உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 31 டிசம்பர், 2013

போய் வா நண்பா




ஒவ்வொரு வருடத்தின் இறுதியும் அச்சுறுத்துவதாய் இருக்கும் மாயக் குகையின் கைவிளக்காய் இருக்கிறது..

கடந்து வந்த கரடுமுரடான பயணங்கள் பலவற்றிலும் கை சேர்ந்த அனுபவம், துணிச்சலின் துணையோடு புத்தாண்டிற்குப் போக பணிக்க,
இன்னுமொரு குகை, புரியாத குகை வாழ்க்கை, வாழ்க்கை அங்கே நிறுத்தி வைத்திருக்கும் புலனாகா சூட்சுமங்களோடு, உடன் பயணிப்பவர் மொழியறிய, குணம் புரிய,  கையகப்படுத்திய சிக்கி முக்கிக் கல் உரசலில் பெறப்போ
கும் வெளிச்சங்களென, ஒரு டைனோசரின் மிச்சத்தை சுமந்தலையும் பல்லியாய் நமை மாற்றி வைத்திருக்கும் இவ்வாழ்க்கையை வியப்போடு பார்க்கிறேன்.

நாம் கண்டெடுத்த மொழியும், கற்றுத் தேர்ந்த அறிவும் ஒன்று சேர்ந்து உண்டாக்கிய சக்கரமே, வெளிச்ச உரசல்களுக்கு விடையாய் போக, அறிவு கண்டெடுத்த இச்சக்கரம் விதவிதமாய் நமை குழைத்து பாண்டமாக்கி உலவ விட, அதில் சேகரமாகிய விசயங்களைக் கொண்டு தான் திருந்தங்களெனும் ஏர், மன வயலை உழுகிறது...விதைக்கும் அனுபவங்களிலிருந்து முளைக்கும் ஒவ்வொரு பயிரெனும் வெற்றியின் நடுவில் நமை அசைத்துப் போடும் தோல்வியின் களை வளர்ந்துகொண்டே தானிருக்கிறது.. களையத் தெரிந்தவனையும் காலம் கொண்டாடிக்கொண்டேதானிருக்கி
றது..

சக்கரம் ஓடி ஓடி நம்மை கொண்டு வந்திருக்கும் இத்தூரம் பயணக் களைப்பை கொடுக்க, இளைப்பார கிடைக்கும் நிழல் தான் இவ்வருடத்தின் இறுதி நாளெனும் நினைப்பு வேரென எழுகிறது மனதிற்குள்...
மனம் இந்த வருடத்தின் ஒட்டுமொத்த காட்சியையும் குகையோவியமாய் மனதிற்குள் வரைந்து பார்க்கிறது.
எத்தனை எத்தனை நிறமான மனிதர்கள், அவர்களில் தான் எத்தனை விதமான குணங்கள் இத்தனையும் தாண்டி செஞ்சாந்து நிறத்தில் திலகமிட்டு விடும் அனுபவத்தைக் கொடுத்த இவ்வருடத்தை, பிரிய தோழமையை வழியனுப்பையில் உண்டாகும் மூச்சடைப்போடு வழியனுப்பி வைக்கிறேன்...

இவ்வருடம் முழுதும் வாழ்க்கையை உயிரோடு தான் நகர்த்தியிருக்கிறேன் என்பதற்
கு அடையாளமாய் வந்து சேர்ந்த ப்ரியங்களும், துயரங்களும், தோல்விகளும், வெற்றிகளுமாய் கைக்கோர்த்து அடுத்த வருடத்திற்குள் கைதூக்கி அனுப்பி விட,

என் ப்ரிய தோழனே போய் வா...

நேரம் கிடைக்கையில் எல்லாம் என் மனக் குரங்கு உன் கிளை தேடி வரும்......
நிச்சயம் உன் கிளைகள் எனக்காய் சில விசயங்களை ஒளித்தே வைத்திருக்குமென்பதை, புத்தன் மறைத்து வைத்திருக்கும் புன்னகைக்குள் இருக்கும் ஈரமெனக்கு உணர்ந்துகிறது..

போய் வா நண்பா....
எனை நீ அழைத்து வந்திருக்கும் இக்காலத்திற்காய் நன்றி...
மீண்டும் என்றேனும் ஒரு நாளில் கோப்பை தேனீரோடு என் அருகமர்வாய்...கதைபேசிச்
சிரிப்பாய்...

இப்போது உனக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் 

குழந்தை மொழியோடே
ஒரு குட்டி டாட்டா....................
....
போய் வா நண்பா..





 -ரேவா

சனி, 7 டிசம்பர், 2013

நான் என்பவள்





பூங்கொத்து நின் பார்வை
களி நடனம் உன் சிரிப்பு
ஊழிக்கூத்து உன் கோவம்
மேகக்கூட்டம் உன் ஊடல்
மழைச்சாரல் நின் தீண்டல்
கோப்பை தேனீர் உன் அணைப்பு
பெருங்கடல் உன் நேசம்
நான் என்பவள் உன் வரைக்கும்...




சனி, 9 நவம்பர், 2013

சடங்கு






இறுதியாய் முகம் பார்க்கும்
மயான சடங்கிற்கும் அழைத்தே செல்கிறாய்
அதுவரை அறியாத உயிர் பயமொன்று
உள்ளுக்குள் உதறலெடுக்க
கனவுகளை எரியூட்டி
கண்ணிர் குடமுடைத்து
திரும்பிப்பார்க்கமலே அங்கிருந்து கடக்கிறாய்
பழக்கப்பட்ட கையசைப்பிற்கும்
தோள் சாய்தலுக்கும்
வழியின்றி மறைய
வரைந்து போகிறாய்
சிறு புள்ளியை

உயிரடங்கும் பொழுதுகளைவிட
உயிரோடிருத்தலே வலிதருவதாய் இருக்கும்
இவ்வேளையில்
மிச்சமிருக்கும் ஞாபகங்களையும்
எரித்துவிட்டு அங்கிருந்து நகர
மறைத்தலின் பொருட்டு
வந்து விழுந்த
மழை
எதன் பொருட்டு
எதற்காக பெய்யத் தொடங்கியதென்று
தெரியாமலே வந்துசேர்ந்தேன்
நான்....

புதன், 23 அக்டோபர், 2013

Wall ஆல் வந்தது

 

ரொம்ப நாள் கழித்து மனது சொன்ன ஒரு விசயத்தை எழுத்தில் ஏற்றுவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாவும், நிறைவாவும் இருக்கு..முகனூல் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தருது.. சிலருக்கு தன் துயரங்களின் வடிகாலாகவும், சிலருக்கு துயரங்கள் ஆரம்பமாகும் இடமாகவே கூட முகநூல் இருக்கு..ஆக யார் எங்க இருக்காங்கங்கிறது அவரவரின் தெளிவைப்பொறுத்த விசயமா இருக்க, இந்த முகனூல் வால் எல்லாத்துக்கும் முக்கியமான விசயமா மாறிப்போயிடுது இல்லையா, என் எண்ணத்தில், அசைபோடலில் இருக்கிற விசயத்தை எழுத்திலிட்டு சுவற்றில் பதிவு செய்தவுடனே அது எனக்கு சொந்த மில்லாத ஒன்னா போயிடும் பட்சத்தில் வாழ்க்கையும் அப்படி ஒன்னாத்தான் எனக்கு தெரியுது, அடடா ரேவா ஏதோ அட்வைஸ்ஸோ இல்லை வேற ஏதோ சொல்லப்போறான்னு நினைச்சா அப்படி எதுவும் இல்லவே இல்லை... இது முழுக்க முழுக்க என் பால்யத்தின் கரைகளை வேடிக்கை பார்க்கும் பதிவு தான் எனக்கு...

பொதுவா நம் உலகம் நம்ம சுற்றியிருக்கிற ஒரு 10, 20 குடும்பங்களோட முடிஞ்சு போயிடுறது இல்லாட்டியும் கூட ஆரம்பிக்கிற இடம் இதுவாத்தான் இருக்கும்.. அப்படி என்னை சுற்றியிருக்கிற ஒரு 20 குடுத்தினக்காரர்கள் மத்தியில் என் சிறுவயது நட்பாய், பகைவீழ்த்தியாய், சொத்தாய், என் எண்ணங்களை கை வழி பயணத்தின் மூலம் பிரதிபலிக்கிற ஒரு கரும்பலகையாய் எனை வளர்த்தது என் வீட்டிற்கு எதிரிலுள்ள காம்பவுண்ட் வால் தான்... ஒரு 15 குடுத்தினதாரர்களை மொத்தமாய் அடைத்து வைத்திருக்கும் அந்த கட்டடத்தில், என் போன்ற பிள்ளைகளுக்கு பெரிய அரணாய் இருந்ததே அந்த வால் தான்...

எப்போதும் பள்ளி முடிந்து சாயங்காலம் வீடு தேடி ஓடிவருகையில், இன்றைக்கான தன் களம் தயாராகிவிட்டதென்ற மகிழ்ச்சியில் வாஞ்சையாய் எனை பார்த்து அந்த சுவர் புன்னகைப்பதைப்போல் எப்பவும் எனக்கு தோன்றும்... பிள்ளைகளோடு சேர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டில் கண்களை மூடிக்கொள்ள, தோள்கொடுத்து நான் சாய்ந்துகொள்ள முதல் நட்பாய் இருந்தது அந்த காம்பவுண்ட் சுவர் தான்...

இன்றைக்கு சில நெல் மணிகளோடு ”அ” வென்ற எழுத்தை எழுதிப்பார்ப்பது சம்ரதாயமாய் மாறிவிட்ட சூழலில் என் முதல் அ வை முழுதாய் சுமந்து நிற்கும் அந்த சுவரை, என் பால்யத்தின் நீட்சியாகவே பார்க்கின்றேன்...

முதன் முதலாய் வந்து சேரும் முதல் அத்தனையையும் சேர்த்துவைத்திருக்கிற அந்த சுவற்றை வெறும் செங்கலென கடந்து செல்பவர்கள் மத்தியில் எனக்கு எப்போதுமே அச்சுவர் அப்படியாய் இருந்ததே இல்லை..

ஒரு நீளச்சுவரில் ஆளுக்கு இவ்வளவென்று பிரித்துக்கொண்டு, தனக்கான தன்னை வெளிக்காட்டிக்கொள்ள பெரும் உதவியாய் இருந்ததும், பங்கிட்டுக்கொள்வதிலிருக்கும் சந்தோஷத்தை குடும்ப அல்லாது சொல்லிக்கொடுத்த ஒரு உயிரற்ற ஜீவன் அச்சுவர் மட்டுமே..ஓடிப்பிடித்து விளையாடுதலில் ஜெயித்தவர்களின் பெயர்களை தாங்கி நின்று, அடுத்த போட்டிக்கு வென்றுவிட வேண்டுமென்ற உத்வேகத்தையும், அழகழகான வண்ணமலர்களை வரைந்து, பார்வை நீருற்றி அதை வதங்கவிடாமல் பாதுகாத்து, அனைத்துக்கும் உயிர்கொடுத்து பார்க்கச் சொன்ன தன்மையையும் எனக்குச் சொல்லிக்கொடுத்தது அச்சுவர் மட்டுமே...

கெளரவச் செங்கலால் எழும்பி நிற்கும் மனிதர்களைக் காட்டிலும் எனக்கு எப்போதும் அச்சுவரில் தனிப்பிரியம் தான்.பொய் வேசம் பூணத்தெரியாதது கூட அதன் மீது தனிப்பிரியம் வரக்காரணமாய் இருந்திருக்கலாம்... ஒவ்வொரு வயதின் முதிர்ச்சியிலும் ஆசைப்பட்ட, அசைப்போட்ட பல விசயங்கள் அங்கிருந்தே ஆரம்பித்தது, சாக்பீஸ்ஸைப்பிடித்து அ வென்று சொல்லி அனைவரையும் கவனிக்க வைத்த இடத்தில் நான் ஒரு ஆசிரியராய் ஆகவேண்டுமென்ற எண்ணம் துளிர்த்தது... அழகாய் வரைகிறாயென்று எதிர்வீட்டு அத்தை சொன்ன பொழுதொன்றில் ஓவியராய் வந்துவிடவேண்டுமென்ற ஆசை வளர்ந்தது... கண்டதில் காணாத ஒன்றை கண்டு சொல்லயில் கவிஞராய் வந்துவிடவேண்டுமென்ற கனவும் தொடர்ந்தது, இப்படி படிப்படியாய் ஆசைகளின் மேகக்கூட்டங்களை அத்தனையும் வாங்கிக்கொண்டு நான் வாழ்வில் என்னவாய் ஆகப்போகிறேனென்ற எண்ணத்தை தெரிந்துவைத்துக்கொண்டு ஒரு மர்மப்புன்னகை புரியும் தீர்க்கதரிசியாகவே எனக்கு தெரிகிறது அச்சுவர்...

பிள்ளைக்கண்ணீரை, பால்யக் கனவை, முதல் முதலில் ஆண்னென்பவன் என்னிலிருந்து வேறுபட்டவனென்ற உணர்வை, நட்புக்குள் கட்டுப்பாடு விதிக்க கற்றுக்கொண்ட எல்லைக்கோட்டை எனக்கு கொடுத்ததெல்லாம் அச்சுவர்... உயிரற்ற ஒன்றை போகின்ற இடமெல்லாம் தூக்கிச்சுமத்தல் கஷ்டமென்று தான் அந்த பாழாய்ப்போன கடவுள் நினைவைப்படைத்தானே என்னவோ, எப்போதெல்லாம் என் கண்ணீர் உடைபட்டு தெரிக்குமோ அப்போதெல்லாம் சாய்ந்துகொண்டு என் கண்ணீரை வாங்கியதும், இன்றும் அந்த ஈரக்கண்ணீரை ஒவ்வொரு மழை நாளின் போதும் தரிசிக்க கொடுப்பதும் எனக்கு வியப்பாய் தான் இருக்கும்..

வயதுகளை கடந்தும், வயோதிகத்தில் முதிர்ந்தும் போனாலும், சில கட்டுமானங்களால் மீள் தோற்றத்திற்கு திரும்பிவிடும் இச்சுவர் எப்போதும் எனக்கு பாஸிட்டிவ் வைப்ரேஷனை தரத்தவறுவதே இல்லை...

இதோ இப்போதும் தீபாவளி பண்டிகைக்காய், இன்னும் தான் வளர்த்துவிடக் காத்திருக்கும் புது புதுப்பிள்ளைகளுக்காய், வெள்ளை உடையெடுத்து போட்டுக்கொண்டிருக்கிறாள்... இவ்வெள்ளை வர்ணமென்னவோ என் வாழ்க்கைகான வசந்தம் வந்துவிட்டதாகவே என்னை நம்பச்சொல்கிறது....

அச்சுவரோடு நானும் வந்து அமரக்காத்திருக்கும் அவ்வர்ணத்திற்காய் எழுப்பிவைக்கிறேன் என் எண்ணச்சுவரை......



-ரேவா


வியாழன், 3 அக்டோபர், 2013

தினசரி கவிதை




இன்றைக்கான நாள்
எப்போதும் போல
புன்னகை தவழ
எதிரினில் இருக்கும் எவருக்கும் புரிந்திடா
உதட்டுசாயமென மாறின பழக்கம்
அலுவலக தொடர்பு
மாலை தாண்டிய களைப்பு
தவறவிட்ட வாய்ப்பு
தட்டிக்கழிக்க காரணம்
தடுமாற்றம் தந்த அவமானம்
பதிலடி கொடுத்த வன்சொல்
பேருந்து நெரிசல்
எதிரினில் எரிச்சலென
ஏகபோகமாய் இந்நாள் கழிய
இன்றைக்கு தனியாய் கவிதைகளில்லை
என்னிடம்...

புதன், 2 அக்டோபர், 2013

என்ன செய்ய?




பேசுவதற்காகத்தான்
உனை வரச்சொன்னேன்
வரும்வழியெல்லாம் மனம்
பேசியச்சொற்களின் அயற்சி
உனைபார்த்ததும் ஓய்வெடுத்துகொள்ளுமென
சத்தியமாய் நினைக்கவேயில்லை
மெளனமாய் இந்த நிமிடம்
துளி புன்னகையில்லை
சினேக விசாரிப்புகள் இல்லை
நம்மிடையே சூழ்ந்திருந்த
அந்த உன்னத உணர்வும்
இந்நிமிடம் கிடைக்கவில்லை
உன் பார்வையின் வழியே நினைவோட்டம்
கொஞ்சம் நிதானித்து இருக்கலாம் தான்
என்ன செய்ய
பேசமாலே கிடக்கும்
என் சொற்களை



செவ்வாய், 1 அக்டோபர், 2013

ஒற்றைச்சிறகு




காதலெனும் சிறகெடுத்து
நானுனக்கு மாட்டிவிட்டபின்
இலக்கின்றி பறந்தலைந்த பொழுதொன்றில் தான்
எங்கோ தொலைத்திருந்தேன்
என் ஒற்றைச்சிறகை
சில்லு சில்லாய் சிதறிக்கிடக்கும்
பிரியங்களின் வார்த்தைகளிலெல்லாம்
நிறைந்து கிடக்கின்ற முகம்
இறைத்து போட்டபடியிருக்கிறது சபையேறா பேச்சுகளை
கதைசொல்லி களைத்து போகின்ற இடம்
காரணமின்று சிரித்துப்பார்த்த தடம்
எது என்னை உன்னை நோக்கியிழுத்ததென்று
நினைப்பை கொடுத்த களம்
அத்தனையும் தாண்டி
கடல் மணலின் பாதங்கள் பரப்பி விளையாடும்
பிள்ளைமனதாகிப்போகின்ற
ப்ரியத்தின் முன்
வெட்கங்களை உண்டு
வேட்கைகளை நிறைவேற்றும் உன் தளமெனக்கு
அன்னியமாய்பட்ட போதும்
அடுத்தடுத்த எடையிழப்புகளால்
நிலைகுலைந்து போன சுயம்
உன் முகமெடுத்து கொண்ட போதும்
உனது விருப்பங்களுக்கு முன்
பலியிடப்படும் எனது கனவுகளைபற்றியோ
காணாமல் போகும் வார்த்தைகளைபற்றியோ
பற்றற்றுபோன
பற்றுதலை பற்றி
யாதொரு கவலையுமுனக்கு இல்லையென்ற போதும்

தொலைத்திருப்பேனென்று
தெரிந்திருந்தால்
நண்பனாகவே இருந்திருக்கலாம்
நீ



திங்கள், 30 செப்டம்பர், 2013

குரல்





ஊமையின் கனவில்
நித்தம் வருகிறது ஒரு குரல்
முற்றிலும் பழக்கப்பட்டதாய்
மாறிப்போன நாளொன்றின் துவக்கத்திலிருந்து
உறக்கம் கெடுக்கிறது அக்குரல்
பேசத்தெரிந்தவாறு
பேசிச்சிரித்தவாறு
அழுகையின் அந்தம் சொன்னவாறு
அவனோடே உரையாடலைத்தொடர்ந்தவாறு
தன்னை நிலைத்து வைக்கிறது
அக்குரல்
பசிக்கு உணவாய்
பழக்கத்தின் நட்பாய்
ஆதரவின் அன்னையாய்
அக்குரலை
தன் குரலாய் நினைக்கத்தொடங்கிய
ஊமைச்சிறுவனின்
உலகம் வார்த்தைகளால் நிறைந்திருக்க
பேசத்துடிக்கும் அச்சோடி கண்களில்
நீங்களும் தேடியெடுக்கலாம்
அக்குரலை
ஏளனமற்ற புன்னகையை கொடுத்தவாறே...


புதன், 18 செப்டம்பர், 2013

நான் என்பவள் பைத்தியக்காரி




அனேகப்பெயர் வைத்தாகிவிட்டது
அதனாலென்ன
ஆண்டொன்று கூடும்பொழுதெல்லாம்
அவசரப்பிரிவு நோயாளியின்
வாழ்வை குறித்த பயமென
தொற்றிக்கொண்டே வருகிறது
நாட்களின் நகர்வை பற்றிய
இருள்...

இன்னதென்று சொல்லாமல்
இதனாலென தள்ளாமல்
தட்டப்படும் கதவுகளை
திறந்தே வைத்திருக்க
சலிப்புற்ற வார்த்தைகள்
சருகுகளாய் பெருநிலத்தில் பரவ
அத்தனையும் ஒரு மொழியெடுத்து
சுவாசப்பை நெறிக்க

கைகளை விரித்த படியே
காற்றில் நீந்த ஆரம்பிக்கின்ற கற்பனை
எனையுடுத்தி
உண்மையின் நிர்வாணம் மறைக்க
அவ்வவ்போது
எழும் கேள்விகள்- எதைக் குறித்தோ,
அதன் குறியுடைக்க கிளம்பும் கோபமெல்லாம்
இந்நாளில் இல்லாத உனைப்பற்றியே நீள
அவகாசமெதும் கொடுக்காத
தற்கொலைக்கு தயராகிறது
உனைப்பற்றிய என் குறிப்புகள்...

செத்துப்போ
கனவுகளை கொடுத்து
கனவினை விடுத்து
செத்துப்போ

வார்த்தையற்ற கவிதைக்குள்ளிலிருக்கும்
காதலும்
கோபமும்
சொல்லா மோகமும்
உனைத்தீண்டும் முன்
செத்துப்போ

விந்தற்ற விதைகொண்டு
மாதம் பூக்கும்
பூவினைத் தீண்டா வண்டென
தொலைந்துபோ

காட்சிகள் முடியும் மட்டும்
கனவுகள் தொலையும் மட்டும்
வாழ்க்கையே முட்டும் மட்டும்
வலிகொடுத்த உணர்வினை விட்டு
தொலைந்துபோ

வாழத்தகுதியற்ற அன்பைக்கொண்டு
வானம் படைத்த
உலகைவிட்டு
தொலைந்துபோ

அனேகப்பெயர் வைத்தாகிவிட்டது
அதனாலென்ன
பைத்தியக்காரியென்ற பெயரையும்
சேர்த்தெழுங்கள்
என் கனவுக் கல்லறையில்.......




திங்கள், 16 செப்டம்பர், 2013

ரகசிய அறை



திறவுகோலது கையிலே இருக்க
திறந்திடும் முன்னே
நின்றிடு

வார்த்தைகளாலான
அறையெனது
உனக்கு பிடித்தச்சொற்களை
உருவுவதில் தொடங்கி
நீடித்துகொள் எனதறையில்
தொடர்ந்தென்னை வார்த்தைகளால் தோற்கடி
தோற்பதில் தான் ப்ரியத்தின்
உயிருள்ளதென்பதை
நானுணர்ந்ததைப் போல்
நீ உணர்
உணவாகும் வரை உயிர் தேடலென்பது
தொடருமென்பது
உணவுச்சங்கிலி கொடுத்தபாடமென்றாலும்
வலிக்க வலிக்க
உனது தேடலை தொடர்
உண்ண உணவது
உயிரினில் அடியினில் கிடக்க
அடிவானமதை கண்டடைந்த போது
உறங்கிப்போ
அதற்குமுன்
முத்தமிடு
சத்தமிட்டு காதலிப்பதாய் சொல்
சாத்தியப்படுகையில் உன் வார்த்தைகளால்
எனதறைக்கு பலம் சேர்
சேர்ந்து வாழ
பிரியமட்டும் போதாதென்பதை
நான் கட்டிய எனதறையை
படித்தறிதலில்
புரி
புரிந்தறிதலில்
தெளி
தெளிந்த பின்
தேடு
தேடியடைந்த பின்
கூடு
கூடிய பின்
களி
களித்தெழ
கழித்திடு
ப்ரியம் முட்டும் வரை
வானம் படை
பிறகு போட்டுடை
முதலில் இருந்து தொடங்கு
முடிவைத்தேடி நெருக்கு
நெருங்கிய பின்
முற்றுபுள்ளியிட்டு
மறுபடியும் தொடர்
தொடர காரணமற்று நீண்டுபோன
இவ்வரிகளுக்கான
திறவுகோலது கையிலே இருக்க
திறந்திடும் முன்னே
நின்றிடு.



-ரேவா 

 

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

தேவைப்படுவதெல்லாம் காரணங்களே...


 
உன் முகம் தேவையில்லையெனக்கு
அப்படியே என்னுடையதும்
பெயர்
மொழி
தொலைபேசி எண் என
எல்லாமே தேவையற்றது தான்
நீ போலியென சந்தேகித்தாலும் கூட
நிமிர்ந்து கிடக்குமிடத்தில் குனிதல்
உன் குணமென சொல்லி
வேஷம் போடுவதை தவிர்
சாயம் வெளுத்த கூட்டங்கள்
நானறிவேன்..
உனக்குள்ளிருக்கும் எதிர்பார்ப்பை
சூன்யப் பெருவெளியில்
சுட்டெறி
குளிர்காய காரணங்களாவது கிடைக்கும்
பொய்களை இன்னொரு நாக்காய்
எடுத்தாள்வதை நிறுத்து
எதையும் நம்புவதாய் இல்லை
நான்
வேறென்ன
பெரிதாய் ஒன்றுமில்லை
முடிந்தால் இவ்வரிகளை
படித்துவிட்டுச் செல்
நான் அப்படியில்லையென்ற பொய்களோடு.. :)


-ரேவா





செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

என்ன செய்ய




பேசுவதற்காகத்தான்
உனை வரச்சொன்னேன்
வரும்வழியெல்லாம் மனம்
பேசியச்சொற்களின் அயற்சி
உனைபார்த்ததும் ஓய்வெடுத்துகொள்ளுமென
சத்தியமாய் நினைக்கவேயில்லை
மெளனமாய் இந்த நிமிடம்
துளி புன்னகையில்லை
சினேக விசாரிப்புகள் இல்லை
நம்மிடையே சூழ்ந்திருந்த
அந்த உன்னத உணர்வும்
இந்நிமிடம் கிடைக்கவில்லை
உன் பார்வையின் வழியே நினைவோட்டம்
கொஞ்சம் நிதானித்து இருக்கலாம் தான்
என்ன செய்ய
பேசமாலே கிடக்கும்
என் சொற்களை



வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

நண்பனாகவே இருந்திருக்கலாம்




காதலெனும் சிறகெடுத்து
நானுனக்கு மாட்டிவிட்டபின்
இலக்கின்றி பறந்தலைந்த பொழுதொன்றில் தான்
எங்கோ தொலைத்திருந்தேன்
என் ஒற்றைச்சிறகை
சில்லு சில்லாய் சிதறிக்கிடக்கும்
பிரியங்களின் வார்த்தைகளிலெல்லாம்
நிறைந்து கிடக்கின்ற முகம்
இறைத்து போட்டபடியிருக்கிறது சபையேறா பேச்சுகளை
கதைசொல்லி களைத்து போகின்ற இடம்
காரணமின்று சிரித்துப்பார்த்த தடம்
எது என்னை உன்னை நோக்கியிழுத்ததென்று
நினைப்பை கொடுத்த களம்
அத்தனையும் தாண்டி
கடல் மணலின் பாதங்கள் பரப்பி விளையாடும்
பிள்ளைமனதாகிப்போகின்ற
ப்ரியத்தின் முன்
வெட்கங்களை உண்டு
வேட்கைகளை நிறைவேற்றும் உன் தளமெனக்கு
அன்னியமாய்பட்ட போதும்
அடுத்தடுத்த எடையிழப்புகளால்
நிலைகுலைந்து போன சுயம்
உன் முகமெடுத்து கொண்ட போதும்
உனது விருப்பங்களுக்கு முன்
பலியிடப்படும் எனது கனவுகளைபற்றியோ
காணாமல் போகும் வார்த்தைகளைபற்றியோ
பற்றற்றுபோன
பற்றுதலை பற்றி
யாதொரு கவலையுமுனக்கு இல்லையென்ற போதும்

தொலைத்திருப்பேனென்று
தெரிந்திருந்தால்
நண்பனாகவே இருந்திருக்கலாம்
நீ

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

மெளனப்பாடல்




 Photo: மெளனம் ஒரு பாடலாகவே 
இருந்தது நமக்கு..
இசைக்குறிப்புகள் பற்றிய கவலையின்றி
தாளம் பற்றிய தயங்கங்களின்றி
சுதி சுத்தமாய் பாடப்படுமோவென்ற பயங்களின்றி
ப்ரியத்தின் வரிகள் சரியாய் 
படிக்கப்பட்டதன் பொருட்டு
இந்த மெளனம் ஒரு பாடலாகவே 
இருந்தது 
ந
ம
க்
கு.....

-ரேவா

மெளனம் ஒரு பாடலாகவே
இருந்தது நமக்கு..
இசைக்குறிப்புகள் பற்றிய கவலையின்றி
தாளம் பற்றிய தயங்கங்களின்றி
சுதி சுத்தமாய் பாடப்படுமோவென்ற பயங்களின்றி
ப்ரியத்தின் வரிகள் சரியாய்
படிக்கப்பட்டதன் பொருட்டு
இந்த மெளனம் ஒரு பாடலாகவே
இருந்தது


க்
கு.....

-ரேவா

திங்கள், 29 ஜூலை, 2013

முத்தவழிச்சாலை


 Photo: இருபக்கமும் அடர்ந்திருக்கும்
அவ்வசீகர சாலை
ஆரம்பத்தில் குறுகளாகி
ஆரம்பித்ததன் வேகத்தின் கணக்கில்
லாவக ஓட்டம் பிடிக்க

அழுத்தம் நிறைந்த பகுதிக்குள்
தடையின்றி செல்ல 
நீலியின் கைகள்
ஏதுவாய் அமைய

தூரமாய் செல்லச்செல்ல
செல்ல கைகளாய் மாறிய
நிழல்
உதிர்ந்த காரணங்களையெல்லாம்
கிளையேற்றி பார்க்கும்
கண்களை கொடுக்க

நிலா
நீ
வானம்
தனிமை
கருமையென அலைந்து பறக்கின்ற
மனதிற்கு
வேகத்தடையெடுத்து வருகிறது
இம்முத்தவழிச்சாலை...

இருபக்கமும் அடர்ந்திருக்கும்
அவ்வசீகர சாலை
ஆரம்பத்தில் குறுகளாகி
ஆரம்பித்ததன் வேகத்தின் கணக்கில்
லாவக ஓட்டம் பிடிக்க

அழுத்தம் நிறைந்த பகுதிக்குள்
தடையின்றி செல்ல
நீலியின் கைகள்
ஏதுவாய் அமைய

தூரமாய் செல்லச்செல்ல
செல்ல கைகளாய் மாறிய
நிழல்
உதிர்ந்த காரணங்களையெல்லாம்
கிளையேற்றி பார்க்கும்
கண்களை கொடுக்க

நிலா
நீ
வானம்
தனிமையென அலைந்து பறக்கின்ற
மனதிற்கு
வேகத்தடையெடுத்து வருகிறது
இம்முத்தவழிச்சாலை...

சனி, 27 ஜூலை, 2013

என் டைரிக்குறிப்பில் நீ...








காலத்தின் முகம் அணிந்துகொண்டவனுக்கு,

 நானிருக்கும் வரை நலமாய் இருப்பாய் என்ற எண்ணத்திலே எழுத்துகளின் ஊடே உனக்கொரு வலை பின்கிறேன்...எழுத்தில் உன் முகம் பார்க்க, எழுதிட சுகம் சேர்க்கும் உன் நினைவுகளே உற்சாகமெடுத்து ஓடவைக்கட்டும் இனி வரும் வரிகளை..எழுத மறந்து போன நாட்களில் எங்கோ இருந்து எழுதிடச்சொல்கிற இந்த போக்கு எனக்கொன்றும் புதிதில்லையென்றாலும் வாழ்க்கையின் சூழ்ச்சியில் வஞ்சிக்கப்பட்டவர்களில் நாமும் ஒருவரென்பதை இதுவரை சந்திக்காத விழிகளின் கிடைக்கின்ற இருளில் உண்ர்வோம்...

திரும்பிப்பார்த்தலென்பது எப்போதும் லயிப்பான விசயமாய் இல்லாது போகும் இக்காலச்சூழலில் இக்கடிதம் கண்ணில் படும் போதெல்லாம் ரசிப்பிற்கு விருந்துவைக்கும் விசயமாய் மாறிப்போகட்டும் நம் வாழ்க்கைப்பக்கங்களுக்கு.. பிறப்பு குறித்த பிரபஞ்ச ரகசியங்களை உடைக்குமொரு நிகழ்வு இதுவரை நிகழவேயில்லையென்பது நிகழ்ந்தவரை கிடைத்த நகர்வில் இருக்க, எப்படி இருக்கிறாய்? என்ன செய்கிறாய்யென யாதொன்றும் தெரியாதிருக்க, எனை எதை எதையோ செய்யவைக்கிறாய், சின்னதாய் பொய்கோலம் பூண வைக்கிறாய்.. விசித்திர விரிப்புகள் மத்தியில் ஒய்யார  வந்தமர அருபமாய் இருக்கும் என் மனதில் அடிக்கொரு முறை உனை அளவெடுத்துக்கொள்கிறேன்.. எப்போதேனும் எனை நினைப்பாயா? எனைக்குறித்து உன் கொள்ளளவு என்னவாய் இருக்கும் .. உன் நண்பனின் பொல்லாத மனைவியோடு என்னையும் ஒப்பிட்டுக்கொள்வாயா? இல்லை உன் தோழியின் நேசத்திற்குரியவனைப்போல் என்னிடம் நடந்துகொள்ளவேண்டுமென ஒத்திகைசெய்துகொள்வாயா? யாதொன்றிலும் எனக்கு தெரிவில்லையென்றாலும் ஆண்னென்பதின் பதம் என் அப்பாவிற்கடுத்து உன்னிடம் தான் நான் தேடத்தொடங்கவேண்டும்..

தனிமையின் நிறமெனக்கு எப்போதும் பிடித்தது, அது தரும் சுகந்தமும் ஆறுதலும் எனக்கு எதுவுவொன்றும் தந்துவிடாது அதேபோல் உனக்கெப்படி என்னைப்போல் அதிகம் பேசுவாயா? இல்லை அளவெடுத்து வார்த்தைகளை விடுவாயா? பெண் என்பவள் உன் பார்வைக்கு எப்படி?  நீ என்பதில் நான் எதுவரைக்கும்? இப்படி எத்தனையோ கேள்விகள் உள்ளன, உனக்கும் அப்படியாய் இருக்கலாம்.இந்த கேள்விகள் தான்  நான் இருக்கிறேன் என்பதற்கான என் இறுப்பினை உறுதிசெய்யும் காரணிகளாய் இருக்க, என் எதிர்ப்பார்ப்பு உன் வருகைக்கானதாய் மட்டுமென்பதை அறிந்துகொள்.


எழுத்தின் வாயிலாய் உன் முகம் தேடத்தொடங்கியிருக்கும் இந்நாட்களில் இக்கடிதம் உனக்கும் எனக்குமான முதற் புள்ளியை வைத்துவிட்டு கள்ளத்தனமாய் 
சிரிக்கிறது...

,



வெள்ளி, 26 ஜூலை, 2013

வீட்டுக்கதவு

 Photo: எல்லோர் வீட்டின் கதவுகளும் 
திறந்தே தான் கிடக்கிறது 
உள்ளே வருவதற்கான அனுமதி மட்டும் 
உரிமையாளறென்ற பெயரில் நிறுத்தற்குறிவைக்க

குறியுடைத்து
உள் நுழைபவர்களைப்பற்றிய கவலையோ
நம் குறிப்புகளை அவர்கள் படிப்பதில் 
கிடைத்த சிலாகிப்பை அறிவதில் ஆர்வமோ
அந்தரங்கமென ஆட்டிவிக்கும் ரகசியங்களின்
சூல்லொன்றை அவர்கள் முன் பிரசவிப்பதில்
ஏற்படும் வலியோ
நம் படுக்கையை பகிர்ந்துகொள்வதில் 
கிடைக்கும் உணர்வை 
சொல்வதிலிருக்கும் சுவாரஸ்யம் 
பற்றிய கவலையோயின்றி
நிர்வாணமாய் நிற்கின்ற 
உண்மையின் முன்
அன்னியத்தன்மையிலிருந்து விலகுவதாயிருக்கிற
இக்கனவு
எல்லா பறவைகளும் வந்தமர்வதற்கான 
விலாசமாக
விசாலமாகவே இருக்கிறது...


எல்லோர் வீட்டின் கதவுகளும்
திறந்தே தான் கிடக்கிறது
உள்ளே வருவதற்கான அனுமதி மட்டும்
உரிமையாளறென்ற பெயரில் நிறுத்தற்குறிவைக்க

குறியுடைத்து
உள் நுழைபவர்களைப்பற்றிய கவலையோ
நம் குறிப்புகளை அவர்கள் படிப்பதில்
கிடைத்த சிலாகிப்பை அறிவதில் ஆர்வமோ
அந்தரங்கமென ஆட்டிவிக்கும் ரகசியங்களின்
சூல்லொன்றை அவர்கள் முன் பிரசவிப்பதில்
ஏற்படும் வலியோ
நம் படுக்கையை பகிர்ந்துகொள்வதில்
கிடைக்கும் உணர்வை
சொல்வதிலிருக்கும் சுவாரஸ்யம்
பற்றிய கவலையோயின்றி
நிர்வாணமாய் நிற்கின்ற
உண்மையின் முன்
அன்னியத்தன்மையிலிருந்து விலகுவதாயிருக்கிற
இக்கனவு
எல்லா பறவைகளும் வந்தமர்வதற்கான
விலாசமாக
விசாலமாகவே இருக்கிறது...

 

செவ்வாய், 16 ஜூலை, 2013

ஜோடி தூரிகை


 Photo: எதை எதையோ 
கொடுத்து பேச வைக்கிறாய்
யாருமற்ற இவ்வெளியில் சொற்கள் 
சூரியனாகி சுட்டெரிக்க 

நீ கொடுத்துப்போன குரல்
ஆன்மாவில் பெருங்குரலெடுத்து 
பாடிக்கொண்டே திரிய

கைவிளக்குகளாகிப்போன 
காரணங்கள்
காத்திருப்பதை நியாயமென்றுணர்த்த

காதலது காத்திருப்பில் கரைய
மிச்சமிருக்கும் காலத்தை
காட்சிபடுத்த கிடைக்கட்டும் 
ஜோடி தூரிகை...
எதை எதையோ
கொடுத்து பேச வைக்கிறாய்
யாருமற்ற இவ்வெளியில் சொற்கள்
சூரியனாகி சுட்டெரிக்க

நீ கொடுத்துப்போன குரல்
ஆன்மாவில் பெருங்குரலெடுத்து
பாடிக்கொண்டே திரிய

கைவிளக்குகளாகிப்போன
காரணங்கள்
காத்திருப்பதை நியாயமென்றுணர்த்த

காதலது காத்திருப்பில் கரைய
மிச்சமிருக்கும் காலத்தை
காட்சிபடுத்த கிடைக்கட்டும்
ஜோடி தூரிகை...

செவ்வாய், 2 ஜூலை, 2013

பயணங்கள் முடிவதில்லை......

        



             பயணங்கள் எப்போதும் அழகானவை அதை ஏதாவது ஒரு விதத்தில் கூடுதல் அழகாக்கிப்போக  நம் எல்லாப்பயணத்திலும் ஏதோவொன்று சேர்ந்தே நம்மோடு பயணிக்கிறது. பயணங்களில் ஜன்னலோரத்து மழைதூரலாய் சிலிர்ப்பை ஏற்படுத்தும் சுகானுபவம் குழந்தைகளோடு பயணிக்கையில் மட்டும் கிடைக்கும் ஒன்று...வாழும் காலத்தில் வரங்களை கொடுப்பவர்கள் குழந்தைகளாக மட்டுமே இருக்க முடியுமென்பது எவ்வளவு பெரிய உண்மை...

           எத்தனை ஆழ்ந்த பார்வை அவர்களது, எத்தனை அழகான உலகம்,என்ன ஒரு  நேர்த்தியான சிந்தனை, , தோற்றுபோவதைக்கூட பாவத்தோடு சொல்லும் அந்த பாங்கிற்காகவாவது சின்ன சின்ன சீண்டல்களை செய்யச்சொல்கிறது மனம்.. குட்டி குட்டி பாவங்களில் தான் எத்தனை அழகான வசீகரம், பொதுவாக பயணங்கள் எல்லோருக்கும் பிடித்தமானது அதுவும் ஜன்னலோர இருக்கைகளோடு பயணிக்கையில் கிடைக்கும் சுகம் என்றைக்கும் தனியானது தான்...

          யாருமற்ற சாலை, அடர்மரங்கள் நிறைந்திருக்கும் இடங்களில் கதிரவனை தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் கிளைகள், தன் கீழ் உள்ளவர்கள் மேல் கதிர்களை படவைக்காது பாதுகாத்து சாலையின் இருபுறங்களையும் அரவணைத்திருக்க, பேச எடுக்கும் வார்த்தைகளைக்கூட களைத்துப்போடும் காற்று காதுக்குள் புகுந்து இன்னிசை நடந்த, ஒப்பனை இல்லா புன்னகை எல்லோர் உதட்டையும் மெருகேற்ற, கூடுதல் அழகாய் குழந்தைகளும் இணைந்துகொண்ட பயணத்தில்  இளையராஜாவும் இணைந்துகொண்டால், அடடா, வாழும் நாட்களுக்குள் வந்து விழுந்த சொர்க்கம் தானே.
 

          எப்போதும் எதுவும் மாறாமல் பயணப்படும் இயந்திர வாழ்க்கையில் எப்போதேனும் வந்தமரும் இம்மாதிரியான பயணங்கள் ஏதோ ஒரு மாற்றுவிசையை மனதிற்கு தந்துபோகமட்டும் மறுப்பதில்லை... இன்றைக்கும் அப்படியான பயணம் தான் தங்கையின் கல்லூரி அலுவல் விசயமாய் சிவகங்கையை நோக்கிய பயணம், எதோ ஒரு வித அயர்ச்சி ஆரம்ப நேரத்திலே உடன் அமர்ந்து கொள்ள எதையும் கவனிக்காது பயணப்பட்ட நேரத்தில் தான் உள் நுழைந்தது அக்குட்டிப்புயல், கிட்டத்தட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தன் கட்டுப்பாட்டில் அனைவரையும் கட்டிவைத்தது...உள் தைத்த என் சோகத்தின் அடர் இருளை மறைத்து பிரகாசங்களை வாரிகொடுத்தது அம்மலர்செண்டு...அவள் இறங்குவதற்கான இடம் வந்ததும் தாவிவந்து என் மடி ஏறிக்கொண்டு அக்கா உன் போனை எனக்கு தரியா, உனக்கு சாக்லெட் தாரேன்னு சொன்ன அழகில் இன்னும் இனித்துக்கிடக்கிறது மனம்... எத்தனை அழகான தேவதைகள் குழந்தைகள் அவளை அணைத்துக்கொண்ட அந்த நிமிடத்திலிருந்து கும்மாளமிட்ட மனது கிட்டத்தட்ட என் கட்டுபாட்டை இழந்து துள்ளிக்குதித்ததை நினைத்து நானே வியந்துகொண்டேன்...

       கல்லூரியை அடைவதற்கான இரண்டு மணி நேரப்பயணமும் அந்த இளம் தளிரோடு போனதில் நேரமென்பதே தெரியாமல் போனது... ஒரு வழியாய் கல்லூரியில் வேலைகளை முடித்து திரும்பையில் அதே அயர்ச்சி, பேருந்திற்கான காத்திருப்பும் கூடுதலாய் அயர்ச்சிகொடுக்க, சேர் ஆட்டோவெனும் ஆபத்பாந்தவர்களை!?... நம்பியே ஆரம்பித்தோம் நானும் என் தங்கையும். இருவர் மட்டுமான பயணம் எப்போதும் நிரம்பி வழியும் ஆட்டோவில் நானும் அவளும் மட்டும் என்பதே கூடுதல் கனமாய் தெரிய, ஏதோ சொல்லத்தெரியா பயமொன்று உள் நின்று எக்காளமிட்டது... மனதைச்சுற்றி வட்டமடிக்கும் பல எண்ணங்களில் சுற்றிய எதுவும் லயிக்கவில்லை, ஆனாலும் எதிர் இருக்கை மட்டும் வந்த பயணத்தின் குழந்தையின் முகம் கொடுத்தது இடையிடையே ஆட்டோ ஓட்டு நரின் மொபைல் பேச்சு நிழலை உடைத்து நிஜத்தை காட்டி  கூடுதல் பயம் கொடுக்க, ரேவா நீ என்ன தான் வீராப்பா பேசுனாலும் நீயும் ஒரு பெண்ணுன்னு அம்மா சொல்லும் அந்த வார்த்தை ஏனோ இன்று அதிகம் வலிக்க கொடுத்து காற்றோடு அடி நாசிவரை ஊடுருவி கிளம்ப, இடையிடையே ஓட்டு நரின் பார்வை கண்ணாடி வழியே எங்களை ஊடுருவ, கதை மாந்தர் பலர் கதை சொல்ல ஆரம்பித்தனர் மனதில், திரைகாட்சி மனதில் விரிய, கத்தியில்லாமல் சத்தமில்லாமல் ஒரு சண்டைக்காட்டி மனதோடு மல்லுக்கட்ட, பயணம் ஆரம்பிக்கையில் எடுத்த மூச்சு எங்கோ ஒரு சாலையின் முடிவில் ஒரு மூதாட்டி வந்தமர்கையில் தான் சாவகாசமாய் விட முடிந்தது... அப்பாட்டியும் அவர் பாணியில் எங்களை கடிந்து பேச ஆரம்பித்தார்..

 ஏந்த்தா படிச்ச புள்ளகளா தெரியுறீகளே இப்படியா ஒரு வயசுப்பையன் ஆட்டோல தனியா ஏறுவீக, இப்போ இந்த கிழவிய அவன் தள்ளிட்டு எதாவது பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க காலங்கெடக்கிற கெடயில....ம்ம்ம்ம் நாங்களலாம் அந்த காலத்துலன்னு கூடுதல் பயமேற்றி வெற்றிலை பாக்கை குதப்பலானார்... யாரும் ஆட்டிவிடாமலே ஆடிக்கொண்டிருந்த பயத்தின் ஊசல் பாட்டியின் பேச்சில் கூடுதலாய் ஆடத்தொடங்கியது.. 

       ஒருவழியே நெடுச்சாலைகளை கடந்து மனித நடமாட்டங்கள் ஆரம்பிக்கையில் தான் சாய்ந்து கொள்வதற்கான தைரியம் மனதில் வந்தமர்ந்தது...இறுதியாய் இரண்டு மணி நேரப்பயணம் முடியும் தருவாய் பணம் கொடுத்து திரும்புகையில்  அந்த ஆட்டோ நண்பர் 
தங்கச்சி இன்னைக்கு எம்புள்ளைக்கு பொறந்த நாளுத்தா இந்தா மிட்டாய்ன்னு நீட்டினார்...
மனம் அறுத்துக்கொண்டே பதில் பேசாது வாங்கிவந்தேன் அந்த மிட்டாயை... மனிதர்களை எடைபேடுவதில் நாம் இன்னும் மோசமான மனிதர்களாகவேதான் இருக்கிறோமென்று நினைத்துக்கொண்டேன்...இதோ கணினித்திரைக்கு மிக அருகில் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் மிட்டாய் பேப்பரில் அந்த குழந்தையும் அந்த ஆட்டோக்கார சகோதரனும்....

திங்கள், 1 ஜூலை, 2013

காதலியல்




யாருமற்ற இடம்
ஏதுமற்ற மொழி
எப்போதும் பிடிக்கும் உனக்கு.

உன் மொழி உடைக்க
நீட்டித் தருகின்றேன்
சிறு இடைவெளியை..

கைகோர்த்துக்கொள்கின்ற
இருளுக்குள்
இரவல் வாங்கிக் கொள்கிறாய்
என் கைகளை...

மெளனம் நிறைந்த
பாதையை கடந்து
வெகுதூரம் பயணிக்கிறது
உன் பார்வை

இப்போது மழை வேண்டுமென்று
உன் மொழி உடைய
குடைவேண்டுமென்ற
என் மொழி அடைக்க

காத்திருந்தவனைப் போல்
காற்றாய் தேகம் நுழைந்த
அந்நிமிடம்
விதைகள் விருட்சமாகத்தொடங்கின
ஆழமாய் அதி ஆழமாய்
இம் மழையில்...


••




 நன்றி உயிர்மை, யூத்புல் விகடன்
http://uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6186


http://youthful.vikatan.com/index.php?nid=1344#cmt241

புதன், 5 ஜூன், 2013

நிழல்

 Photo: உன்
குற்றப்பத்திரிக்கையின்
கூர்முனையிலிருந்து
வெளிவரத்துடிக்கிறதொரு
நிழல்

உன் புறக்கணிப்பு
கொஞ்சம் கொஞ்சமாய்
எனதிந்த உடலை
திண்ணத் தொடங்க
கொடூரத்தின் கோரத்திலும்
புன்னகித்தபடியே கடக்கிறது

வன்முறையொன்று
ப்ரியத்தின் பொருட்டு
வழக்கொழிந்து போவதாய்
வழமை போலவே நினைக்கிறது
அது

புலங்கப்படா பாதையில்
படிந்திருக்கும் தூசிதனை
தட்டியெழுப்புவது போல் இருக்கிறது
நினைவின் தடம்

செய்யத்துடிக்கும் அனைத்திலும்
செயலின்மையை
கைக்கு கொடுக்கிறது
கையாளாக அன்பு

இறுகப்பற்றுதலிலோ
நீண்ட முத்தத்திலோ
சில துளி கண்ணீரிலோ
மீட்டெடுக்கலாமென நினைக்கையில்
மீண்டுமெனைப் பற்றிக்கொள்கிறது
அந்நிழல்

அதீதத்தில் என்  கவிதை....
http://www.atheetham.com/?p=4738
உன்
குற்றப்பத்திரிக்கையின்
கூர்முனையிலிருந்து
வெளிவரத்துடிக்கிறதொரு
நிழல்

உன் புறக்கணிப்பு
கொஞ்சம் கொஞ்சமாய்
எனதிந்த உடலை
திண்ணத் தொடங்க
கொடூரத்தின் கோரத்திலும்
புன்னகித்தபடியே கடக்கிறது

வன்முறையொன்று
ப்ரியத்தின் பொருட்டு
வழக்கொழிந்து போவதாய்
வழமை போலவே நினைக்கிறது
அது

புலங்கப்படா பாதையில்
படிந்திருக்கும் தூசிதனை
தட்டியெழுப்புவது போல் இருக்கிறது
நினைவின் தடம்

செய்யத்துடிக்கும் அனைத்திலும்
செயலின்மையை
கைக்கு கொடுக்கிறது
கையாளாக அன்பு

இறுகப்பற்றுதலிலோ
நீண்ட முத்தத்திலோ
சில துளி கண்ணீரிலோ
மீட்டெடுக்கலாமென நினைக்கையில்
மீண்டுமெனைப் பற்றிக்கொள்கிறது
அந்நிழல்




 நன்றி : அதீதம்
http://www.atheetham.com/?p=4738




 

திங்கள், 3 ஜூன், 2013

என் வீட்டு ரோஜா

 



பதியமிட்டு வளர்க்காமல்
பாதுக்காத்து வைக்காமல்
நாளுக்கு இருமுறையென
நிரூற்ற வேண்டாமல்
தெருவோரக்கடையொன்றில்
வாங்கிவந்தேன்
பல வண்ண ரோஜா

தினச்செயலாக
ஒவ்வொரு இடமாய்
இடம் மாறும்

அப்பாவின் பேப்பர் வெயிட்டாக
தம்பியின் வாகனச்சாவி அறையாக
அம்மாவின் பலசரக்கு சீட்டை
தாங்கிய ஒன்றாகவென
பலவாறு உருமாறினாலும்
தனக்கான வேலைகளை முடித்து
அதன் இடம் வருகையில்
மலர்வாசம்
என் வீட்டிலும்.


