உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனக்கிறுக்கல்கள் 16

 
 

 
பழக்கப்பட்ட வீதிகள் பக்குவப்பட்டுவிட்ட பயணத்தால் நிறம் மாறுகின்றன..
 
உணர்கிறேன்..
 
ஒன்றிரண்டு காரணங்களால், உடுத்த உடுப்பற்றுப்போன முக்கியத்தின் அல்லது முன்னிலையின் நிர்வாணம் போதுமானதாகிறது நம்மை வெளிக்காட்டிவிட அல்லது வெளியேற்றிவிட. 
 
காத்திருக்கிறோம்.. 
 
வீதிகள் எங்கும் நிறைந்திருக்கும் மனிதத் தலைகளும், அவர்கள் கைகள் நிறைய சேர்த்து வைத்திருக்கும் பைகளில் நிறைந்து பிதுங்கும் புதுத்துணிகளும், அதன் வழியாய் விரிகிற உப்பின் சுவையும், இந்த வாழ்வின் வழியே நமக்குக் காட்டும் வேடிக்கையின் ஆழம் நாம் அறியாதது.
.
தீபாவளி நெருங்க இருக்கும் சொற்ப நேரங்களில் வெளிச்சமிட்டுக் காட்டும் நினைவுகள், வெடிகளிலிருந்து கிளம்பும் வாசத்தைப் போல் நெடியானது. 
 
கொண்டாட்டம், அதன் பின் மனம் ஏற்கும் குணத்தின் நிறம் எல்லாம் அம்மா அரைத்து வைக்கும் மருதாணிக் கைகளாகிவிடுவதன் அழகு, இன்றும் அதே வாசத்தோடு மனதில் தேங்கியிருக்கிறது.. அது பாலினத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பில் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் மீது கொண்டுவிடும் முதல் ஸ்பரிச வாசத்தைப் போல் அந்த மருதாணி கைகளில் வாசம் அத்தனை அலாதியானது. அது நினைக்கும் போதே போதையேற்றும் ஒரு வஸ்து.
 
இன்று எல்லாம் ஒரு நாளென்ற எண்ணத்தின் மீது, தொலைத்துவிட்ட முகவரியை, அல்லது தேடிக் கொண்டிருக்கிற பயணத்தால் கிடைக்கிற சிறு வெளிச்சத்தை, ஒவ்வொரு நாளின் இருளோடும் அணுகிப் பார்த்துக் கொண்டிருப்பதில், இந்த காலங்கள் ஒவ்வொரு நாளையும் ஒரு புதிய கொண்டாட்ட நாளென்ற எண்ணத்திற்கு அழைத்து்ச் செல்கிறது..
 
வாழ்க்கை ஒவ்வொருமுறையும் நம்மை வேறு வேறாய் சுழற்றிப் போடுகையில், கவிழ்ந்து கிடக்கிற கரப்பான் பூச்சியின் அசைவற்ற உடலாகிறது மனம். அது அனுமதிப்பதில்லை உயிருள்ள அசைவுகளை.. மாறாக நம்மை நாமாகவே திருப்பிப் போடும் காலத்திற்காய் காத்திருக்கிறது.. அந்த காத்திருப்பின் வழியாய் இழையோடுகிற அல்லது புரையோடுகிற நினைவின் வலி கொஞ்சம் ரணமானது தான்..
 
நவீனத்தால் ஊனமாகிவிட்ட?! கொண்டாட்டங்களை Flipkart, amazon, snapdeal, craftsvilla என்று பிடித்ததை ஆர்டர் செய்து அதன் டெலிவரிக்காக காத்திருக்கும் காலிங் பெல் சத்தங்கள் தந்துவிடுவதில்லை தான். 
 
பழக்கப்பட்ட பார்வையின் நம்பிக்கை செய்ய துணிகிற செயலின் பின்னனியில் காரணமாகிற சோம்பேறித் தனங்களோ அல்லது வசதியோ நேரடித் தேடலெனும் அசலின் போது கேள்வி கேட்கிற அறிவும் மனதும், ஒரு கிளிக்கில் பேரம் பேச வாய்ப்பற்றுப் போனதை, வாங்குபவருக்கும், விற்பவருக்குமான நேரடி பரிமாற்றத்தை, மனிதர்களை கொஞ்சமாவது அணுகிப் பார்க்க கிடைக்கும் வாய்ப்பை, ஒரு புன்னகையால் உற்சாகத்தை இன்னொருவருக்குப் பாய்ச்சுவதை ஒரு COD கொடுத்துவிடுவதில்லை என்பதை, கொடுத்துவைத்த சில பயணங்கள் நமக்கு கற்றுத் தந்துவிடுகிறது.
அது கணக்கில்லா மனிதர்களை, அவர்களின் அணுகுதலை, அவர்கள் பார்வையில் அல்லது பேச்சில் நிகழும் மாற்றத்தை, ஒரு சொற்ப நேரங்களின் செலவில் சம்பாதிக்க முடிந்த பெரிய வரவென்று நினைக்கத் தெரிந்துவிடும் மனமும் அதற்கு ஒத்திசையும் அறிவின் கால்களும் கிடைத்துவிடும் 
 
நேரத்தின் பயணங்கள் மிக மிக அழகானதும் நேர்த்தியானதும் கூட..
ஒவ்வொரு நாளும் நமக்கு விழாக்காலங்கள் தான்.. அதை கொண்டாட கிடைக்கும் மனிதர்களின் வரவும், அவர்களின் விலகலும், நம்மை நமக்குள் புதுப்பித்துக் கொள்கிற மந்திரங்களை நமக்குக் கற்றுத் தருகையில், பெரிதாய் வேறென்ன வேண்டும் இந்த உடலெனும் வாடகை வீட்டில் சந்தோஷமாய் உயிரெனும் பண்டிகைக் காலங்களை கொண்டாடி மகிழ..
 
இருக்கும் வரை மகிழ்வோம்.. 
 
மகிழ்விக்க முயற்சிப்போம்.. 
 
 
இன்னும் பேசுவோம்

-ரேவா


0 கருத்துகள்: