உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 25 ஏப்ரல், 2012

இந்த செய்கையில் காதலுண்டா?.....





உன்னை பார்த்த
முதல் தேதியை குறித்தது,
உனக்கு பிடித்தவற்றை
பிரியத்தோடு பார்த்தது,
உன் கைகுட்டையில்
வேர்வை வாசம்
... பிடித்தது,
உன் காலனியில்
என் காலடிதடம் பதித்தது,
நீ வீசி எறிந்த
மிட்டாய் பேப்பரிலிருந்து,
பேருந்து சீட்டு,
சிகெரட் துண்டுவரை
அத்தனையையும்
பத்திரப்படுத்தும்
இந்த செய்கைக்கு
பெயர் காதலில்லை,
அதே நேரத்தில்
இந்த செய்கையில்
காதல் இல்லாமலும் இல்லை....



 

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

இதுவும் ஒரு தோல்விக்கவிதை




சுற்றித்திரிந்த பெருவெளிகளின்
சூடு இன்னும் குறைந்தபாடில்லை..

கண் பார்த்த தருணத்தில்
உணர்வுகளின் உந்தலில்
இது விளைந்ததா?
இதுவரை விளங்கவில்லை....

கதையளந்தோம்
கற்பிற்க்கான வரையறை வைத்தோம்
தொட்டு பேசிவிட்டு
தொடாமல் விட்டுச்சென்றோம்

சண்டையிட்டோம்,
பிடிவாதாம் கொண்டோம்
ஒருவரை வெல்ல நினைத்து
இருவரும் தோற்றே போனோம்

ஆள நோக்கி,
அறியாமல் அளவெடுத்து
முதல் முத்தம் பதித்த
அந்த இடம்
அழியாமலிருக்கும் விந்தைகண்டு
ஆச்சர்யப்பட்டோம்...

கதறியழுகின்றேன்
இந்த தோல்வி
இந்த பிரிவு
எங்கனம் சாத்தியமென்று...

விடை சொல்லி விடு..
அன்றில்
காதல் பழகிய
இடத்தில்
என்னை கொன்றுவிடு..

இல்லை வழக்கமாய்
உம் வர்க்கம் பயன்படுத்தும்
வார்த்தையால்
எம்மை வதைத்துவிடு..

அதையும் விட 
கொடுமையாய்
நீயே என் உயிரை 
பிரித்துவிடு..

நீயற்ற தனிமைக்கு
துணையாய் இருக்கும்
இந்த கவிதைக்கு புரியும் முன்
இப்பிரிவுக்கு
நீயே பெயர் வைத்துவிடு..
இல்லையேல்
இதுவும் ஒரு தோல்விக் கவிதையென
பொருள்கொண்டுவிடும்
நீயில்லாத இவ்வுலகம்






வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பெண் பார்க்கும் படலமும் பெயர் தெரியாத மாப்பிள்ளையும்.....



                 வணக்கம் வணக்கம் அட வணக்கமுங்க, என்னடா இந்த பொண்ணு ரொம்ப குலைவா பேசுறாளேன்னு பார்க்கிறேங்களா? எல்லாம் ஒரு மரியாதைதான்... பொம்பள புள்ளைன்னா இப்படி தான் அடக்க ஒடுக்கமா இருக்கனும்மாம், எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற பல்லு போன தாத்தா பாட்டி எல்லாம் சொல்லுறாங்க, அதான் நமக்கு வாராத ஒன்ன வரவைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்,, ஹி ஹி... இந்த பொண்ணுங்களும் சரி பசங்களும் சரி படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு போயிட்டாங்கன்னு வையுங்க, பக்கத்துல இருக்கிறவங்களும் சரி, சொந்தகாரங்களும் சரி நம்ம நிம்மதிய குழைக்க ஒரு நீயா நானாவே நடத்துவாங்க பாருங்க, யாரையும் விரும்புறையா? உனக்கு எப்படி பையன்வேணும், அப்படி இப்படின்னு ஏகப்பட்ட கேள்வி கேட்டு பாடா படுத்திருவாங்க..

    அப்படி சமீபத்தில நான் பட்ட அவஸ்தையை தான் சொல்லப்போறேன்... எல்லோருக்கும் சந்தோசமா இருக்குமே, அட ஆமாங்க, சமீபத்துல என்னை பொண்ணு பாக்க வந்தாங்க?!!! அவ்வ்வ்வ்வ்வ்,,,, நீ பொண்ணான்லாம் கேக்கக் கூடாது, அப்பறம்  நம்ம ஆமினாவோட சமையல் பிளாக் அஹ படிக்கச்சொல்லுவேன், நியாபகம் இருக்கட்டும்.... ஹி ஹி...ஏற்கனவே எனக்கு ஒரு அத்தை பையன் இருந்தான், அவன் அப்பாவுக்கு சமைச்சு கொடுத்து, என் கனவுல நானே மண்ண அள்ளி போட்டது எல்லாத்துக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன்..அன்னைக்கு நான் சமைச்சு கொடுத்து சாப்பிட்ட மனுஷன் தான் இன்னும் மதுரை மண்ணுல கூட கால வைக்கலங்கிறது நியாபகம் இருக்கட்டும்...அவ்வ்வ்வ்... நம்ம பட்ட கஷ்டமெல்லாம் வீணா போச்சே ரேவா...


    சரிங்க, நம்ம இந்த விஷயத்துக்கு வருவோம், என் கிட்ட திட்டுவாங்கின என் சொந்தகாரவுங்க ஒருத்தர் என்னை எப்படியாவது பழிவாங்கனும்ன்னு ஒரு வரனோட ஜாதகம் கொண்டுவந்தாங்க, என்ன ரேவா நல்லது தானே பண்ணிருக்காங்கன்னு சொல்லாதிங்க, அப்பறம் நான் திட்டுவேன்... பையன் என்ன வேலை பாக்குறாங்கன்னு தெரியுமா? தெரியுமா?...... அவ்வ்வ் போலீஸ்ங்க, நமக்கெல்லாம் காக்க காக்க ஜூர்யாவ பாத்து லிட்டர் லிட்டரா ஜொள்ளுவிடுற அளவுக்குதான் தைரியம் இருக்குங்கிறத நீங்க நோட் பண்ணிக்கன்னும்.. அப்பா பையனோட ஜாதகத்தை பார்த்துட்டு ஒரு ஜர்க்கு கொடுத்தாரு பாருங்க, நமக்கு அல்லு கலண்டுடிச்சு..அவ்வ்வ்வ்.. அம்மா ரேவதி ஒனக்கு இத விட நல்ல இடம் அமையாதும்மா, நான் நாளைக்கு பையன் வீட்ல இருந்து உன்னை பார்க்க வரசொல்லிட்டேன், நீ ரெடியா இருன்னு, நாட்டாமை தீர்ப்பு சொல்லுற மாதிரி நம்ம பக்கம்கூட பாக்காம சொல்லிட்டு போயிட்டாரு...

      விடிஞ்சும் விடியாமையுமா கஜினி முகமது படையெடுத்துட்டு வருர மாதிரி ஒரே கூட்டம், என்னன்னு எங்கம்மாட்ட கேட்டா? உன்னை பாக்கவந்த கூட்டம்டின்னு சொல்லிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்...என்னடா இந்த ரேவதிக்கு வந்த சோதனைன்னு நினைச்சு, வந்தவங்க போகட்டும் அப்பறம் கச்சேரிய வச்சுக்கலாம்ன்னு அமைதியா இருந்திட்டேன்.. ஒரு அம்மா என்னனா பாட சொல்லுது, இன்னோரு அம்மா என்னனா கவிதை சொல்ல சொல்லுது, இங்கிட்டு ஒருத்தரு நொய்யு நொய்யின்னு கேள்வியை கேட்டு கொழையா கொன்னுகிட்டு இருக்காரு... எனக்கு பொறுமை சுத்தமா போயி என் அப்பாவ பார்தேன் அத தப்பா புரிச்சுட்டு ஒருத்தர் மாப்பிள்ளைய பொண்ணு தேடுதுயா கொஞ்சம் பையனையும் கண்ணுல காட்டுங்கன்னு சொன்னாரு பாக்கன்னும்... நான் கேட்டேனா நான் கேட்டேன்னா ஒய் பெருசு இரு என்னைக்காவது என்கிட்ட மாட்டுவேல அன்னைக்கு இருக்கு இப்படி என் மெயின்ட் வாய்ஸ் பேச ஆரம்பிச்சிடுச்சு...(பெருசு இந்த இடம் மரியாதை குறைவாக இருக்கிறது ஆனாலும் மன்னிக்கவும்...)

            சரி போனா போகட்டும் பையனயாவது பாத்துவைப்போம்னு காத்துகிட்டு இருந்தேன், அட ஆத்தி... அட மடப்புரத்து ஆத்தா  அவ்வ்வ்வ்வ்.. அந்த ஆளு (மரியாதை ரேவா மரியாதை) அந்த மாப்பிள்ளை பையன் வரதுக்கு முன்னாடியே அவரு மீசை என் ரூமுக்கு வந்திருச்சு... அய்யய்யோ பெருச்சாலின்னு நான் கத்துன கத்துல வந்த கூட்டமெல்லாம் அங்கிட்டு இங்கிட்டுன்னு சிதறி ஒடிடுச்சு, என்னை பயமுறுத்துன அந்த பையன எங்கன்னு தேடுனா தேடுனா ஹி ஹி அத எப்படி என் வாயால சொல்லுவேன், நான் கத்துன கத்துல பையன் அரைகிலோ மீட்டர் தாண்டி ஒடிட்டு இருக்கிறாத சொன்னாங்க, ஹி ஹி அய்யோ அய்யோ, நம்ம கத்துக்கே பயப்பிட்டானே, இவனெல்லாம் சாரி இவரெல்லாம் நம்மள கல்யாணம் பண்ணிகிட்டா அவ்வளவு தான் போலிருக்குன்னு சிரிச்சுகிட்டேன்...அப்பறம் அந்த மாப்பிள்ளை பையனும் ஒருவழியா வீட்டுக்குள்ள வந்துட்டாங்க. பொண்ணு உங்ககிட்ட ஏதோ பேசனும்ன்னு ஒரு குரல்..( நான் எப்படா கேட்டேன் இதையெல்லாம், அட மாரியாத்த அந்த புள்ளைய வீடு போறவரைக்கும் பத்திரமா பாத்துக்கோன்னு வேண்டிக்கிட்டேன்).. அந்த பையன் நான் போய் பேசுறேன் ஆனா அந்த பொண்ணு மறுபடியும் என் மீசையை பாத்து கத்தக்கூடாதுன்னு சொல்லுங்கன்னு சொல்லிகிட்டே என் ரூமுக்கு வந்தாரு...............

                அய்யய்யோ அம்மா இங்கஒடிவாயேன்னு நான் கண்ணமூடிட்டு கத்த, கண்ண தொறந்து பாத்த பையனக்காணாம், ஹி ஹி ஒரேதா ஓடிட்டாரோன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன், சரி இந்த தடவ எதுக்கு கத்துனேன்னு கேக்குறேங்களா? இவர்தான் டா போலீஸ்ங்கிற மாதிரி அவர் வரதுக்கு முன்னாடி மீசை வந்தது அதுக்கப்பறம் அவரு தொந்தி வந்தது அத பாத்து தான் பூனையோன்னு நெனைச்சு மீ பயந்திங்.... டூ மச்சா இருக்க, ஹி ஹி கோவத்துல கல்லவிட்டு அடிக்கனும் போல இருக்குமே, அப்படியெதுவும் பண்ணிகிட்டு உங்க கம்யூட்டர் மானிட்டர கெடுத்துக்காதீங்க, அதுக்கெல்லாம் இந்த ரேவா பொறுப்பாக மாட்டா சொல்லிபுட்டேன் :)

          சரி கதைக்கு வருவோம், அப்பறம் ஒரு வழியா பையன்கிட்ட பேசி கீசி முடிச்சுட்டு எல்லாரும் கிளம்ப ரெடியா இருந்த நேரம் என் மாமா வந்தாரு, எந்த மாமான்னு தானே கேக்குறேங்க, அட  நான் சமைச்சத சாப்பிட்டு என் ஊரு பக்கமே தலைவக்காம இருந்தாரே அவருங்க அவரு... இப்போ எதுக்கு வந்தாருன்னு தானே கேக்குறேங்க, சஸ்பென்ஸ், அப்பா மாப்பிள்ளை பையன காட்டி மாமா கிட்ட பேசிட்டு இருந்தாங்க, சரி நமக்கு ஆயுள் தண்டனை கன்பார்ம் போல்ன்னு ரத்த கண்ணீர் எம் ஆர் ராதா மாதிரி உட்காந்திருந்தேன்.. மாப்பிள்ளை வீட்டுல எல்லாரும் கிளம்புறோம்ன்னு சொன்ன நேரம், என் மாமா, இருங்க ஒன்னுக்குள்ள ஒன்னாகிட்டோம் என் மருமக கையால ஒரு காபி குடிச்சுட்டு போங்கன்னு சொன்னாரு பாக்கனும்... அங்க நிக்கிறாரு என் மாமா. யூ டு மாமான்னு மனசுக்குள்ள அவர திட்டிக்கிட்டே காபி போட்டு வந்து எல்லாருக்கும் கொடுத்தேன்... முதல்ல பையன் தான் காதல் பார்வையோடு காப்பிய எடுத்து வாயில வச்சாருங்க, அய்யய்யோன்னு ஒரு சத்தம்.. எல்லாரும் என்ன பாக்க, கடைசி நான் அமைதியா இருக்கிறத பாத்து சத்தம் வந்த இடத்த பாத்து எல்லாரும் திரும்புனா திரும்புனா? ஹி ஹி பையன் வாயில ஒரே நுரையா கிளம்புறத பாத்து அவங்க அம்மா கத்துன கத்துதாங்க அது.. அடி பாவி என் பையன கொல்ல பாத்தியே, உன் சங்காத்தமே வேணாம் தாயின்னு கும்புடு போட்டு கிளம்பிட்டாங்க...


           அப்பாடா விடுதலை விடுதலை விடுதலைன்னு மனம் ஏககாலத்துல சந்தோஷமா பாட, அப்பாவுக்கும் மாமாவுக்கும் சண்டை, ஏங்க அவங்க கல்யாணதேதி குறிக்கிற வரைக்கும் வந்தவுங்கள இப்படி பண்ணிட்டேங்கன்னு அப்பா கேக்க, அதுக்கு மாமா அதெப்படி ரேவதி என் பையனுக்குன்னு இருக்கேல, அவள வேர ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ண நீ எப்படி முயற்சி செய்யலாம்ன்னு கேக்க? எனக்குள்ள சுசீலாம்மா சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் மாமான்னு பாட ஆரம்பிச்சுட்டாங்க. (இந்த பாட்டு சுசீலாம்மா பாடுனதான்னுலாம் கேக்கக்கூடாது மீ க்கு தெரியாது) கடைசில ரெண்டு பேரும் சமாதானமாகிட்டு ரேவாம்மா உன் மாப்பிள்ளைட்ட நீயே நடந்தத சொல்லிடு. அவன் உன் போன்னுக்கு காத்திட்டு இருப்பான்னு மாமா சொல்ல, டக்கால்ட்டி இந்த நேரம் பாத்து நான் கவுன்டர் கொடுக்கிறேனாம்!?! மாமா வந்த அந்த மாப்பிள்ளை பையன் பேரே எனக்கு தெரியாது அவர் கிட்ட எப்படி நான் சொல்லுவேன்னு, ஹி ஹி எல்லாருக்குளையும் ஒரு குட்டி போலீஸ் ஒளிச்சிட்டு இருந்தாங்கன்னு எனக்கு அப்போ தான் தெரிஞ்சது, என்ன கும்மு கும்முன்னு கும்மி எடுத்துட்டாங்க.................அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......



