*மாதம் பத்துதனில் அன்னையவள்
உயிர்கொண்டு,
அன்பாய் உனைசுமக்க,
பூமித்தாயாகிய நான்
என்னுள் உருப்பெறும்எல்லா உயிர்களையும் ஒரு சேர சுமந்தேன்..
சுமையை சுகமாய் உணர்ந்தேன்...
*எல்லா உயிரும் தனக்கென்று
ஓர் நெறிகொண்டு வாழ
மனிதா நீ
மட்டும் மனிதம் மறந்து
மனிதன் பெயரில் உலவும்
மிருகமாய் ஏன்
மாறிப்போனாய்????
சொல்....
நீ
* மதம் என்ற பெயரால்
மனிதம் தொலைத்தாய் ....
* ஜாதியின் பெயரால்
ஜனநாயகம் அழித்தாய்...
* கல்வியின் பெயரால்,
பகல் கொள்ளை செய்தாய்...
* அரசியல் என்னும் பெருங்கடலில்,
அலைவரிசையின் பெயரால்...
சாமானியர் வாழ்வாதாரத்தை
வதைத்தாய்...
கடற்க்கரை மணலில்,
கண்ணியம் மறந்து கலவி கொண்டாய்...
காடுகளையும் அளித்து, வீடுகளாக்கி
என் கருப்பையை மலடாக்கி
உன் பணப்பையை நிறைத்தாய்...
* பொது இடத்தில்
உன் சுய ஒழுக்கம் மறந்தாய்..
பாலிதீன் பைகளால்
என் சுவாசத்தை நெரித்தாய்...
* உனக்காய் நான் பொறுத்திருந்தால்
உன் இனத்தை நீயே
அழித்துன்னும் நிலை வரும்
என்று உணர்ந்தே
நானே அழித்தேன் என் பிள்ளைகளை ...
ஒரு பக்கம் பூகம்பமாய்...
ஒரு பக்கம் ஆழிப்பேரலையாய்,
ஒரு பக்கம் எரிமலைசீற்றமாய்...
ஒரு பக்கம் காட்டுத்தீயாய்...
ஒரு பக்கம் நோய்களின் துணையால்
விலாசமின்றி, வித்தியாசமின்றி
அனைவரையும் அழித்தேன்...
மைந்தா!!!
உன்னை சுமந்த போது
கூட எனக்கு வலிக்கவில்லை,
சுமையை இறக்கிய போது
தான் வலித்தது....
நீங்கள் செய்தது எல்லாம் சரிஎன்றால்
நான் செய்தது
தவறா மைந்தா...
சொல்
தவறா மைந்தா ...?
அன்புடன்
ரேவா
*அன்பே
உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்,
எனக்கு,
*சுற்றும் இந்த உலகம்
சுயமாய் தெரிந்திருக்கும்....
* நீளும் இரவுகள்
நிமிடத்தில் முடிந்திருக்கும்...
* நிசப்தமும் உன்
நினைவின்றி நிம்மதியாய்
கழிந்திருக்கும்....
* தனிமையின் பொழுதுகள்
தடையற்று சென்றிருக்கும்..
* காதலின் பெயரில் என் இதயம்
காயம் படாமல் இருந்திருக்கும்...
* உன்னால் பற்றி எரியும்
என் காதல், உன்னை பற்றி
யோசிக்காமலே நகர்ந்திருக்கும்...
* தாயிடம் புன்னகை சிந்தி,
தலையணையில் கண்ணீர் சிந்தும்
களவு வாழ்க்கை இல்லாமல் இருந்திருக்கும்..
* உன் கடிதங்கள் விலாசமின்றி
என் வீட்டு முகவரி தேடி வரும்
காலம் இல்லாமல் போயிருக்கும்...
* என் அரைசாண் இதயத்தில்
உன்னை பற்றிய ஆயிரம் கனவுகள்,
கவிதைகாளாய் உருபெறாமல் மறைந்திருக்கும்..
