
மை இருட்டு கேள்வி பட்டிருக்கின்றேன்,
இது என்ன மையிட்ட என் கண்களை கூசச்செய்யும் இருட்டு... இந்த எகத்தாள
வார்த்தைகளை உதிர்த்த படி நானிருக்க, அங்கு தான் அவன் முதல் காட்சி
காணக்கிடைத்தது..பள்ளி பருவத்தேர்வு ஒன்றில், என் பள்ளிக்கு தேர்வெழுதவந்த
அவன் நிறத்தை பரிகாசித்து, பிள்ளைகுறும்பை அவனிடம் கொட்ட, சிறுபிள்ளை மனம்
கொண்ட அவன் கூனிகுறுகி நின்ற இடம் இன்னும் மனக்கண்ணில் திரையிட, மன்னிப்பு
என்னும் வார்த்தை மூலம் நண்பனாய் அறிமுகமானான்..
பள்ளி தேர்வுகள் முடியும் தருவாயில், பிள்ளை மனம் கொண்ட அவனின் நட்பும்
ஆட்டோகிராப் நோட்டில் தஞ்சம் புகுந்தது.காலப்போக்கில் கரையான் அரிக்கும்
பக்கமாய் நட்பின் நினைவுகள் ஒவ்வொன்றையும் காலக்கரையான் அரிந்து
தின்றுகொண்டிருந்த காலமது. கல்லூரி வளாகத்தில் சேர்க்கை விவரம் அறிய
நின்றிருந்த இடத்தில் மீண்டும் துளிர்ந்தது எங்கள் நட்பு,, மோகன் இதுதான்
அவன் பெயர். இந்த பெயரை தன் அம்மாவிற்க்கு அடுத்து நானே அழைப்பதாய்
அடிக்கடி சொல்லிக்கொள்வான். கல்லூரியில் எல்லாருக்கும் மோகன் என்றால்
கரிச்சட்டி என்று தான் அறிமுகமாகியிருந்தான். இவன் அதிர்ந்து பேசி ஒரு
நாளும் நான் பார்த்ததில்லை. அன்று அந்த சம்பவம் நடக்கும் வரை....உனக்கும்
சிந்துக்கும் காதலாமே, உனக்கு எங்கயோ மச்சமிருக்குடா? உன் கலருக்கு அவளா
என்னால நினைச்சே பார்க்கமுடியலடா? என்னத்த காட்டி அவள மயக்கின சொன்னா
நாங்களும் முயற்சி பண்ணுவோம்ல இந்த வார்த்தை கேட்கும் வரை பொறுமையாய்
இருந்த மோகன் மிகவும் உணர்ச்சி வயப்பட்டு அவர்களுடன் சண்டையிட என்
தோழிகளின் வாயிலாய் இந்த பிரச்சனையை அறிய கல்லூரி வளாகத்திற்க்கு
செல்லுவதற்க்குள் தலைமை நிர்வாகிகளால் மோகனும் பிற நண்பர்களும் இடை நீக்கம்
செய்ய பெற்றனர்..
இதுவரை உணராத அவன் இருப்பை அவன் இல்லாத இந்த பத்து
நாட்களில் உணர்ந்தேன்..அவன் அன்பு என்னை எவ்வளவு தூரம்
ஆக்கிரமித்திருக்கின்றது என்பதை எனக்கே அடையாளம் காட்டியது அவன் இல்லாத
அந்த நாட்கள்... அன்று மாலை கல்லூரி முடித்து வரும் தருவாயில் எனக்காய்
காத்துக்கொண்டிருந்தான் மோகன்.
சிந்து கொஞ்சம் இரு நானும் வரேன்..
அட மோகன் இங்க எங்கே நீ உன்னை தான் காலேஜ் ல இருந்து சஸ்பென்ட் பண்ணிட்டாங்கள்ல அப்பறம் எங்க இங்கே..
சிந்து நீ இன்னும் மாறவே இல்லை, ஸ்கூல்ல பாத்த அதே சிந்து தான், இன்னுமும் என்னை கேலி பண்ணுற சிந்துவா தான் இருக்க.
சாரி டா எதோ விளையாட்டுக்கு சொன்னேன், சரி எதுக்கு இங்க வெயிட் பண்ணுற மோகன்..
ஒன்னுமில்லை உன்னை பார்க்கனும்போல இருந்தது அதான் வந்தேன் சிந்து.
சரி பாத்துட்டையா கிளம்பு மோகன் எனக்கும் டைம் ஆச்சு...
இப்படி வெறும் நலம் விசாரிப்புகளில் தான் எங்களில் பெரும்பாலனா நாட்கள்
கழிந்தது, ஆனாலும் மோகனின் அன்பு கொஞ்சம் கொஞ்சமாய் என்னை ஆக்கிரமித்து
வந்ததை உள்ளமது உணர்ந்து கொண்டு தான் இருந்தது..
கல்லூரி முடியும் காலம் வந்தது..இங்கேயும் சின்ன நினைவேட்டில் தன்னை ஒளித்துக்கொள்ள சித்தமாய் இருந்தது நட்பு..
மோகன் என் ஆட்டோகிராப் நோட்டில் கையெழுத்து இடுவதற்க்கு பதிலாய் தன் காதலை
சொல்லியிருந்தான்..என் மனமும் அதை எதிர்பார்த்தாலும், பழைய குறும்புத்தனம்
ஏனோ அவனிடம் மட்டும் வந்து வந்து சென்றது...
பதிலுக்கு அவனிடம் சென்று மோகன் உன் கலருக்கு நானா? உனக்கே இது விளையாட்டா தெரியல
எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு மோகன் என்று எப்பொழுதும் போல என் அறியா தனத்தை வெளிப்படுத்த,
எல்லோர் முன்னிலையிலும் இன்றும் தலைகவிழ்ந்து நின்றான் என் நண்பன்... இல்லை
இல்லை என்னவன்..சின்ன சீண்டலாய் நான் நினைத்து செய்தது என் வாழ்வை வெகு
தூரத்திற்க்கு புரட்டி போட்டது..
அன்று கண்ணீர் மழ்க என்னிடம் இனி உன்னை என் வாழ்வில் ஒரு நாளும் தொல்லை செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றான்..
நானும் அவன் வீட்டிற்க்கு சென்று சமாதானம் செய்துகொள்ளாலாம் என்ற துணிவில் அமைதியாய் இருந்துவிட்டேன்..
இதற்க்கிடையே வேலை தேடும் போராட்டத்தில் அவனை மறந்தே போயிருந்தேன்,
சற்றென்று அவன் ஞாபகம் துளிர்க்க அவனிடம் சென்றேன், எத்துனை பெரிய முட்டாள்
தனம் என்வாழ்வில் அரங்கேறியது என்று அன்று தான் உணர்ந்தேன். மோகனின்
தாயார் காலமானதும் அதன் பின் கல்லூரி கேம்பஸ் இன் டர்வீயுவில் செலக்ட்
ஆனதற்க்கான பணி நியமனத்தை பெற்றுகொண்டு அவன் கனடா சென்றதாகவும் அவன்
இருக்கும் இடத்தில் அருகில் இருப்பவர்கள் என்னிடம் சொல்லி நான் வந்தால்
என்னிடம் கொடுக்கச்சொல்லி ஒரு கடிதத்தையும் கொடுத்திருந்தான்..
அன்புத் தோழி சிந்துவுக்கு,
இது நாள் வரைக்கும் என் அன்பு தோழியாய் இருந்தவளுக்கு இந்த பிரிவு
ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்குமோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் உன்
இருப்பை என் இயலாமையில் உணர்கிறேன் சிந்து. ஒரு தடமாவது என் பெயர் சொல்லி
அழைக்க மாட்டாயா என்று ஏங்கித்தவிக்கிறது என் மனம்.. எங்கு சென்றாலும் உன்
நினைவு என்னை நிம்மதியாய் என் செயலை செய்யவிடுவதில்லை, அதனாலே இந்த துணிகற
செயலில் இறக்கினேன்.. என் அம்மாவின் அஸ்தியை ஏந்திக்கொண்டு உன் நினைவை என்
ஆஸ்தியாய் எடுத்துச்செல்கிறேன்.. உன் நட்பு எனக்கு இன்னுமோர் தாய்மடி..
எல்லோரும் என்னை தள்ளிவைத்து விளையாட நீ மட்டுமே என் உணர்வுகளை புரிந்த
உன்னத ஆத்மா என்றிருந்தேன், நீயும் சிறுபிள்ளை கையிலிருக்கும் பொம்மை தான்
நான் என்பதை உணரவைத்தாய்.
ஆனாலும் தோழியே உன்னை எல்லோரை போலவும் நட்புக்குள் அடைக்க மனம் இடம்
தரவில்லை அதனாலே, என் தகுதியை மறந்து இந்த தங்க கிளையை என் உடன்
வைத்துக்கொள்ள நினைத்தேன்.. அது எத்தனை பெரிய தப்பு என்பதை இப்போது
உணர்கிறேன் டா.. இனி உன் வாழ்க்கையை இந்த நண்பன் கரிச்சட்டியன் இல்லாமல்
சந்தோஷமாய் வாழு.. உன்னோடு கழித்த ஒவ்வொரு நிமிடத்தையும் நெஞ்சுக்கூட்டில்
சுமந்துசெல்கிறேன்... நீ என் காதலாக தொடராவிட்டாலும் ஒரு நட்பாய் என்னை
தொடர நினைத்தால் இந்த மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்...
பிரியங்களுடன்
எல்லோருக்கும் கரிச்சட்டியன்
உனக்கு மோகன்...
கடிதம் முடித்த இடத்தில் கரைதட்டி நிற்கும் என் கண்ணீரைப்போலவே சில வார்த்தைகள் அவன் கண்ணீரால் அளிக்கப்பட்டு இருந்தது..ஆனாலும் என் காதல் என் கைவிட்டு போகவில்லை என்ற தைரியத்தில் அவன் மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்பினேன்...
எப்படி டா இருக்க மோகன்,
நீ இல்லாம எனக்கு போரிங்கா இருந்தாலும் ஒன்னும் பிரச்சனையில்லை, எனக்கு நல்ல வேலை கிடைச்சிருக்குடா, நல்ல சம்பளம், லைப் நல்லா போகுது, நீ உடம்ப பாத்துக்கோடா மோகன்... பாய்..
இப்படியே பெரும்பாலனா மின்னஞ்சல்கள் அக்கறை விசாரிப்புகளாகவே நிறைந்து இருந்ததே தவிர என் காதலை ஏனோ அவனிடம் சொல்ல மனம் அனுமதிக்கவில்லை..
மோகனிடமிருந்து ஆறுமாதமாய் எந்த மின்னஞ்சலும் வரவில்லை, என்னை பல நூறாய் அறுத்து போட்டதை போன்ற வலி. எந்த செயலையும் செய்ய வாய்க்கவில்லை.. அவன் இருக்குமிடத்தை என் இன்னோரு நண்பனிடம் சொல்லி விசாரித்து பார்த்தேன்,அவனை பற்றிய விவரமேதும் தெரியவில்லை
என்ற செய்தியை தாங்கியிருந்தது நண்பனின் பதில்..இதற்கிடையே எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தேற, என் காதலை என் குடும்பத்திடம் சொல்லி அனுமதி வாங்கி, அவனிருக்குமிடம் நோக்கி பரந்து வந்தேன்...
ஒவ்வொரு நிமிடமும் ஊசியால் குத்தி கிளிப்பது போன்ற உணர்வு அத்தனையும் உன் விளையாட்டு தனத்தால் வந்ததுதான் சிந்து, இந்த செயலுக்கு நீ வாழ் நாள் முழுதும் அனுபவிக்க போகிறாய் என்று ஏனோ மனது அடிக்கடி ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.. காரணம் ஆறு மாதத்திற்கு முன் நான் அனுப்பிய செய்தி அப்படி, எனக்கு வந்த வரன் ஒன்றின் புகைப்படத்தை மோகனிடம் அனுப்பி நான் இவனை தான் விரும்புவதாய் அவனை சீண்டி விட்டதன் விளைவு தான் நான் அனுபவிப்பது..
அவன் இருக்குமிடம் சென்றேன், அவனை பற்றியே செய்தியேதும் அங்கு இல்லை அவன் வேலை செய்யும் இடத்திலும் முன்னறிவித்தல் இன்றி வேலையை விட்டதாய் கேள்விபடவே, எப்படியும் இங்கு வந்துவிடுவான் என்று அவன் இருந்த அறையிலே தங்கி கொண்டு அவன் பணி புரிந்த அலுவலகத்திலே பணி புரிந்து கொண்டிருக்கிறேன்.. இன்றோடு வருடம் ஏழு ஆகிறது.. அவன் எனக்கு அனுப்பிய கடிதத்திலும், மின்னஞ்சலிலும், பரிசு பொருளிலும், அவனறியாமல் அவன் பேச்சை பதிவு செய்த கோப்புகளும் தான் என் இத்தனை நாள் வாழ்வை உந்தித் தள்ளியது..இனியும் அவன் வருவான் என்று உள்மனது உரக்கச்சொல்லிக்கொண்டே இருக்க, இறுதியில் வந்து சேர்ந்தான் என்னவன்...
அடடா அவன் உருவத்தில் தான் எத்தனை மாற்றம், பணமும் பதவியும் கிடைக்க பெற்றவர்கள் அத்தனையும் கிடைக்கபெறுவர் என்பது எத்துணை பெரிய உண்மை.. அவன் உருவத்திலும், பேச்சிலும் எத்தனை பெரிய மாற்றம்.. ஆனால் நான் நான், அவனில்லாத இந்த பொழுதுகளில் கணவனை இழந்த கைம்பெண்ணை போலத்தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.. கவலையின் குறியாய் என் முகத்தில் வயதான தோற்றம், அய்யோ இது அவனுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்று உள்ளுக்குள் உழன்று தவிக்கிற கேள்விக்கு விடையாய் அவன் பின்னிருந்து வந்தால் சித்ரா. அவள் உடையிலே தெரிந்தது அவன் மோகனின் மனைவி என்பது.. எத்தனை பெரிய தவறு நம் அறியாமையில் விளைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, எப்போதும் போல என் சிறுபிள்ளைத்தனத்தை இம்முறை போலியாய்
பரவாயில்லையே மோகன் கடைசில உனக்கும் ஒருத்தி மாட்டிட்டாளா? வாழ்த்துக்கள் பா... எனக்கு இங்கே வேலை கிடைத்தது, அதான் நீ எப்படியும் இங்கு வருவன்னு உன் அறையிலே தங்கியிருந்தேன்.. நான் நினைத்ததும் நடந்திருச்சு, என் நண்பன நான் பாத்துட்டேன்.. சரி டா எனக்கு வேலைக்கு நேரமாச்சு, நான் இந்த அறையிலே தங்கிக்கிறேன். நீயும் உன் மனைவியும் வேறு ஒரு இடத்தில் தங்கிகோங்க டா பீளிஸ்.....
எதற்கு நான் இங்கு வந்தேன் அவனும் கேட்க்கவில்லை... நானும் சொல்லவுமில்லை...என் தவறுக்கு கிடைத்த தண்டனையாய் அவன் நினைவுகளை தனிமையில் சுமந்து கொண்டு, பெற்றோரின் வருத்தத்தை சம்பாதித்து கொண்டு, இன்று வேறு ஒரு நாட்டில் பணி புரிந்துகொண்டிருக்கிறேன்..அவன் இப்போதும் கானல் நீராய் என் காதலை வளர்த்துச்செல்கிறான்.....
சரியான நேரத்தில் கொடுக்கப்படாத மன்னிப்பும், சரியான நேரத்தில் சொல்லப்படாத காதலும் ஆயுள் உள்ளவரை நம்மை கருணை கொலை செய்துகொண்டே இருக்கும் என்பதற்கு உதாரணம் தான் நான்..........................