தீரா மழையும், தீரவே தீராத நினைவுகளும், கடந்த ஒரு வாரமாகவே பருவகாலத்தை அழைத்து வந்து, அடித்துப் பெய்ததில் நிலம் இன்னும் தன் நிலைக்கு வரவில்லையென்பதை, எழுந்து நிற்கும் இந்த பொழுதிலும் உணரமுடிகிறது.
எங்கிருந்தோ வரும் குயிலின் குரலும், தட்டச்சு செய்கையில் வெளிப்படும் இந்த தனித்த இசையும், தேவாலயமொன்றின் வழியாய் காற்றில் கரைந்து வரும் மணி ஓசையும், கிடைத்த சொற்ப காய்ந்த பருக்கைகள், மழையால் தன் இயல்பைப் போன்ற சாயலுக்குள் திரும்பிய உணவை கரைந்து பகிரும் காகங்களின் சத்தமும், வீதிகளை சுத்தம் செய்யும் துப்புரவாளர்களின் கூக்குரலும், மழையின் வேகத்தைத் தாண்டி தன் தேடலின் வேர்களை ஆழ ஊன்றிவிட போராடும் காலடிச் சத்தங்களும், ஹாரன் சத்தங்களும், மழையின் இசையாகவே எனக்குத் தெரிகிறது.
மொட்டைமாடிகள் எப்போதும் மனதோடு பேசுபவையாகவே எனக்கு இருந்திருக்கிறது. அது மழைக்காலங்களில் மறக்காமல் விருந்தொன்றை வைத்து என்னைத் திணறடிக்கும் வேலையைச் செய்யத்தவறியதே இல்லை.
குளிர்வாடைக் காற்றும், மழையால் குளித்து அழகேறிக்கிடக்கும் வீதிகளும், அது தினசரிகளின் சூதாட்டத்தைக் கலைத்துப்போட்டதில் அடைகோழிகளாகிவிட்ட மனித நடமாட்டமற்ற இரவும், சோடியம் லைட் வெளிச்சத்தோடு, என் மொட்டைமாடி பால்கனியில் வந்து உட்கார்ந்துகொண்டு குவளைத் தேனீர் கேட்கையில் உண்டாகும் உற்சாகம், ஒவ்வொருமுறையும் தீரா மழையை எனக்குள் வரவழைத்துக்கொண்டே இருக்கிறது.
நமக்குள் நாமே பேசிப்பார்ப்பது கிட்டதட்ட மன நோயாளியைப் போல் நாம் மாறுகிறோமோ என்று நம்மை நம்பவைக்கும் வேலையைச் செய்வதைத் தாண்டியும், நம் நேர்மையின் மீது நமக்கிருக்கும் கர்வத்தை இன்னும் கூட வலுவேற்ற வருவதாகவே இந்த மழை இருக்கிறது.
வெயிலில் பதமாக்க வைத்திருக்கும் துணிகளைத் தாங்கிப்பிடிக்கும் கொடிக்கம்பிகளில், வரிசையில் நிற்கும் மழைத்துளிகள், எதிர்படும் பிம்பத்தை தலைகீழாய் ஒரு சொட்டில் பிரதிபலிப்பதில் இருக்கும் இயற்கையைத் தாண்டி நாம் வளர்த்துவிட்டிருக்கும் இந்த பகட்டெல்லாம் ஒன்றுமற்றதென்பதை ஒவ்வொரு மழையும், ஒவ்வொரு துளியும், துளித்துளியாய் கோர்க்கும் ஈரமும் இந் நிலத்தின் சூழலுக்கேற்ப, வேரூன்றிக்கிடக்கும் சுபாவமும் எனக்குச் சொல்லிக்கொடுத்தவண்ணம் இருக்கவே செய்கிறது..
புத்தகத்தைப் படிப்பது போன்று மழையைப் படிப்பது.
உற்ற நண்பனோடு பேசுவது போலவே மழையோடு பேசுவதும்.
கையோடு சேர்த்துப்பிடித்துக்கொள்கையில் இருக்கும் சூடும், மழைக்காலங்களில் கையோடு ஆவிபறக்கப் பேசும் குவளைத்தேனீரும் வேறுவேறில்லையென்பது எப்போதும் என் எண்ணமாக இருக்கிறது.
எப்போதும் நானும் மழையிரவும் பேசிக்கொள்வதை ஏனோ இன்று பதிவேற்றிவிட வேண்டுமென்ற எண்ணம் ஏன் வந்ததென்பதைத் தாண்டியும் இதோ வளர்ந்துகொண்டே இருக்கும் இந்த பதிவை சட்டென்று உடைக்க அப்பா ஒரு கப் காபியை கணினியின் முன் வைத்துவிட்டு சென்றுவிட்டார், பருக காத்திருக்கும் இன்னும் சொற்ப நினைவுகளும் ஆவிகளோடு மேலெம்பி இந்த கணினித்திரையை வேடிக்கப் பார்ப்பதும் எனக்கு மழையின் இசையாகவே தெரிகிறது..
பருகத் தயாராகிவிட்டோம் எனில், ஒவ்வொரு மழைப்பொழுதும் நம் கைக்கு தேனீரோடு ஒரு பால்ய சினேகத்தைப் போல் நம் முன் உட்கார்ந்துகொண்டுவிடும்..
இதோ சூடு குறைவதற்குள் குடித்தாகவே வேண்டும் இந்த மழையை.
மழை ஈரங்களோடு
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக