வலையுலக உறவுகளுக்கு வணக்கம்,
வருடத்தின் கடைசி நாள் வாழ்த்துச்சொல்லவோ இல்லை நன்றிகளை பரிமாறிக்கிறவோ எழுதப்பட்ட பதிவு இல்லை இது...ஒவ்வொரு வருட முடிவும் அதன் நியாபகங்களை தக்கவச்சிக்க, அழிக்க முடியா ஒரு சுவடை ஏற்படுத்திட்டு போகும், போன வருடம் தானே புயல் மூலம் தன் இருப்பை தக்கவச்சுட்டு போனது 2011.. இந்த வருடம் 2012 பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் தேசமா புது அவதாரமெடுத்திருக்கு நம் நாடு...
எங்க போயிட்டு இருக்கோம்ன்னு சத்தியமா தெரியலை..
வலியவர் விசயங்கள் என்னைக்கும் மேடை ஏறாதுங்கிற விஷயங்களை தெளிவா காட்சி படுத்திக்கிட்டு வருற விசயங்கள், 4 வயது குழந்தையில் தொடங்கி 45 வயது பெண்மையையும் சூரையாடும் வெறி, இதனால ஏற்பட்ட விவாதம், பிரச்சனை, ஆடை குறைப்பு தான் அடிப்படைக்காரணம்ன்னு சொல்ல அர்த்தமற்ற பேச்சு எல்லாமே நடந்த தவறுக்கு முகமூடி போடவைக்கிற நிலை தானே தவிர பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிற களமா இல்லை...
இனி பிறக்கும் வருடமாவது வன்கொடுமைகளில்லா ஒரு தேசமாய் மலரட்டும்...அப்படி இல்லாம இந்த நிலை நீடித்தால் நிச்சயம் இந்த தேசம் மலடாய்ப்போகும்...
வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் வீழ்கவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்.....
சந்தோஷமா இவ்வாண்டை வழியனுப்பி வைக்கமுடியா நிலையில் இருந்தாலும், நடந்தவைகள் நடப்பில் இருப்பவர் கண்களுக்கு எட்டட்டும்...
அடுத்தவர் சங்கடங்களை வெறும் செய்தியாய் கடங்கின்ற மனதும் மறைந்து போகட்டும்.
நல்லவை எதிர்பார்த்து காத்துகிடக்கிறோம்... நீயாவது எங்களை ஏமாற்றாதே 2013..
நடந்தவைக்கும் கிடைத்தவைக்கும் நன்றி 2012...
வன்கொடுமைகளின் தேசத்திற்குள் வருக 2013.......
நண்பர்களுக்கும் ஏற்றங்களை கொண்டுவரட்டும் இந்த புத்தாண்டு....
மாற்றம் படைக்க மனிதம் போற்றுவோம்.....
-ரேவ
இருப்பிடங்களை வெற்றிடமாக்கி
வெற்றிடங்களில் நுரைத்து தழும்பும்
நினைவுகளில் கோலேச்சில்
உன்னோடிருக்கிறேன்..
விடுவதாயும் இல்லை
விடைபெறுவதாயும் இல்லையென்ற
சமாதான சாஸ்திரங்களை
காதல்
கட்டவிழ்க்கும் காலமதில்
உன்னோடிருக்கிறேன்
சோகத்தின் அடர் இருளிலின்
கோரமுகத்திற்கு பயந்து
காட்சிகொண்ட
காட்டிக்கொண்ட தைரியத்தின்
பெரும் நிழலில்
காதலென்னை காட்டிக்கொடுக்க
உன்னோடிருக்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
உனதறைகள் திருடி
அவசியப்படுகையில் புணர்ந்து வெடிக்கும்
கவிதை விந்தின் பாய்ச்சலில்
உன்னோடிருக்கிறேன்
அவசியங்கள் காதலாகாதென்று
அறியவைக்க
அடர் இருளை போன்றதொரு
அமானுஸ்யம்
உனதருகில்
உண்டென உணர்ந்தும்
உன்னோடிருக்கிறேன்
நீ காட்டிக்கொடுத்தவைக்கு
காதலென்று பெயரிட்டு
கழுவிலேற்றும் கனவுகள்
எனதென்று அறிந்தும்
உன்னோடிருக்கிறேன்
வேறென்ன
எப்போதும் போல ஏமாந்த சிந்தாந்தம்
விடுவதாயும் இல்லை
விடைபெறுவதாயும் இல்லை
கொஞ்சம் கொஞ்சமாய்
இருட்டில் கலந்து
கரைந்து போகிற
சுயத்தின் சிதைவுகளை
ரசித்தபடியே
உன்னோடிருக்கிறேன்
-ரேவா
ஆழம் பார்க்காமல்
அதிகம் தேடாமல்
அவசரமாய் ஒரு திரைச்சீலை
அவசியம் தேவைப்படுகிறது
நமக்கு..
ப்ரியக்கண்கள் மத்தியில்
பிரியாமல் நமைத்தொடரும்
கேள்விகளை
பெரிதாய் - யாரும்
சட்டைசெய்யாத போதும்
சாட்டையடியாய் வந்துவிழும்
இப்பார்வைகளின் வீரியம்
விழித்திருப்பவனுக்கே
புரியுமாதலால்
இப்படியும்
அப்படியும்
எப்படியோ ஒப்பிட்டு
எதன் எதற்கோ
பொருளிட்டு
பொய்யை மெய்ப்பிக்கும்
பொருளில்லா
இவர் பொருளில்
புதைந்துள்ள
பொருளனைத்தும்
புறம் பேசும் மனமன்றோ...
ஓப்புக்காய் அன்புவைத்து
ஓயாமல் உழலும்
இவர் நாக்கில்
ஓப்புமை உயருமென்றால்
ஓங்கிவளரும் நம் நட்பின்
பொருள் தானென்ன?
இச்சிநேகத்தின் சிறு நாடி
சில்லு சில்லாய் நொறுங்கிப்போக
சிக்கிட்ட
இம்மனிதருக்காய்
ஆழம் பார்க்காமல்
அதிகம் தேடாமல்
அவசரமாய் ஒரு திரைச்சீலை
அவசியம் தேவைப்படுகிறது
நமக்கு..
- ரேவா