உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

வாசிப்பும் கண்டுணர்தலும்

 நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள் 



துயரம் ஒரு குற்றம், ஒரு சிறை. ஒரு வினோத மனப்பதிவு. நான் அந்த சாம்பல் கித்தானிலிருந்து எழுந்தாகிவிட்டது ஒரு தாளைப் போல.
                                                         -அன்னா அக்மதோவா 

நான் வாழ்வேன் கனவு ஒன்றில், மீண்டுமொரு தடவை நீ என்னுடன் இருக்கப்போகிறாய் - உமா பார்வதி 


சரியாய் இந்த தொகுப்பு இந்த இரண்டு விதமான மனநிலையைக் கொண்டாதாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்த வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம் இது. என் மனம் சமனின்மையில் இருக்கும் போது எதையும் தொடாது, அதன் போக்கிற்கு தீனிபோட பழகிக்கொண்ட பொழுதில்  அகத்தோடு நடக்கிற உரையாடல்களை கவனிப்பதும் கேள்வி கேட்காது அதன் முன் உட்காரப் பழகியதும் ஒரு தவம் போன்று எனக்குத் தோன்றும். 

இதை இங்கு சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது இந்த குறுநாவலில் வருகிற ஆராதனா புறத்திற்கும் அகத்திற்குமான நெருக்கடியில், அவள் மனிதர்கள் கொடுக்கும் அனுபவங்களை, அதனூடாக அகம் தொடுக்கும் பார்வைகளை, அவள் பொருத்திப்பார்த்து ஒரு கசப்பிலிருந்து அதைக் கண்டடைவதற்கான பயணத்தை இத்தொகுப்புக் கொண்டிருக்கிறது. 

பெண், பெண் வாழ்வு, பெண் சுதந்திரம்,  இதில் ஒன்றென கலந்திருக்கும் ஆண்
அவர்கள் பெண்ணுக்குத் தருகிற அனுபவம், அதை அவர்களிடமே பகிர்தலுக்காக கிடைக்கும் வெளி, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கான நீட்சி  இதைப் பொறுத்தே அத்தனை மனமாற்றங்களும் நிகழ்கிறது.அப்படியே இது ஆணுக்கும் பொருந்தும். 

சுயமாய் சிந்திக்கத் தெரிந்த பெண்ணும், இந்த சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவள் தேடும் அடையாளமும் தான் நேசிப்பவர்களால் ஒவ்வொரு பருவத்திலும் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்பதைக் கவனிப்பதே ஒரு காட்டுவழிக்கான பயணம். 

முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, சௌகர்யமற்ற பொழுதொன்றில் குத்திக்காட்டப்படும் ஒன்றாய் மாறுகிற வாழ்வில் உள்ளுக்குள் நடக்கிற குமுறல்களை அடைத்துவைத்து பின்னொருநாளில் வெடித்துக்கிளம்பும் சத்தம் சத்தமட்டுமா என்ன?

கதையில் வரும் ஆராதனாவின் வாழ்வில் அப்பாவாக,தம்பி அருணாக,  பிரிந்த கணவனாக, அந்த கணவன் வழியில் கிடைத்த ஆண் குழந்தை சஞ்சுவாக, பின்வரும் காதலில் கிடைத்த வருணாக அவர்கள் உறவில் கிடைத்த நந்திதாவாக சொற்ப மனிதர்கள் தரும் அனுபவம் இந்த பரந்தவெளியை புரிந்துகொள்ள போதுமானதாக இருக்கிறதா?     
 
ஒரு வாழ்க்கை தோல்வியில் முடியும்போது வீட்டில் கிடைத்த நிழலும், பின் தானே தேடிக்கொண்ட காதலால் ஆராதனா சந்திக்கும் நெருக்கடியும், அதிலிருந்து அவள் வெளியேறுவதற்கு அவள் கையிலிருக்கிற சிந்தனையும் அதன் வழி பெற்ற அனுபவப்பார்வையும் அவளுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை  இந்த நாவல் பேசுகிறதாய் என் வாசிப்பில் எனக்குத் தோன்றியது.