டிஸ்கி : வணக்கம் பாஸ் எதுக்கு இந்த டிஸ்கின்னு தெரிஞ்சிருக்குமே. ஹ ஹ அதே அதே இந்த நிகழ்வும் ஒரு கற்பனையே கற்பனையே, எனக்கு மாப்பிள்ளை பார்க்கவும் இல்லை, மாமா பையனுமில்லை... டாடா






செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இந்நாளைய தனிமை


 எவ்வித எதிர்பார்புமின்றி
வெற்றுடம்பை சுமந்திருக்கும்
இந்நாட்களில் 
இல்லை
அன்றைய நாட்களைப் போன்ற 
பெரியதொரு உற்சாகம்....

உறக்க கத்துவதைக் காட்டிலும்
மெளனம் 
பயங்கரமானதாக இருக்கின்றன
இவ்வேளைகளில்.

மெளனமுடைக்க 
இல்லாத ஏதோ ஒன்றிடம்
பேசி பேசி 
வெல்ல நினைக்கின்றேன்..

நீளும் இந்நாட்களை,
நாழிகையிலும், நிமிடங்களிலும்
மணிகளிலுமாய் 
கரைந்து கொண்டிருக்கின்ற
நினைவுகளை 
கடத்த ஏதுவாய் ஒன்றும் 
அமையவில்லை...

வரைந்து பார்க்கிறேன்
இசைத்து பார்க்கிறேன்
புரட்டி பார்க்கின்றேன்
எதிலும் நான் நினைத்த 
ஒன்று கிட்டவேயில்லை..

ஏதோ ஒன்றை மறக்க
எதனிடமோ த்ஞ்சமடைகின்ற
மனதுக்கு ஏனோ 
எதுவுமே பிடிக்கவில்லை..

சில நேரங்களில் எதையோ 
நினைத்தபடி,
கணத்திடும் இரவை துரத்தியபடி,
சிதறிக்கிடக்கும் மௌனங்களை 
சேகரித்தபடியென
நீள்கிறது 
என் இந்நாளைய தனிமை...








திங்கள், 9 ஏப்ரல், 2012

இது அது எதில் நான்?

 நன்றி : கூகிள்

 நான் எது எதுவாகவோ
ஆசைப்பட்டு
இன்று இதுவாக
இருக்கின்றேன்.
இந்த இதுவாகவே 
இறுதிவரை இருந்துவிட்டு
போகவும் விரும்புகின்றேன்,
இந்த இது எது? என்று
குறு குறுக்கும் மனதிற்க்கான
பதிலை அவரவர்
பார்வைக்கே விடுகின்றேன்..





சனி, 7 ஏப்ரல், 2012

மீண்டும் உன்னை கருவில் வைக்கிறேன்....



எம் சங்கமத்தில்
கிடைத்திட்ட
திரிசங்கு உலகம்
நீ..

வற்றாத எம் கனவுகளின்
வடிகாலாய் வந்தவன்
நீ..

நடைபயின்ற நேரத்தில்
எனை வளர்ந்த
அன்னை
நீ...

கிட்டாத பெயரையெல்லாம்
கிட்டித்தந்த
வள்ளல்
நீ...

புரியாத சேதியெல்லாம்
புரியத்தந்த
புலவன்
நீ..

கரைசேரா எம் கனவுகளின்
கலங்கரை விளக்கம்
நீ..

பிள்ளையாய் உனைபெற்று
பெற்றோராய் எமை
பிறப்பித்த எங்களின்
உயிரும்
நீ..

அரவணைப்பில் அன்னையாக,
அடத்தினில் பிள்ளையாக,
சண்டையில் எதிரியாக,
சமாதானத்தில் நண்பனாக,
பரிவினில் தந்தையாகவென,
எமக்கு பலவாறு தெரியும்
தசாவதார கடவுளும்
நீ..

பள்ளி சென்றாய்
’அ’ கரத்தில்
எனை நிறைத்தாய்,
உயிர் எழுத்தில்,
ஏனோ
உயிரற்ற பொருள்களை
வளர்த்தாய்...

பட்டம் பெற்றாய்,
படிப்பினை தந்தாய்..
அட்டவணைக்குள்ளே
எம் அன்பினை அடைத்தாய்..

திரைகடல் ஓடி
வசதிகள் வளர்த்தாய்,
வாய்ப்புகள் கொண்டு,
வளம்தனை நிறைத்தாய்,
வறுமையில் ஏனோ
எம் அன்பினை அடைத்தாய்..

விரும்பிச்செய்திலாய்
என்று
வெளிச்சமாய் அறிந்தாலும்
ஏனோ சமாதானம் கொள்ளாமல்
தவிக்குது மனது,
உன் அன்பு தொலைபேசிக்குள்
அடைபட்ட போது..

உனக்கென்ற ஒரு வாழ்வை
எமைக் கொண்டு அமைத்தாய்..
உன் மழலையை
என் மடியினில் நிறைத்தாய்..

பெறாத பேறுயெல்லாம்
உன்னை பெற்றாதாலே
பெற்றோம்,
இனி என்ன வேண்டுமென்று
இறைவன் எனைக்கேட்டாலும்
மீண்டும் உன்னை கருவில் வைக்கும்
வரமே வேண்டுமென்றே
கேட்டிடுவேன்..
மழலை உன் விரல் பிடித்தே
என் இறுதியை கழித்திடுவேன்...



வெள்ளி, 6 ஏப்ரல், 2012

முடிக்கத்தெரியாமல் ஒரு கவிதை



ஆலங்கட்டி மழைபோல
அழுத்தமாய் வந்துவிழுந்த
உன் பார்வையில்
திக்குமுக்காடிப்போனது
மனது....

எப்படி சாத்தியமென்றே
தெரியாமலே
பல சந்திப்புகள்...
காலம் மறந்த பேச்சுக்கள்,
காரணமறியா காத்திருப்புகள்,
மின் கடத்தும் பார்வைகள்,
உதட்டோர புன்னகையென
அத்தனையிலும் பொருளில்லை
பொறுப்பான காதலை
தவர..

நீ ஸ்பரிசம் தந்தாய்
நான் பரிசளித்தேன்...
எதற்காக என்று
இன்னும் விளங்கவில்லை...

எனக்கு பிடித்தவைகள்
உனக்கு பிடிகாதாவைகள்
எது எதுவென இதுவரை
நான் கேட்டதில்லை...
நீ சொன்னதுமில்லை...

நீ பரிசாய் தந்த
ஒவ்வொன்றிலும்
நீயிருந்தாய்..

நம்மை வெல்லத்துணிந்த
காதல் நிமிடங்களில்
நாமாயிருந்தோம்...

தடையில்லா காட்டாற்றைப் போல
வலிமறந்து, வழிமறைத்த
உன் காதல் பெருவெள்ளத்தில்
திளைத்த வேளைகளில்
மொத்தமாய்
தொலைந்துபோயிருந்தேன்
உனக்குள்...

இது எங்கே முடியுமென்று
தெரியாமல் சுழன்றோம்,
முடியாமல் இருக்க
முடிந்தவரை தொடந்தோம்..

அன்றும் அப்படி தான்
காலை சூரியன் மாலைக்குள்
ஒளிந்துகொண்டிருந்த நேரத்தில்,
என் கண்ணீரின் ஈரத்தை
உன் ஈரமுத்தம்
துடைத்தது வரை நினைவிருக்கு..

இதோ முடியப்போகும்
இந்த கவிதையைப் போலத்தான்
காரணமின்றி முடிந்து
போகிறது
சில காதலும்....