உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 19 ஜனவரி, 2017

அதுவரை இது நிகழாதிருக்கட்டும்




வக்கிரம் நிறைந்த மனதின் வெயில் வாட்டுகிறது  
புறச்சூழலை


நாம் நம் அறைகளுக்குத் திரும்புகிறோம்  

செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாக நம்பப்படுகிற அறை  
ஓர் அட்டைப் பூச்சி
இன்க்கிரீஸ் மோடில் கூடுகிற குளிரின் எண்ணிக்கை
குசேலனின் கைப்பண்டம்

நமக்கு கவலைகள் இல்லை  

வெயில் தீர்ந்துவிட்டதாய் நம்புகிறது  
சொரணைக்குப் பழகிய தோலின் முதல் அடுக்குத் தகவல்

 தனித்த செய்தியில் உரையாடுகிற 
கைகள் கொண்டிருக்கிற பழக்கம்
ரோட்டோர ஓவியக் கைகளுக்குக் கிடைப்பதில்லை
ஆனாலும் யாம் தெரிந்தே செய்கிறோம்


இச்சில்லறைகள்
தரையில் விரிந்திருக்கும் பிரம்மாண்டத்தின் கண்களைக்  
குருடாக்கப் போவதில்லை

விழுந்து கிடக்கிற ஒன்றின் தெளிவு
வானத்தை பார்க்கையில்  
வசப்படுவதும் வானமாகவே இருக்கிறது


ஆனவரை அழிக்கிற உரிமையை மழைக்கே கொடுக்கிறோம்

 சிறுதூரல் கிளப்புவது உஷ்ணத்தையென்றாலும்
 உள்ளிருப்பது வெளியேறுதல்
 பெருமழைக்குச் சமமே

அட்லீஸ்ட்  
இந்த மழை 
 மனதின் வெயிலை புறச்சூழலின் வழியாவது குறைக்கட்டும்  
அதுவரை இது நிகழாதிருக்கட்டும்


நிழல் வளர்த்த நிஜத்தின் தோற்றப் பிழை



கடைசி பார்வையாய் சுடர்விடுகிறது  
சந்திப்பு

பருகிய கோப்பைகளின் பிசுபிசுப்பை 
மொய்க்கும் ஈக்களின் பறத்தலைப் போல்  
கவனம் கலைக்கிற வார்த்தைகளைத் தட்டிவிட்டு  
நகரும் கால்கள் வாய்க்கா உரையாடல் அமர்ந்திருக்கிறது  
எளிய உயிர்மெய்யில்

விட்டில் பூச்சி நம் சொற்கள்  
பறக்கையில் பெரிதான நிழல்  
பதிகிறது சுவற்றில்

இருள் வெளிச்சம் குடிக்கப் பழகிய  
ஒயின் கோப்பைகளை  
பார்வையாக்கி பருகுவதின் அடர்த்தி  
அடிமடியின் நினைவென கசக்கிறது

பிரிவின் போதை ஆட்கொள்ளத் தொடங்கும்  
சூழலின் அமைதி உடைத்து
முதல் ச்சியர்ஸ் சொல்லித் தொடங்கப் போகும் வார்த்தை  
உன்னிடம் இருந்தே வரட்டும்

கடைசி சந்திப்பாய் சுடர்விடுகிறது வெளிச்சம்  
அத்தனை இருளையும் மறைத்து

நீ உன் கோப்பையை உயர்த்து
ச்சியர்ஸ்..

வழியற்ற தடங்களில் விரிகிற மீள்தலின் அடர்வனம்




*
 
மீண்ட கணத்திலிருக்கும் வாழ்தலைப் போல்  
வரமாகிற எதுவொன்றையும்  
சாபத்திற்கு நிகராய் பத்திரப்படுத்துகிறோம்

பக்குவங்கள் மண்டியிடும் திருச்சபைக்குள்
பாவங்களை மழுங்கடிக்கும் மன்னிப்புகள் உண்டு
 
தெரிந்தே செய்கிறோம்

மன்றாடல் 
கூப்பாட்டுக் குரலாகிடும் போது  
கூரையொழுகும் சமாதானம் கொண்டுவருகிறது  
பாத்திரங்கள் கொள்ளத்தக்க பெரு மழையை

நிரம்புதலும்  
நிரம்பி வழிதலும் நிராயுதமாக்க  
வழித்தடங்கள் சாபத்திலிருக்கும் வரத்தை பிரித்தெடுக்கிற  
அன்னப் பறவையாகிவிடுகிறது
 
நிர்பந்திக்கப்படுவதில் இருந்து விரிகிற  
வழியற்ற தடங்களின் பாதை  
அடர்வனமாக்குகிறது மீண்ட கணங்களை

மெளனம் சரணம் கச்சாமீ



*
குறியீடுகளால் நிரம்பியிருக்கும் நீர்த்தேக்கத்தில்  
நீயாகவே பிரதிபலிக்கிறாய்

இம்மை  
ஒரு கரை  
பிரமை  
மறுகரை  
கடலெனும் மாயை  
மழையாய் பொழிகிறது நிலத்தில்


காதைப் பிளக்கும் இடிச்சத்தம்
கண்கூசச் செய்கிற மின்னலொளி
அலைக்கற்றை வழியாய்த் துண்டிக்கச் செய்கிற
அறிவு
தொடர்பற்றதின் மோனநிலை

சூரியன் பார்க்க நிற்கிற நிமிடம்
இருட்டுகிற அறை
வெளிச்சமேற்றுகிறது படிமத்தின் மாடத்தில்


புரிவதில்லை
சொல்லின் முதல் தோள்  
ஊடுருவுகிற மடிப்புகள்
விளங்காத கிரணக் குறைபாடு

வளர்கிறாய்
இருள் குடித்து
ஆடுகிறாய்
காற்றை இசைத்து


அனைத்தையும் துறந்து ஆட்கொள்கிறாய்
விழி மூடிய புத்தனின் புன்னகை கொண்டு
விளங்காதிருக்கிறாய்

ஆசை துறக்கும் ஒப்பீடு
உவமைக்குப் பொருந்துவதில்லை
உவமேயப் பார்வையில் பிரதிபலிக்கிற நீர்த்தேக்கம்
மடை திறக்கிற சொல்
இக்குறியீடு