ஆராதனாவுக்கு தன்னை அழுத்தும் துயரங்களுக்கு மத்தியில் கனவுகள் பிடித்திருக்கிறது. அந்த கனவு, தான் விரும்பியதை அப்படியே உருவாக்கும் வல்லமை கொண்டிருப்பதாய் அவள் நம்பவும் செய்கிறாள். அந்த கனவும் நிஜமுமாய் அவள் தேடிப்பார்க்கும் வாழ்வில் நம்மையும் ஒன்ற வைப்பது இந்த தொகுப்பில் கையாளப்பட்ட மொழியின் அழகும் கூட.  

தொகுப்பில் துயரத்தை மீறி நம்மை ரசிக்கவைப்பது அதில் கையாளபட்டிருக்கும் மொழி. அது அத்தனை ரம்மியமாய் நம்மை கதையோடு ஒன்றவைக்கிறது. 

உதாரணமாக நாவலில் ஒரு இடத்தில் 

துயரமான மனதை வெல்வது, அதை மறக்கவோ அதனை விட்டு ஓடி ஒளிவதோ அல்லது அவற்றை நினைக்காமலிருக்க பயிற்சி எடுப்பதோ இல்லை. கொதிக்க கொதிக்க அந்நினைவுகளை மனதிற்குள் இறுக்கி வைத்து பின் மெல்ல இளகுவதற்கு விட வேண்டும். கொதி நிலையிலிருந்து மெல்ல மெல்ல அது குளிர்நிலைக்கு வந்து, ஓரிடத்தில் உறைந்துவிடும். உறைந்த அந்நினைவுகளை எப்போது வேண்டுமெனினும் வெட்டி எடுத்துக்கொள்ளலாம். அது பெரும்பாலும் தேவையிருக்காது , ஆழமானவை தாமாகவே அவ்வப்போது மேலெம்பி வந்து நம்மை உள்ளிழுக்க முயற்சி செய்யும், அதனுடான சமரே இந்த வாழ்வில் பெரும் சவால்.      

இப்படி ஆழமான அனுபவங்களை, ஆராதனா நிகழ்வுக்கும், நினைவுக்கும் இடையே பயணப்படும் அனுபவத்தை குறுநாவலாய் ஆக்கியிருக்கிறார் உமா பார்வதி.. 

கதையை ,கதையின் போக்கை அப்படியே சொல்வதில் என்ன சுவாரஸ்யம் இருந்திடப்போகிறது. வாசித்து உங்களுக்கான அனுபவங்களை நீங்களும் பெறலாம். 

எனக்கு இந்த குறு நாவல் ரொம்ப பிடித்திருக்கிறது. 


நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள் 
பதிப்பகம் : யாவரும் 
ஆசிரியர் : உமா பார்வதி 
     

வெள்ளி, 25 ஜனவரி, 2019

மீண்டும் தொடர்கிறேன்




சரியாக ஒரு வருடம் பிளாக்கரில் எந்த பதிவும் இடாமல் இருந்திருக்கிறேன். ஏதோ ஒரு மனநிலை எதையோ கடத்திக்கொண்டு வந்திருக்கிறது என்பதைவிட ஓர் உழைப்பிற்கு கொடுக்கமுடிந்த இடைவெளியாகவும் இதைக் கருதிக்கொள்கிறேன்.

கவனிப்பற்ற பொழுதுகளில் எனக்குள் நானே பேசிக்கொள்வதைப் போல் இலக்கிய உலகம் குறித்த எந்த புரிதலும் இல்லாத போதும் எந்த சத்தமும் இல்லாமல் இங்கே எழுதிச் சேர்த்த கவிதைகளை அது உருவாக்கிய வெப்பத்தை நினைத்துக்கொள்கிறேன். 

இனி வாசிப்பு எழுத்து பகிர்தல் என மீண்டும் இங்கே அதிகம் பதியவேண்டும் என்ற எண்ணம் உந்தித்தள்ளுகிறது. 

அதற்கு முதலாய் போன வருட இறுதியில் வெளியான என் கவிதைத் தொகுப்பான கவனிக்க மறந்த சொல்லோடு வந்திருக்கிறேன். 

எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட சுவர்களைப் போல் இந்த இடம் எனக்கு அத்தனை வரம்.. 

தொடர்கிறேன் 

-ரேவா