உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 28 அக்டோபர், 2011

உன் நினைவு



பல நேரங்களில்
எதையெதையோ நினைக்கிறது
மனது..
நினைத்த எல்லாவற்றையும்
சில தருணத்தில்
மறந்தும் விடுகிறது...
மறந்த ஒன்றும் நினைவுகளின்
சாயலில் மண்டியிட்டு அழுகிறது..
அழுகின்ற விஷயங்களை
தவிர்க்க துணிகின்ற நேரத்தில்,
மறந்தும் மறக்காமல்
வந்து விடுகிறது
உன் நினைவு...

வியாழன், 13 அக்டோபர், 2011

அத்துணை எளியதல்ல வாழ்க்கை




வணக்கம் நண்பர்களே நலமா?......நட்போடு அனைவரும் நலமாய் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில், என் திருப்திக்காய் என் மனதில் செல்லரித்துக் கிடக்கும் விஷயத்தை என் எண்ணங்களுக்கு உட்பட்டு பதிய விரும்புகிறேன்....எத்தனையோ பதிவுகள் இந்த பதிவுலகில் வந்து எழுதியாகி விட்ட போதிலும், எல்லாம் ஒரு வட்டத்துக்குள் ஒழிய நினைத்து,  ஒதுங்கியாக வேண்டிய கட்டாயத்தில், சுயம் மறைத்து எழுதிய விடயங்கள ...இருப்பினும் என் திருப்திக்காய் எழுதிய  பதிவுகள் இதில் சொர்ப்பமே.. ஆயினும் இனி பதிவுலகம் வருவது குறைக்கப்படும் என்ற காரணத்தால், மனதில் உள்ள எண்ணங்களை பதிந்தே தீரவேண்டும் என்ற உந்துதலின் விளைவே இந்த பதிவு....

சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி மனதை மிகவும் பாதித்த விஷயங்களில்  ஒன்றாக மாறிப்போனது.. அதோடு அன்றாட நிகழ்வாகவும் மாறிப்போனது கண்டு மனதுகனத்தது...நமக்கு நிகழாதவரை, அடுத்தவர் துன்பம் நமக்கு ஒரு செய்தி தான் என்பது சத்தியமான உண்மை..அந்த மனது கணக்கும் செய்தி,    விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு இளங்கலை மாணவி, தன் சகோதரனோடு அலைபேசியில் பேசுவதைக் கண்ட விடுதி காப்பாளர், சக மாணவனோடு காதல் மொழி பேசுவதாய்  தவறாக புரிந்து கொண்டு, அந்த மாணவியை கண்டித்து அனுப்பி உள்ளார். விளைவு அடுத்தவர் முன், தான் அவமானப் படுத்தப்பட்டதாய் உணர்த்த அந்த மாணவி விடுதி வளாகத்தில், தற்கொலை செய்துகொண்டார்...

அடுத்ததாய், பள்ளி ஆசிரியரால் தண்டிக்க பட்ட மாணவன், சக மாணவர்கள் முன் ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை.... காதலை ஏற்க்க மறுத்த பெற்றோரால் காதலர்கள் தீக்குளித்து சாவு... தன்னை பிரிவது இனி சந்தோசம் என்று முகப் புத்தகத்தில் தன காதலனின் status செய்தி பார்த்து பெண் தூக்கிட்டு சாவு  இப்படி தற்கொலை தற்கொலை  என்ற செய்திகள் நாளொன்றும் பொழுதொன்றுமாய் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன..

