உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனக்கிறுக்கல்கள் 7


 

மனம் விட்டுப் பேசக்கூடிய அளவில் நெருக்கத்தை உண்டு பண்ணி, அதன்  நேர் எதிர்மறைக்குள் விளையாட்டுத்தனமென போக்குக்காட்டும் எத்தனையோ நிகழ்வுகளை, அனுபவங்களாய் கொடுக்கின்ற வருகையாளர்கள் அனைவரையும் பாடம் படித்ததைப் போல் மனதில் பதிந்து வைத்துக்கொண்டாலும்,” வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது?” என்ற வரிக்கேற்ப, கழிவிரக்கத்தைத் துறந்து ஓர் போகியை மனதிற்குள் நிகழ்த்துகின்ற வாய்ப்பை தருகின்றவர்களாய் வந்தவர்கள் அமைந்து போகும் வித்தையை,  நம் நேசித்த, பின் நடைமுறையில் அப்படி இல்லாமல் போனவர்களேஅதைத் தருகின்றவர்களாய் இருக்கும் முரண்மெய்மைக்குள், முண்டியடித்துக்கொண்டு ஒரு சுயமுடிவை எடுத்துக்கொண்டுவரும் மனம் அத்தனை லேசுப்பட்டதல்ல.

அதன் போராட்ட விதிக்குள், வெள்ளைக் கோடுகளற்ற ஒரு நெடுஞ்சாலைப் பிரிவின் பயணத்தைப் போல், வருவதும் போவதும் எப்படியென்ற அறியாமைக்குள் தெளிந்து கொண்டு பயணப்படும் உந்துதலைப் போல் சவால் நிறைந்தது.

அதன் Minimum Riskக்கின்  Maximam payக்கு அதுவே கடமைப்பட்டது.

சிரித்துப் பேசவோ, மனம் விட்டு அழவோ, ஆறுதல் தேடவோ,  வெளியெடுக்கப்படும் உள்மன ரகசியங்களின் வாடை பிடித்துப்போய் வாலாட்டிச் சுற்றும் முகமூடிகள் நமக்குப் பழக்கப்படாதவையாய் இருக்கும் பட்சத்தில், அதன் குறீயிட்டு மெளனத்தையோ, அல்லது குறிப்பால் உணர்த்தும் வார்த்தைகளையோ, நாம் கவனிக்கத் தவறுகையில் வந்து நிற்கும் இடம் முழுக்க முழுக்க நமக்குத் சொந்தமானவை..

அங்கே நம் முப்பாட்டன் நிலத்தில் விதைத்ததை, முகச்சாயங்களோடு வேறொருவர் பேரம் பேசி விற்கும் அவல நிலைக்கு நாம் தள்ளப்பட நாமே தான் காரணமென்ற எளிய உண்மை, நமக்கு உரைக்கத் தொடங்கும் பொழுதில், எழுந்து நடப்பதற்கான அல்லது ஊன்றி நிற்பதற்கான முதல் கல்லை  நம்மிலிருந்து நமக்கு எடுத்து வைப்பவர்களாய் நாம் இருக்கவே, நடக்கும் இந்த சம்பவங்கள்  நம்மைத் தயார் செய்வதாய் நினைக்கத் தொடங்கையில், ஒரு சுவாரஸ்யமான விளையாட்டுக்கு நாம் தயாராகிவிட்டதாய் உறுதிசெய்துகொள்ளலாம்.

விளையாட்டுக் களம் இங்கே வார்த்தைகளாகவோ அல்லது சிறு புன்னகையாகவோ சின்னதாய் கைகுலுக்கலாகவோ, பகிரப் படாத மெளனமாகவோ இருந்து விடுவதில், பார்வையாளர்களற்ற விளையாட்டில் முதல் பார்வையாளராகவும், அதன் வெற்றித் தோல்வியில் பங்கெடுத்துக் கொள்கிற நடுவராகவும் நாமே நின்று பார்க்கும் நிலம் கெட்டியானது..

தன் முனைப்பில் நாம் விளையாடத் தயாராகிவிட்ட செய்திக்கு ஏற்ப, அடுக்கடுக்காய் வந்து சேரும் புதிய விதிமுறைகள், தேர்ந்த கவனிப்பின் Updated Versionக்குள் நாம் இருக்கவே நம்மை உந்தித்தள்ளுகிறது.

ஒரு பழக்கம் வழக்கத்திற்கு எதிராய் திசை திரும்புதலை, காற்றின் போக்கென்றோ, கற்றுத் தேர்ந்த, கவனித்தலில் கிடைத்த அறிவென்றோ எடுத்துப் பார்க்கையில் நம்மை, நாமறியாது மாற்ற அனுமதித்த அந்த பழக்கம், வழக்கத்திற்கு ஏங்கும் சவலை தன்மையிலிருந்து விடுபடுதலே இன்றைக்கான பெரும் விடுதலையாகிறது..

எல்லாவற்றுக்குப் பின்னும் ஓர் எல்லைக்கோடுகள் அவசியமானவை என்பதை நம்பத் தொடங்கும் பொழுதில் முளைக்கும் அரூப வேலிக்குள், பாயும் மின்சாரத்தின் அளவுக்கேற்ற அனுமதிப்பின் வருகைகள் நிகழட்டும்..

தேவையெல்லாம் பயங்கரவாதமற்ற பக்குவத்தின் பின், பகிர்ந்து உண்ணல் தான்..

பசியாறுவோம்..

இன்னும் பேசுவோம்..


-ரேவா


0 கருத்துகள்: