உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

இதுபோதுமெனக்கு


உன் முதல் பார்வை
முழுதாய் தொலைத்தது என்னை..

என்னை முழுவதும் படி
இல்லை முடித்ததைப்போல் நடி
காதோடு காதுரசி காதல் மொழி பேசு,
செல்லச்சண்டையில் சித்திரவதை செய்
ஒரு முத்தத்தால் முழுமையாக்கு
என் முந்தானைக்குள் மூழ்கிப்போ

காதல் பேசு
காமம் தாண்டு
இதயம் நுழை...
மெளனம் கொண்டு என் வார்த்தை உடை
உனக்கானவள் நான் என்ற
உண்மையை உணர்
ஊர் உறங்கும் வரை கதை பேசு
நான் உறங்கிப்போக காதல் கொடு
அவ்வப்போது கண்களால் களவாடு
செல்லப்பெயரிட்டு சில்மிஷம் செய்
உன் பார்வை தெளித்து
காதல் கோலமிடு
சாத்தியப்படுகையில் சத்தம்போடு
சத்தத்தின் நடுவே நிசப்தம் தேடு
கண்களால் பேசு
மழைச்சாரலாய் மேனி நனை
அன்பை பரவவிட்டு
காதலை பரவசமாக்கு
காமம் களைந்து காதல் போர்த்து

உன் விழிகள் விதைத்துப்போட்ட
விதையில் துளிர்த்துகொண்டிருக்கும்
இந்த காதலுக்கு
செல்லபெயரிட்டு அன்புசெய்
இதுபோதுமெனக்கு...........

- ரேவா

திங்கள், 24 செப்டம்பர், 2012

இதுவும் காதலே...1

வாசித்தல் பழக்கம்
நேசித்தலின் பொருட்டு
வந்ததா என்று தெரியவில்லை
ஆனாலும் நேசிக்கிறேன்
இந்த வாசித்தலை.........

# இதுவும் காதலே...

குறுகுறுக்கும் பார்வைதனில்
ஒளிந்திருக்கும் குறும்புதனை
ரசிக்கத்தெரிந்தவனே
காதலிக்கிறான்..

# இதுவும் காதலே...


அடைப்புக்குள் வைக்கப்பட்ட
அத்தனையையும் கடந்து
என்னை பித்தனாக்கும்
இந்த உணர்வுக்கு
என்ன பெயர்...

# இதுவும் காதலே...

ஒரு தோல்வி
உன்னை தூக்கி நிறுத்த
அனுமதித்தால்

இதுவும் காதலே.......
எது எதுவோ
நம்மைத்தாக்க
எதன் பொருட்டோ
நாம் நம்மை தொலைக்க
 முகவரியிடம் கள(ல)வு போனால்

# இதுவும் காதலே
 
 
 


 

வியாழன், 13 செப்டம்பர், 2012

அழகியல் விளையாட்டு

உள்ளதைச்சொல்வதில் தொடங்கி
உளறிக்கொட்டுவதில்
ஆரம்பமாகிறது
உன் குறும்புத்தனங்கள்...

# அழகியல் விளையாட்டு......

ஆர்பரிக்கிறாய்
என்னில்,
ஆழம் பார்க்கிறாய்
கண்ணில்...

# அழகியல் விளையாட்டு....

என் கவிதைக்கான அர்த்தம்
புரிந்ததாய் நடிக்கும் வேளையில்
தான் ஆரம்பமாகும்
நம் அத்தனை சண்டைகளும்....

# அழகியல் விளையாட்டு..........

விரும்பிக்கேட்கின்ற
அத்தனை பாடலிலும்
அடர்ந்து படர்வதென்னவோ
உன் நினைவு மட்டும் தான்......

# அழகியல் விளையாட்டு......

   

திங்கள், 10 செப்டம்பர், 2012

நண்பேன்டா ( நட்பு காலம்)உயிர்வாழ்வதற்கான
ஒற்றைத் துளி 

நீர்

உன் நட்பு.....


