உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 30 செப்டம்பர், 2013

குரல்

ஊமையின் கனவில்
நித்தம் வருகிறது ஒரு குரல்
முற்றிலும் பழக்கப்பட்டதாய்
மாறிப்போன நாளொன்றின் துவக்கத்திலிருந்து
உறக்கம் கெடுக்கிறது அக்குரல்
பேசத்தெரிந்தவாறு
பேசிச்சிரித்தவாறு
அழுகையின் அந்தம் சொன்னவாறு
அவனோடே உரையாடலைத்தொடர்ந்தவாறு
தன்னை நிலைத்து வைக்கிறது
அக்குரல்
பசிக்கு உணவாய்
பழக்கத்தின் நட்பாய்
ஆதரவின் அன்னையாய்
அக்குரலை
தன் குரலாய் நினைக்கத்தொடங்கிய
ஊமைச்சிறுவனின்
உலகம் வார்த்தைகளால் நிறைந்திருக்க
பேசத்துடிக்கும் அச்சோடி கண்களில்
நீங்களும் தேடியெடுக்கலாம்
அக்குரலை
ஏளனமற்ற புன்னகையை கொடுத்தவாறே...


புதன், 18 செப்டம்பர், 2013

நான் என்பவள் பைத்தியக்காரி
அனேகப்பெயர் வைத்தாகிவிட்டது
அதனாலென்ன
ஆண்டொன்று கூடும்பொழுதெல்லாம்
அவசரப்பிரிவு நோயாளியின்
வாழ்வை குறித்த பயமென
தொற்றிக்கொண்டே வருகிறது
நாட்களின் நகர்வை பற்றிய
இருள்...

இன்னதென்று சொல்லாமல்
இதனாலென தள்ளாமல்
தட்டப்படும் கதவுகளை
திறந்தே வைத்திருக்க
சலிப்புற்ற வார்த்தைகள்
சருகுகளாய் பெருநிலத்தில் பரவ
அத்தனையும் ஒரு மொழியெடுத்து
சுவாசப்பை நெறிக்க

கைகளை விரித்த படியே
காற்றில் நீந்த ஆரம்பிக்கின்ற கற்பனை
எனையுடுத்தி
உண்மையின் நிர்வாணம் மறைக்க
அவ்வவ்போது
எழும் கேள்விகள்- எதைக் குறித்தோ,
அதன் குறியுடைக்க கிளம்பும் கோபமெல்லாம்
இந்நாளில் இல்லாத உனைப்பற்றியே நீள
அவகாசமெதும் கொடுக்காத
தற்கொலைக்கு தயராகிறது
உனைப்பற்றிய என் குறிப்புகள்...

செத்துப்போ
கனவுகளை கொடுத்து
கனவினை விடுத்து
செத்துப்போ

வார்த்தையற்ற கவிதைக்குள்ளிலிருக்கும்
காதலும்
கோபமும்
சொல்லா மோகமும்
உனைத்தீண்டும் முன்
செத்துப்போ

விந்தற்ற விதைகொண்டு
மாதம் பூக்கும்
பூவினைத் தீண்டா வண்டென
தொலைந்துபோ

காட்சிகள் முடியும் மட்டும்
கனவுகள் தொலையும் மட்டும்
வாழ்க்கையே முட்டும் மட்டும்
வலிகொடுத்த உணர்வினை விட்டு
தொலைந்துபோ

வாழத்தகுதியற்ற அன்பைக்கொண்டு
வானம் படைத்த
உலகைவிட்டு
தொலைந்துபோ

அனேகப்பெயர் வைத்தாகிவிட்டது
அதனாலென்ன
பைத்தியக்காரியென்ற பெயரையும்
சேர்த்தெழுங்கள்
என் கனவுக் கல்லறையில்.......
திங்கள், 16 செப்டம்பர், 2013

ரகசிய அறைதிறவுகோலது கையிலே இருக்க
திறந்திடும் முன்னே
நின்றிடு

வார்த்தைகளாலான
அறையெனது
உனக்கு பிடித்தச்சொற்களை
உருவுவதில் தொடங்கி
நீடித்துகொள் எனதறையில்
தொடர்ந்தென்னை வார்த்தைகளால் தோற்கடி
தோற்பதில் தான் ப்ரியத்தின்
உயிருள்ளதென்பதை
நானுணர்ந்ததைப் போல்
நீ உணர்
உணவாகும் வரை உயிர் தேடலென்பது
தொடருமென்பது
உணவுச்சங்கிலி கொடுத்தபாடமென்றாலும்
வலிக்க வலிக்க
உனது தேடலை தொடர்
உண்ண உணவது
உயிரினில் அடியினில் கிடக்க
அடிவானமதை கண்டடைந்த போது
உறங்கிப்போ
அதற்குமுன்
முத்தமிடு
சத்தமிட்டு காதலிப்பதாய் சொல்
சாத்தியப்படுகையில் உன் வார்த்தைகளால்
எனதறைக்கு பலம் சேர்
சேர்ந்து வாழ
பிரியமட்டும் போதாதென்பதை
நான் கட்டிய எனதறையை
படித்தறிதலில்
புரி
புரிந்தறிதலில்
தெளி
தெளிந்த பின்
தேடு
தேடியடைந்த பின்
கூடு
கூடிய பின்
களி
களித்தெழ
கழித்திடு
ப்ரியம் முட்டும் வரை
வானம் படை
பிறகு போட்டுடை
முதலில் இருந்து தொடங்கு
முடிவைத்தேடி நெருக்கு
நெருங்கிய பின்
முற்றுபுள்ளியிட்டு
மறுபடியும் தொடர்
தொடர காரணமற்று நீண்டுபோன
இவ்வரிகளுக்கான
திறவுகோலது கையிலே இருக்க
திறந்திடும் முன்னே
நின்றிடு.-ரேவா