உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 31 மே, 2011

உனக்கான காத்திருப்புகள்....

 வருடங்கள் பல கடந்தாலும் உனக்கான என் காத்திருப்புகள் மட்டும், கருவறைக் குழந்தையைக் காணும் சுகம் தான்...
ஆசையாளனே, .என் நெஞ்சத்து ஆசைகளையெல்லாம்  , சேர்ந்து அசை போட, என் சின்ன சின்ன குறும்புகளை உன்னிடம் செய்து அடம்பிடிக்க, தோழனாய் நீ என் கைப்பற்றும் நாளை எண்ணித்தான், உனக்கான என் காத்திருப்புகள் நீளுக்கின்றன.... 

உனக்கான காத்திருப்பில்
கவிதைப் பூக்கள்
தொடுக்கிறேன் நான்...
நீயோ,
புன்னைகயைக்கொண்டு
காதல் போர்த்தொடுக்கிறாய்...

அதிகாலை வாசலில் கோலமிட சென்றால், எனக்கு முன்னே எழுந்து என் கோலத்திற்கும் நீ காவல் காக்கும் திருநாளுக்காய் என் வாயில் படிகள் காத்துக் கிடக்கின்றன....அலுவலகம் செல்வதாய் தாயிடம் சொல்லிவிட்டு, செல்லமாய் உன் விழிகள் என்னை தேடும் நாளுக்காய் என் விழிகள் காத்திருக்கின்றன...

தொடரும் நிழலாய் நீ எனைத்தொடர, பேசாத கதை எல்லாம் பேசிமுடிக்க தோழனாய் நீ வரும் நாளுக்காய், காத்துக்கிடக்கின்றன என் நாட்கள்...அணு அணுவாய் நான் ரசித்து வரைந்த படங்களையும், உன் நினைவாய் நான் வடித்த கவிதைகளையும்,  உன்னிடம் காட்டி, உன் அன்பு முகம் சிந்தும் சிரிப்பை, மழைச் சாரலாய் உள் வாங்கி, பரவசப் படும் நாளுக்காய், காத்துக்கிடக்கின்றன என் மனது...

நீயோ சிரித்து விட்டு
செல்கிறாய்....
நானோ?.....
சிக்கிக் கொள்கிறேன்
உன் சிரிப்பில்....


மாலையில் நம் சந்திப்பில், மடி சாய்ந்து கதை பேச, காத்துக் கிடக்கின்றன, என் வார்த்தைகள்....தாமதாமாய் வருவதாய் சொல்லிவிட்டு, தாறுமாறாய் நீ அனுப்பும் குறும்செய்திக்காய், அதன் பின் உன் சமாதானம் என்னும் அன்பு வார்த்தைக்காய், ஆவலோடு காத்திருக்கிறது என் கைபேசி...

பல யுகங்கள் 
காத்திருக்கலாம்,
சுகமாய் இருக்கிறது,
உனக்கான 
இந்த காத்திருப்பு...
 

செல்லக் கோவம் நான் கொள்ள, குழந்தாய் நீ செய்யும் குறும்புக்காய், கொட்டிக் கிடக்கின்றன எந்தன் நேசங்கள், தவறு செய்யும் நேரத்தில்,முத்த மழை பொலிந்தே, திக்குமுக்காட வைக்கும், உன் காதலுக்காய், காத்து இருந்க்கின்றன என நாட்கள்... 

திமிராய் நீ பேசும் வார்த்தைகளை எல்லாம், பதிவு செய்து சமாதான காலங்களில் உன்னிடம் போட்டு காட்டி, நீ சிந்தும் வெக்க புன்னகையில், சிலிர்த்து விட , காத்துக் கிடக்கின்றன என் அசைகள்.....இப்படி எத்தனை எத்தனையோ ஆசைகளுக்காய் விழித்துக் கொண்டு இருக்கின்றன, உனக்கான என் காதல்....
கள்வா !!!!
  நீ
காணாமல் காதல்
தருகிறாய்,
கண்டுவிட்டால்,
வெட்கப் புன்னகை
தருகிறாய்...


 காலங்கள் பல கடந்தாலும், கனவுகள் பல தொலைந்தாலும், என் காதல்  இன்னும், இன்னும் அழகாய், ஆழமாய், அர்த்தமுள்ளதாய்  நீள்கின்றன.... உன் கைப்பற்றும் திருநாளுக்காய்...
என்னை நான் அறிய,
யாரும் பருகா,
அன்பை நீ பருக,
காதல் கொண்டு 
காத்திருக்கிறேன்...
விரைவில் வருவாயா?....
உந்தன் கரம் கொண்டு
எந்தன் துயர் துடைப்பாயா
எந்தன் பிரியமனவே.....
அன்புடன் 
ரேவா

புதன், 25 மே, 2011

உன்னை பார்த்த நொடி....



காதல், காதல், என்று சதா அலையும் பலரை பார்க்கும் போதெல்லாம் வியப்பாக இருக்கும் எனக்கு, எந்த ஒரு சக்தி இவர்களை உந்தச் செய்கிறது என்று....ஆனால் முதல் முதலாய் உணர்ந்தேன், உன்னை பார்த்த நிமிடம், என்னையறியாமல், நீ என்னுள் நுழைந்து, என் இமைகள் படபடக்கச் செய்தாய், சிரித்து சிரித்தே என் கவனம் ஈர்த்தாய்...பார்வையால் புன்னகைத்து, என் மனதில் காதல் பூப்பூக்கச்செய்தாய்...

நீ பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்ள, ஒய்யார நடமாடுகிறது என் நெஞ்சம் உன் பெயரைச் சொல்லி,சொல்லி....என்னைப் போல நீயும் உணர்கிறாயா? என்று உன்பார்வையில் நான் என் காதலைத்தேட, தூண்டிலில் சிக்கிய மீனாய், நீயும் சிக்கிகொண்டதை உணர்ந்தேன்....