இது  அன்றாடம் நாம் செய்தித்தாள்களில்  காண்கின்ற ஒரு விஷயமாய் மாறிப் போனாலும், கடைத்தெருவில் அடம்பிடித்து வாங்கும் பொருள் அல்லவே மனித உயிர்.. அது எத்துனை உயர்ந்தது...அதை சொற்ப விஷயங்களுக்காய் அளிக்கும் நம் இளையதலைமுறை சிந்தித்து  செயல்படும் திறன் அற்று  போய் விட்டனரா?.... இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை இறப்பு நிகழ்கிறது, அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 240 இறப்பு தற்கொலையாய் நிகழ்கின்றன. உலகிலே அதிகம் இளைஞர்களை கொண்ட பலமான நாடு நம் நாடு தான், ஆயினும் மன அழுத்தத்தால் தற்கொலைக்கு தூண்டப்படும் இளைஞர்கள் இங்கே தான் அதிகம்..பலமான இளைஞர்  சக்தி கொண்டிருக்கும் நாம், இளைஞர்களை சரியாக கையாள மறந்துவிட்டோமா?...

அ முதல் இன்ன பிறவிசயங்கள் வரைச் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட ஆட்டு மந்தைக் கூட்டமா இளைஞர் படை...தனக்கான விசயங்களை கேட்டுப் பெறும் சக்தி, இந்த இளைய சக்திக்கு இல்லாமல் போய் விட்டதா? ஏன் இந்த கோழைத்தனம்...ஓரறிவு உயிர் முதல் இந்த உலகில் சஞ்சரிக்கும் அனைவருக்கும் பிரச்சனை என்பது பொதுவானது தானே..பிரச்சனையை என்பது பொதுவானதாய் இருந்தாலும், அவரவர் கையாழலை பொறுத்தே மாறுபடும்...

உப்பில்லா காரணங்களுக்காய் உயிரைவிடத் துணியும் இந்த இளைய தலைமுறையின் கண்மூடித்தனமான துணிச்சல் தற்கொலை என்ற எண்ணத்தில் இல்லாமல், சிந்தித்து செயல்பட்டால் எத்துனை நல்லதாய் இருக்கும்  

    சின்ன சின்ன அற்ப விசயங்களுக்காய் உயிரை மாய்க்கும், நம் சகோதர உறவுகளை கண்டு கோவப்படுவதா ? இல்லை பரிதாபப்படுவதா? தெரியவில்லை... கணநேர உணர்வுகளின் உந்துதலில் தற்கொலைகள் நடந்தேறிகின்றன, ஆனாலும் அதன் பின்னே உள்ள பாதிப்புக்கள் எத்தனை எத்தனை... மாபெரும் சக்தியாய் இளைஞர் சக்தி இருக்கையில், சகோதரர்கள் உணர்வுக்கு இடம் தராமல், அறிவுக்கு இடம் தந்து செயல் பட்டால் எத்துனை சுகமாய் இருக்கும்..

பிரிவு வலி ஏமாற்றம், தோல்வி, இவையெல்லாம் நேரத்திற்கு நேரம் மாறுபடும்..இவைகளை இளைய தலைமுறை தடையாய் எண்ணாமல் தாண்டி வந்தால், கணநேர அந்த வலி, ஒரு அனுபவமாய் மாறும்...
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது, தற்கொலையை ஒரு தீர்வாய் நீங்கள் கையில் எடுத்தால், கண நேரத்தில் உங்கள் பிரச்சனையும் அதன் பின் உங்கள் கனவுகளும், கனவுகள் தந்த வலிகளும் இல்லாமல் போகலாம்..ஆனால் உங்களை சுற்றிய இந்த சமூகம், நட்பாய், காதலாய், உறவாய், பெற்றோராய், உடன்பிறப்பாய், நிறைந்து கிடக்கும் இந்த சமூகம் அடையும் வேதனையை யோசித்தீர்களா?.... உங்கள் வளர்ச்சியில், உங்கள் வடிவத்தில், மாற்றம் காணவேண்டும் என்று காத்திருக்கும் இந்த சமூகத்திருக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக் கடன் இதுதானா?....

