உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

தேவைப்படுவதெல்லாம் காரணங்களே...


 
உன் முகம் தேவையில்லையெனக்கு
அப்படியே என்னுடையதும்
பெயர்
மொழி
தொலைபேசி எண் என
எல்லாமே தேவையற்றது தான்
நீ போலியென சந்தேகித்தாலும் கூட
நிமிர்ந்து கிடக்குமிடத்தில் குனிதல்
உன் குணமென சொல்லி
வேஷம் போடுவதை தவிர்
சாயம் வெளுத்த கூட்டங்கள்
நானறிவேன்..
உனக்குள்ளிருக்கும் எதிர்பார்ப்பை
சூன்யப் பெருவெளியில்
சுட்டெறி
குளிர்காய காரணங்களாவது கிடைக்கும்
பொய்களை இன்னொரு நாக்காய்
எடுத்தாள்வதை நிறுத்து
எதையும் நம்புவதாய் இல்லை
நான்
வேறென்ன
பெரிதாய் ஒன்றுமில்லை
முடிந்தால் இவ்வரிகளை
படித்துவிட்டுச் செல்
நான் அப்படியில்லையென்ற பொய்களோடு.. :)


-ரேவா





செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

என்ன செய்ய




பேசுவதற்காகத்தான்
உனை வரச்சொன்னேன்
வரும்வழியெல்லாம் மனம்
பேசியச்சொற்களின் அயற்சி
உனைபார்த்ததும் ஓய்வெடுத்துகொள்ளுமென
சத்தியமாய் நினைக்கவேயில்லை
மெளனமாய் இந்த நிமிடம்
துளி புன்னகையில்லை
சினேக விசாரிப்புகள் இல்லை
நம்மிடையே சூழ்ந்திருந்த
அந்த உன்னத உணர்வும்
இந்நிமிடம் கிடைக்கவில்லை
உன் பார்வையின் வழியே நினைவோட்டம்
கொஞ்சம் நிதானித்து இருக்கலாம் தான்
என்ன செய்ய
பேசமாலே கிடக்கும்
என் சொற்களை



வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

நண்பனாகவே இருந்திருக்கலாம்




காதலெனும் சிறகெடுத்து
நானுனக்கு மாட்டிவிட்டபின்
இலக்கின்றி பறந்தலைந்த பொழுதொன்றில் தான்
எங்கோ தொலைத்திருந்தேன்
என் ஒற்றைச்சிறகை
சில்லு சில்லாய் சிதறிக்கிடக்கும்
பிரியங்களின் வார்த்தைகளிலெல்லாம்
நிறைந்து கிடக்கின்ற முகம்
இறைத்து போட்டபடியிருக்கிறது சபையேறா பேச்சுகளை
கதைசொல்லி களைத்து போகின்ற இடம்
காரணமின்று சிரித்துப்பார்த்த தடம்
எது என்னை உன்னை நோக்கியிழுத்ததென்று
நினைப்பை கொடுத்த களம்
அத்தனையும் தாண்டி
கடல் மணலின் பாதங்கள் பரப்பி விளையாடும்
பிள்ளைமனதாகிப்போகின்ற
ப்ரியத்தின் முன்
வெட்கங்களை உண்டு
வேட்கைகளை நிறைவேற்றும் உன் தளமெனக்கு
அன்னியமாய்பட்ட போதும்
அடுத்தடுத்த எடையிழப்புகளால்
நிலைகுலைந்து போன சுயம்
உன் முகமெடுத்து கொண்ட போதும்
உனது விருப்பங்களுக்கு முன்
பலியிடப்படும் எனது கனவுகளைபற்றியோ
காணாமல் போகும் வார்த்தைகளைபற்றியோ
பற்றற்றுபோன
பற்றுதலை பற்றி
யாதொரு கவலையுமுனக்கு இல்லையென்ற போதும்

தொலைத்திருப்பேனென்று
தெரிந்திருந்தால்
நண்பனாகவே இருந்திருக்கலாம்
நீ

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

மெளனப்பாடல்




 Photo: மெளனம் ஒரு பாடலாகவே 
இருந்தது நமக்கு..
இசைக்குறிப்புகள் பற்றிய கவலையின்றி
தாளம் பற்றிய தயங்கங்களின்றி
சுதி சுத்தமாய் பாடப்படுமோவென்ற பயங்களின்றி
ப்ரியத்தின் வரிகள் சரியாய் 
படிக்கப்பட்டதன் பொருட்டு
இந்த மெளனம் ஒரு பாடலாகவே 
இருந்தது 
ந
ம
க்
கு.....

-ரேவா

மெளனம் ஒரு பாடலாகவே
இருந்தது நமக்கு..
இசைக்குறிப்புகள் பற்றிய கவலையின்றி
தாளம் பற்றிய தயங்கங்களின்றி
சுதி சுத்தமாய் பாடப்படுமோவென்ற பயங்களின்றி
ப்ரியத்தின் வரிகள் சரியாய்
படிக்கப்பட்டதன் பொருட்டு
இந்த மெளனம் ஒரு பாடலாகவே
இருந்தது


க்
கு.....

-ரேவா