-ரேவா


 

திங்கள், 27 மே, 2013

முத்தபுராணம்


 
சத்தமில்லாமல்
நம் சரித்திரம் சொல்லட்டும்
இந்த முத்தபுராணம்...

 உயிர் ஒப்பந்தமொன்றை
உதடுகள் எழுதுகிறது
முத்தமெனும்
 மையிட்டு

*
சொர்க்கமென்பதை
இரண்டாய் பிரித்து
உன் இதழாய் படைத்தானோ
இறைவன்...

 *
ஒரு துளியாய் விழுந்து
பிரவாகமாய்
உருவெடுக்கும் வித்தையை
எப்படி கற்றது
உன் முத்தம்...

*
உனக்காக ஒன்று
எனக்காக ஒன்றென
தனைக்காக்க தானாய்
வளருகிறது
இம் முத்தம்...

*
ஊடலை உடைக்க
உடன் எடுத்துவருகிறாய்
உன் முத்தத்தையும்
அதன் மொத்தத்தையும்.
.
*
உனக்கு ஊட்டையில்
மட்டும்
பசியேறி ஏறிகொள்கிறது
இம்முத்ததிற்கு.
.
*
இன்னுமொரு கவிதையென
கன்னம் காட்டுகிறாய்
கட்டுக்கடங்காமல் இதழ்கள்
எழுதித்தீர்க்கிறது
உன்னை.

*
அசலோடு வட்டியை
அடம்பிடித்து வாங்கும்
முத்த வட்டிக்காரனாய்
உன்னை முழுதாய் மாற்றியிருந்தது
இம்முத்தம்...

*
காமத்தின் சாவியிட்டு
காதல் திறக்கும்
ரகசிய வழி
முத்தம்
*
முதல் முத்தத்திற்கு
முகம் மூடுகிறாய்
விரலிடுக்கில் வந்து விழுகிறது
நாணமெனும்
முத்தம்..

*
 உலராமலே கிடக்கிறது
நீ உயிர்த்தொட்டு
எழுதிய கவிதையொன்று
இதழிலில்..

*
இதழ்கோப்பைதனை
மறுமுறையென்
இதழ்மாற்று
போதை தெளியட்டும்
இம்முத்ததிற்கு..
*
உனைக்கண்டதும்
கவியெழுத
காதல் கட்டெடுத்த
வார்த்தை
முத்தம்...

*

சத்தமில்லாமல்
நம் சரித்திரம் சொல்லட்டும்
இந்த முத்தபுராணம்...


ஞாயிறு, 26 மே, 2013

வெற்று மைதானம்




வெற்று மைதானமென
வெறுமை சூழத்தந்தாலும்
ஆடிக்களைத்த நிகழ்வுக்குள்
நிதானமாய் ஓடிவிளையாடுகிற
ஒற்றை பந்து
காதல்...

தோல்விகள் புரிந்தாலும்
தொடர்ச்சியாய் முயற்சிகள்,
அயற்சியை மறைக்க
அவ்வவ்போது
நினைவுகள்..

வலிக்கு வலியென
வழிகொண்டு தொடர
வார்த்தைகொண்டு அடைக்கிறாய்
இப்பெருவெளியை...

உடலுக்கும் உயிருக்குமான
தொடர்பு அறுபடும் நிலையிலான
இறுதி போராட்டத்திலும்
வசதியாய் வந்தமர்கிறாய்
சிறு இடைவெளி கடத்தும்
நிகழ்வுகளில்..

எத்தனை முயன்றும்
கிட்டாத வெற்றியில்
ஒரு பார்வையாளனைப்போல்
காத்திருக்கின்ற காதலுக்கு
சமாதானம்
சொல்லமுடியா வார்த்தைகளை
கைக்கு கொடுக்கின்றேன்

காதலென்பது
எழுதப்படாத தீர்ப்புகளில்
நிறைந்திருப்பதென்று....

-ரேவா

வெள்ளி, 3 மே, 2013

சரிபாதியானவளுக்காய் என் வாழ்த்து




வாழ்க்கை குறித்து பல வினாக்களுக்கு பதில் தெரியாது போனாலும் வாழ்தலுக்கான பிடித்தமென்பது நட்பைத்தொட்டுத்தான் ஆரம்பமாகிறது..சமயங்களில் பதில் இருந்தும் சொல்ல முடியா பல கேள்விகள், சூன்யவெளியொன்றை உருவாக்கி சுயம் தன்னை சுட்டெறிக்கும் நிமிடங்களில் வசந்தங்களை வாசலுக்கு கொண்டு வரும் வித்தையை கற்றுத்தான் வைத்திருக்கிறது நட்பு..அதனால் தான் என்னவோ நட்பு  அதன் கோட்டையை இன்னும் இன்னுமென  நீட்டித்து தேசமெங்கும் தன்னை வியாபித்திருக்கிறது...

எதையோ தேடச்சொல்லி கட்டளையிட்ட இருள் தேடியெடுக்கையில் நட்பெனும் வெளிச்சத்தை கையில் கொடுத்துப் பயணிக்கச்சொன்ன நாள் இன்னுமென் மனக்கண்ணில் விரிய, பெண்ணாய் பிறந்ததாலே தவறவிட்டவை பல இருக்கையில், உன் அருகாமை தானே எனக்கு அத்தனையும் கொடுத்தது... கூடிக்களித்த பொழுதுகள் ஒன்றா இரண்டாவென கூட்டிக்கழிக்க நினைத்தால் கூடிடும் நரையென்பது சுற்றிய சுற்றம் அத்தனையும் அறியும்,,,
பெண்களுக்கு வீட்டின் கட்டுப்பாடுகள் கால் சிலம்புகளனென   நாம் அறிந்தே இருந்தாலும், முகவரி தொலைத்த கடிதமொன்றின் உள்ளிருக்கும் செய்தியென அது நம்மை அலைக்கழித்துக்கொண்டே இருக்க, இருவருக்குமான அலைவரிசை ஒத்தேயிருத்தா ஒத்துழைத்ததால் கிடைத்ததா இந்த உறவென்று இதுவரை  தெரியவில்லை..ஆனாலும் இவ்வலைவரிசையை தெரிந்தே வைத்திருக்கிறது உன் பண்பலை..அதனால்தானென்வோ ஆட்டோகிராப் நோட்டைத்தாண்டி ஓட்டமெடுத்திருக்கிறது நம் நட்பு...

 நொடிக்கொரு முறை தொலைபேசவோ, அன்பை குறிப்பிட்ட பரிசாக்கவோ தெரியாத வக்கற்றவளின் வரிகளிது வாஞ்சையாய் உனைத்தேடிவருகிறது.. உன் அணைப்பின் சூட்டையும், அருகாமையின் தவிப்பையும் இழந்த இவ்வரிகளுக்குள் நீயிருக்கிறாய் என்பதாலே என்னை மறந்து உன்னை எழுதிக்கொண்டிருக்கிறேன்..இப்போதும் கூட உன் நேசத்திற்குரியவரோடு காதல் பாடியபடி நீயிருக்கலாம்..வாழ்த்த வார்த்தைகளை தேடி நட்பின் வெளிகளில் ஒரு பட்டாம்பூச்சியென பறந்து திரிகிறேன்  நான்...உன் நேச சிறகெடுத்து சுற்றி வருகிறேன்..பல வண்ணம் கொடுத்து என்னை  பயணப்பட வைத்த பல நட்பு அவரவர் திருமணத்திற்கு பின் இல்லாமல் போனதன் வலியொன்று போன வருடத்தின் இதே நாளிலும் கிடைக்கப்பெற்றேன்.. நேசத்தை எத்தனை முறை வலிக்க அடித்தாலும்  அதன் நிழலென்பதே நேசிப்பது தானே.. ஆனாலும் உன் விசயத்தில் மட்டும் வரம் வாய்த்தவள் நான்... வாய்ப்பு கொடுத்தவர் உன் நேசத்திற்குரியவர்...

 நாளை உன் முதலாம் ஆண்டு திருமண நாள். வாழ்த்துவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது... உனக்கான இந்த நாள் மட்டும் என்னோடு இருக்கிறது..முதல் வாழ்த்தாய் என் வார்த்தைகளிருக்கட்டுமென பிழையோடே பிழைசெய்கிறேன்... அடுத்துச்சந்திப்பில் பேசிச்சிரிக்க இவ்வரிகள் இருக்குமென உதட்டோர சிரிப்பில் உறுதிசெய்துகொள்கிறேன் என் நட்பின் சரிபாதிக்கு மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்... நல்லவைகள் உங்களை வந்து சேரவே நான் பெற்ற இம் முகநூல் உறவுகளோடு வாழ்ந்துகிறேன் உங்களை...வளங்கள் வரட்டும்... வாழ்த்துகள் கல்பனா, வாழ்த்துகள் .முரளி...








செவ்வாய், 23 ஏப்ரல், 2013

உற்சாக துள்ளல் உங்களாலே





வணக்கம் என் வலையுலக உறவுகளே.. அனைவரும் நலமா? வலைப்பக்கம் விட்டு வெகுவாய் ஒதுங்கி இருந்த இவ்வேளையில்,மெயிலிலும், முக நூலின் வாயிலாகவும் என்னை எழுதத்தூண்டி, மீண்டும் புதிதாய் என்னை பயணப்படுவதற்கான உத்வேகத்தை கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... என்ன ரேவா திடீர்ன்னு கவிதையில்லாம வலைப்பக்கம் வந்திருக்காளேன்னு தானே யோசிக்கிறேங்கிற ஆமாம் இந்த பதிவு முழுக்க முழுக்க நன்றிக்கான பதிவு... விளையாட்டுத்தனமாகவும், அதே நேரத்தில் என் மன அழுத்தங்களிலிருந்து என்னை விடுவித்துக்கொள்வதின் நிமித்தமாயும் இவ்வலைப்பக்கம் வந்தேன்.. எண்ணிச்சரியாய் மூன்றாடுகளை தொடவிருக்கும் இந் நேரத்தில் இதுவரை என்பக்கம் வந்து சென்ற பார்வையாளர்கள் இரண்டு லட்சத்தி சொஞ்சம் பேருக்கு நன்றி சொல்ல கடமை பட்டு இப்பதிவை எழுதுகின்றேன்... இனி எழுத்தை சரியாய் செய்வேனென்கிற உறுதியோடு பயணப்படுகின்றேன்...

2010ல் பதிவுலகம் ஒன்றை அறியாத காலம், எங்கோ ஒரு தேடலில் நிமித்தம் நண்பன் ப்ரியமுடன் வசந்தின் தங்கைக்கான கடிதத்தை வலைப்பதிவில் படித்ததும், தூசி தட்டு எடுக்கப்பட்ட கவிதைகளைத்தான் ஆரம்பங்களில் பகிர்ந்தது. அதற்கு முன்பே ஒரு வலைப்பதிவை தொடங்கி வேலையின் பொருட்டு அதில் பதிவுகளை தொடராதது ஒருபுறமிருக்க, அந்த கடிதத்தின் ஆவலில் துளிர்த்தது தான் என் எழுத்து..2011ல் பிற்பகுதியில் தான் வலையுலகத்தின் பின்னனிகள் சரியாய் புலப்பட்ட காலம்.. நம் எழுத்து தனக்கேற்ற வாசகரை தானே தேடிக்கொள்ளுமென்பதும், நம் எழுத்து தனக்கேற்றபடி நம் எழுத்தை மாற்றிக்கொள்ளுமென்பதையும் சரியாய் உணர்ந்த காலங்கள் தான் இன்றைய காலங்கள்.. இன்னும் எழுத்தை சரியாய் எசெய்யவில்லை என்பது எனக்கு நன்றாய் தெரிந்தாலும், ஆரம்ப காலங்களிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறேன்,அது உங்களால் தான் சாத்தியம் என்பதை சொல்வதில் பெருமையே எனக்கு.. இந்த வெற்றி இங்கிருந்து தான் சாத்தியமெனக்கு..படிப்பேதுமில்லா, இன்னும் சரியாய்ச்சொல்வதானால் என் கவிதைகளை சரிவர புரிந்துகொள்ள இயலா பின்னனி என்னுடையதென்றாலும், உங்களின் பாராட்டுகளும், பாசமும் தான் என்னை இத்தனை தூரம் உந்தித்தள்ளியது..

இதுவரை என் பதிவுகளுக்கு திரட்டிகளின் வாயிலாயும், என் பதிவுகளின் வாயிலாகவும் வாக்கிட்டு, மறுமொழியிட்டு சென்ற அத்தனை உறவுகளுக்கும் நன்றி சொல்லி அன்னியப்படுத்த விரும்பாத போதிலும், என் ஆணிவேருக்கு பலம் கொடுத்த உங்களுக்கு என்னிடம் கொடுக்க நன்றியைத்தவிர வேறில்லை

இதுவரை பதிந்த கவிதைகள் 253
பெற்ற மறுமொழிகள் 4150
மொத்த பார்வையாளர்கள் 2002150

இக்குழந்தையின் கிறுக்கலையும் ரசித்து, எனக்கும் எழுத்தில் பொறுப்புணர்ச்சியை எடுத்துக்கொடுத்த என் வலையுலகில் நான் விரும்பி ரசித்த, ரசிக்கின்ற என் அத்தனை நட்புறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி..
குறிப்பாய் இங்கு சில நட்புறவுகளுக்கு மனமார நன்றி சொல்ல கடமை பட்டிருக்கின்றேன்
நண்பன் வசந்த், மழைக்காதலன், ரசிகன்,ஜோ, இந்திரா கிறுக்கல்கள், நித்தி மேகா
சகோதரன் கவிதைக்காரன் டைரி
தம்பி ரமேஷ் ராக்‌ஷன்,பிரபா, முக நூலில் என் பதிவுதனை பகிர்ந்து இன்னும் இன்னுமென எழுதுவதற்கான உற்சாகமேற்படுத்தும் ரிலாக்ஸ் ப்ளீஸ் சகோதரன் மெல்வின், இன்னும் என் பின்புலத்தில் என்னை உந்தித்தள்ளும் என் ஆகச்சிறந்த நட்பானவளுக்கும்,  என் மனமார்ந்த நன்றிகள்...


என் ஆக்க சக்தியாய் இருக்கும் என் தோல்விகளே என்னை இங்கு எடுத்துவந்ததென்பதையும் எழுத்தில் வைக்க தயக்கமில்லையெனக்கு,,,

இதுவரை எழுதியவை 
கூட்டிச்சென்ற தூரமிது புரிந்தாலும்
போகவேண்டிய தூரமின்னும்
வெகுதொலையிலிருப்பது புலப்பட


இணைந்தே இருங்கள் இச்சிறுபிள்ளை கிறுக்கலோடு... குறைகளையும் என் நிறைகளுக்கு காரணமாய் சுட்டிக்காட்டிய என் அன்பு நட்புக்களுக்கு நன்றி...
இனியும் என் ஆக்கசக்தியாய் இருக்கப்போகின்ற இவ்வலையுலக உறவுகளின் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி நன்றி நன்றி.....

திங்கள், 22 ஏப்ரல், 2013

அவ்வளவே



ஒன்று
இரண்டாக
இரண்டு
நூறாக
கூடிக்கொண்டே போகிறது
உன்னைக் குறித்த
என் கேள்விகள்,
எல்லாக் கேள்விக்கும்
ஒற்றைப் புன்னகையை
பதிலெனக் கொடுத்தாலும்
போதுமானதாய் இல்லை
கேள்வியின் கோரப்பசிக்கு.
கொஞ்சமாய் அதை -நீ
மென்று விழுங்க
பதில்
தொண்டை நெறிக்கும் முன்
துடித்து விழிக்குதுன்
சுயமுகம்
இதுவரை காட்டியவை
கூட்டிச்சென்ற தூரத்திலிருந்து
திரும்புதல் முடியாதென்பதை
தொடர் மெளனமும்
சில கண்ணீர் துளிகளும்
சிறு தடுமாற்றமும்
எடுத்துரைக்க
மிச்சமிருக்கும் ப்ரியங்களை
எச்சமென
நீ புசிக்கையில்
இரவை புணர்ந்து
முடிக்கிறது
இன்னுமொரு பகல்..
இலக்கணங்கள் புரிந்தாலும்
நீ இன்னுமொரு
ஆண்
அவ்வளவே...




செவ்வாய், 16 ஏப்ரல், 2013

தேடல்




பெரும் காத்திருப்பில்
சேர்ந்துவைத்திருக்கிறேன்
வாழ்வின் மீதத்திற்கான ப்ரியங்களையும்
இதுவரை பிடிக்காத சண்டைகளுக்கான
காரணங்களையும்..

பதற்றமிக்க
இத்தனிமைபிரதேசத்தில்
மெளனத் தீ கொழுந்துவிட்டெறிய
கனவுச் சிறகசைத்து
உனை அடைந்திடுவேன்
தணிக்கைகளற்று...

இல்லா உருவமொன்றை
அருவமாய் ஏற்றாகிவிட்டது
இல்லாமைக்குள் இருப்புகொண்டு
தவிக்கின்ற இளமைக்குள்
விலை வைக்கா
கூட்டம் தேடி அலைகிறது
இந்நாட்கள்

வேகத்தடைகளென
முளைக்கின்ற உறவுதனையும்
சமவெளி நோக்கி
இழுத்துச்செல்ல முயலுகையில்
முந்திக்கொண்டு நிற்கிறதாங்கோர்
தனிமை

நிலம் உறிஞ்சிய மிச்சம் போக
வேர்கால்களில் சேமிக்ககிடைக்கின்ற
சிறுதுளியில்
சில்லிட்டு துளிர்விட
எப்படியும் உனைத்தேடி அடைதலில்
வேர்விடுவேன்
இம்முறை...

திங்கள், 8 ஏப்ரல், 2013

ஒரு சொல்...





யாருக்கும் கேட்காதபடி
தனக்கானதொரு மொழியெடுத்து
விழியறுக்கிறது
உனதிந்த மெளனம்

பிடித்த அத்தனையிலும்
பிடித்தமற்று
நீள்கிறது
எனதிந்த நாட்கள்

ஒரே நேரத்தில் சொல்லத்துணிந்த
சொற்களின் நகர்வுக்கான
இக்காத்திருப்பென்பது
காட்சிபடுத்தமுடியா
ஏதோ ஒரு அழிவை கண்முன்னே
நிறுத்துகிறது

பார்வைகளில்
கடந்து போவது மட்டுமே
இனி
சாத்தியமென்றான பின்
நீ உடைத்தெரிந்த சொல்லில்
இங்குமங்குமாய் சிதறிக்கிடக்கும்
ஞாபகவேர்கள்
ஒவ்வொன்றாய் துளிர்த்து
சுவாசம் நெறிக்க

கணத்ததொரு நிராகரிப்பை
சலனமே இல்லாமல்
ஏற்றிவருகிறது
நீ உடைத்த ஒரு சொல்...

- ரேவா



திங்கள், 1 ஏப்ரல், 2013

ஒரு துளி





இருப்பின் வாயிலை
உடைத்து வெளியேறுகிறது
நம்பிக்கையின் விருட்சம்
இன்னதென்று சொல்லத்தெரிய
ஓப்பீடுகளால்
உடைந்த மெளனத்தின் கணத்தை
உதடுகளால் கடந்து செல்வது
அவ்வளவு சுலபமில்லாது போயினும்
வெறித்து தொடரும்
எல்லோரின் பார்வைக்கு பின்னும்
இன்னும் பருகப்படாமலே இருக்கிறது
நீங்களறியா
உண்மையின்
ஒரு துளி
விஷம்....

-ரேவா




வெள்ளி, 8 மார்ச், 2013

இதுவோ(வே) யாம்



ஆளுக்கொரு பிரியம்
அடுக்க அடுக்கத் தொடரும்
அடுக்களை மட்டுமே
உலகமென விரியும்

பாரதியும், ஷெல்லியும்
கல்கியும் சாண்டில்யனும்
கூட்டு பொரியலுக்கு
இடையே
கூடவே இருக்கும்..

பெண்ணிய சிந்தனைகள்
பெண் விடுதலை 

பேசிய கவிகளென
ஓரு மூலைக்குள் இருக்க
மூளையற்ற இவரன்பில்
அத்தனையும்
மூச்சிரையாகிக் கிடக்கும்

தொடர்பற்ற எந்தன் எல்லைக்குள்
எல்லைத்தாண்டா பயங்கரவாதம்
தாலியின் வேலியால் கிடைக்கும்

அடையாளமற்று திரியும்
எந்தன் உணர்வுக்கும்
அன்னையர் தினமென்றும்
மகளிர் தினமென்றும்
ஒரு நாள்வந்து தொலைக்கும்

அன்றைக்கும்
ஆளுக்கொரு பிரியம்
அடுக்க அடுக்கத்தொடரும்
அடுக்களை மட்டுமே
உலகமென விரியும்.



-ரேவா


 

வெள்ளி, 25 ஜனவரி, 2013

புரியாக்காலமது



இன்றோடு வருடம் ஆறாக, என் நினைவுதனில் வற்றாது ஓடும் ஒரு பிரவாகமாய்  நீ உருவெடுத்திருக்கிறாய், இன்னும் இன்னும் ஆழமாய்.
ஒரே பார்வையில் பருகிவிட முடியா ஆழத்தில்  நீ இருக்கிறாய் என்பது மட்டும் திண்ணம்..எப்படி ஆரம்பம் என்ற புள்ளியில் தெளிவில்லையென்றாலும் அமர்களமாய் நீ மனதமர்ந்த காலம் என்றும் எனக்கு விழாக்காலம் தான்..

 மழைக்கு ஒளிந்து கொள்வதின் பொருட்டு, என் துப்பட்டா தூரலில் பதியமிட்ட அந்த பார்வைக்குப்பின் பல மழையை சந்தித்தாகிவிட்டது, ஒன்றிலும் உன்னை சந்தித்த உற்சாகமில்லை என்பதே உண்மை..பிரிதொரு நாள் என் இருக்கை அருகில் வந்தமர்ந்த தினம் யுத்தம் செய்யும் எந்தன் உள்ளத்தின் ஓசை நீ அறிந்திருப்பாயா என்று நான் அறியேன்.. 
ஆர்பாட்டமில்லா உன் புன்னகை, கர்வத்தை மறைக்கும்  உன் குறும்பு மீசை, திருத்தம் செய்த உன் புருவம், பாங்காய் எடுத்த வகிடு, கையோடு இட்டிருந்த அந்த மஞ்சள் கயிறு, நெற்றி நடுவில் சின்னதாய்  குங்குமம் இவையெல்லாம் உனக்கு கூடுதல் அழகை கொடுக்கத்தான் செய்தது..

ஹாய் மேம், இப்படித்தான் ஆரம்பித்தாய்..

உங்கள எங்கையோ பார்த்திருக்கேனே என்பதைப்போல் நான் ஆரம்பமானேன்..

கிட்டதட்ட குட்டி மழையொன்று சில்லென்று என் நெஞ்சம் நனைக்க, மழைவிட்டதும் வெரித்திருக்கும் வானத்தை போல் அழகு நிறைந்ததாய் இருந்தது அன்றைய தினம்..பரஸ்பரம் அறிமுகம் முடிந்தாகிற்று, தொலைபேசி எண்ணுக்குள் நுழைந்து கொண்டு குறும்பு செய்தது என் நெஞ்சம்..அதை உணர்ந்தவனாய் உடன் கொடுத்தாய் உன் எண்ணை..
வீடு வந்தாகிற்று விற்றுத்தீர்த்த பலாப்பழத்தின் வாசம் போல விடாது துரத்தியது உன் வாசம்.. ஏதே ஏதோ குழப்பம் கொண்டு அனுப்ப நினைத்து அழித்த குறும்செய்திகள் எண்ணிக்கையில் 100த்தொட, என்னை நான் திட்டிக்கொண்டே தூக்கிப்போனேன்...

காலை 6 மணி இப்போதெல்லாம் என் மூன்றாம் கைகளாய் மாறிப்போன கைப்பேசியை எடுத்து பார்த்துத்தான் ஆரம்பமாகும் என் அத்தனை நாளும், இன்று மட்டும் ஒரு ஆனந்தவிருட்சத்தை விழிக்கு தந்தது, குட் நைட் என்னும் குறும் செய்தியில் தொடங்கி அன்பு தாங்கி அனுப்பட்ட அத்தனை குறும்செய்திகளாலும் நிறைந்து வழிந்தது என் கைப்பேசி..என்ன நினைப்பான் என்னை என்ற எண்ணம் மேலிட, சின்னதாய் மன்னிப்பில் தொடங்கி வைத்தேன் அன்றைய நாளை..அதன் பின் பதிலேதுமில்லாது போனது, அதைப்பற்றி நினைப்பேதுமில்லாமல் மூழ்கிப்போனேன் எந்தன் வேலையில்..

ஏதோ புரியாத உணர்வு தொண்டை நெருக்கி, புலப்படா வலிவந்து கண்ணீரில் முடிக்க, விதி அமைத்துகொடுத்த பயனாய் வந்து நிறைத்தது அவன் அழைப்பு
பரஸ்பர பேச்சிலும் பிடிபடா ஏதோ ஒரு உணர்வை அவனோடு பேசையில் உணர்ந்தேன்... பின்னும் இரவும் பகலுமென எங்கள் நேரத்தை தின்று தீர்த்தது எங்கள் இரவுக்குமான பிடிபடா ஏதோ உணர்வு...

உடைத்து பேசிவிடவேண்டுமென்ற எண்ணத்தில் துளிர்த்துக்கொண்டிருந்த மனஒத்திகைகளை இனம் கண்டவனைப்போல் என் அருகில் வந்தான்

இன்னைக்கு ஈவினிங் நம்ம ஆபிஸ் பக்கத்தில இருக்கிற காபிடேக்கு போவோம் வர்ஸிதா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..

ம்ம்ம்ம் ஒகே பார்க்கலாம் ப்ரியன்...

உள்ளுக்குள் உற்சாகக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டாலும் வெளியே எதுவும் நடக்காதைப்போல் காட்டிக்கொள்வது எத்தனை பெரிய சங்கடமென்பதை அன்றே உணர்ந்தறிந்தேன்... 6 மணிக்கு இதோடு 6000 முறை கடிகாரம் பார்த்தாகிவிட்டது, நகராத கடிகாரம் உலக அழிவை கண்முன்னே நிறுத்துவதைப்போலொரு மாயையைக்கொடுக்க, நிறுத்திக்கொள் உன் கற்பனையை என்பது போல் 6 மணியை நெருங்கியது...

இதோ கண்முன் திரையிட்டு நாடகம் நடத்தும் எங்கள் உணர்வுகளுக்கு காதலெனும் பெயர் சூட்டுவிழா நடந்தேறிக்கொண்டிருக்கிறது...

இருவருக்குள்ளும் ஒளிந்து விளையாடிய காதல் பிள்ளையை கண்டெடுத்து இதோ வருடம்  6 ஆக, காதலியலை முழுதாய் படிக்கும் முயற்சியில் ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது....
நினைவுகளில் எப்போதும் சூல் கொண்டு எங்களை சுமங்கும் அஸ்திவார நியாபங்களே எங்களின் அந்த புரியாக காலங்கள் தான்.....

ஒவ்வொரு சமாதானங்களுக்கு 
பின்னும் 
முளைத்து வரும்
அத்தனை விருட்சமும் 
காதலே.....

  - ரே

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஒளித்துக்கொள்கிறேன்



இது
இப்படித்தான்..

ப்ரியத்தின் பொருட்டு
தள்ளிவைத்து பார்க்கப்படுகின்ற
இந்நிமிடங்கள்
சொல்லமுடியா மலட்டு தாயின்
பாசம் போன்றது...

பகிர்தலில் பழக்கப்பட்ட
என் பாஷைகள்
மொழியறியாது
ஸ்வரம்புரியாது
இசைத்துக்கொண்டே கிடக்கிறது
ஈனஸ்வரத்தில்

இந்த மெளனத்திற்கு
எத்தனையோ காரணமிருக்கலாம்
எடுத்துவைக்கும் காரணம் புரியாதுமிருக்கலாம்..

சின்னசின்ன செய்திகளில்
கொட்டிக்கிடக்கும் வார்த்தைகளில்
ஆசுவாசப்படுத்தும் பகிர்தல்களில்
கோர்த்துப்பார்க்கும் பிரியங்களில்
நிரப்ப முடியா
வெறுமை பெற்று அழைகிறது
உன்னிடம் பகிரா செய்திகள்...

காதுக்குள் எப்போதும் வந்துமிழும்
வீரிய வார்த்தைகள்
நமை விழுங்காதிருக்க
எனக்குளே ஒளித்துகொள்கிறேன்
உன் நட்பை
உனதிந்த வருத்தங்களோடு

வியாழன், 3 ஜனவரி, 2013

தனித்திருத்தலென்பது



மதிப்பீடற்ற விசயங்களைக் கடந்து
விஷமங்கள் அரங்கேறும்
இத்தருணத்தில்
விஷமேறிய பற்களோடு
காத்திருக்கிற கடுச்சொல்லிருந்து...

துரத்திவிடுதலை
துணைக்கழைத்து
தன்னை விடுவித்துகொள்கிற
கணத்தில்
உயிர் உணர்கிற தவிப்புகளிலிருந்து

எப்படியோ மென்மரணமொன்று
இனி மெல்ல மெல்ல நடக்குமென்பதை
உணர்ந்தும்
அந்திசாமத்து பிடிகளிலிருந்து
விடுபடுதலைவிட
கொடுரமானது

தனித்திருத்தலென்பது....


செவ்வாய், 1 ஜனவரி, 2013

யாருக்கும் தெரியாமல்




சட்டென்று நீயெனை கடந்திருக்கலாம்
ஆனால்
கூடவே வந்த்தில்
கூடுதல் மகிழ்ச்சிதான்
எனக்கு

ஏதேதோ பேசுகிறாய்
எல்லா பேச்சுலும்
உணர்கிறேன்
உன் நேசத்தை

கைகளை நீட்டுகிறாய்
நட்பென்று சொல்லி
பற்றுதல் சுகமெனினும்
ஏதோ ஒன்று தடுக்கிறது

விடியல் மறந்த பேச்சுகளில்
விட்டுக்கொடுத்த சுபாவங்களில்
தட்டிக்கேட்கும் ஆளுமையில்
உன் வேரை உணர்கிறேன்

படர்தல் முடியாதெனினும்
உயிரோடு இருத்தலில்
உருக்கொள்ளட்டும்
என் அன்பு
உன் மீதான நட்பில்

பின்னாதாய்
எல்லோரைப்பற்றிய கவிதையொன்றில்
உன்னையும் சேர்த்திட துடிக்கிறாய்
பெயரற்ற இந்த கவிதைக்குள்
நீ இடம் பெற்றிருக்கிறாய்
என்பதை அறியாமல்