தொலைவுகளில் நெருக்கத்தையும், நெருக்கத்தில் தொலைவையும் அனுபவிக்கும் பயணம் என்றைக்கும் திகில் நிறைந்தது. அதன் ஏற்ற இறக்க வளைவுகளின் கவனச்சிதறல், கொண்டு நிறுத்தும் அதளப்பாதாளம், வழித்துணியற்ற காட்டுப்பாதையை கண் முன் விரிப்பதாகவே இருக்கிறது.
யாருக்காகவோ துணையாகும் பயணமும், துணைவருவதாய் உடன் சேர்ந்த கைகளும், காட்சிக்கு வராது போன இருட்டில் தாண்டிச் செல்வதின் வெளிச்சம் விரிக்கும் வைட்டமின், வெயில் பார்க்க பழக்குவதாகவே இதுவரையும் இருந்திருக்கிறது. வெயில் பார்த்ததும், பார்க்கும் அனைத்திலும் கண் வரையும் இருட்டை நிதானித்துப் பார்க்கும் அறிவே, எது சரியானது என்பதின் சூட்சும வித்தையைச் சொல்லித்தருவதாகவும் இருக்கிறது..
தனித்திருத்தல் பெரும் வரம். அதன் கூட்டாளிகளாய் மனம் விளையாண்டு பார்க்கும் ஆடுபுலி ஆட்டத்தின் காய் நகர்த்தல்கள்
காண்பதை எல்லாம் குறைசொல்வதில் தொடங்கி தான், எனது, என்ற ஆதித் திமிரால் ஆட்டமிழக்கும் பயணத்தில் தேங்கிவிடுவதும், எழுந்து நடப்பதும் எதுவரை நாம்? எதற்காக நாம் என்ற கேள்விக்குள்ளிருக்கும் விடையால் தெளிவது.
தப்பித்தல்கள் தவறோடு சேர்ந்துகொள்ள, தப்புகள் சூத்திரங்களாகும் பழக்கத்தில் பிழைக்கும் கணக்கும், பிழையாகும் கணக்கும் வேறு வேறு தானே..
எதனோடும் போட்டிப்போடாது மனதோடு துணைபோகும் காலங்கள், பருவமாற்றங்களை யூகித்தறிய நமக்கு காலம் கொடுக்கும் மருந்து தான். என்றைக்கும் கசந்து கிடக்கும் மருந்தோ, துரோகங்க்ளோ, புறக்கணிப்போ தான் புதிய பாய்ச்சலை, அல்லது புதிய உத்வேகத்தை நமக்குக் கொடுப்பதாகவே இருக்கிறது..
இனிய தொடக்கங்கள் எங்கிருந்து வேண்டுமானலும் தொடங்கும். மேற்கொண்டு அதை கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகளை மனம் எனும் பயணப்பையில் சேர்த்து வைத்தல் அவரவர் கடமை...
முட்டி மோதி வெளிக்கிளம்பும் விதைகளே மரங்களாகும்...
மரங்களாவோம்.
மனதோடு இன்னும் பேசுவோம்...
நமக்குள் நாமே பேசிப்பார்க்கும் பழக்கம் இருக்கும் வரை வாழ்தல் இனிது...
painting :Lori McNee
0 கருத்துகள்:
கருத்துரையிடுக