உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 மார்ச், 2012

அடர்காடு அது


இருள் சூழ்ந்த
இவ்வடர்காட்டின் 
ஆழமறியாமல்
கடக்க துணிகின்றேன்
நான்...

புலங்கியறியா 
பாதையாதனால்,
எவ்வளவு தொலைவு
என்று புலனாகாமலே
சிறிது சிறிதாய்
கடக்கின்றேன்..

ஆழமாய்ச்செல்லச் செல்ல
புதையுண்ட
ஆசைகள், கனவுகளென,
அத்தனை நிகழ்வுகளும்
கிளைபரப்பி, 
தன் நிகழ்வுகளை 
தக்கவைத்திருக்கின்றன
அக்காட்டில்.. 

மேலும் மேலும்
ஆழம் செல்லச் செல்ல,
நிறைவேறா
பல நிகழ்வுகளும் 
அழுத்தமாய்  
என்னை பார்கின்றன..

நிறைவேறா நிகழ்வுகளின்
விவரமறிந்தாலும்,
இன்னும் எப்படி 
வடிவமிழக்காமல்
 இருக்கிறதென்ற
சந்தேகத்தை விதைக்கிறது
அக்காடு..

தண்டிக்கப்பட்ட சில 
நிகழ்வுகள்,
வனப்பிழந்து
வாய்திறந்து விடுவிக்க 
கெஞ்சுகிறது..

தொண்டையில் 
சிக்கிய முள்ளாய் 
வார்த்தை 
வர சக்தியற்று,
அந்த நிகழ்வுகளை 
அசைபோட்டு பார்க்கையில்,
அவமானமும்,
குற்ற உணர்வுமே 
மேலிடுகின்றது 
அவ்விடத்தில்..

யாருமில்லா அக்காட்டில்
நிறம்பிக்கிடக்கின்ற
அத்தனையும்
என் ஆழ்மனதில்
நான் விதைத்துவிட்டிருந்தது
என்று புலனாகிறது..


அப்படியானால்
அக்காடு....?...!!!!!!

என் எண்ணக்குமுறல்களுக்கும்
நிகழ்வுகளுக்கும், 
ஆசை,கனவு
தோல்வி
ஏமாற்றமென 
பெயர்வைத்து
நான் அடைத்து வைத்த 
என் மனக்கிடங்கோ
அக்காடு...
முந்தய பதிவு : காதலர் பேச்சு


வியாழன், 29 மார்ச், 2012

காதலர் பேச்சு..
ஏதேதோ
பேச நினைத்த
வேளைகள்,
புரிந்தும் புரியாமலுமாய்
பல உரையாடல்கள்..
உனக்கு மட்டுமே
புரிந்த
என் மெளனம்,
இன்னும் இன்னும்
என தாகம் கொண்ட
பேசித் தீர்க்கா
வார்த்தைகள்,
எதைச் சொல்ல,
எதை மெல்லவென
புரியாத பதட்டம்..
 என அத்தனையும்
அரங்கேறும்
காதலர் பேச்சில்...


முந்தைய பதிவு : தீயிலெறியும் ஆசைகள்

செவ்வாய், 27 மார்ச், 2012

தீயிலெறியும் ஆசைகள்

 நன்றி : கூகிள்


பிறந்த அன்றே
கள்ளிப்பாலுக்கு
காவுகொடுக்கப்பட்டது
என் வாழ்க்கை..

விதியின் பயனாய்
வழியில்லா இடத்தில்
வக்கற்று பிறந்தேன்..

கருவில் இருக்கையிலே,
சிங்கமென்றான் அப்பன்,
சீமானென்றாள் அம்மா,
குலம் தழைக்க வரும்
வித்தென்றாள் பாட்டி..

நாள் தள்ளத் தள்ள
கருப்பையை முத்திக்கொண்டு
வந்து விழுந்த
என்  உடலைக்கண்டு
அரைமயக்கத்தில்
ஆனந்த கண்ணீர்விட்டாள்
அன்னை..

ச்சீ பெண் என்றாள் பாட்டி
தானும் பெண்னென்பதை
மறந்து..

நகைவிற்கிற காசில்,
இதுக்கு கல்யாணமுடிக்கவா
கேள்வியோடு,
நாலு நெற்மணிகளை
அள்ளிக்கொண்டு வந்தார்
ஊர் பெரியவர்..

கொடிசுத்திவேற
பொறந்திருக்கு என்ற குரலால்
தாய்மாமன் இரக்கத்திற்க்கும்
இரங்கல் வாசிக்கப்பட்டது,
அங்கு..

பாரபச்சமின்றி,
எல்லார் குரலும் ஓங்கியடங்க,
புரிந்ததுயெனக்கு
பிறக்கையிலே
பாசக்கயிறோடு
வந்தவள நான் என்று..

தாயின் தனத்தில்
ஒரு சொட்டு பாலும்
அருந்தியறியா
எனக்குள் கள்ளிப்பால்
சொட்டு சொட்டாய்
செல்லச்செல்ல,
 நான் வந்த உலகிற்கே
திரும்பிச்செல்கின்றேன்..

மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட 
வேண்டுமாம்
எங்கே அந்த பாரதி,
கூட்டி வாருங்கள் 
என் சிதைக்கு,
தீயிலெறியும் என் ஆசைக்கு
ஒரு இரக்கல்பா 
எழுத...
திங்கள், 26 மார்ச், 2012

வேண்டுமெனக்கு.....அன்னையின் வடிவில் நண்பன்,
அழைக்கும் நேரத்தில் ஆறுதல்,
பசிக்கும் பொழுதில் உணவு,
படிக்கும் நேரத்தில் புத்தகம்,
படுத்தவுடன் உறக்கம்,
கொஞ்சம் கொஞ்சம் சந்தோஷம்,
சரிபரிணாமத்தில் முன்னேற்றம்,
நண்பனை போன்ற எதிரிகள்,
எதிரியை தாங்கும் வலிமைகள்,
உரக்க்ப் பேசும் உதடுகள்,
உண்மையை உரைக்க உரிமைகள்,
எளிமையை நாடும் இதயம்,
பழையதை மறவாத மனம்,
தூக்க நேரத்தில் மெல்லிசை,
துக்க நேரத்தில் உன் குரலோசை,
மெளனம் கலைக்க உன் மொழி,
ச்ப்தமாய் அழ தனியறை,
காலாற நடக்க தனிமை,
கைகோர்த்து நடக்க குளுமை,
வசதிக்கு தகுந்த வீடு,
வாய்ப்பு ஏற்ப அலங்காரம்,
தடைகளை மீறய பயணம்,
ஆபத்தை சொல்லித்தர  அனுபவங்கள்,
கொஞ்சி விளையாட பொம்மைகள்,
கொஞ்சம் யோசிக்க சில பொய்கள்,
அவ்வப்போது எதிர்கால கனவுகள்,
எப்போதும் வந்த பாதையின் நினைவுகள்,
சுகம் கொள்ள சொந்தங்கள்,
சுற்றியும் கொஞ்சம் நட்புகள்,
வீட்டைச் சுற்றி செடிகொடிகள்,
வீட்டிற்க்குள் சில இனங்கள்,
ஆறுதல் தர என் கவிதைகள்,
ஆராதனை செய்ய உன் படம்,
எப்போது சாத்தியமோ
அப்போது நிலாச்சோறோடு 
அன்னை மடி,
மழை நேரத்தில் வீட்டுஜன்னல்,
மாலை நேரத்தில் அவன் மடி,

பழைய நட்பாய் தொடரும் உறவுகள்.
கொஞ்சம் சண்டை, 
கொஞ்சம் இன்பம்,
கொஞ்சம் புகழ், 
கொஞ்சம் பணம்,
கொஞ்சம் அழுகை,
கொஞ்சம் நிதானம்,
கொஞ்சம் திமிர்,
நிறைய நான்
என்றும் எளிமையென 
அத்தனையும் வேண்டுமெனக்கு..


 முந்தைய பதிவு : துளி துளியாய் காதல்

வெள்ளி, 23 மார்ச், 2012

துளி துளியாய் காதல்

 என் கவிதைகள்
அனைத்தும்
உன் குறும்புத்தனத்தில்
விளைந்தவை..
ஒரு போதும் நிறுத்திவிடாதே,
உன் குறும்புத்தனத்தை
கோவித்துக்கொள்ளும்
என் கவிதைகள்...
           *
என்னை பார்க்காமல்
ஒதுக்கும்
உன் கண்களில் தான்
நமக்கான காதல்
ஒளிந்திருக்கின்றது..
           *
எழுதாக் கவியாகிறேன்
உன் ஒவ்வொரு
பார்வையிலும்...
         *

வேண்டாம் வேண்டாம்
என்றாலும்
வேண்டும் வேண்டுமென்ற
என் வேட்கையைத் தூண்டுகிறது
உன் பார்வை ..
     *

என் கவிதைகள்
அனைத்தும் கற்பனையே..
ஆனால்
என் காதல்
கற்பனையில் கிடைத்த
வரம்...
     *

என் எல்லாக்கவிதையை
விடவும்
உன் முத்தம் பெற்ற
என் முதல் கவிதையே
என் மொத்த கவிதைக்கான
முதலீடு...
     *

கந்துவட்டிக்காரன்
மாதிரி
பிச்சு பிச்சு
காதல் கொடுக்கிறாய்..
முத்தம் என்று வந்துவிட்டால்
மொத்தமாய் கேட்கிறாய்
கொலைகாரா?...!!!!
    *

உன் ஒரப்பார்வைக்காய்
தன்னை மேலும் மேலும்
அழகாக்கிகொண்டே
போகிறது
என் கவிதைகள்..
     *
உன் காதலை
என் கவிதையில்
மிஞ்சவேண்டுமென்பதே
என் வாழ்நாள் தவம்..
    *

சொர்க்கத்தையும்,
நரகத்தையும்
ஒரே மூச்சில்
எப்படி காட்டிவிட்டு போகிறாய்..
தூரப்புன்னகை,
கிட்ட வந்ததும்
அனல் பார்வையாய்...
     *

 ஆயிரம் முறை
என்னை
அழகு படுத்திய சந்தோஷம்
உன் அரை நிமிட
தலைகோதலில் கிடைத்துவிடுகிறது
எனக்கு...
     *

கடலலையில் காலடித்தடம்
தேடும் குழந்தையாய்
மாறிப்போகிறேன்,
உன்னுள்
என்னை
தொலைத்துவிட்டு...
     *

நானே மொழியாகிறேன்
நீ என்னை
வாசிக்கும் போதெல்லாம்..
நானே கவியாகிறேன்
நீ என்னை
நேசிக்கும் நேரங்களில்லெல்லாம்..
     *

உனக்கு பிடித்ததை
தெரிந்து வைத்திருக்கிறேனோ
இல்லையோ
உன் கோவத்தை
ரசிப்பதற்க்காகவே
உனக்கு பிடிக்காதவைகளை
நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றன
என் செய்கைகள்..
     *

இலக்கணங்கள் மீறும் போது
புதுக்கவிதையாகிறது,
நட்பு மாறும் போது
காதலாகிறது...
     *


முந்தைய பதிவு : இது அதுவா?


திங்கள், 19 மார்ச், 2012

இது அதுவா?

 நன்றி : கூகிள்மூடிய விழிகளுக்குள்
ஒரு கருநிற 
போராட்டம்...

சொல்லமுடியா 
இடத்திற்கு என்னை
இழுத்து வருகிறது
அது...

கைகட்டி, விழி மூடி
பதுங்கிக் கிடக்கிறது 
அந்த அடர் இருட்டில்...

கொஞ்சம் கொஞ்சமாய்
தைரியம் கிளம்ப,
மெளனமாய் 
என் அருகில் வருகின்றது

அது.
 
பின்னர் வாய் திறந்து 
வசிய மொழி 
பேசிச்சிரிக்கின்றது ..

என் பக்கம் அமைதி தவழ
குரல் உயர்த்தி 
ஓலமிட்டு 

கவனமீர்க்க துணிகின்றது
அது..

என் கவனம் அதன் 
மீது திரும்ப,
கொடூர புன்னைகை ஒன்றை
உதிர்க்கிறது..

என்னோடு பேசிக்கொண்டே
பூட்டிய நெஞ்சத்தில்
புதைந்திருந்த 
என் ஆசைகளை
தூசிதட்டி எடுக்கிறது.

விடுவித்த மகிழ்ச்சியில்
கால் முளைத்த 
அதுவும்
நிற்காமல் ஓடிக்கொண்டே 
இருக்க..

கொஞ்சம் கொஞ்சமாய்
உள்ளுக்குளிருக்கும்
கற்பனைகுவியலை 
கண்டெடுத்துக்கொண்டே 
இருக்கிறது
அது...

பிடித்தும், பிடிக்காமலும்,
பிரியங்கள் தொலைத்தும்
காரணம் ஏதுமன்றி
அழிக்கப்பட்ட 
நினைவுகளை பரிசீலித்து
எடுத்த இடத்திலே வைக்கிறது
அது..

அழிக்கப்பட்ட பக்கமென
இருந்த ஒன்றில்,
பதப்படுத்தப்பட்ட நினைவுகள்
பத்திரமாய் இருப்பதை பார்த்து
அதை அவசர அவசரமாய்
புரட்டிப்பார்க்கிறது
அது..

கடைசியில் 
ஏதோ ஒன்றை 
கண்டெடுத்த மகிழ்ச்சியில்
அந்த நினைவுக்கு
புத்துயிர் அளித்துச்செல்கிறது
அது..

இயல்புகள் மீறி
ஏதோ ஒன்றின் வலி
நெஞ்சை கணக்க,
விழிகளை திறக்கையில்
மறந்த ஒன்றின்

 நினைவுகளில்
என்னை மீட்டிவிட்டுச்செல்கிறது
அது..

