உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 29 ஜனவரி, 2015

சிறகிழந்த பறவை
கட்டிவைத்தக் கூட்டைத் தாண்டி 
பறக்க நினைத்த பறவையின் சிறகுகளை
கூடுகள் வேயக் கொடுத்துவிட்ட பின்னும் 

துளிர்க்கும் சிறகிற்கு
வண்ணமேற்றி 
வாசலனுப்ப அதிகாரமில்லையென்பதை 
அரிதாரப் பொய்களால் உரைக்கையில்

அக்கூட்டுப் பறவைகள் 
சிறகடிப்பதைப் பார் என்கிறாய்

கூடுகளாவிட்ட குஞ்சுகளுக்காய்
பாலையை முல்லையாய்  
மாற்றத் தவிக்கிறது
சிறகிழந்த பறவையொன்று

-ரேவா

மலரும் புன்னகை
மொட்டு விட்டிருந்த ரோஜா
இன்று மலர்ந்து சிரிக்க
நாளை என்னவாகிப் போகுமென்ற நினைப்பில்
சிறைபிடித்துக்கொண்டேன்
புகைப்படத்தில்

நெருங்குகின்ற இரவை
நிறுத்துவதெப்படி
என்ற யோசனையில்
உறங்கிப்போக

இரவை மென்று விழுங்கியபடி
பகல் எட்டிப்பார்க்க
நேற்றைய இடத்தை
தொலைந்திருந்த ரோஜாவுக்காய்
கனத்து தொலைந்தது மனம்

எதிர்பாரா திசையில் கண்கள் திரும்ப
ஒன்றுக்கு பத்தென
பலவண்ண பூக்கள் புதுப் புன்னகைகொடுக்க
நேற்றைய ரோஜா புகைப்படத்தில்
பதில் புன்னகைகொடுக்கிறது
எதையோ சொல்லியபடி..


-ரேவா

வேறென்ன வேண்டும்
தினமும் நினை
நினைத்ததை மற
மறந்ததை தேடு
தேடுவதை கண்டெடு
கண்டெடுத்ததை தொலை
தொலைத்ததை விட்டுவிடு
விட்டுவிட்டதை விடாமல் தொடர்
தொடரவேண்டுமாயின்
தினமும் நினை
வாழ்வதற்கு வேறென்ன வேண்டும்.


-ரேவா 
கிளர்ந்தெழும் பசுமையின் ஞாபக உட்சுவர்
இதுவரை கவனமீர்க்கா
இரவு நேரப்பாடலொன்று
இன்று உந்தன் கவனம் ஈர்த்ததாய் 

காரணம் சொல்கிறாய்

காரணங்களை அனுமானித்தலில்
கிளர்ந்தெழுகிறது சுயத்தின் 

உட்சுவர்

இன்மையின் உமிழ்தல்கள்
வாயில் வரை எட்ட
திறக்கப்பட்ட ஜன்னல்வழியே
கரைந்துபோகிறது
அப்பாடல்


காரணமில்லா அன்பைப்போல 


-ரேவா

காலத்தின் கூர்வாள்
மனமேறிக் கொண்ட பின்
மாற்றமில்லாது போன ஒத்திகை
நாளுக்கு நாள் அதிகரிக்க


அதிகாரத் தோரணையாய் பாவனை
அரிதாரம் தனைப் பூசிக்கொள்ள

நிலா சுடுவதை உணர்ந்த
உம்மத்தப் பொழுதுகள்
வாய்ப்பாடறியா கணக்கென
வாழ்க்கை மாறிய நிமிடங்கள்
நடுநிசி பொழுதையும்
விட்டுவைக்கா நினைவுகளென
நீ நீயாகவே
நீக்கமற நிறைந்திருந்தாய்
கனவுதனிலும் அதையே எடுத்துரைத்தாய்

மந்திரக்காரனின் கோலென
காதலது 

உன் விழியினால் பேச
கனவது கவிதையில் பேச
நிபந்தனைகளோடு நின்று கொல்கிறோம்
அவரவர்கான உலகத்தில்

காத்திருத்தலென்னும் கூர்வாள்
ஒருமுனையில் உன்னையும்
மறுமுனையில் என்னையும்
குத்திக்கிழித்தபடி சிரிக்கிறது
காதலுக்கு காலமென்னும்
பெயரை வைத்து 


-ரேவா

மிச்சத்தின் மொத்தம்
உதிரும் சருகின் ஞாபகப் பசுமையில் 
நினைவின்  சலசலப்புகள்

வேர்விட மறந்த சம்பாஷணையில்
துளிர்த்திருக்கும் நியாயங்கள்

ஆழப்பற்றுதலில் அறுந்துவிட்ட
விதைகளில் 
முழிந்திருக்கும் விருட்சங்கள்

மீளாக்கணங்களை விரித்துப் போடும் 
காலத்தின் கண்களை
நேராய்ப் பார்க்க திராணியற்ற 
காயத்தின் தழும்பென மிச்சமிருக்கும் ப்ரியங்கள்

எதன் பொருட்டும் விடுவித்துக்கொள்ளா 
உயிர்வேரின் ஈரத்தில் துளிர்விடத் தெரிந்தும்
தொலைத்ததைப் போன்றதொரு தெனியில் தான் 
வாழ்ந்தாகவேண்டியிருக்கிறது 
இந்த வாழ்வை

எழுதப்படாததில் எழுதியிருப்பது
வெற்று மைதானமென்னை
வெறுமை சூழத்தந்தாலும்
ஆடிக்களைத்த நிகழ்வுக்குள்
ஓடிவிளையாடுகின்ற ஒற்றை பந்து
காதல்

தோல்விகள் புரிந்தாலும்
தொடர்ச்சியாய் முயற்சிகள்
அயற்சியை மறைக்கும் நினைவுகள்

வலிக்கு வலியென வழிகொண்டு தொடர
வார்த்தைகொண்டு அடைக்கிறாய்

உரையாடல் பெருவெளியை

உடலுக்கும் உயிருக்குமான
தொடர்பு அறுபடும் இறுதி போராட்டத்திலும்

வசதியாய் வந்தமர்கிறாய்
 

எத்தனை முயன்றும் கிட்டாத வெற்றியில்
பார்வையாளனைப் போலிருக்கும் 

காதலுக்கு
சமாதானம் சொல்லமுடியா வார்த்தைகளை
கைக்கு கொடுக்கின்றேன்

காதலென்பது எழுதப்படாத தீர்ப்புகளில்
நிறைந்திருப்பதென்று


-ரேவா

பிடிபடா ஓசையில் பிறக்கும் இசை
கோடுகள் வரைந்தாகிவிட்டது
விட்டம் பார்க்க வசதியாய் இருக்கிறது
இவ்வீடு

சரிபார்ப்புகளில்
சரணடைதல்களில்
சாரணாலயங்களை கொண்டு வந்து வைக்கிறேன்

பறத்தலின் நிமித்தமோ
இளைப்பாறுதலின் பொருட்டோ
இடம் தேடி வருகிறாய்


வசதியாய் இருக்கட்டுமென
வளைத்தே தான் வைத்திருக்கிறேன்

உனக்கு முன்னால் வைக்கப்படும்
பிரியங்களின் வேர்க்கால்களில் 

பிடிபடா வண்ணம் 
விலகிச் செல்கிறது நிழல்

கேள்விகளுக்கு சரியான பதிலில்லை
பிடித்தங்கள் நியாபகங்களில்லை
சரிக்கு சரியென
தவறான நியாயங்களில்
தோற்றுப்போவதுதான்
வழக்கமான பழக்கமெனிலும்

அகிம்சை விதையில் கிளம்பும் 

மரங்களின் தான்
காதல் பறவையொன்று சங்கீதம் பாடுமென்று

எனக்குத் தெரியாமல் இல்லை


-ரேவா

கடைசித்துளியின் ஈரம்
யாருக்குத் தெரியுமென்பதைப்போல்
தெரியாமலே இருக்கிறது 

உன்னை பற்றிய என் பதில்

எடுத்து வைத்தவைகளை
எழுத்தில் வைப்பதை தவிர
வேறேதும் தெரியவில்லை
எனதிந்த காதலுக்கு

பட்டாம்பூச்சியின் வண்ணங்களைச்

சுமந்து வரும் சிறகுபோலவே
தூக்கிச்சுமத்தலின் சுகங்களை
நினைத்து சுவைக்கிறது
இவ்வுணர்வு

ஆர்பரிக்க
ஆரவாரம் செய்ய
ஆழ்ந்து பருக
காலத்தடம் பதிக்கவென
காத்துக்கிடக்கிற கடலளவு ஆசையில்
கரைந்து போகிறது
காலம்

வாழ்க்கைச்சாலையில்
ஏதாவதொரு சந்திப்பில்
முட்டித்திரும்பிகிற நினைவுக்கு பின்
விபத்துகள் நேராவண்ணம்
சீர்தூக்கி வைக்கிறேன்
உனக்கான காதலை

நிபந்தனைகள் ஏதுவுமில்லை
நிர்பந்தங்கள் ஏற்படவில்லை
இல்லாமையில் இன்னும் இன்னுமென
விழுந்து கரையத்தொடங்குகிற
கடைசி துளி
தீர்வதற்குள் தீர்ப்பெழுத
வா....


-ரேவாமெளன மொழி
சொல்லிக்கொள்ளாமல் பேசிக்கொள்ளுதலின்
சுவரஸ்யங்கள் குறித்து
உன்னிடம் கேட்டதில்லாது போயினும்
அளவெடுக்கும் உந்தன் கண்களில்
குறிப்பெழுதியே வைத்திருந்தாய்

மழை நீர் தேக்கத்தில்
கப்பல் விடும் சிறுவனாய்
உன் நினைவுத் தேக்கத்தில்
காதல்விட்டு
விளையாண்டு கொண்டிருக்கிறேன்

உனைக் கடக்கையில்லெல்லாம்
நெஞ்சிலேறிக்கொள்கிற கனம்
என்னை விட்டு வருகையில்
லேசாகிப்போகிறது

நீ கண்களை மூடிக்கொள்ள
இரவு தாழிட்டு  திறக்கப்பட்ட
எந்தன் கனவு தேடி
அலைய ஆரம்பித்தேன்

புரியப்படா உன் மெளனமும்
புரியவைக்க சேர்ந்துகொள்ளும்
தனிமையும்
காதலென்ற மொழிகொடுக்க
பேசக்கற்றறிந்த வேளையில்
பேசாமலே வந்துவிட்டேன்


நாளை நீயும்
என் மொழி அறியலாம்
அப்போது வா
சேர்ந்து பேசுவோம்
நம் மொழியை....

-ரேவா

வேர்விடுதலில் வளர்கின்றாய்

 

பெரும் காத்திருப்பில் சேமித்துவைத்திருக்கிறேன்
வாழ்வின் மீதத்திற்கான ப்ரியங்களையும்
இதுவரை பிடிக்காத சண்டைக்கான
காரணங்களையும்

பதற்றமிக்க இத்தனிமைபிரதேசத்தில்
மெளனத்தீ கொழுந்துவிட்டெறிய
கனவுச் சிறகசைத்து
உன்னை அடைந்திடுவேன்
தணிக்கைகளற்று

இல்லா உருவமொன்றை
அரூபமாய் ஏற்றாகிவிட்டது
இல்லாமைக்குள் இருப்புகொண்டு தவிக்கின்ற 

இளமைக்கு விலைவைக்கா கூட்டம் தேடி அலைகிறது
இந்நாட்கள்

வேகத்தடைகளென
முளைக்கின்ற உறவுதனையும்
சமவெளி நோக்கி இழுத்துச்செல்ல முயலுகையில்
முந்திக்கொண்டு நிற்கிறது

தனிமை

நிலம் உறிஞ்சிய மிச்சம் போக
வேர்கால்களில் சேமிக்க கிடைக்கின்ற
சிறுதுளியில் சில்லிட்டு துளிர்விட
எப்படியும் உன்னைத்தேடி அடைதலில்
வேர்விடுவேன்
இம்முறை 


-ரேவா

பயம்
பயமெனும் சாத்தான்
கோரமுகம் காட்டி கொடுக்கிறான்
தொலைவுகளை

எதிர்ப்படும் புன்னகையின் மணத்தில்
புகைய கிளம்பியவன்

பதிலாய் தருவது போலியென்றான பின்
தோல்வியின் முகத்தில் தொங்கல் விழுந்தது

எதுவும் தேவையில்லை என்ற
பதிலின் தேவைக்கு பின்னும்
சாத்தானுக்கான தேவையிருந்தது

இனி அவசரமில்லை
ஆர்ப்பாட்டமில்லை
இதயத்துடிப்பில் ரயில் நுழைய அவசியமில்லை

கைக்குலுக்கல் எனும் ஆரம்ப முடிவின்
கைவிளக்கில்
விழிக்கத் தொடங்கிய வெளிச்சம்
வாசல் திறந்து விடுகிறது 


 

தற்செயல் நிகழ்வு
ஒளிந்து கொள்வது சுலபமில்லையெனும் போதும்
மழைக்கு விரிக்கும் குடைத்தோகையில்
பட்டுத்தெரிக்கும் வண்ணச்சிதறல்களால்
வாசல் நிறைக்கும் நீர்கோலம் போல்
நனைதலே நடக்கிறது

நியாபகச்சூட்டை கிளப்பிவிடும் இதனிடம் 

இத்தனை கடுமையை எதிர்பார்க்கவில்லையெனினும்
திரும்ப திரும்ப இது நிகழ்கிறது

ஒன்றிரண்டு துளிகளோடு கரையட்டுமென
எடுத்துவந்த கண்ணீரை
நனையவிட்டு
கூட்டி வந்த பொழுதில்
தலை துவட்டிக்கொண்ட நினைவிற்குள்
தும்மல் எழுந்தது
தற்செயல் நிகழ்வாய் கூட இருக்கலாம்...-ரேவா

பிழைகள்
எப்படியும் நீ சொல்லக்கூடும்
அனுசரித்துக்கொள்லென

என் வானம் நிலவைத் தொலைத்து
வெகுநாட்களாகிறது

மிச்சமிருப்பவைகளை
மீட்டெடுக்க முடியாவிட்டாலும்
மீண்டும் வளருமென்ற
எண்ணத்தில்
வரைந்து வைக்கிறேன்
இவ்வாழ்க்கை பி(ழை)றைகளை...


தனிமையில் இல்லை

தனியாக எழுதும் வேளையில்
நான் தனியாக இல்லை


தனிமைக்காய் எழுதும் வேளையிலும்
அது தனிமையில் இல்லை


யாருமில்லையென்று எடுத்துவைத்த வார்த்தையிலும் 

தனிமையில்லை

உன்னைப் பற்றி என்னைப்பற்றிய நினைவெதுவும் 

தனியாய் இல்லை

யாருக்கோ துணைபோகின்ற நேரத்தில்
யாருமே தனிமையில் இல்லை


தனித்தனியே புழங்கிய பின்னும்
புழுக்கம் கொடுக்கும் உணர்வும்   

தனியாய் இல்லை

தனிமை தனிமையென்று எழுதித்தீர்த்தபின்னும்
தனிமை மட்டும் தனியாய் இல்லை


தனித்துவிடுவதெற்கென்றே
எழுதிவிட்ட இவ்வரிகள் கூட
இறுதிவரை தனித்து விட்டும்
இது தனியாய் இல்லை

பைத்திய கணம்
தனித்த உலகொன்றில் பயணிக்கிற கால்கள்
தனக்கென்ற பாதைதனை உருவாக்கியபடி நீள

பேசவோ
புன்னகைக்கவோ
அழவோ
ஆசுவாசம் பருகவோ
ஏதுமற்ற வெற்றுகோப்பையில்
தனக்கென்ற தனிமொழியொன்றை
பொதுவெளியில் உண்டாக்கி உரையாட

அசைவற்று கிடைக்கும் எதிலும்
உயிரொன்றை உருவாக்கி
உறவாடும்
மழைத்துளியைப்போன்ற
மனமொன்றை படித்தறியாதவர்களிடையே
நீங்கள் கேட்டீராத அக்குரலும்
அப்பாதையும்
அவர்களை பைத்தியமென்றே குறிக்கும்

அந்நாளில் அப்பைத்தியத்தின்
இவ்வரிகளை
நீங்கள் படித்துக்கொண்டிருப்பீர்கள்
அவர்களின் பாதையை கடந்தபடி...

சொல்லமுடியாததின் செல்லுபடியாக காரணங்கள்
எதையும் சொல்லமுடியாமல் போவதற்கு
எதையாவது சொல்லியது தான் காரணமென்று
நாம் சொல்லத் தேவையில்லை
 

சமாதானத்திற்கோ சிறு புன்னகைக்கோ
மன்னிப்பெனும் வலிமுறிவிற்கோ காத்திருக்கும் மனதும்

கொடூர மிருகமென அதன் மகுடிக்கு 
நம்மை ஆட்டிவைக்கலாம்
 
தவறை விழுங்க நினைக்கும் சரிகளும்
சரிக்கு பின்னிருக்கும் சரிதெரியாத தவறுகளும்
எப்படியும் தூங்கவிடப்போவதில்லை

அனாதையாக்கிவிடப்பட்ட காரணங்களுக்கு முன்
எதையும் சொல்லமுடியாமல் போவது
எதையாவது சொல்லியது தான் காரணமென்று
நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை
உங்களுக்கு ...

சொற்கள்
பேசுவதற்காகத்தான் உன்னை வரச்சொன்னேன்

வரும் வழியெல்லாம் மனம் பேசிய 
சொற்களின் அயற்சி
உன்னைப் பார்த்ததும் ஓய்ந்துவிடுமென்று
சத்தியமாய் நினைக்கவில்லை

மெளனமாய் இந்த நிமிடம் 
துளி புன்னகை இல்லை
சினேக விசாரிப்பும் இல்லை
நம்மிடையே சூழ்ந்திருந்த அந்த உன்னத உணர்வும் 
இந்நிமிடம் கிடைக்கவில்லை

பார்வை வழியே நினைவோட்டம் 
கொஞ்சம் நிதானித்து இருந்திருக்கலாம்  
என்ன செய்ய பேசமாலே வந்துவிட்ட
இச்சொற்களை

கனவின் விரிப்பு
இரவின் விரிப்பில் 
ஒவ்வொருமுறையும் கச்சிதமாய் வந்தமர்கிறாய்

 இந்த இடைவெளி அன்னியப்படுவதாய் நினைக்கையில்
ஆளுக்கொருமுறை அருகில் வர
அடைபட்டுப் போன இடைவெளி 
அகம் மறைக்கா குணம் காட்ட
அளவெடுத்த நம் மெளனம் 
ஆங்கே ஓர் இசை கொடுக்க
அளவின்றி வந்த அழுகுரல்
துளைத்தெழுப்பும் அடிமனதில்
விழித்துவிட்ட கனவொன்று 
அங்கேயே நிறுத்தி வைக்கிறது 
உன்னை

 

அனுபவ அறிமுகம்


நண்பனென அறிமுகப்படுத்தியும்
ஆணுக்கும், பெண்ணுக்குமான நட்பை
சில உறவுகளிடம் நியாயப்படுத்தவே முடியவில்லை 


அனைவரின் பயமும் 

அவரவர் அனுபவங்களில் கிடைத்த 
அவர்களாகவே இருக்கிறார்கள்.. 

வண்ணங்களில் வீற்றிருக்கும் ஓவியம்
உன்னை யாரென்று சொல்ல
உன்னைத் தொட்டே வரைகிறேன்
எனதிந்த சித்திரத்தை


புள்ளியில் ஆரம்பமாகி
பூகோளம அமைத்த இதனிடம்
அத்தனை சுகந்தமில்லையென்றாலும்
வெகு சிரத்தையோடு வரைகிறேன்


ப்ரியங்களுக்கென பச்சையையும்
கோவங்களுக்கென சிவப்பையும்
தாபங்களுக்கு நீலத்தையும்
நட்புக்கென்று வெள்ளையையும்
எனக்கேற்ப எடுத்துவைத்து எழுதிக்கொண்டிருக்கிறேன்


உங்களின் விருப்ப நிறங்களை
சிலாகிப்பதாய் நினைத்து
என் சித்திரத்தில் நீங்கள் தீட்டிப்போகும்
இக்கருப்பு நிறம்
எந்த தயக்கமுமின்றி
உங்களை அதன் நிறத்தில் சேர்த்துக்கொள்ள


விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கும்
இதனை யாரென்று சொல்ல
நீங்கள் கொஞ்சம் தனித்திருக்க வேண்டும் தான்...
-ரேவா

நன்றி : காக்கைச் சிறகினிலே 


வாழ்தல் இனிது
எழுதப் படிக்கத் தெரியாத அப்பாவும்
டிவித் திரைப்பார்த்து சரியாய் சொல்கிறார்
உத்தம புத்திரனென்ற படத்தின் பெயரை


தன் பிறப்புப் பற்றி குறைபட்டுக் கொள்ளும் அம்மாவும்
புதியாய் பிறக்கும் பூக்களை கண்டு கண்டு மகிழ்கிறாள்


இந்த ஆடையும் தனக்கு அழகாயில்லையென்று 

சொல்லும்போதெல்லாம்
கூடுதல் அழகாகிப் போகிறாள் தங்கை


இவ்வருட தீபாவளிக்கு கேலக்ஸி டேப்பிற்காய்
தன் சேமிப்பைத் தொடங்கிவிட்டான் தம்பி


தன்னிடம் இல்லாதவொன்றில்
இருக்குமொன்றைத் தேடத்தெரிந்தவர்
வாழ்வில் கிடைப்பதையெல்லாம்
கவிதையாக்குகிறார்கள்


முடியாதவர்கள் என்னைப்போன்று
கவிதையில் செய்கிறார்கள்
ஆகமொத்தம் வாழ்தல் இனிது
கவிதையைப்போல...நடக்குமொன்றில் நடக்காதவைநினைத்த ஒன்று நடக்கவேயில்லையெனும்போதும்
நடக்குமென்று நம்பத்துவங்குகிறது
மனம்
நடக்காதென்ற ஆழ்மன அறிவித்தல்களை
புறந்தள்ளியபடி

ஆனாலும்
நடக்காதவொன்று நடந்துகொண்டே இருக்கிறது
நினைத்தவொன்றில் பாதையை கடந்தபடி
இன்னும் காலமிருப்பதாய்
சொல்லிக்கொள்ளும் பொய்பூசலிலும்
அதுவே நடக்கிறது
நடக்குமென்று நினைத்தவொன்றின்
நடக்காதது

செவ்வாய், 27 ஜனவரி, 2015

தீரா மழையில் ஒரு கடிதம்தீரா மழையும், தீரவே தீராத நினைவுகளும், கடந்த ஒரு வாரமாகவே பருவகாலத்தை அழைத்து வந்து, அடித்துப் பெய்ததில் நிலம் இன்னும் தன் நிலைக்கு வரவில்லையென்பதை, எழுந்து நிற்கும் இந்த பொழுதிலும் உணரமுடிகிறது.

எங்கிருந்தோ வரும் குயிலின் குரலும், தட்டச்சு செய்கையில் வெளிப்படும் இந்த தனித்த இசையும், தேவாலயமொன்றின் வழியாய் காற்றில் கரைந்து வரும் மணி ஓசையும், கிடைத்த சொற்ப காய்ந்த பருக்கைகள், மழையால் தன் இயல்பைப் போன்ற சாயலுக்குள் திரும்பிய உணவை கரைந்து பகிரும் காகங்களின் சத்தமும், வீதிகளை சுத்தம் செய்யும் துப்புரவாளர்களின் கூக்குரலும், மழையின் வேகத்தைத் தாண்டி தன் தேடலின் வேர்களை ஆழ ஊன்றிவிட போராடும் காலடிச் சத்தங்களும், ஹாரன் சத்தங்களும், மழையின் இசையாகவே எனக்குத் தெரிகிறது.

மொட்டைமாடிகள் எப்போதும் மனதோடு பேசுபவையாகவே எனக்கு இருந்திருக்கிறது. அது மழைக்காலங்களில் மறக்காமல் விருந்தொன்றை வைத்து என்னைத் திணறடிக்கும் வேலையைச் செய்யத்தவறியதே இல்லை.

குளிர்வாடைக் காற்றும், மழையால் குளித்து அழகேறிக்கிடக்கும் வீதிகளும், அது தினசரிகளின் சூதாட்டத்தைக் கலைத்துப்போட்டதில் அடைகோழிகளாகிவிட்ட  மனித நடமாட்டமற்ற இரவும், சோடியம் லைட் வெளிச்சத்தோடு, என் மொட்டைமாடி பால்கனியில் வந்து உட்கார்ந்துகொண்டு குவளைத் தேனீர் கேட்கையில் உண்டாகும் உற்சாகம், ஒவ்வொருமுறையும் தீரா மழையை எனக்குள் வரவழைத்துக்கொண்டே இருக்கிறது.

நமக்குள் நாமே பேசிப்பார்ப்பது கிட்டதட்ட மன நோயாளியைப் போல் நாம் மாறுகிறோமோ என்று நம்மை நம்பவைக்கும் வேலையைச் செய்வதைத் தாண்டியும், நம் நேர்மையின் மீது நமக்கிருக்கும் கர்வத்தை இன்னும் கூட வலுவேற்ற வருவதாகவே இந்த மழை இருக்கிறது.

வெயிலில் பதமாக்க வைத்திருக்கும் துணிகளைத் தாங்கிப்பிடிக்கும் கொடிக்கம்பிகளில், வரிசையில் நிற்கும் மழைத்துளிகள், எதிர்படும் பிம்பத்தை தலைகீழாய் ஒரு சொட்டில் பிரதிபலிப்பதில் இருக்கும் இயற்கையைத் தாண்டி நாம் வளர்த்துவிட்டிருக்கும் இந்த பகட்டெல்லாம் ஒன்றுமற்றதென்பதை ஒவ்வொரு மழையும், ஒவ்வொரு துளியும், துளித்துளியாய் கோர்க்கும் ஈரமும் இந் நிலத்தின் சூழலுக்கேற்ப, வேரூன்றிக்கிடக்கும் சுபாவமும் எனக்குச் சொல்லிக்கொடுத்தவண்ணம் இருக்கவே செய்கிறது..

புத்தகத்தைப் படிப்பது போன்று மழையைப் படிப்பது.


உற்ற நண்பனோடு பேசுவது போலவே மழையோடு பேசுவதும்.

கையோடு சேர்த்துப்பிடித்துக்கொள்கையில் இருக்கும் சூடும், மழைக்காலங்களில் கையோடு ஆவிபறக்கப் பேசும் குவளைத்தேனீரும் வேறுவேறில்லையென்பது எப்போதும் என் எண்ணமாக இருக்கிறது.

எப்போதும் நானும் மழையிரவும் பேசிக்கொள்வதை ஏனோ இன்று பதிவேற்றிவிட வேண்டுமென்ற எண்ணம் ஏன் வந்ததென்பதைத் தாண்டியும் இதோ வளர்ந்துகொண்டே இருக்கும் இந்த பதிவை சட்டென்று உடைக்க அப்பா ஒரு கப் காபியை கணினியின் முன் வைத்துவிட்டு சென்றுவிட்டார், பருக காத்திருக்கும் இன்னும் சொற்ப நினைவுகளும் ஆவிகளோடு மேலெம்பி இந்த கணினித்திரையை வேடிக்கப் பார்ப்பதும் எனக்கு மழையின் இசையாகவே தெரிகிறது..


பருகத் தயாராகிவிட்டோம் எனில், ஒவ்வொரு மழைப்பொழுதும் நம் கைக்கு தேனீரோடு ஒரு பால்ய சினேகத்தைப் போல் நம் முன் உட்கார்ந்துகொண்டுவிடும்..

இதோ சூடு குறைவதற்குள் குடித்தாகவே வேண்டும் இந்த மழையை.மழை ஈரங்களோடு

-ரேவா

அலை விளையாட்டுஓர் அதிகாலைக் குளிர்ப்பொழுதில் உடல் சூட்டிற்காய் அருகில் வந்து சுருண்டுகொள்ளும் ப்ரிய பூனைக்குட்டியைப் போல் துயில்கொள்ளும் உன்னை பூனைக்குட்டியை அன்பு செய்வதைப் போன்றே தடவிக் கொடுக்கின்றேன்.. நீயும் உன் ப்ரியமும் நடுச்சாமத்தில் பூனை உருட்டும் பால்கிண்ணங்களைப் போல். அதற்குள் கொச்சை வாடையோ, பழையதின் தடமோ ஒரு போதும் இருந்ததே இல்லை.

உன் குரலின் கதகதப்பு எனக்கு குளிரின் வெப்பத்தையும், வெப்பத்தின் குளிரையும் தருபவை. அவை யாவும்  பருவங்களை ஏற்க பக்குவம் செய்த வழித்தடங்கள் தானென்று எனக்குத் தெரியும்  மோனா..

உன் அன்பு காட்டுத்தீயைப் போன்று என்னை கபளீகரம் செய்யும் ஒவ்வொரு முறையும் என் வனாந்தரத்துப் பறவைகளின் குரல் தான் எனக்கு நடுக்கத்தைத் தருகிறது. வெளியேறும் ஒவ்வொரு மிருகத்திலும் என் முகம் மாறி மாறி தெரிவதை நானே உணர்ந்திருந்த போதும் நீ அத்தனையையும் உள்ளடக்கி என்னை எரித்துக்கொண்டிருந்த இந்த வேள்வி தரும் தாய்ச்சூடு எனக்குப் புதிது தான்.

எதிர்கொள்வதில் இருக்கும் நேசத்தை மீறி அதை அறிவின் துணையோடு பார்க்கக் கொடுத்த உன் ஆளுமையின் மூக்குக் கண்ணாடி இன்றும் என் முகத்திற்குப் பொருந்திப்போவது பெருத்த ஆச்சர்யம் தான் எனக்கு.

சடசடத்துப் பெய்யும் மழை நாளில் இதழேற்கும் சூட்டோடு சினேகமாகும் தேனீர் சுவை நீ எனக்கு. அடிநாக்கின் கசப்புப் பற்றிய கவலை எனக்கு இப்போதெல்லாம் இருப்பதே இல்லை. எதுவொன்றும் இப்படித் தான் ஆரம்பமாகுமென்ற என் கணக்குகளின் விகிதத்தை மாற்றிப்போட்ட உன் வருகை என் வாழ்வின் அதிமுக்கிய வரவு.

இது காதலோ நட்போ எதுவுமோ இல்லை. இது நான்.. அது தான் நீயும்.

தனித்து அலையும் நாட்களில் ப்ரிய பூனையொன்று காலுக்கடியில் வந்து வந்து போவதைப் போல் உன் நினைவின் சிற்றலை  என் கரை மோதிச் சிரிக்கிறது..

நம் கடலில் பெரும் அமைதி. 
கருவறையில் தாயின் தொப்புள் கொடி மூலம் சுவாசம் வாங்கும் பிள்ளைக்குள் இருக்குமே ஒரு பயங்களற்ற அமைதி அது போன்ற அமைதி. 

 நீ என் வாழ்வின் கொடுப்பினை மோனா.

ஓவியம் : சுரேஷ் குமார்

மனக் கிறுக்கல்கள் 5
உணர்வுகள் கொண்டு கட்டி எழுப்பப்படும் மாளிகைகள் அழகானவை. அதன் நாடி நரம்பில் கலந்தோடும் இளஞ்சிவப்பின் சூடு தரும் செளகர்யம், உறவின் உயிர்வாழ்தலை உள்ளபடிச் சொல்லிப்போவதில், உயிர்த்திருக்கும் இந்நாட்களின் பச்சையுடம்பு பேறுகால தடத்தை தடவி தடவி இன்புறும் தாயைப் போல் மனதின் முகத்தை அழகேற்றுகிறது.. 

வழித்தடங்கள் திறப்பதற்காய் ஏற்கும் வலியாவும், ஓர் இனிய பிரசவித்திற்கு என்றென்னும் மனம் அத்தனை லேசில் வாய்ப்பதில்லை தான். இருந்தும் கத்திபடா ஒர் இயற்கை வழியை தேர்த்தெடுக்க. வலியேற்கத் தான் வேண்டுமென்பது, பழகப் பழக ஏறிக்கொள்ளும் மரத்தத் தோளைப் போல், நம்மை மாற்றிக்கொள்ளும் பக்குவத்தை தெரிந்தோ. அல்லது நாம் தெரியாமலோ வலிகள் நமக்கு கற்றுக்கொடுத்துவிடுகிறது. 

எப்போதும் போலல்லாத எப்போதையும் போன்ற ஒரு நாட்கள். நம்மை அழைத்துவந்து நிற்கவைக்கும் இடம். சட்டென்று எதிர்பாரா ஒரு மாற்றத்தை கையில் திணிக்கையில், ஏற்படும் சுவாசக்கோளாறில். மனக்கோளாறடையாது கடந்துபோக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டும் , அதை மீறி வரத்துணிய மேற்கொள்ளும் பயணம் தான் வழிகாட்டுதலின் வேரை ஆழப்படுத்தும்,அப்படியான சவால் நிறைந்த பயணங்களில் கிடைக்கும் சம்பவங்கள் வருபவருக்கு நிழல் கொடுக்குமென்ற எண்ணம் கடந்துவந்தவைகளுக்கான இளைப்பாறலாகவும் மாறும்.

இதில் ஒட்டுமொத்த மாற்றமும் ஒரு விதையின் மறைவில்  கிடைக்குமென்ற நிஜத்தின் காத்திருப்பிற்குப் பின், வளரக் காத்திருக்கும் பாசிட்டிவ் விசயங்களின் பார்வை வரப்பெற்றவர்கள் பாக்கியவான்கள்.  
அத்தனை லேசில் வராத இந்த பார்வைக்குப் பின்னிருக்கும் கோளாறு, நாம் பார்த்துப்பழகிய பிழைகளின் கோர்வையால் உண்மையைப் போல் வேடம் கட்டிக்கொண்ட  மெழுகு உருவமென்று மனதின் கண்கள் நம்பிடும் நேரத்தில் கிடைக்கும் புதிய உலகின் வெளிச்சம், முதல் ஒளியைக் காணும் குழந்தையின் கண்களைப் போல் பரிசுத்தத்தில் நிறைந்திருப்பது. 

மூளையையும் கண்களையும் தாண்டி மூன்றாவதாய் நம்மோடு கைக்கோக்கும் மனதின் குரல் உயிரணுக்களைப் போன்றது.. கணக்கற்ற செல்களில் தகுதியான ஒன்றே உயிராவதைப் போன்றே, நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தியும், , பேசிச் சிரித்து, சிரித்துத் துன்புறுத்தி, ஒரு நோயாளியைப் போல் பைத்திய நிலைக்குத் தள்ளி, நம்மிலிருக்கும் நம்மை நாமே உந்தித்தள்ள உதவும் குழப்பமான வலி நாட்கள் நமக்குக் கொடுக்கும் இந்த வாழ்வின் பிரசவ வலி அழகானவை தான்,,

நம் வாழும் நாட்களுக்கு நாம் தாயென்ற எண்ணம்,இந்த வாழ்வை இன்னும் நேசிக்க தூண்டுதலாய் இருக்கையில் இதைவிட பெரிதாய் நமக்கு வேறென்ன வேண்டும்..


தாய்மையோடு நேசிப்போம்..

தொடர்ந்து பேசுவோம்..


-ரேவா

Painting : Jaison Cianelli

மனக் கிறுக்கல்கள் 4சட்டென்று ஒட்டிக்கொண்டு விட முடியா சுபாவத்தின் பின், மனம் ஓர் உறவோடு விளையாண்டு பார்க்கும் உரிமையின் அளவீட்டில் உருமாறும் குணத்தில், சாத்வீகத்தை தக்கவைத்துக் கொள்ளுதலும்,   நம்மை நாமாய் அப்படியே ஓர் உறவில் வைத்திருப்பதில் காலம் மேற்கொள்ளும் நிலையாமையையும், ஓர் ஒப்பீடு ஓப்பிட்டளவில் மட்டும் நம்மிடம் தக்கிவிடுவதில்லையென்ற தத்துவத்தின் அடர்ந்த காட்டுப்பாதை, கையில் கொடுக்கும் கிளைப் பாதை அடக்கிய குறிப்புகளைக் கொண்டு கண்டுணர்தலில் கிடைப்பது வெறும் காட்சிகள் மட்டும் அல்ல.

ஓர் எளிய நம்பிக்கை பொய்த்துப் போகும் இடத்தில், எடுத்துத் தரத்துணியா எதுவொன்றும் போக்குக்காட்டும் ஆரம்பப்புள்ளியை அவசர அவசரமாய் தேடியடைகையில், அடைபட்டு நிற்குமிடம் அத்தனை ஆசுவாசத்தைத் தரத்துணிந்திடாது தான். ஆரம்பம் அவசரமாய் எழுப்பப்படுகையில் ஆட்டங்காணப்படும் அஸ்திவாரங்கள் அபாயகரமானது அதே நேரத்தில் அதன் உண்மைத் தன்மையின் கலவைகளை தேடியெடுக்கும் மனம் வாய்த்திருப்பின் அந்த இக்கட்டுத்தருணங்கள் கலைத்துவைத்திருக்கும் ஆட்டங்கள் சுவாரஸ்யமிகுந்த அழகான விளையாட்டும் கூட..

ஒரு பொம்மலாட்டக் கலைஞனின் கையில் நூலாகும் கதாபாத்திரங்கள்  கலைஞனின் அசைவுகளுக்கு உட்பட்டவை  தானென்று தெரிந்துவிட்டால் என்ன சுவாரஸ்யம் இருந்திடும் இந்த வாழ்க்கையில்..   நம்மையறியாமல்  நம் தலைக்கு மேல் கட்டப்பட்ட கயிற்றில் அல்லது வேறொருவரின் நூலில் நாம் கட்டப்பட்டு நம்மையறியாது நாம் அதில் கட்டுப்படும் தருணமும், கட்டப்பட்ட நூலின் மகுடிக்கு தலையசைத்து நம்மீது விஷம் கக்கும் மனிதர்களும், வாழ்வை வேறுவேறு நிறத்தில் நம் மனதில் வரைந்து காட்ட, வெயில் பொழுதால் நம் வாசலுக்கு வந்தவர்களென்ற பார்வைத் திரணை  நாம் சரியாய் பெற்றுவிட்டால் இருளின் வெளிச்சங்கள் நமக்குள் ஒரு புத்தனை வரவழைக்கும் யுக்தியைச் சொல்லிக்கொடுத்துவிடும் தான்..

அப்படியா என்ற அப்படியில்லாமல் போன அப்படிக்குப் பின்னால் எல்லாம் அப்படித்தான் என்று வாழ்ந்துகாட்டிய ஒரு ஜென் கதையை அண்ணன் வழி கேட்டு அதை ஒவ்வொரு காரணத்தின் மூலத்தின் அப்படியிலும் அப்ளே செய்துபார்க்க  கைக்கு வந்து சேரும் சம்பவங்கள் என்னளவில் கவனிக்கத்தகுந்தவை..

 கட்டுமானமோ அல்லது மீள்கட்டுமானமோ எழுந்து நிற்க எடுக்கும் கலவையில், உண்மைத் தன்மைக்கான பிரயத்தனங்களைப் பொருத்தே அது காலத்திற்கும் சாட்சிகளாய் நிற்கும்..

சாட்சிகளாக காட்சியில் நிற்பது வெறும் படிமம் மட்டுமே அல்ல என்பதின் வேர் உணர்வோம்

சாட்சிகளாவோம்..


இன்னும் மனதோடு பேசுவோம்


 -ரேவா

painting : Auguste Herbin

மனக் கிறுக்கல்கள் 3தொலைவுகளில் நெருக்கத்தையும், நெருக்கத்தில் தொலைவையும் அனுபவிக்கும் பயணம் என்றைக்கும் திகில் நிறைந்தது. அதன் ஏற்ற இறக்க வளைவுகளின் கவனச்சிதறல், கொண்டு நிறுத்தும் அதளப்பாதாளம், வழித்துணியற்ற காட்டுப்பாதையை கண் முன் விரிப்பதாகவே இருக்கிறது.

யாருக்காகவோ துணையாகும் பயணமும், துணைவருவதாய் உடன் சேர்ந்த கைகளும், காட்சிக்கு வராது போன இருட்டில் தாண்டிச் செல்வதின் வெளிச்சம் விரிக்கும் வைட்டமின்,  வெயில் பார்க்க பழக்குவதாகவே இதுவரையும் இருந்திருக்கிறது. வெயில் பார்த்ததும், பார்க்கும் அனைத்திலும் கண் வரையும் இருட்டை நிதானித்துப் பார்க்கும் அறிவே, எது சரியானது என்பதின் சூட்சும வித்தையைச் சொல்லித்தருவதாகவும் இருக்கிறது..

தனித்திருத்தல் பெரும் வரம். அதன் கூட்டாளிகளாய் மனம் விளையாண்டு பார்க்கும் ஆடுபுலி ஆட்டத்தின் காய் நகர்த்தல்கள்
காண்பதை எல்லாம் குறைசொல்வதில் தொடங்கி தான், எனது, என்ற ஆதித் திமிரால் ஆட்டமிழக்கும் பயணத்தில் தேங்கிவிடுவதும், எழுந்து நடப்பதும் எதுவரை நாம்? எதற்காக நாம் என்ற கேள்விக்குள்ளிருக்கும் விடையால் தெளிவது. 

தப்பித்தல்கள் தவறோடு சேர்ந்துகொள்ள, தப்புகள் சூத்திரங்களாகும் பழக்கத்தில் பிழைக்கும் கணக்கும், பிழையாகும் கணக்கும் வேறு வேறு தானே..

எதனோடும் போட்டிப்போடாது மனதோடு துணைபோகும் காலங்கள், பருவமாற்றங்களை யூகித்தறிய நமக்கு  காலம் கொடுக்கும் மருந்து தான். என்றைக்கும் கசந்து கிடக்கும் மருந்தோ, துரோகங்க்ளோ, புறக்கணிப்போ தான் புதிய பாய்ச்சலை, அல்லது புதிய உத்வேகத்தை நமக்குக் கொடுப்பதாகவே இருக்கிறது..


இனிய தொடக்கங்கள் எங்கிருந்து வேண்டுமானலும் தொடங்கும். மேற்கொண்டு அதை கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகளை மனம் எனும் பயணப்பையில் சேர்த்து வைத்தல் அவரவர் கடமை...

முட்டி மோதி வெளிக்கிளம்பும் விதைகளே மரங்களாகும்...

மரங்களாவோம்.

மனதோடு இன்னும் பேசுவோம்...

 நமக்குள் நாமே பேசிப்பார்க்கும் பழக்கம் இருக்கும் வரை வாழ்தல் இனிது...


painting :Lori McNee

மனக் கிறுக்கல்கள் 2காலார நடந்துபார்ப்பதைப் போன்று நமக்குள் நாமே பேசிப் பார்க்கும் சுவரஸ்யமான உருமாற்றத்தில், உருவம் ஏற்கும் நிலைக்கொள்ளாமையை புரிந்துகொள்ளவும், அதன் பின்னான சமநிலைக்கு மனதை கொண்டுசெல்வதும் ஒரு தனிப்பயிற்சி தான்..

நான்கு சுவர்களுக்கு மத்தியிலும் ஒரு குட்டி வானம் நமக்கே நமக்கென்று ஒரு வாசலை திறந்துவிடுவதில் தொடங்கும் ஆறுதலும், அது நமக்காய் கொண்டு வரும் பறவையின் குரல்களும், மழைக்கால வானவில்லும்,  நீல வானில் கூட்டமாய் சினேகித்துத் திரியும் பறவைகளும், அவ்வப்போது இரைந்திருக்கும் தானியங்களுக்காய் மொட்டைமாடி வாசலுக்கு வந்துவிடும் ஜோடிப்புறாக்களும் தான் இந்த சிறுநகரத்தின் மீதான நேசிப்புக்கு  ஒரு காரணமாகிவிடுகிறது..

எப்போதும் அதிகாலைகளில் காக்கைக்கு  உணவு வைக்கும் அப்பாவை, அந்த நேரத்திற்குள் வராது போனால் கரைந்து அழைக்கும் காக்கையின் நேசம் எனக்கு வியப்பானவை. (அதே நேரத்தில் பொறாமைப் பட வைப்பவையும் கூட.) அதன் கண்களில் விரியும் காத்திருப்பை. வெயில் அழிக்கும் பொழுதுவரை கண்ணார பார்ப்பதில் தொடங்கும் சுவாரஸ்யம் அதை செய்து பார்க்க என்னை இதுவரைத் தூண்டியதே இல்லை. ஒருவேளை அவ்வுயிரை நான் பொருட்டாய் நினைப்பதில்லை என்ற மனிதத் திமிர் காரணமாய் இருந்திருக்கலாம்...

வெயில் காலங்களில் அம்மா மொட்டைமாடியில் ஒரு பாத்திரத்தில் வைக்கும் நீரில் இளைப்பாறும் பெயர் அறியா பறவையும், அது தன் செய்கையை வாடிக்கையாக்கிக் கொண்டதின் பின் இது எத்தனை தூரம் சாத்தியமென்று, அப் பறவையை கவனிக்க அம்மா ஊற்றிய நீரை கீழே சிந்திவிட்டு வெற்றுக் குவளையை நான் வேடிக்கை பார்த்த பொழுதிலும் அந்த பறவை வந்து காத்திருந்த பொழுதுகளும், எனக்குள் ஈரம் துளிர்க்கக் காரணமாய் இருந்த பொழுதுகளாய் இருக்கலாம்..

தப்பித்தவறி மொட்டைமாடிக்கு கூட்டமாய் வந்துவிடும் பறவைகளை விரட்டுவதில், அதன் சத்தத்தோடு அந்த சிறகடிப்பின் இசை என்னை  கிளர்ச்சியடையச் செய்பவை.. அது பறந்துபோனதில் பறவைகளை பயமுறித்திய வெற்றிக் களிப்பை எப்போதும் ருசித்திருக்கின்றேன்..

இன்று கதை வேறாகியிருக்கிறது..

நேற்றைய நாளும் வெயிலில் உலர்த்த அம்மா மொட்டைமாடியில் வைத்திருந்த தானியங்களை, நிறங்களை/ இனங்களைத் துறந்த பறவைகளும் காக்கைகளும் குளுக் குளுக் கென்ற சத்தத்தோடு கொத்தித் திண்ண, அதன் அருகிலமர்ந்து பார்க்கின்ற சந்தோஷத்தின் பின், நம்மைப் பற்றிய பயமற்று இருக்கும் பறவைகள் இப்போது தன் கூட்டாளிகளோடு என்ன பேசியிருக்கும்?
அதற்கு நம்மை பற்றிய பிம்பம் என்னவாக இருக்கும்?
மாடியில் நாளையும் இது போன்று தானியங்களுக்காய் வந்து நிற்குமா?

அடுக்கடுக்க கேள்விகளை மனம் கேட்டுக்கொண்டே இருக்க,  காற்றில் ஆடிய துணியின் அசைவில் பறந்து போன பறவைக்கு இப்போது யார் மனிதர்கள்?


மனிதர்களைப் பற்றிய அதன் நினைப்பு என்ன ?

இப்படி எண்ணற்ற  கேள்விகளோடு மனதை உருட்டிக்கொண்டு இருக்கையிலே,

தூரத்தில் மாதா கோவில் மணியோடு காற்றில் தவழ்ந்துவந்த

நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்ற பைபிள் வாசகம் தற்செயலானதா?

எல்லாம் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும் வாழ்வு தான்.. கூட்டுவாழ்க்கையைத் துறந்த பொழுதுகளில் இந்த குட்டிவானம் நமக்கெல்லாம் பெரும் ஆறுதல்...

காலார நடந்துபார்ப்பதைப் போன்று நமக்குள் நாமே பேசிப் பார்க்கும் சுவரஸ்யமான உருமாற்றத்தில், உருவம் ஏற்கும் நிலைக்கொள்ளாமையை புரிந்துகொள்ளவும், அதன் பின்னான சமநிலைக்கு மனதை கொண்டுசெல்வதும் ஒரு தனிப்பயிற்சி தான்.


-ரேவா

மனக் கிறுக்கல்கள்
ஒரு பனிக்காலத்து மலர் சூடும் துளி நீரின் வாசம் சட்டென்றா பூத்து விடும்?  பருவங்கள் தாங்கி நிற்கும் இயற்கையோடு, இயங்கும் எதன் பின்னனியிலும் சூடிக்கொள்ள ஏதாவது ஒன்றை புறக்காட்சியில் அரூபமாய் ஒளித்து வைத்திருப்பதே இக்காலங்கள் நமக்கு கற்றுத்தரக் காத்திருக்கும் கவனிப்புகளின் ஆகப்பெரிய சூட்சுமம் தான்.

ஒரு வேளையை இன்னொரு வேளையாய் மாற்றும் தூரத்தில் தான் இங்கு உறவுகளின் பயணங்கள் இருக்கின்ற போதும், அந்தியை தேர்ந்தெடுத்து கூடடைவதே அனைவரின் சாதனையாய் இருக்க, இங்கொன்றும் அங்கொன்றுமாய் வேர்விட்டிருக்கும் விருட்சங்களின் நிழலை நாம் தேடியெடுத்து, அங்கே வெயில் விளையாட்டை நடத்துவதும், அதன் வேரோடு துளியாய் முளைத்திருக்கும் சிறு செடியின் பின் பச்சையக் கனவுகள் முளைப்பதும், அதை அதன் நிலத்தின் தன்மைக்கேற்ப வளர்த்துப் பார்ப்பதும் அனுபவ விளையாட்டின் ஏற்ற இறக்கங்களைக் கற்றுக் கொடுப்பதாகவே இருக்கிறது.

யூகிக்க முடியாத நேரத்தில் தோற்றுப் போகும் ஒரு வாதமும், அனுமானிக்க முடியாத காலத்தில் வந்து சேரும் ஓர் ஆறுதல் கையும் வேறு வேறா? ம்ம்ம் இல்லையென்று இப்பொழுதுக்குள் இயங்கும் மனது சொன்னாலும் புதிர் உடைத்து அங்கே  நம் கைகளை ஒப்படைப்பதில் தான் உட்கொண்ட பொழுதுகளுக்கான செரிமான வேலைகள் தொடங்க ஆரம்பிக்கின்றன.

இங்கு எல்லாமும் ஆரோக்கியம் தானென்பதை முதல் மனது நம்பத் தொடங்குகையில், கழன்று ஓடும் அத்தனையையும் டாக்சின்களின் வெளியேற்றத்திற்கான ஆரோக்கிய வேளைதான் என்பதை உணர்வைத் தாண்டி அறிவின் மனது ஏற்க ஆரம்பிக்கும் போது,  வெளிச்சங்கள் புலப்பட்டு, தலைக்கு பின்னிருக்கும் சகமனிதனின் ஒளிவட்டம் தெரியத் தொடங்குகிறது.

இங்கு எல்லோரும் சமானியர்கள் தான். அதே நேரத்தில் எல்லோரும் அசாதாரணமானவர்களும் கூட.

வாழ்வில் பயணப்படுவதென்பது ஓர் அனுபவம் தான், அந்த பயணங்களில் கற்றுத் தேர்ந்தவற்றைக் கவனிக்கத் தருகிறவர்களின் நிழலென்றும் இளைப்பாறுதலைக் கொடுத்திடும் என்பதில் தான், ஒரு சகமனிதனின் தாய்மைக் கருவறை வேலை செய்யத் தொடங்குகிறது.

பிரசவித்தலும், மனம் மலடாய்ப் போவதும் அவரவர் அறிவு அணுக்களின் வேலையென்பதைப் புரிந்து இணைந்தவர்களோடு சேர்ந்து பயணப்பதில் இந்த வாழ்தல் இனிதாகிறது
இனியத் துவக்கங்களோடு...-ரேவா

திங்கள், 26 ஜனவரி, 2015

என் கூடு
எழுத வாய்ப்பளித்த காலத்திலும், எழுத்து மட்டுமே நம்மை பிடித்துவைத்திருக்கும் காலத்திலும், எழுந்து கொள்ள ஏற்ற இடமாய் இருந்த இந்த இடம் சமீபங்களின் கவனமின்மையாலோ அல்லது மற்ற சமூகதளங்களின் மீதுள்ள தாக்கத்தாலே கவனிக்காமல் விட்டதில் போன வருடத்தில் வெறும் 30 கவிதைகளைத் தான் பதிய முடிந்ததென்ற வருத்தமும், இனி வரும் நாட்களில் அதை ஒழுங்கு செய்யவேண்டுமென்ற எண்ணத்தையும் இந்த புத்தாண்டில் ஒரு தீர்மானமாய் எடுத்துக்கொண்ட போதும், அதை செயல்படுத்தும் இந்த காலத்தில் படிந்திருக்கும் செளகர்யமென்ற பெயரின் அசட்டுத்தனத்தை நானே கடிந்துகொள்கிறேன்.

எத்தனை வசதிகளால் நம்மை நாம் அலங்கரித்துக்கொண்டாலும், நமக்கென்ற ஒரு வீடு எத்தனை பெறும் ஆறுதல்.. எங்கெங்கோ பயணப்பட்டாலும், ஓய்ந்து உட்கார நமக்கென்று காத்திருக்கும் சுவர் தான் எத்தனை பெரிய கொடுப்பினை, இப்போதெல்லாம் மனம் எதிலும் நாட்டமற்று திரிகையில், ஏனோ இந்த என் தாய்வீட்டில் மறுபடியும் என்னை மீள் உருவாக்கம் செய்ய துடிக்கிறேன்..

தனித்திருத்தலெனும் பெரும் வரம் கொஞ்சம் கொஞ்சமாய் சாபத்தின் வடிவிலே சில அசெளகர்யங்களைத் தந்திட்ட போதிலும் எழுத்தைப் பிடித்தே எழத்தெரிந்தவள் என்கிற முறையிலும், எனக்கென்ற இடம் என்னிடத்தில் எனக்கு ரொம்பவும் முக்கியமென்ற வகையிலும் மறுபடியும் என் தளத்தை புதிதாய் கட்டமைக்கிறேன்..

இனி என் சரிபார்ப்பின், கவனிப்பின், கற்றலின் வாசலை சரிசெய்துகொள்ளும் வாய்ப்போடு  வருகிறேன்...

-
ரேவா