுவது இயற்கை தான்..

வெறும் குரல்கள் மட்டுமே பெரும் ஆறுதலாய் இருக்கையில், அது அடைபட்டு கிடக்கும் சூன்ய வெளியை தரிச்சிக்கத் தரும் அலைப்பேசியின் குரூரத் தனிமை கொன்று போடும் கொலைவாள் நிமிடங்களின் கூர்மையை, விசும்பல்கள் எப்போதும் உடைத்துவிடுவதில்லை என்றாலும் அது பாரம் குறைவதற்கான வழியாகவே மாறிப் போகும் ஒற்றையடிப் பாதை தான்.

நாம் நடந்து பார்ப்பதற்கான நிலம் எதுவென்பதைத் தேடித் திரிவதிலே பெரும் பகுதியை செலவழிக்கிற உறவின் பொழுதுகள் நம்மை எதிர் வெயிலுக்கு பழக்குகிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. எதுவும் ஒரு காரணத்திற்கான நுழைவாயிலாய் இருக்கமுடியுமென்ற அணுகுமுறையை, வீட்டு அழகு சாமான்களை அடுக்கிவைத்திருக்கும் ஒரு கண்ணாடிப் பேழையைப் போலே பார்க்கிறேன். அதன் தூசிபடிந்திருக்கும் அணுகமுடியாத அமைதியின் மீது தட்டிவிட்டு மீண்டும் அதே இடத்தை அதை அடுக்கி வைக்கும் காலம் ஒரு தெருக்கூத்து.

அதன் ஒவ்வொரு பொம்மையின் பின்னெழும் கதைகள் ஒவ்வொன்றும் ஓரு சுய தரிசனத்திற்கான முதல் வழி.. எதையும் அணுகிப் பார்ப்பதில் இருக்கும் சிரமம், பாதரசம் தடவிய கண்ணாடியில் எதிர்படும் எதிரொலிப்பதை நம் பிம்பமாய் நம்பவைக்கிறது.. 

எதிலும் இருப்பதில்லை நாம். எதுவாகவும் இருக்க முயல்வதே அதன் ஆரம்பம் என்று எதை எதையோ பகடைக் காய்களை உருட்டுவதைப் போல் உருட்டிப் பார்க்கிற  மனதின் பரமபதவாசல் அன்பெனும் முதல் தாயத்திற்காகவே ஒவ்வொரு முறையும் பகடை உருட்டுகிறது.

விழுந்த தாயங்களும் அதன் பின்னான விருத்தங்களும் நம்மை அனுமதிக்கும் ஏற்ற இறக்கங்களெனும் நிலை தடுமாற்றத்தை முக நூலின் நிலைத் தகவலைப் போல் விருப்பமிட்டு கடந்துவிட முடிவதில்லை.கொத்தக் காத்திருக்கும் பாம்புகளும், ஓர் உயரம் அது நம்மை அனுமதிக்கும் அதிகபட்ச அவகாசமென்ற, இரண்டும் ஒரே அனுபவத்தை இருவேறாய் பார்க்க அனுமதிக்கையில், கீழிறக்கிவிடும் பாம்புகளும், மேலேற்றிவிடும் ஏணிகளும் என்னளவில் ஒன்றே என்று சொல்கிறேன்..

தவறான அனுபவங்களும், அதன் பின் கண்டடைகிற சரிகளும், சறுக்கிக் கிடக்கும் பொழுதின் தவறுக்கான சரியாகையில், சரி தவறென்ற வார்த்தைகளின் கட்டமைப்பில் நின்று கொண்டு, மேல் வரிசையில் சிரித்திருக்கும் அந்த தெய்வப் படங்களைப் பார்க்கிறேன்..

ஒரு பூரணத்துவம் என்பது எதை நோக்கிய பயணம்?

எது அதன் அளவு?

எவை எல்லாம் அதன் எல்லை என்று தேடுகிறேன்.

தேடச் சலிப்பதில்லை பயணம்.. தொடரும் கால்கள் கூட்டும் வேகம், கொண்டு சேர்க்கும் இடம் எப்போதும் எனக்கு பிரதானம்..

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை
உன்னைக் கைவிடுவதும் இல்லை



Admire and Accept.


இன்னும் பேசுவோம் ...

-ரேவா

0 கருத்துகள்: