உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 25 ஜனவரி, 2013

புரியாக்காலமது



இன்றோடு வருடம் ஆறாக, என் நினைவுதனில் வற்றாது ஓடும் ஒரு பிரவாகமாய்  நீ உருவெடுத்திருக்கிறாய், இன்னும் இன்னும் ஆழமாய்.
ஒரே பார்வையில் பருகிவிட முடியா ஆழத்தில்  நீ இருக்கிறாய் என்பது மட்டும் திண்ணம்..எப்படி ஆரம்பம் என்ற புள்ளியில் தெளிவில்லையென்றாலும் அமர்களமாய் நீ மனதமர்ந்த காலம் என்றும் எனக்கு விழாக்காலம் தான்..

 மழைக்கு ஒளிந்து கொள்வதின் பொருட்டு, என் துப்பட்டா தூரலில் பதியமிட்ட அந்த பார்வைக்குப்பின் பல மழையை சந்தித்தாகிவிட்டது, ஒன்றிலும் உன்னை சந்தித்த உற்சாகமில்லை என்பதே உண்மை..பிரிதொரு நாள் என் இருக்கை அருகில் வந்தமர்ந்த தினம் யுத்தம் செய்யும் எந்தன் உள்ளத்தின் ஓசை நீ அறிந்திருப்பாயா என்று நான் அறியேன்.. 
ஆர்பாட்டமில்லா உன் புன்னகை, கர்வத்தை மறைக்கும்  உன் குறும்பு மீசை, திருத்தம் செய்த உன் புருவம், பாங்காய் எடுத்த வகிடு, கையோடு இட்டிருந்த அந்த மஞ்சள் கயிறு, நெற்றி நடுவில் சின்னதாய்  குங்குமம் இவையெல்லாம் உனக்கு கூடுதல் அழகை கொடுக்கத்தான் செய்தது..

ஹாய் மேம், இப்படித்தான் ஆரம்பித்தாய்..

உங்கள எங்கையோ பார்த்திருக்கேனே என்பதைப்போல் நான் ஆரம்பமானேன்..

கிட்டதட்ட குட்டி மழையொன்று சில்லென்று என் நெஞ்சம் நனைக்க, மழைவிட்டதும் வெரித்திருக்கும் வானத்தை போல் அழகு நிறைந்ததாய் இருந்தது அன்றைய தினம்..பரஸ்பரம் அறிமுகம் முடிந்தாகிற்று, தொலைபேசி எண்ணுக்குள் நுழைந்து கொண்டு குறும்பு செய்தது என் நெஞ்சம்..அதை உணர்ந்தவனாய் உடன் கொடுத்தாய் உன் எண்ணை..
வீடு வந்தாகிற்று விற்றுத்தீர்த்த பலாப்பழத்தின் வாசம் போல விடாது துரத்தியது உன் வாசம்.. ஏதே ஏதோ குழப்பம் கொண்டு அனுப்ப நினைத்து அழித்த குறும்செய்திகள் எண்ணிக்கையில் 100த்தொட, என்னை நான் திட்டிக்கொண்டே தூக்கிப்போனேன்...

காலை 6 மணி இப்போதெல்லாம் என் மூன்றாம் கைகளாய் மாறிப்போன கைப்பேசியை எடுத்து பார்த்துத்தான் ஆரம்பமாகும் என் அத்தனை நாளும், இன்று மட்டும் ஒரு ஆனந்தவிருட்சத்தை விழிக்கு தந்தது, குட் நைட் என்னும் குறும் செய்தியில் தொடங்கி அன்பு தாங்கி அனுப்பட்ட அத்தனை குறும்செய்திகளாலும் நிறைந்து வழிந்தது என் கைப்பேசி..என்ன நினைப்பான் என்னை என்ற எண்ணம் மேலிட, சின்னதாய் மன்னிப்பில் தொடங்கி வைத்தேன் அன்றைய நாளை..அதன் பின் பதிலேதுமில்லாது போனது, அதைப்பற்றி நினைப்பேதுமில்லாமல் மூழ்கிப்போனேன் எந்தன் வேலையில்..

ஏதோ புரியாத உணர்வு தொண்டை நெருக்கி, புலப்படா வலிவந்து கண்ணீரில் முடிக்க, விதி அமைத்துகொடுத்த பயனாய் வந்து நிறைத்தது அவன் அழைப்பு
பரஸ்பர பேச்சிலும் பிடிபடா ஏதோ ஒரு உணர்வை அவனோடு பேசையில் உணர்ந்தேன்... பின்னும் இரவும் பகலுமென எங்கள் நேரத்தை தின்று தீர்த்தது எங்கள் இரவுக்குமான பிடிபடா ஏதோ உணர்வு...

உடைத்து பேசிவிடவேண்டுமென்ற எண்ணத்தில் துளிர்த்துக்கொண்டிருந்த மனஒத்திகைகளை இனம் கண்டவனைப்போல் என் அருகில் வந்தான்

இன்னைக்கு ஈவினிங் நம்ம ஆபிஸ் பக்கத்தில இருக்கிற காபிடேக்கு போவோம் வர்ஸிதா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..

ம்ம்ம்ம் ஒகே பார்க்கலாம் ப்ரியன்...

உள்ளுக்குள் உற்சாகக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டாலும் வெளியே எதுவும் நடக்காதைப்போல் காட்டிக்கொள்வது எத்தனை பெரிய சங்கடமென்பதை அன்றே உணர்ந்தறிந்தேன்... 6 மணிக்கு இதோடு 6000 முறை கடிகாரம் பார்த்தாகிவிட்டது, நகராத கடிகாரம் உலக அழிவை கண்முன்னே நிறுத்துவதைப்போலொரு மாயையைக்கொடுக்க, நிறுத்திக்கொள் உன் கற்பனையை என்பது போல் 6 மணியை நெருங்கியது...

இதோ கண்முன் திரையிட்டு நாடகம் நடத்தும் எங்கள் உணர்வுகளுக்கு காதலெனும் பெயர் சூட்டுவிழா நடந்தேறிக்கொண்டிருக்கிறது...

இருவருக்குள்ளும் ஒளிந்து விளையாடிய காதல் பிள்ளையை கண்டெடுத்து இதோ வருடம்  6 ஆக, காதலியலை முழுதாய் படிக்கும் முயற்சியில் ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது....
நினைவுகளில் எப்போதும் சூல் கொண்டு எங்களை சுமங்கும் அஸ்திவார நியாபங்களே எங்களின் அந்த புரியாக காலங்கள் தான்.....

ஒவ்வொரு சமாதானங்களுக்கு 
பின்னும் 
முளைத்து வரும்
அத்தனை விருட்சமும் 
காதலே.....

  - ரே

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஒளித்துக்கொள்கிறேன்



இது
இப்படித்தான்..

ப்ரியத்தின் பொருட்டு
தள்ளிவைத்து பார்க்கப்படுகின்ற
இந்நிமிடங்கள்
சொல்லமுடியா மலட்டு தாயின்
பாசம் போன்றது...

பகிர்தலில் பழக்கப்பட்ட
என் பாஷைகள்
மொழியறியாது
ஸ்வரம்புரியாது
இசைத்துக்கொண்டே கிடக்கிறது
ஈனஸ்வரத்தில்

இந்த மெளனத்திற்கு
எத்தனையோ காரணமிருக்கலாம்
எடுத்துவைக்கும் காரணம் புரியாதுமிருக்கலாம்..

சின்னசின்ன செய்திகளில்
கொட்டிக்கிடக்கும் வார்த்தைகளில்
ஆசுவாசப்படுத்தும் பகிர்தல்களில்
கோர்த்துப்பார்க்கும் பிரியங்களில்
நிரப்ப முடியா
வெறுமை பெற்று அழைகிறது
உன்னிடம் பகிரா செய்திகள்...

காதுக்குள் எப்போதும் வந்துமிழும்
வீரிய வார்த்தைகள்
நமை விழுங்காதிருக்க
எனக்குளே ஒளித்துகொள்கிறேன்
உன் நட்பை
உனதிந்த வருத்தங்களோடு

வியாழன், 3 ஜனவரி, 2013

தனித்திருத்தலென்பது



மதிப்பீடற்ற விசயங்களைக் கடந்து
விஷமங்கள் அரங்கேறும்
இத்தருணத்தில்
விஷமேறிய பற்களோடு
காத்திருக்கிற கடுச்சொல்லிருந்து...

துரத்திவிடுதலை
துணைக்கழைத்து
தன்னை விடுவித்துகொள்கிற
கணத்தில்
உயிர் உணர்கிற தவிப்புகளிலிருந்து

எப்படியோ மென்மரணமொன்று
இனி மெல்ல மெல்ல நடக்குமென்பதை
உணர்ந்தும்
அந்திசாமத்து பிடிகளிலிருந்து
விடுபடுதலைவிட
கொடுரமானது

தனித்திருத்தலென்பது....


செவ்வாய், 1 ஜனவரி, 2013

யாருக்கும் தெரியாமல்




சட்டென்று நீயெனை கடந்திருக்கலாம்
ஆனால்
கூடவே வந்த்தில்
கூடுதல் மகிழ்ச்சிதான்
எனக்கு

ஏதேதோ பேசுகிறாய்
எல்லா பேச்சுலும்
உணர்கிறேன்
உன் நேசத்தை

கைகளை நீட்டுகிறாய்
நட்பென்று சொல்லி
பற்றுதல் சுகமெனினும்
ஏதோ ஒன்று தடுக்கிறது

விடியல் மறந்த பேச்சுகளில்
விட்டுக்கொடுத்த சுபாவங்களில்
தட்டிக்கேட்கும் ஆளுமையில்
உன் வேரை உணர்கிறேன்

படர்தல் முடியாதெனினும்
உயிரோடு இருத்தலில்
உருக்கொள்ளட்டும்
என் அன்பு
உன் மீதான நட்பில்

பின்னாதாய்
எல்லோரைப்பற்றிய கவிதையொன்றில்
உன்னையும் சேர்த்திட துடிக்கிறாய்
பெயரற்ற இந்த கவிதைக்குள்
நீ இடம் பெற்றிருக்கிறாய்
என்பதை அறியாமல்