* உன்னையே சிந்தித்து
சிதைந்து போகும் காலம் இல்லாமல்
இருந்திருக்கும்....
* ஒற்றை பார்வையில் களவு போகும்
கலை அறியாமல் இருந்திருக்கும்...
* உயிர் குடிக்க என் உணர்வுகள்
குடித்த காதலனே!!!!!!
உன்னை பார்க்காமலே
இருந்திருந்தால்,
நீ நடத்திய நாடகத்தில்,
சாட்சியம் அற்று,
ஓர் அகதியாய்
தலையணையில் அடக்கலம்
புகும் என் கண்ணீரின் காரணம்
நான் அறியாமலே இருந்திருப்பேன்...
** எதிர்பாராவிதத்தில்
எதிர்பாரா கணத்தில்
என்னுள் நுழைந்து,
என்னை ஆளும்
என் காதலே!!!!
உன்னால் சுயம் மறந்து போன
இவள் உன்னை பார்க்காமலே
இருந்திருந்தால்....
உயிர் தந்த என் பெற்றோரிடம்
நட்பு பாராட்டும்,
நண்பனிடம் ..
எனக்காய் உருகும்
என் உடன் பிறப்புகளிடம்,
என் உயர்வுக்காய் உருகும்
உறவுகளிடம்,
என எல்லோரிடமும்
நான் நானாய் இருந்திருப்பேன்....
அன்புடன்
ரேவா
அன்பே!!!
** காதல் கண்மூடித்தனமானதாம்,
காரணம் புரிகின்றது,
காதலும், காலமும்,
**தோழனே!!!
வர்ணங்கள் நிறைந்த
வானவில்லது,
வான்மழை வரும்
நேரத்தில் வருவது போல்,
என் இதயவானத்தில் வர்ணம்
தரும் வானவில்லாய்
நீ எங்கிருந்து
வந்தாய்....?
**
கண்ணுக்கு புலப்படும்
மாயைகள் எல்லாம்
கானல் என்று
காலங்கள் உரைக்க,
என் கண்ணில் அகப்பட்டு
மாயங்கள் புரியும்
தூயவனே,
நீ எங்கிருந்து
வந்தாய்....?
தோழனே!!!!
வாக்குறுதிகளை அள்ளி வீசும்
வேட்பாளனாய்
என் வாழ்க்கை களத்தில் ....நீ....
உன்னால் என் வாழ்வில்
விடியல் வரும் எனக் காத்திருக்கும்
சராசரி குடிமகளாய் ...நான்...
வாக்குறுதிகள் எல்லாம்
கானல் காலங்கள் என்று
என் கருத்துக்கு ஏன்
எட்டவில்லை தோழா....
அன்புடன்
ரேவா
 |
REVA KAVITHAIKAL |
காதலே!!!!
உன் பாதையோடே
என் பயணம்
என்று நினைத்திருந்தேன்...
ஆனால்,
விதி என்னும்
வில்லன் என் வழி வந்து
உனக்கும் எனக்குமான
பயணத்தை முடிப்பானென்று
கனவிலும் அறியேன்...
விதி வலியது ,
நீ கொடுத்த வலி
அதனினும் கொடியது...
அன்புடன்
ரேவா
நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில் வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின் கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது! இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக உதவணும் என்று இவர் முடிவு செய்த போது இவரது வயது வெறும் 21
இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!
இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது!
சி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!
கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது
- இதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.
- உடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.
- அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள்.
- அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.
- முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.
- பதிவர்கள் நினைத்தால் இதை அனைவருக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும். பதிவர்களே தமிழனுக்காக ஒரு பதிவை போடுங்கள்.
வந்தேமாதரம் தளத்தில் இந்த பதிவை பார்த்து இந்த பதிவை போட எண்ணம் எனக்கு தோன்றியது. அது போல் உங்களுக்கு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் உடனே போடவும். தாமதிக்க வேண்டாம். கடைசி தேதி நவம்பர் 18 வரை மட்டுமே.
அன்புடன்
ரேவா