ஒரு பனிக்காலத்து மலர் சூடும் துளி நீரின் வாசம் சட்டென்றா பூத்து விடும்? பருவங்கள் தாங்கி நிற்கும் இயற்கையோடு, இயங்கும் எதன் பின்னனியிலும் சூடிக்கொள்ள ஏதாவது ஒன்றை புறக்காட்சியில் அரூபமாய் ஒளித்து வைத்திருப்பதே இக்காலங்கள் நமக்கு கற்றுத்தரக் காத்திருக்கும் கவனிப்புகளின் ஆகப்பெரிய சூட்சுமம் தான்.
ஒரு வேளையை இன்னொரு வேளையாய் மாற்றும் தூரத்தில் தான் இங்கு உறவுகளின் பயணங்கள் இருக்கின்ற போதும், அந்தியை தேர்ந்தெடுத்து கூடடைவதே அனைவரின் சாதனையாய் இருக்க, இங்கொன்றும் அங்கொன்றுமாய் வேர்விட்டிருக்கும் விருட்சங்களின் நிழலை நாம் தேடியெடுத்து, அங்கே வெயில் விளையாட்டை நடத்துவதும், அதன் வேரோடு துளியாய் முளைத்திருக்கும் சிறு செடியின் பின் பச்சையக் கனவுகள் முளைப்பதும், அதை அதன் நிலத்தின் தன்மைக்கேற்ப வளர்த்துப் பார்ப்பதும் அனுபவ விளையாட்டின் ஏற்ற இறக்கங்களைக் கற்றுக் கொடுப்பதாகவே இருக்கிறது.
யூகிக்க முடியாத நேரத்தில் தோற்றுப் போகும் ஒரு வாதமும், அனுமானிக்க முடியாத காலத்தில் வந்து சேரும் ஓர் ஆறுதல் கையும் வேறு வேறா? ம்ம்ம் இல்லையென்று இப்பொழுதுக்குள் இயங்கும் மனது சொன்னாலும் புதிர் உடைத்து அங்கே நம் கைகளை ஒப்படைப்பதில் தான் உட்கொண்ட பொழுதுகளுக்கான செரிமான வேலைகள் தொடங்க ஆரம்பிக்கின்றன.
இங்கு எல்லாமும் ஆரோக்கியம் தானென்பதை முதல் மனது நம்பத் தொடங்குகையில், கழன்று ஓடும் அத்தனையையும் டாக்சின்களின் வெளியேற்றத்திற்கான ஆரோக்கிய வேளைதான் என்பதை உணர்வைத் தாண்டி அறிவின் மனது ஏற்க ஆரம்பிக்கும் போது, வெளிச்சங்கள் புலப்பட்டு, தலைக்கு பின்னிருக்கும் சகமனிதனின் ஒளிவட்டம் தெரியத் தொடங்குகிறது.
இங்கு எல்லோரும் சமானியர்கள் தான். அதே நேரத்தில் எல்லோரும் அசாதாரணமானவர்களும் கூட.
வாழ்வில் பயணப்படுவதென்பது ஓர் அனுபவம் தான், அந்த பயணங்களில் கற்றுத் தேர்ந்தவற்றைக் கவனிக்கத் தருகிறவர்களின் நிழலென்றும் இளைப்பாறுதலைக் கொடுத்திடும் என்பதில் தான், ஒரு சகமனிதனின் தாய்மைக் கருவறை வேலை செய்யத் தொடங்குகிறது.
பிரசவித்தலும், மனம் மலடாய்ப் போவதும் அவரவர் அறிவு அணுக்களின் வேலையென்பதைப் புரிந்து இணைந்தவர்களோடு சேர்ந்து பயணப்பதில் இந்த வாழ்தல் இனிதாகிறது
இனியத் துவக்கங்களோடு...
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக