உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

மீண்டும் ஓர் மழைநாளில்

படம் : நன்றி கூகிள்

கசங்கிய ரேகைகளுக்குப் பின்
களவு போன என் வாழ்க்கை,
இன்னொரு ஆணிடம் 
கவனமாய் இருக்கச் சொல்கிறது...

மீண்டும்
முதலில் இருந்து தொடக்கமா?
என்று நினைக்கையில்
தொண்டைக்குழியில் ஈரம்
விஷமாய் கசக்கிறது...

சலனமே இல்லாமல்
நடக்கும் ஒவ்வொரு
பெண்பார்க்கும்  படலத்திலும்,
ஏளனப் பார்வைக்கு மத்தியில்
உடலெங்கும் உணர்ச்சி தீ 
கட்டுக் கடங்காமல் எரிகிறது..

சில நேரங்களில் மனுஷி
என்ற அடையாளம் எதுவும்
இன்றி மனிதப் பார்வைகளுக்கு 
நடுவே தொலைந்து போகிறேன் நான்....
எனக்கென்ற தனி அடையாளம்
எதுவுமற்று மௌனிக்கச் சொல்கிறது 
சுற்றியுள்ள கூட்டம்...

தனக்குப் பிடித்தவைகளை
பட்டியல் இட்டு,
பட்டியலின் கடைசியில்
என் பெயரையும் எழுதிச் செல்கிறது
ஆணைப் பெற்ற கூட்டம்..

வந்தவர் செல்ல,
ஒப்பனைகள் களைய
கண்ணாடியின் காட்சியும் 
எனைப் பார்த்து சிரிக்கிறது....

இன்னும் ஒருமுறை
இயலாமை எனும் முடிச்சி
ரகசியமாய் அவிழ்க்கப்படுகிறது..
அப்பாவின் பென்சன் பணத்தின் பாதியிலும்,
அண்ணனின் அலுவலக லோனின் மீதியிலும்,
எடை போடப்படுகிறது
என் வாழ்க்கை...

இல்லை எனும் வார்த்தை
மீண்டும் ஒரு முறை தன் 
கோரமுகம் காட்டி
என்னைப் பார்த்து சிரிக்கிறது..

மீண்டும் மீண்டும் எழுதப்பட்டு
அழிக்கப்படும் இந்த
பழையகதையில், புதிய கதைக்கு
இடம் இருக்கா? இல்லையா? என்று
என்று ஜோதிடம் பார்த்தே
கசங்கிப் போகிறது என் ரேகை...

இறுதியில் ராசியற்றவள்
என்ற முத்திரைகுத்தி
தன் இயலாமைக்கு முகத்திரை
சூடிக்கொள்கிறது சொந்தம்...

இளமையின் ரணம் கணக்க,
இந்த இளமையை சபிக்கிறேன்..
கனவில் மட்டுமே காதல் பேசும்
அந்த ஆண்மையைச் சபிக்கிறேன்...

மீண்டும் ஒரு மழைநாளில்,
தேநீர்க் குவளைக்கு மத்தியில்
அடுக்கப்படுகிறது என் வாழ்க்கை
புதியக் கதை ஒன்று எழுத....

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

♥ ♥ ♥ தீராக் காதல் ♥ ♥ ♥


பேரழகிக்காய் எழுதிய  
கவிதை 
நான்....
என் கவிதையை 
அழகாகாக்கிய 
பேரழகி
நீ....


மழைநேரம்  மண்வாசனையை
எழுப்பி விடுவது போல,
இரவுகளில் உன்னைப்பற்றிய
கனவுகள் என் காதலை 
எழுப்பி விடுகிறது...


மழையில் நனைவது
பிடிக்கும் என்றாள்,
அவள் துப்பட்டா தூரலில்
குடைபிடித்தபடியே..   


குளிக்கச் செல்லும் முன் 
கொஞ்சி விட்டுச் செல்கிறாள்
அவள்,
ஈர முத்தங்களை தண்ணீர்
வாங்கிக்கொள்ளும் என
குளிக்காமலே செல்கின்றேன் 
நான்...
 


உன் அழகைப் பற்றி 
ஆயிரம் கவிதை 
எழுதிவிடுகின்றேன்..
ஆயினும் உன்னைப் போல 
அழகான கவிதை 
இதுவரை பிறக்கவே இல்லை...


சண்டைகளுக்குப் பின்
சமாதானம் தேடும்
வார்த்தைகளை விட,
சலனமே இல்லாமல் நீ
கொடுக்கும் நெற்றி முத்தத்தில்
அடிமையாகிறது என் காதல்.

 நீயும் நானும் பாதியாய்
நம்மில் 
மீதியாய்  இருக்கிறது
காதல்...


எனக்காக கவிதை
எழுதி கொடு என்றவளிடம்,
பரிசாய் பதில் கவிதை 
கொடு என்றால்,
இதழ்களை இணைத்து
கவிபடைத்து செல்கிறாள்
கன்னத்தில்...

 

நீ கொஞ்சிப் பேசும்
அழகை எல்லாம், 
மிஞ்சி விடுகின்றன
உன் முத்ததிற்கான 
என் கெஞ்சல்கள்...

என் இரவுகள் 
கனவுகளை சுமப்பது 
போல
என் நாட்குறிப்பு உனக்கான 
கவிதையை சுமக்கிறது 
காதலோடு...தெரியாத சண்டைகளில்,
புரியாத சமாதானத்தில், 
இடைவேளை தரும்
பிரிவுகளில்,
என மெல்ல 
தலை தூக்குகிறது
நம் காதல்...
 

 யார் முதலில்
பேசுவது,
என்ற சண்டையிலே,
சத்தமில்லாமல் 
சண்டையிட்டுக் கொள்கிறது
நம் காதல்...


புதன், 21 செப்டம்பர், 2011

எத்தனை முறைஉன்னை மறந்துவிட்டதாய் 
இன்னும் எத்தனைமுறை
தான் பொய் சொல்வது 
என் தோழிகளிடம்...

இன்னும் எத்தனை முறைதான்
பொய் சொல்வது,
உன் நினைவு தரும் பொருட்கள்
என்னருகில் இல்லை என்று...

உன் கையெழுத்தில் 
நீ வடித்த கவிதை, 
என் கண்ணீரில் நனைந்ததை, 
உன்னிடம் கிளித்தெரிந்ததாய் 
சொன்ன பொய்களையே
இன்னும் எத்தனை முறை தான் சொல்வது...

இனியும் உன்னை நினைக்க
மாட்டேன் என்று மனதுக்குள் 
நினைத்துக்கொண்டே,
கட்டுபாடுகள் அற்று 
காகிதத்தில் உன் பெயரை 
கிறுக்கும் இந்த கிறுக்கிக்குள் 
நீ இல்லை என்று 
இன்னும் எத்தனை முறை 
எனக்கு நானே பொய் சொல்வது....

திங்கள், 19 செப்டம்பர், 2011

யாரேனும் கேளுங்கள்...நான் அற்று நீ
மட்டும் நீயாய்
மாறிய நொடி
எப்படி இருந்தது உனக்கு ?

பிரியம் கொண்ட
நம் காதலுக்குள்,
பிரியம் தொலைக்க வைத்த
உன் ஆளுமையை,
அன்றே தான் நீ உணர்ந்தாயா?...

பிரியச் சிலுவைக்குள்
அகப்பட்ட என் பாசம்,
முள்ளில் சிக்கிய
சேலையாய் மாறியதை
நீ அறிந்தாயா?...

என் விருப்பங்களும்,
வெறுப்புகளும்,
உன் அனுமதியில் இருக்கவேண்டும்
என்ற உன் ஆண்மைத்திமிரை,
அன்பாய் நான் பாவித்தது உனக்கு
புரியாதா? 

பெண் என்ற
வரையறையை வகுத்திட்ட
வர்க்கத்திலே,
தனிரகம் என்றே உன்னை நினைத்திட்டேன்...
நீயோ,
தர்க்கம் செய்தால் தாவிக் குதிக்கிறாய்...
நட்பு வட்டம் கூடாதென்று கட்டளை இடுகிறாய்...
சிரித்து பேசினால் வேஷம் என்கிறாய்...
கோபமாய் பேசினாலோ பொறுமையாய்
இருப்பதுவே பெண்ணுக்கு அழகென்கிறாய்...
தனிப்பட்ட என் விருப்புக்கும் தடை இடுகிறாய்...

உயிர் அற்று போகும் வலிகளை தந்து
அன்பென்று ரசிக்கிறாய்
 நீ...
ரணங்களை சுகங்களாய் மாற்றிட
சுயம் தொலைக்கிறேன் 
நான்...

உன் கட்டளைகளும் கட்டுப்பாடுகளும்
என்மீதான காதல் என்றே
அறிந்திருந்தேன்...
ஆனால் அனைத்தும்
உன் ஆண்மையின் இயலாமை
என்றே உணர்ந்தேன்,
உன்னிடம் உரைத்தேன்....

கடைசியாய்,
காதல் பேசிய உதடுகள்
கனல் அள்ளி வீசியது....
வஞ்சித்து விலகியவர்
இடத்தில் என் பெயரும் வந்தது..

உன்னை நீங்கி வாழ்தல்
சாத்தியம் இல்லாத சத்தியம்
என்றே உணர்ந்தாலும்,
நான் என்ற என்னை
நானாகவே இருக்கவிடாத உன்னை,
ஆண் என்று மார்தட்டும் உன்னை
நீங்குதல் பிழையல்ல
என்றே பிரிந்தேன்...

வருடங்கள் தொலைந்தாலும்,
இளமையது கரைந்தாலும்,
நான் மட்டும் விவாகரத்து
ஆனவள்...
நீ....
புதுமாப்பிளை...

இது என்ன நியாயம்
யாரேனும் கேளுங்கள்...

திங்கள், 5 செப்டம்பர், 2011

என்ன பிடிக்கும் இந்த தேவதைக்கு

தேங்க்ஸ் டு கூகிள்


மங்கிய  ஆடையோடு
ஒப்பனையற்ற முகத்தோடு,
சமையலறை நெடியோடு,
அலுக்காமல் அங்கும் இங்கும்
சுற்றிவரும்
என் வீட்டு தேவதையின்
புன்னகையில்
எங்கள் மனபாரம் குறைந்து போகும்...

அவரவர்க்கு பிடித்தம் என்ன
அது அவள் மட்டும் 
அறிந்த வித்தை..
அப்பாவின் பசியறிந்து,
தங்கையின் ருசியறிந்து,
தம்பியின் குணம் அறிந்து,
எந்தன் மனமறிந்து,
நளபாகம் செய்யும் பாங்கு
அவளுக்கே வாய்த்த ஒன்று...

எனக்கு பிடிக்கும் என்பதால்
சிவப்பு நிற புடவையையும்,
தம்பிக்கு பிடிக்கும் என்று,
நெற்றியில் குங்குமமும்,
தங்கைக்கு பிடிக்கும் என்று,
தலைநிறைய மல்லிகையுமாய் 
எங்கள் பிடித்தத்தை பற்றிய 
அவள் இதயத்தின் பிடித்தம்
இதுவரை நான் அறிந்ததில்லை...

எனக்கு பிடிக்கும் என்று
ரோஜா செடிவளர்க்க,
தம்பிக்கு பிடிக்கும்  என்று, 
தொட்டி மீன்களுக்கு பெயர் வைக்க,
தங்கைக்கு பிடிக்கும் என்று,
மாலைநேர தொலைக்காட்சி நிகழ்சிகளை
தியாகம் செய்ய, என 
எங்கள் விருப்பத்தை
அணு அணுவாய் ரசிக்கும்
எங்கள் குழந்தைத் தாய்க்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரை நாங்கள் அறிந்ததில்லை...


என் எதிர்கால உறவிற்காய்,
உறங்காமல் கனவு காணவும்,
எங்கள் வரும் காலம்
வளமாய் மாற
அம்மனுக்கு விரதம்
இருக்கவும்,
எங்கள் செல்லச் சண்டையில்
சமாதான தூதுவனாய் மாறவும்,
பக்கத்து வீட்டுக்கு குழந்தைக்கு
பசிக்கையில் உணவூட்டவும்
எப்படி முடிக்கிறது
இவளுக்கு மட்டும்....


நாங்கள் சிரிக்கையில் சிரித்து,
அழுகையில் அழுது,
எங்கள் விருப்பத்தில் தன்
விலாசம் மறைத்த
என் தேவதைக்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரைத் தெரியவில்லை
எங்களுக்கு.....

சனி, 3 செப்டம்பர், 2011

காத்திருக்கிறேன்

  

பிரியம் தொலைத்த
உன் கேள்விக்கு  பின்னும்,
தொடர்கதையென தொடரும்
உன் மௌனத்தின் பின்னும்,
நீ எட்டித் தள்ளிய
பிரியத்தின் மிச்சங்கள்
எச்சங்களாய் போன பின்பும்,
விடுகதையென மாறி
விடைதெரியாமல் போன
நம் காதல்  காலங்கள்
கானலாய் போன பின்னும்,
என்னுள் தேங்கிய
உந்தன் நினைவுகள்
என்னை உன்னிடம் சேர்க்கும்
என்ற புரியா பிரியத்தில்
காத்திருக்கிறேன்
இந்த நிமிடம்..