*
என் எல்லாமுமாய்
மாறிப்போன
எனக்கான சுயம்
நீ

*


 

வியாழன், 6 செப்டம்பர், 2012

நிச்சயம் இதுவொரு பிரிவுக்கவிதை


ஒரு பிரிவைத்தாங்கி வரும்
கவிதையில்
இருக்கும் வலியை எத்தனை பேர்
அறிந்திட முடியும்...
 
சில கவிதை
பிறரின் அனுபவத்தில் முளைத்திடும்
சில கவிதை
தன் கண்ணீரின் பயனால் விளைந்திடும்
அல்லது
ஏதோ ஒன்றை தூக்கி
எப்போதும் அசைப்போடுதலின்
பொருட்டு கிடைத்திடும்.

எது எப்படியோ
ஒரு கண்ணீரையோ
ஒரு கனவையோ
தற்காலிகமாய் மறைக்கதெரிந்தவன்
இல்லை தொலைக்கத்தெரிந்தவன்
ஒரு கவிதையிலோ
இல்லை கண்ணீரிலோ
முடித்துவிட்டு போகட்டும்
முடிந்தவரை
உங்களின் அபிப்ராயம்
எந்த ஒரு சம்பிரதாயத்தையும் கொண்டுவந்துவிடாது
புன்னகைப்பதைத்தவிர...

ஒரு நீள் சோகத்தை
சலவை செய்ய தெரிந்தவன்
காதலை வெல்கிறான்...
தெரியாதவன்
வெற்றிக்கு தயார் செய்யப்படுகிறான்
அவ்வளவே...

ஒரு பிரிவைத்தாங்கிவரும்
கவிதையில்
இருக்கும் வலியை எத்தனை பேர்
அறிந்திடமுடியும்.....


செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அடைபட்ட என் சுபாவம்எதற்கும் பொருந்தாத
என் சுபாவத்தை
அலுவல் நிமித்தமாய்
அரிதாரமிட்டுக்கொள்கிறேன்...

இப்போதே நடந்தேறிவிடும்
பிரசவமாய்
பிதுங்கி நிற்கும் பேருந்தின்
ஓரத்தில் நிறுத்திக்கொள்கிறேன்
என்னை..

கையோடு கைதடவி
கைமாறும் காசுகளில்
கற்பை கட்டிவிட்டு
கண்பார்க்கும் கூட்டத்தில்
கண்ணகிகள் புன்னகைப்பர்
இது புதிதல்லயென்பதுபோல்

ஆண்களோடு சிரித்துபேசி
ஆடைகளில் கவனம் வைத்து
ஆயிரம் கண்கள் நடுவிலும்
அடக்கம் பேணி
ஆரம்பமாகும் அலுவலிலும்
அடுக்கடுக்காய் கட்டப்படும்
ஆயிரம் வேலி,

அத்தனையும் உடைந்தெறிந்து
அடுத்தபணி ஆரம்பிக்கையில்
எப்போது இரையாகுமென
தூண்டிலில் வார்த்தை தைத்து
வசமாய் வீசப்படும்
காமத்தின் அம்பை
யாருக்கும் தெரியாமல்
கடந்தாகவேண்டிய கட்டாயத்தில்

ஒவ்வொரு நாளும்
நீண்டு முடிகிறது
என் அலுவலக வேலை..

பணமென்ற ஒன்றிற்காய்
பழக்கப்பட்ட என் பழக்கங்களை
பூட்டிதைக்கிறேன்,
வீடு திரும்பையில்
பீறிட்டு அழும்
என் பழக்கத்தின் வலியை
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை...

எதற்கும் பொருந்தாத
என் சுபாவத்தை
அலுவல் நிமித்தமாய்
அரிதாரமிட்டுக்கொள்கிறேன்..