அழகாய் பலர் என்னைக் கடந்து செல்ல, நீ மட்டும் அனைத்துமாய் தெரிய காரணம் என்ன?....ஓஹ இது தான் காதல் அஹ?.....உன் விழி மொழியை வாங்கியே, உன் அருகில் வந்து பேச நினைக்கையிலே, ஆடையாய் நீ சூடிக்கொள்ளும் வெட்க்க மருதாணியில், நானும்  கொஞ்சம் சிவந்து போகிறேன்...இத்தனை காலம் எங்கிருந்தாய், என உள்ளம் கேட்க்கும் பதிலுக்கு, ஓற்றை பார்வை நீ வீச, உன் பார்வைக்கணையிலே, பாதி ஆயுளைத் தொலைத்தேன்...  மீதி....மீதி......

கற்பனை பண்ண வேணாமா?....தொடரும்....நாங்களும் எழுதுவோம்ல..


அப்பறம் இன்னொரு விஷயம், பதிவெழுதி பேர் வாங்கும் பதிவர்கள் ஒரு ரகம், குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்குற பதிவர்கள் ஒரு ரகம், இதுல நீங்க...ஹ ஹ நான் யாரச் சொல்லுறேன்னு தெரியுதா?....ஹ ஹ....  .வரட்டா?.....

சனி, 21 மே, 2011

என்னது எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....



ஹாய் நண்பர்ஸ்..... வழக்கம் போல காதல் கவிதையையே கிறுக்காமா, கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது கிறுக்கலாம்னு நினச்சுதான் இந்த பதிவு...நேத்து முகூர்த்த நாள்கிறதால ஏகப்பட்ட கல்யாணங்கள்..எங்க அம்மாவும், அப்பாவும் மாறி மாறி ஒவ்வொரு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கா கிளம்பிட்டு இருந்தாங்க...இதுல என்ன கண்டுக்கவே இல்லை....

பிள்ள கொழந்தயாச்சே, சாப்பாடுக்கு என்ன பண்ணும்னு நினைப்பே இல்லாமல் கிளம்பிட்டாங்க....சரி நானும் அம்மாவந்து ஏதாவது சமையல் செஞ்சு தருவாங்கன்னு சாப்பிடாம  இருந்தேன்..மதியம் ஒரு 12 மணி இருக்கும், எங்க வீட்டு காலிங் பெல் அடிக்கிற சவுண்ட் கேட்டது, என்னடா வழக்கமா நம்ம வீட்டுல இந்த பழக்கத்த எல்லாம் பாலோவ் பண்ணுறது இல்லையே,பின்ன யாருன்னு பாத்தா கொழந்தைங்க...அவங்கள சத்தம் போட்டுட்டு வந்துட்டேன்...மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சத்தம், அப்போ கண்டிப்பா எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற குட்டிப் பிசாசுங்க தான் இந்த வேலையப் பண்ணுங்கனு, கண்டுக்காம இருந்துட்டேன், மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சவுண்ட், சரி இதுங்கள இப்படியே விட்டா சரிப்படாதுன்னு திட்டிகிட்டே போக, கடைசில பாத்தா எங்க அத்தை மாமா வந்துருக்காங்க... 

நான் அப்படியே சாக் ஆயிட்டேன்.. வழக்கம் போல அவங்க கிட்ட குசலம் விசாரிச்சுக்கிட்டு கிளம்பிடுவாங்கனு இருந்தப்போ தான் என் தலைல அந்த பெரிய இடி விழுந்தது...ரேவதி உன் மாமா க்கு கல்யாண சாப்பாடு ஒத்துக்காது, அவருக்கு சுகர் இருக்கு, இங்க நீ சமைச்சுத் தறியா ?.....நீ நல்லா சமைப்பேன்னு அப்பா சொல்லிருக்கான்னு என் தலைல இடிய ஏறக்க, நானா நான் நான் நான்தானே நல்லாவே சமைப்பேன் அத்தை னு சொல்லி கிச்சன் போனவ தான்....(.அதோட அந்த அத்தைக்கு அழகான பையன் இருக்கான்...இப்போ நீங்களே சொல்லுங்க, சமைக்க தெரியாட்டியும், தெரியும்னு தானே சொல்லுவேங்க, நானும் அப்டித் தான் சொன்னேன்...)

சரி சமைக்கிறது என்ன பெரிய ஆரிய வித்தையானு களத்துல குதிச்சுட்டேன்...இந்நேரம் பாத்து வீட்டுல ஒண்ணுமே இல்ல, சரி ஒரு வெஜிடபிள் .பிரியாணி செய்யலாம்னு மேக்கிங் பவுடர் எடுத்து, அப்படி, இப்படின்னு கைக்கு கிடைச்சது, எனக்கு பிடிச்சதுன்னு எல்லாத்தையும் குக்கர்ல போட்டு, அரிசியையும் அதோடு போட்டு, கைடைசில ஒருவழியா குக்கர ஆன் பண்ணி, ஒரு டைம் பிக்ஸ் பண்ணிட்டேன்.....நேரம் ஆக ஆக மாமா டென்ஷன்ல,அத்தைய கத்துறது, எனக்கு இங்க கிச்சன்ல கேட்டது....ஆனாலும் நாமலாம் யாரு...இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம்ல(அவ்வ்வ்வவ்வ்வ்வ்)..பின்ன அத்தை வந்து என்னமா ரெடி ஆகிடுச்சா, உன் மாமா கத்துறாரு, பரவா இல்லையே நல்ல வாசனை வருதேன்னு சொல்ல, இதுவேறயான்னு மனசுக்குல நினச்சுக்கிட்டு, அத்தை நீங்க போன இதோ ஒரு பத்து நிமிஷத்துல எல்லாத்தையும் ரெடி பண்ணிடுறேன்,  நீங்க போய் ரெஸ்ட் எடுங்கத்தனு, அவங்ககிட்ட  சொன்னேனே தவிர எனக்கு ஒன்னும் தெரியாதே...அவ்வ்வ்வவ்வ்வ்வ் மீ பாவம்ல,

சரி எல்லாம் பண்ணிட லாம்னு பாத்தா, கடைசி நேரத்துல குக்கர்ல இருந்து அலாவுதீன் படத்துல பூதம் கிளம்புற மாதிரி ஒரே பொகையா கிளம்புச்சு...என்னடா இந்த ரேவதிக்கு வந்த சோதனைன்னு, வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிட்டேன்...இத சரியா பண்ணாட்டி இவங்க போய், அவங்க பையன்ட என் அருமை, பெருமைய எல்லாத்தையும் சொல்லிடுவாங்களே, நமக்கு இருக்கிற ஒரு அத்தை பையனும் இல்லாம போயிடுவாநேனு மனசு கெடந்து தவிக்க, இந்த பாழாப்போன குக்கரு பிசாசு வேற விசில் அடிக்கவே இல்ல, கடைசில குக்கர தொறந்து பாத்தா பாத்தா பாத்தா, அட இருங்க பாஸ், கொஞ்சம் பில்ட் அப் கொடுத்துக்கிறேன்...தொறந்து பாத்தா ஒரே தண்ணியா இருக்கு,  கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் கழிச்சு, மாமாவே கிச்சன் வந்து ரேவா சாப்பாடு கிடைக்குமா, இல்லா கிடைக்காதானு கேக்க, அந்த நேரத்துல நான் காமிடி பன்னுரேணாம், அவர்ட்ட கிடைக்கும் ஆனா கிடைக்காதுன்னு அள்ளிவிட மனுஷன் டென்ஷன் ஆகிட்டார்...பின்ன எபப்டியோ சமாளிச்சு,
வேர்க்க, விறுவிறுக்க, கிட்ட தட்ட திர்ல்லர் படம் பாக்குற எபெக்ட் ல அந்த சமையல் அஹ செஞ்சு முடிச்சுட்டேன்..ஸ்ஸப்பா...முடியல...

என்ன மெனுன்னு கேக்குறேங்களா?(இம்க்கும் இதுவேறயான்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது...ஆனாலும் விடமாட்டோம்...ஏன்னா நாங்கலாம் மதுரை காரங்க ஹி ஹி ) 

பிரின்ஞ் ரைஸ், ஆனியன், அப்பறம் தயிர், அப்பறம் ஒயிட் ரைஸ், கொஞ்சம் உருளைக்கிழங்கு வறுவல் இவ்வளவும்  கஷ்டப் பட்டு செஞ்சாச்சு..மாமாவுக்கு சாப்பாடு அத்தை போட, மாமா சாப்ட்டு டெரர் லுக் கொடுக்க, நான் மாமா சாப்பாடு எப்படி  இருக்குனு தான் கேட்டேன்....மனுஷன் தார தாரையா  கண்ணீர் அஹ கொட்ட ஆரம்பிச்சுட்டாரு...இத்தன வருசத்துல என் பொண்டாட்டி கூட இப்படி ஒரு சமையல் பண்ணது இல்ல ரேவதினு சொல்ல, எனக்கோ ஆகாயத்துல பறக்குற ஒரு பீலிங், என்ன பீலிங்க்னு நீங்க கேக்கலாம்...ஆனா நான் சொல்ல மாட்டேனே...

கடைசியா அவரும் சாப்டாச்சு, காபி போடவான்னு கேக்க  வேணாமா கடைல வாங்கிடு வர சொல்லுனு சொல்லிடாரு(அவ்வ்வ்வவ்வ்வ்)
அப்பறம் காபி குடிச்சுட்டு கிளம்பும்போது, கிளம்பும் போது, அவ்வ அத எப்படி என் வாயல சொல்லுவேன்...எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல  அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்,ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி...ஆனா ஒன்னு சொல்லுறேன், உனக்கு வரவன் ரொம்ப கொடுத்து வச்சவன்னு சொல்லிட்டு போயிட்டாங்க....அடப் பாவிங்களா?...இதுக்கா இந்த போராட்டாம்...நீங்களே சொல்லுங்க மீ பாவம்ல...


(ஒரு மாறுதலுக்காய் கற்பனைகலந்த நிஜத்தை நகைச்சுவையாய் பதிவு செய்துள்ளேன்...பிடித்திருந்தால் கருத்திடவும்...வரட்டா...ஹி ஹி...)

வியாழன், 19 மே, 2011

பிடித்த பத்து பெண்குரல் பாடல்கள் (தொடர்பதிவு)





அன்பு நண்பர்களுக்கு வணக்கம்....அனைவரும் நலம் தானே?...

என்னை பிடித்த பத்து பெண்குரல் பாடல்கள், தொடர்பதிவிற்கு அழைத்த முதல் பிரிவின் ஆனந்த நண்பனுக்கு நன்றிகள் பல...இசை  இயங்குகின்ற அனைத்து உயிர்களையும் மயங்க வைப்பது..தாய் மடியில் தவழும் நினைவைத் தரவல்லது...சோர்ந்து போன உயிரையும், மீட்டெடுப்பது...அப்படிப் பட்ட இசையோடு கலந்த பாடல்களில், எனக்கு பிடித்த பெண்குரல் பாடல்களை நான் இந்த பதிவில் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி...

எனக்கு பிடித்த பாடல்கள் பல இருந்தாலும், நெஞ்சோடு தவழும் சில பாடல்களை இந்த பதிவில் இணைக்கிறேன்...

 முதல் பாடலாய்: . அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

படம்: நான் கடவுள்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: சாதனா சர்கம்

இந்த பாடலில் பிடித்த வரிகள் என்று எதுவும் குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை, காரணம் இளையராஜா அவர்களின்  இசை தாய் மடியோடு தவழும் நினவைதரும் பாடல் இது...எவ்வளவு கேட்டாலும் சலிக்காத பாடல்.

********************************************

 இரண்டாவதாய் : வசீகரா என் நெஞ்சினிக்க....

எனக்குள் இருக்கும் கற்பனைக் காதலனுக்கு உயிர் கொடுக்கும் வரிகளாய் இந்த பாடல் அமைந்துள்ளது...எப்போதெல்லாம் இந்த பாடலைக் கேட்கின்றேனோ அப்போதெல்லாம் மனதோடு மயில் இறகு வருடுவதாய் ஓர் உணர்வு...

 படம் : வசீகரா.. 

பாடியவர் :பாம்பே ஜெயஸ்ரீ

பாடல் வரி : தாமரை ..

பிடித்த வரிகள் :  

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்

********************************************** 

மூன்றாவது பாடல் . ஒன்றா ரெண்டா ஆசைகள்

இந்த பாடல் பதிவு செய்யப் பட்ட இடம், எனக்கு மிகவும் பிடிக்கும்...பெண்களின்  எதிர்பார்ப்புகளை கண்முன்னே கொண்டு வந்த பாடல் இது...

  படம் : காக்க காக்க. 

பாடியவர் :பாம்பே ஜெயஸ்ரீ

பாடல் வரி : தாமரை

பிடித்த வரிகள் :  

 பெண்களை நிமிர்ந்து பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய்ப் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
*************************************************

நான்காவது பாடல் :. கடவுள் தந்த அழகிய வாழ்வு

மனம் கணக்கும் தருணங்களில் எல்லாம் இந்த பாடல் கேட்டாள் ஏதோ புது உத்வேகம் பிறப்பதாய்  ஓரு உணர்வு..சென்னையில் நான் பணியாற்றிய சமயத்தில் எல்லாம் தனிமை உணர்வை நீக்கி, புது தெம்பு தரும் பாடல்...

 படம்: மாயாவி
பாடியவர்கள்:கல்பனா

பிடித்த வரிகள் :

 கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே
வாழ்த்து பாடு
கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...

*****************************************************

ஐந்தாவது .பாடல் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா

இந்த பாடலின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும்...தனிமையில் நான் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...காதல் மீதான் ஒரு பெண்ணின் ஏக்கத்தை அழகாய் உணர்த்தும் பாடல் இது...

 படம்: ராம்
பாடியவர்: மதுமிதா

பிடித்த வரிகள் : 

 காட்டு தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதருதடா
யாரிடம் உந்தன்கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்...

*******************************************************

ஆறாவது பாடல் : இதுதானா இதுதானா

எனது ஆசைக்கு உயிர் தந்த சாமிக்கு சுகமான லாலி.. ஹ ஹ

 படம்: சாமி

 பாடியவர்: சித்ரா

பிடித்த வரிகள் 

 ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பா என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க

வீ
ட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும்
கொஞ்சம் வளர்ந்திடுமே 

**********************************************

ஏழாவது பாடல் : என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு...

இப்பாடல் நாடகத்தில் வரும் பாடல்...வெகு சுலபத்தில் வெளித்திரைப் பாடல் பலரால் கவரப் பட்டதென்றால்  இந்த பாடலைத்தான் சொல்வேன்.பாடல் வரிகளும், அது படமாக்க பட்ட விதமும், பாடிய விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும்...

தொடர்: காதலிக்க நேரமில்லை 

பாடியவர்: சங்கீதா

பிடித்த வரிகள் : 

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கோள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

ஏனோ என் இரவுகள் நீள்வது
ஏனோ ஒரு பகல் என சுடுவது
ஏனோ என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரமில்லையா?
இலையை போல் என் இதயம்
தவறி விழுதே..... 

**********************************************************

எட்டாவது பாடல் :  மாலையில் யாரோ மனதோடு பேச

இந்த  பாடலின்  இசையும் இசையோடு விருந்தளிக்கும் இயற்கையும் ரசிக்கும் படியாக இருக்கும்...

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

பிடித்த வரிகள் :

 வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது...

***********************************************

ஒன்பதாவது பாடல் : சொல்லத்தான் நினைக்கிறேன்

சித்ரா அம்மாவோட பாடல்களை நாள் முழுதும் கேட்டுகிட்டே இருக்கலாம், அதற்க்கு சான்றாய் எனக்கு பிடித்த பாடல்

படம்: காதல் சுகமானது (2002)
பாடியவர்: சித்ரா

பிடித்த வரிகள் :

சின்ன பூவொன்று பாறையை தாங்குமா..
உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா..
தனிமை உயிரை வதைக்கின்றது..
கண்ணில் தீவைத்து போனது நியாயமா ..
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..
கொலுசும் உன் பெயர் சபிக்கின்றது..

********************************************************

இறுதிப் பாடலாய்கற்பூர பொம்மை ஒன்று 

படம் : கேளடி கண்மணி 

பிடித்த வரிகள் :

தாயன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் அட அது போதாது
தாய் போல யார் வந்தாலுமே
உன் தாயைப்போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன்குழல்
முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல்
நீ பாடம்மா நீ பாடம்மா

என்ன நண்பர்களே, இவ்வளவு நேரம் எனக்கு பிடித்த பத்து பாடல்களை ரசித்தீர்களா?....மறுபடியும் என்னைத் தொடர்பதிவிருக்கு அழைத்த நண்பன் ஆனந்திற்கு நன்றிகள் பல..



 

  

செவ்வாய், 17 மே, 2011

இது காதலா?...காமமா?....சிந்திக்க ஒரு நிமிடம்...நல் விடை தேடியே இந்த பயணம்.....



வணக்கம் என் நண்பர்களே.....நம்ம வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு விஷயமும், நமக்கு ஏதாவது ஒரு விதத்துல, அனுபவத்தையும், தைரியத்தையும் தருகிறது....எத்தனையோ பேரை நம்ம கடந்துபோக சிலர் மட்டும் தான் நம்மை நட்பாகவும், காதலாகவும், அன்பால கடத்திச் செல்கிறார்கள்....இதுல நல்லது மட்டுமே கொடுக்கிற நட்பு ஒரு ரகம்....தன் சுயநலத்துக்காக, காதல்ங்கிற பேருல, நம்ம சுத்தியிருக்கிற, நண்பர்கள் உலகத்த சுருக்கிக்கிற காதலர்கள் ஒரு புறம் (வெகு சிலர் )....(வழக்கம் போல காதல் பதிவான்னு நினைக்க வேணாம்.....)...காதலால நட்ப புறம் தள்ளி வைத்த என் தோழியின் தோழி கதையை அவங்கள் வேண்டுதல் பேருல, கொஞ்சம் நிதர்சன உண்மைகளை மறைத்து, நாகரீக முறையில் பதிவிடுகிறேன்...

அவர்கள் தன் காதலை பதிவிட சொன்னதன் நோக்கம் : காதல் பித்து பிடித்து அலையும் பலருக்கு வெறுப்பாக இருக்கலாம் இந்த பதிவு, ஆனாலும் எங்கயோ தன் சுயம் தொலைத்து கொண்டு இருக்கும் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ என் வாழ்க்கை ஒரு படமாக இருக்கும்....அதற்காக வேண்டும் என் காதலை கதையாகவோ...இல்லை கவிதையாகவோ சொல்லிவிடுங்கள் என்று சொன்னார்....

அதோடு, அந்த தோழியின் சுய அறிவில்லா முன்னால் காதலன், என் வலைத்தளம் வருவானாம் ...உங்கள் நண்பர்கள் இதற்கு இடும் கருத்து அவன் மனதிற்கு எட்டவேண்டும்,  என்று என்னிடம் கூறினார்......

அதோடு என் மனதில் நல் மாற்றம் வேண்டி உங்களிடம் என் கதையை பகிர்கிறேன்னு அவங்க கதைய சொல்லிடாங்க...இதோ உங்களுக்காய்

இளமையின் முதல் சந்தோஷ காலம் எதுன்னு கேட்டா எல்லோரும் கண்ண மூடிட்டு  நம்ம கல்லூரி காலத்தை தான் பதிலாய் சொல்வோம்...அப்படிப்பட்ட கல்லூரி காலம் முடிவடைந்தவுடன் அவரவர் வேலை தேடி பயணப்படுவர்...அனிதா பிறப்பில் வசதியாய் பிறந்து, காலமாற்றத்தால் கடன் பட்ட குடும்பத்தின் சுமையைக் குறைக்க சென்னை  நோக்கிப் பயணப்பட்டவள்....இதுவரை கட்டுக் கோப்பாய் வளர்ந்த சூழலில், சென்னை சுதந்திரம் அவளுக்கு புது வித பயத்தை தந்தது, இருப்பினும் ஒரு நல்ல அலுவலகத்தில் பணியில் சேர்ந்தாள்..அவள் பெற்றவர்களை விட அதிகம் பாதுக்காப்பை அவள் நட்பு அவளுக்கு தர, அழகான அலுவலக காலம் நயமாய்ச் செல்ல,  தன் தோழியின் நண்பனாய் அறிமுகமானான் அரவிந்த்...

அரவிந்த் பார்த்ததும் பற்றிக்கொள்ளும் காந்தக் கண்களுக்குச் சொந்தக்காரன்....அரவிந்தனின் முதல் பார்வையே, அனிதாவின் மீதான காதல் படையெடுப்பாய் மாறியது..அதை பார்வையில் உணர்ந்த அனிதா, சற்றும் பொருட்படுத்தாமல் நட்பு ரீதியில் நாட்களைக் கடத்தினாள்..நாட்கள் நட்பின் போர்வையில் நகல, அனிதா மீதான் தன் காதலை அரவிந்தன் அவளிடம் சொன்னான்...

இது அவள் எதிர்பார்த்த ஒன்று தான், இருந்தாலும் அவன் காதலை ஏற்காத அனிதா அவன் நட்பை விட்டு விலக நினைத்த நேரம், சிறு சிறு பிரச்சனைகள் மற்றவர்களால் இவளுக்கு முளைக்க, இவள் தான் நண்பர்களிடம் பகிர்வதை குறைத்து, அரவிந்தனிடம் அந்த பிரச்னைக்கு தீர்வு நாடி சென்றாள். அரவிந்தனும் அவளின் பிரச்சனைகளுக்கு முடிவு காண, நாட்கள் இவன் என் நண்பன் என்ற ரீதியில் நகல, அரவிந்தனின் அன்பும், அரவணைப்பும், காதலும் இவளுக்குள் புதுவித கற்பனை உலகத்தை வளர்க்க, இதுவரை தன்னை சுற்றயுள்ள தன் சுற்றத்தை கொஞ்சம் மறந்தே போனாள்...

அனிதா தன் காதலை மறைக்க முடியாமல், அரவிந்தனிடம் காதலை சொல்ல, இனிய பரபரப்புடன் சந்தோஷ வானில், அழகாய் பறந்தனர் இந்த காதலர்கள். ஏக்கங்களும், தவிப்புகளும்,கனவுகளும், காதலும், கற்பனையும் அவர்கள் வாழ்வை காதலால்  நிரப்ப, அன்பு காதலர்களாய், அழகோடு பவனி வந்தனர்....

பிறிதொரு நாட்களில் அரவிந்தன் அனிதாவிற்காய், அனுப்பிய
சின்ன சின்ன பரிசுகளும், நலம் விசாரிக்கும் குறும்செய்திகளும், அக்கறை அழைப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய, அனிதா கொஞ்சம் தடுமாறியே போனாள்...அனிதா வர தாமதம் ஆனாலும் தவியாய் தவித்து அவள் அலுவலகத்தை படையெடுத்த அரவிந்தன், அவள் விரும்பி அழைத்தும், அவளை சந்திப்பதை தவர்க்கத் தொடங்கினான்...தவறான ஒருவனை காதலித்து விடமோ என்று மனக்கிடங்கில், பயத்தின் தீயைப் பற்ற வைத்தாள் அனிதா..

பிறகு அரவிந்தனின் செயலும், பார்வையும் இவள் பயத்தை உறுதி படுத்த, நிலைகுலைந்து போனாள் அனிதா..அவன் நிராகரிப்பின் காரணம் அறிய, அவனை அலைபேசியில் தொடர்புகொண்டாள்...அதுவரை அனிதா, அரவிந்தனை தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்தாலே, தொலைபேசியில் அழைக்கும் அரவிந்தன், இன்று அவள் பலமுறை அழைத்தும், தொடர்பை ஏற்க்க வில்லை...

அனிதா இதுவரை அனுபவிக்காத வலியை உணர, சுற்றி உள்ள அனைத்தும், இவளுக்கு சூனியமாய் தெரிய,எதிலும் இவள் கவனம் செல்லாமல், தன் காதலே கெதி என்று, அவன் பெயரையும், அவனோடு களித்த அந்த இடங்களுக்கும், சென்று தன்னோடு அவன் என்றும் இருக்கிறான் என்ற எண்ணத்தில், பொழுதை கழித்தாள் அனிதா...வேலையிலும் கவனமின்றி, நட்பின் பார்வையில் , தன் விசயங்களை பகிர்தலின்றி தனக்கென்ற ஒரு உலகத்தை கற்பனையிலே உருவாக்கி, அவனோடு உறவாடி வந்தாள்...

பின் ஒரு நாளில் அரவிந்தனிடம் இருந்து அழைப்பு வர, பறந்து சென்றாள் அனிதா அவனை சந்திக்க, அரவிந்தன் இந்த ஊடலுக்கு ஏதேதோ, காரணம் சொல்லி அவளை சமாதானப் படுத்த, அனிதாவின் உண்மையன்பை உணர்ந்த அரவிந்தன், பின் அவளை விட பன்மடங்கு அனிதாவை நேசித்தான்...வருடங்கள் ஐந்து காதலோடு கழிய, அனிதாவின் குடும்பம் அவளை திருமணத்திற்கு நிர்பந்திக்க, அரவிந்தனிடம் இதை பற்றி பேச முடிவு செய்தாள் அனிதா....

அரவிந்தனும் இதற்க்கு ஒப்புதல் அளிக்க, திருமணம் பற்றி பெற்றோர்களிடம் பேசும் முன்பே,  கனவுகளோடு காலம் களித்தனர் காதலர்கள்..இந்த நேரத்தில் அரவிந்தனின் அலுவலகத்தில், புதிய பணியில் வந்து சேர்ந்தாள் ராகினி...ராகினி அல்ட்ரா மார்டன் அழகி...வசதி படைத்தவள்...ஆரம்பத்தில் அரவிந்தனிடம் நட்போடு பழக ஆரம்பித்தவள், நாளைடவில் அரவிந்தனின் துடுக்குப் பேச்சும், அவன் குணமும் இவளை ஈர்க்க, காதல் வலையில் அவன் அனுமதி இன்றி விழுந்தாள் ராகினி...

ஒரு மாலையில் வழக்கம் போல் அனிதாவும், அரவிந்தனும்  சந்தித்துக் கொண்ட அந்த அந்தி நேரம் ராகினியைப் பற்றியும், அவள் பணபலத்தைப் பற்றியும் பேசி முடித்தான் அரவிந்தன்,,,அனிதாவிற்கு அவன் பேச்சு சந்தோஷத்தையும், கொஞ்சம் மிரட்சியையும் தந்தது...தன் காதலன் தன் மீது உள்ள நம்பிக்கையால் ஒரு பெண் பற்றி தன்னிடம், பேசுவது அவளுக்கு சந்தோஷம் தந்தாலும், அதற்காய் அவன் பிரயோகப் படுத்திய வார்த்தைகள் அவளுக்கு மிரட்ச்சியை தந்தது...எதற்கும் ராகினியிடம் தள்ளியே இருங்கள் என்று அன்பு கட்டளை இட்டுவிட்டு, அன்றைய சந்திப்பை காதலோடு முடித்தனர்.

ராகினி கொஞ்சம் கொஞ்சமாய் அரவிந்தனை, ஆளநினைத்தாள்...
அரவிந்தனும், ஒரு கட்டத்தில் வளைந்து கொடுத்தான்...இருவரும், நட்பின் வாசலில் நுழையும்போதே, அரவிந்தன் இதுவரை எந்த பெண்ணையும் நேசிக்கவில்லை என்ற, காதல் அனுமதி சான்றிதழுக்கு கையொப்பம் இட்டுச் செல்ல, ராகினியும்  இவன் தனக்கானவன் என்றே தன் மனதில் எண்ணிக்கொள்ள, ராகினி தன் காதலை அரவிந்தனிடம் சொல்ல, தன் குடும்ப சூழல் காரணமாய், பணக்கார பெண்ணை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அரவிந்தனுக்கு, ராகினியின் காதல் வரமாய் வந்தது என்று நினைத்து தன் வாழ்வை, பணம் கொண்டு வளப்படுத்தினான்..

அனிதாவை சந்திக்கும் ஒரு வாரத்திற்குள், இவன் வாழ்வில் வந்திட்ட இந்த மாற்றத்தை உணராத அனிதா, வழக்கம் போல் காதலோடு அவனுக்காய் காத்திருந்தாள்..அரவிந்தனும், அன்றைய சந்திப்பில் நடந்தவைகளை, மறைத்து ராகினி அவனை விரும்புவதாகவும், தான் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் சொல்லி விட்டு சென்றான்... ஆனாலும் இவன் கண்கள் பேசும்வார்த்தையின் அர்த்ததின்  பொருள் அறிந்த அனிதா, கண்ணீர் கொண்டு தன் காதலை மீண்டும் அவனிடம் சொல்ல, இதுவரை அன்போடு  இருந்த அரவிந்தன், ராகினியிடம் தான் ஆறு வருடம் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், இன்று நாங்கள் நண்பர்கள் என்றும் சொல்ல, ராகினி அனிதாவை சந்திக்க வேண்டும் என்று அரவிந்தனிடம் கட்டளை விதிக்க, அனிதா அறியாமல், அவர்கள் சந்திக்கும் அந்த மாலையில் ராகினி அரவிந்தனோடு வந்தாள்..

இதை சற்றும் எதிர்பார்க்காத அனிதா , ராகினி வருகையின் காரணம் அறிந்து செய்வதறியாமல், திணற, இறுதியில் ராகினியே தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், உங்கள் பழைய காதல் தனக்கு தெரியும், உங்களின் நெருக்கமும் தெரியும் அதைப் பற்றி தான் கவலை கொள்ளவதாக இல்லை என்று சொல்லிவிட்டு, அவ் விடத்தை விட்டு நீங்கிச் சென்றாள்.... இது கனவாய்  இருக்குமோ என்று தன்னை தேற்ற நினைத்து கொண்டு இருக்கையில், அரவிந்தன் ராகினி வசம் சென்றதை அவன் வார்த்தைகள் அவளுக்கு காட்டியது...

தனக்கான உலகம் சூனியமாய்ப் போனதை உணர்ந்த அனிதா, செய்வதறியாமல் விழிநீர் வழிய, தான் ஒருவனால் ஏமாற்றப் பட்டோம் என்பதை உணர்ந்து, தற்கொலைக்கு முயல, உணர்வுகள் இணைத்த அவள் நட்பு, என்றும் இல்லாமல் அவளை தொடர்பு கொள்ள
தன் நிலையைச் சொல்லி அழுத அனிதாவை, ஆறுதல் சொல்லி, அவள் உண்ட விஷத்தை மருத்துவர் துணையுடன் வெளியேற்றினர்....

இவள் விஷம் அறிந்திய காரணம் அறிந்த நண்பர்கள், அரவிந்தன் அலுவலகத்தில் படையெடுக்க, அவனை தாக்கினர்...ராகினி நிலைமை உணர்ந்து அவர்களை விலக்கி விட, அரவிந்தன் பாதுகாக்கப்பட்டான்... தான் ராகினி  முன் தண்டிக்க பட காரணமாய் இருந்த அனிதாவை  எப்படியும் கொன்று விட வேண்டும் என்ற உறுதியோடு இருந்த அவனை, அந்த மருத்துவமனைக் காட்சி கொஞ்சம் மாற்றிப் போட்டது....

இருப்பினும் கொச்சை வர்த்தைகாளால் வசைபாடி விட்டு, தனக்கும், ராகினிக்கும் இன்னும் இரண்டு மாதங்களில் பெற்றோர்களால் நிச்சயிக்க பட்ட அந்த திருமண அழைப்பிதழை அனிதாவிற்கு தந்து விட்டு சென்றான்,

தோழி அனிதா இன்று நட்பின் துணையோடு நலமாக சென்னையில், தன் பணிகளோடும், அவன் நினைவு தந்த வலிகளோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்...அரவிந்தன் தன் புது காதல் மனைவியோடு, உறுத்தாமல் உலா வருக்கிறார்....

நண்பர்களே...இது என் தோழியின் தோழிக்கு நடந்த கதை....எது காதல், எது காமம்...எங்கே நமது தேடல்?....என் தோழியின் காதலன் போல் தெளிவான அறிவில்லாமல், சஞ்சலப் படும் மனதிற்கு, இன்னொருவர் பலியாகலாமா?.....நமக்கு தெரிந்ததெல்லாம், காதலை பெண்கள் புறம் தள்ளுவார்கள் என்று, இங்கு என் தோழியின் சுயநல காதலன்.அந்த தோழியின் உண்மைக் காதலை புறம் தள்ளினார்...

இது ரொம்ப தேவையான பதிவான்னு நீங்க கேக்கலாம்...ஆனா இன்னைக்கு தற்கொலைகள் அதிகமா இருக்க இரண்டு காரணம் ஒன்னு:கடன்
இன்னொன்னு : காதல்....
கடன் தன் சுற்றியுள்ள சுழலின் நிலைமையை பெருக்க இல்ல சமாளிக்க வாங்குற விஷயம்....
ஆனால் காதல்....இலகுவாய் ஒருவர் உள்ளம் நுழைத்து, உயிரை இழக்கும் அளவிற்கு துணிய  வைக்கும் மாய கொள்ளைக்காரன் அல்லவா இந்த காதல்....

இப்போ என் தோழியின் வீட்டில் திருமண பேச்சுக்கள் நடக்க, தோழி அவற்றை புறம் தள்ளி, சுயமாய் வாழ விரும்புவதாய், அவர் பெற்றோரிடம் சொல்லி வருகிறார்...என் இனிய நண்பர்களே... என் தோழிக்கு நல்ல நடப்பாய் தாங்கள் தரும் பதில் என்ன என்று அவர் அறிய ஆவலாய்  உள்ளார்.நீங்கள் இந்த பதிவுக்கு தரும் வரவேற்ப்பை பொறுத்தே இதை போன்ற உண்மை சம்பவங்களை பகிர இருக்கிறேன்..

வழக்கம் போல் இந்த பதிவை உங்கள் பார்வை பயணத்தில் பயணப் படவைக்கிறேன்....(இப் பதிவை நகைச்சுவையாய் எடுக்காமல் ஒரு பெண்ணின் வாழ்க்கை இப் பதிவில் உள்ளதென்ற எண்ணத்தில் உங்கள் கருத்துக்களை இடவும்...அதோடு நாகரீக மான பின்னூட்டங்கள் மட்டுமே இங்கே வெளியிடப்படும், நகைச்சுவையாய் அல்லது வேறுவிதமாய் நீங்கள் அளிக்கும் பின்னூட்டம் புறம் தள்ளப்படும் என்பதையும் தெரிவிக்கிறேன்.புரியுறவங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.... )



சனி, 14 மே, 2011

மாற்றத்தை விரும்புகிறோம் இப்போதைக்கு...


* சிலர் முகச்சாயம் வெளுத்துவிட்டாலும்
எல்லோரும் ஒரே 
முகபாவம் கட்டுவாதாய் 
ஒரு உணர்வு...


* பாதிக்க பட்ட மக்களின்,
ஒவ்வொரு துளி 
கண்ணீரும் 
சாட்சி சொன்னது,
இன்று மாற்றமாய் வந்தது..


* அணைந்த விளக்கிலிருந்து 
மேலெழும்பும் புகைபோல,
ஆட்டம் முடிந்தாலும்,
பழிதீர்க்க துடிக்கிறது
பழைய பகை...  

* கெட்ட கனவாக பழைய 
நிலையை மறக்க 
நினைத்தாலும், 
உள்ளிருக்கும் உணர்வுகள் 
எல்லார் முகத்திலும் 
முகச்சாயம் ஒட்டிய
பொய்ப் புன்னகையையே
உதிர்ப்பதாய் ஓர்
உணர்வு...

* ஒவ்வொரு மோதலிலும் 
மாறி மாறி வரும் 
மாற்றங்கள்...
நீதிகேட்டும் கிடைக்காத 
கோவத்தின் தீக்கனல்கள்... 

* தீட்டிய வாளோடு
தெருவில் சண்டையிட 
திராணி இல்லை எங்களுக்கு...
சுரண்டலின் பின்னும்
எங்களுக்கான
எச்சங்களை கொஞ்சம் 
மிச்சம் வையுங்கள்....

 * ஒவ்வொரு புதிய தொடக்கமும் 
எதிர்பார்ப்போடு தொடங்குகிறது...
பழையதில் இருந்து மாறிட
ஒவ்வொரு மனமும்
மாற்றத்தை விரும்பிகிறது
இப்போதைக்கு...

பதிவுலக நாயகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....வாழ்த்து சொல்லி படையெடுக்கும் நண்பன் அன்பை விட ஆயதம் எதுவுமில்லை....கொஞ்சம் அங்கயும் போங்க.. ஹி ஹி

திங்கள், 9 மே, 2011

முத்த யு(ச)த்தம்....


* சத்தம் இல்லாமல்
ஓர் முத்த யுத்தம்
அவள் இதழ் போர்க்களத்தில்.
இதில் தோற்பதிலும்,
வெல்வதிலும் மகிழ்ச்சியே
காதலுக்கு..




* நம் காதல் வாழ்வின்,
சுவர்க்கப் படிகள்,
உன் இதழ் தானோ.....
தீண்ட தீண்ட
பி(தி)றக்கிறது
காதல்......

* உன்னிடம்,
ஆசையாய் நகைகேட்டால்,
முத்தம் கொடுத்தே,
நகைக்க வைக்கிறாய் 
நீ...




* சத்தம் இல்லாமல்
இருக்கும் இரவில்,
ஓர் முத்தச் சண்டை,
யார் முதலில் கொடுப்பதென்றும்
யார் முதலில் பெறுவதென்றும்....
 
 

* முத்தம்
என்னும் கவிதை
எனக்காய் பிறக்கும்போதெல்லாம்,
என்னுள் பிறக்கிறது
காதல்....

* எத்தனை முறை
தோற்றாலும் பரவாயில்லை...
அன்பாய் நீ தரும்
ஒற்றை முத்தம்
எனக்கு கிடைக்குமாயின்...




* முத்தம் காதலின்
முத்திரை...
முத்தம் கொடுங்கள்
அன்பு பெருகும்...
முத்தம் வாங்குங்கள்
அன்பு நிலைக்கும்.. 




வியாழன், 5 மே, 2011

உனக்காக ஓர் வாழ்த்து




* உன் பிறந்தநாள் அன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்....

* அம்மாவின் ஆண்பிள்ளைக்
கனவுக்கும், 
அப்பாவின் தலைமுறை
விந்துக்கும்,
வளம் தந்த,
செல்ல மகன்  நீ தானே...

* தத்தி தத்தி நீ நடக்க
தங்க மயில் ஆடுதுன்னு,
சொல்லிவச்ச பாட்டிக்கு,
இன்றும் சொக்கத் தங்கம்
நீ தானே...

* கொஞ்சிப் பேச ஒரு அக்காவும்,
சண்டை போட மறு அக்காவும்,
சமாதானம் பண்ண
குடும்பமுமாய்,
நாம் அடித்த கூத்துக்கள்
நெஞ்சுக் கூட்டில்
நினைவுகாளாய் ஏராளம்...

* நிலாச் சோறு ஊட்டிய
நாளும்,
உன் கைபிடித்து
உன்னை நான் பள்ளியனுப்பிய
நாளும்,
அப்பா உனக்கு வாங்கித்தந்த
பொம்மைக்காருக்காய்
உன்னிடம் சண்டை போட்ட
நாளும் என,
அழகான நம் மழலைக் காலம்
மனக்கண்ணில் ஓடுதடா....

* காலங்கள் உருண்டோட,
கனவுகளும் சேர்ந்தோட,
காலத்தின் கோலத்தில்
பொறுப்புகளும் சேர்ந்தாட,
நெருங்கியே இருந்த
நம் அன்பு,
இன்று,
உன் வேலைப் பயணத்தால்,
இருமடங்கு அதிகமாக,
இதுவரை உன் அருகில் இருந்து 
வாழ்த்திய நான்
வார்த்தையைத் தேடுகிறேன்...

* வெயிலும், மழையும்
உன்னை நெருங்காம
பொத்திப் பொத்தி
வளர்த்த நாட்கள்,
புழுதி  நிறைந்த
மாநகரில் நீ அலையத் தானோ?.....

* கஷ்டமே அறியாமல்,

காத்திட்ட
எங்கள் அன்பின்,
பொறுப்புக்காய் பொருள்
சேர்க்க புறப்பட்டாய்.....

* இங்கு பிடி சோறும்
நீ இன்றி 
உள்ளிறங்க மறுத்து
உள் நாட்டு கலவரம்
செய்யும்
காரணம் அறிவாயோ?...

* இன்று உந்தன் பிறந்த நாளில்,

கடவுள் உன்னை காத்திடவும்,
காலம் நம்மை கரைசேர்த்திடவும்,
வக்கத்த உன் அக்கா
வெறும் வார்த்தையிலே வாழ்த்துகின்றேன்..

* வயோதிகம் வந்தாலும்,
வளமாக நீ வாழ,
வாஞ்சையோடு வாழ்த்துக்கிறேன்...
ஏழுப்பிறப்பென்பதில்,
எனக்கு நம்பிக்கை இல்லை...
அப்படி ஒன்று இருப்பின்,
என் ஏழுபிறவிக்கும்,
அன்னையாக, தந்தையாக
தம்பியாக, தங்கையாக
நீங்களே  வேண்டும்
என்று,
இல்லாத கடவுளிடம்
மண்டியிட்டு வேண்டுகின்றேன்....

* உன் பிறந்தநாள் அன்று,

உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்....  
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி....

என்றும் நீ நலமாய் வாழ வாழ்த்துகிறோம்...





( சாக்லேட்ஸ் எடுத்துக்கோங்க...இன்னைக்கு என் தம்பிக்கு பிறந்தநாள்....இன்னைக்கு பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்......)


திங்கள், 2 மே, 2011

மிட்டாய் கனவுகள்



உன் இதயத்தை  இனியாவது 
என்னிடம்  கொடுத்துவிடு...
கனவில் நீ,
இனிக்க இனிக்க
  காதல் பேசிய பொழுதுகள்,
கொஞ்சம் இளைப்பாரட்டும்...

நீ என்னை கடந்து செல்லும் 
நேரத்திலெல்லாம்,
உன் வாசனை பிடித்தே, 
என் கனவுகள் 
கவிதையை கருத்தரிக்கின்றன... 
கொஞ்சம் காதல் கொடு....
நலமாவோம் தாயும், சேயும்....



அழுகையில் எல்லாம் 
தாயின் மடி தேடும்
பிள்ளை போல்,
கனவில்,
உன் நினைவின் மடியிலே 
உறங்கிப் போகிறது
என் இரவு....

*******************