என் சகோதரர்களே....  சரியாய் படைக்கப்பட்டோம்...சரியாய் வளர்க்கப் பட்டோம்...நமக்கான வாழ்வைச் சரியாய் வாழ்வோம்...சிந்தித்து செயல் படுவோம்...நமக்கான மாற்றத்தையும், மறக்க நினைக்கும் ஏமாற்றத்தையும் புன்னகையோடு வரவேற்ப்போம்... வாழ்வோம்...காளன் வந்து கயறுவீசும் வரை கண்ணியமாய், மனிதன் என்று பெயரில் மனிதத்தோடு வாழ்வோம்... மறுபடியும் இந்த இளையசக்தி, மாபெரும் சக்தி என்று புரியவைப்போம்...தற்கொலையை தூக்கிலேற்றி, நமக்கான வாழ்வை சரியாய் வாழ்வோம்....

சனி, 8 அக்டோபர், 2011

இரவுகளில் நான்...

 
நெருங்கி நெருங்கி
வரும் இருட்டு,
கிட்ட கிட்ட உன் நினைவுகளை
கொண்டு வர,
உறக்கம் வரும் அந்த
அந்தி ஜாமத்திலும்
உன்னைப் பற்றிய
சிந்தனையில் லயித்துப்போகிறேன்
நான்....

இரவில்
கடிகார ஓசையையும்,
சுவர் பல்லிகளின் சத்தத்தையும்,
தூரத்தில் குறி சொல்ல வந்திருக்கும்
சாமக்கோடங்கியின் ஓசையையும்
உள்வாங்கிக்கொண்டே
ஆளரவமற்ற அந்திஜாமத்தில்
விழித்திருக்கும் உன் நினைவுகளோடு
தனித்திருக்கிறேன்
நான் ...

தொலைவில் இருந்துவரும்
அமானுஷ்ய சத்தத்தில்,
இதயத்துடிப்பு நிற்கும் அளவு
பயம் கவ்வி இழுக்க,
உள்ளிருக்கும் பயத்தை
வெளிக்காட்ட வகையில்
என்னை மீட்டெடுக்கிறேன்
உன்னை பற்றிய நினைவுகளிருந்து...

இந்த அடர்ந்த பயம் கக்கும்
இருட்டில் ஆறுதல் என்னவோ
நிலவு மட்டும் தான்...
என்னைப் போல
இரவுகளில் அதுவும்
தனித்திருப்பதால்...

மெல்ல மெல்ல இரவின் மடியில்
இருந்து இறங்கும் நிலவுக் குழந்தை
உறங்கிப் போக,
எல்லோரும் விழிக்க
தொடங்கும் போது
உறங்கிப் போகிறேன்
நான்...

சனி, 1 அக்டோபர், 2011

போதும் எனக்கு....

முதல் பார்வையில்
உருவான ஒன்று,
மறக்கமுடியாத மறுக்கமுடியாத
நிகழ்வாகிப் போனது..
சிறு புன்னகையில் தொடங்கி,
மௌனத்தில் புரிந்து,
விழி மொழியில் பேசிய
அழகியத் தருணங்கள் அவை...
விடவேண்டும் என்று நினைத்தும்
விழக்கூடாது என்று நடித்தும்,
விருப்பத்தை மறைத்தும்,
உள்ளிருக்கும் காதலை
அணுஅணுவாய் நான் மட்டும்
ரசித்த நேரம் அது...
புரிந்தும் புரியாத உன் சிரிப்புகள்,
கவிபேசிய உன் மொழிகள்,
எதிர்பாரா உன் அக்கறைகள்,
எதிர்பார்த்து ஏமாந்த தருணங்கள்
கு
ந்தையை பேணுதல் போன்ற
உன் அன்பு,
என்று எனக்கே எனக்காக நீ,
இனி என்ன வேண்டும் எனக்கு
எல்லாமுமாய் நீ என்னோடு
இருக்கையில்,
உன்னோடு
வாழும் இந்த ஆனந்த காலங்களே
போதும் எனக்கு....