அது
அதுவொரு
கனவு...


திங்கள், 12 மார்ச், 2012

நினைத்தாலே இனிக்கும்


 நன்றி : கூகிள் டீச்சர்


ரேவதி மணி எட்டாச்சு எந்திரி, ஆயாம்மா வந்திடுவாங்க, ஸ்கூலுக்கு போகன்னும்ல,

போமா இன்னைக்கு எனக்கு காய்ச்சல் நான் போகமாட்டேன்...

ஒழுங்கா எந்திரி இல்லாட்டி அடி வாங்குவ,

ஜய்ய போ, நான் போகமாட்டேன்.....

எழுந்திரிடி, பொம்பள பிள்ளைக்கு என்ன வீம்பு, கொன்னுடுவேன்...

 நான் போகமாட்டேன் போகமாட்டேன் போகமாட்டேன், அப்படியும் மீறி என்ன ஆயாக்கூட அனுப்பு விட்ட நான் அது கைய கடிச்சிட்டு எங்காயாவது ஓடிப்போயிடுவேன் போ...

கொடுமைக்காரி,  lkg படிக்கையிலயே என்ன இந்த பாடு படுத்துறயே, இன்னும் போகப்போக என்ன பாடு படுத்துவ...

என்னடி அங்க சத்தம்....

சும்மா பேசிட்டு இருந்தேங்க...

ஏங்க உங்க புள்ள ஸ்கூலுக்கு போகமாட்றா...

 இப்படி தாங்க ஆரம்பிச்சது என் பள்ளி பருவம்... பிரகாஷ் அண்ணன் மாதிரி வகுப்பு வகுப்பா சொல்ற அளவுக்கு நம்ம கிட்ட சரக்கு கிடையாதுங்கோ...அதால பள்ளின்னு நினைவுக்கு வந்தாலே உதட்டோரம் புன்னகை வரும் சில நிகழ்வுகளை பத்தி சொல்றேன்....

படிப்புல சுட்டின்னு சொல்ல முடியாது, ஆனாலும் ரேவதின்னா நான்னு அடையாளம் தெரியிற அளவுக்கு படிப்பு இருக்கும்...L.KG UKG  இங்கிலிஸ் மீடியத்துல படிச்சேன், பொம்பள பிள்ளைக்கு அப்படி பணத்தைகொட்டி படிக்க வைக்கனுமான்னு என் அப்பத்தா சொல்ல, அடியேனின் படிப்பு தமிழ் மீடியத்துக்கு தாவுனது...

ஒன்னாப்பு படிக்கும் போது என் கிளாஸ் மிஸ் என்ன தூக்கி வச்சிக்கிட்டே இருப்பாங்க, நாங்க அவ்ளோ அழகு அப்போ ஹி ஹி , ( யாருப்பா அங்க, சிறுசில பன்னிக்குட்டிக்கூட தான் அழகா இருக்கும்ன்னு சொல்றது )..

பெரும்பாலும் நட்புன்னு யாரையும், அடையாளம் காணமுடியாத வயசு, சிலேட்டு குச்சிக்கு சினேகம் பிடிக்கிற மனசு, பள்ளி நாளே ஏதோ வெறுப்பா இருக்கும், அதுவும் லீவு முடிஞ்சு, திங்க கிழமை ஸ்கூலுக்கு போறது,விசத்த சாப்பிடுற மாதிரி இருக்கும், என்ன படிக்க வைக்க பட்ட பாட விட, ஸ்கூலுக்கு விட பட்ட பாடு என் அப்பாவுக்கு தான் தெரியும்..

இதுவரைக்கும் என்ன என் அம்மாவும் சரி அப்பாவும் சரி அடிச்சது கிடையாது, முத முதலா விரத்த தழும்பு வாங்கினது அஞ்சாங்கிளாஸ் படிக்கும் போது, இன்னைக்கும் அந்த நிகழ்ச்சிய நினைச்சா, சிரிச்சிட்டே இருப்பேன், அப்படி என்ன நடந்ததுன்னு கேட்கிறேங்களா?.. மீசிமா மீ பெ வா ன்னு 5வகுப்பு கணக்கு இருக்கும், அத டீச்சர் எழுதிப்போட்டு எல்லாரையும் விடை கண்டுபிடிக்க சொல்லிட்டு இருந்தாங்க, நானும் கண்டுபிடிச்சாச்சு, நம்ம பிரண்ட் முடிக்கல, சரி அவளும் முடிக்கட்டும், 2பேரும் சேர்ந்து போய் கையெழுத்து வாங்கலாம்ன்னு காத்துகிட்டு இருந்தேன், பயபுள்ள முடிக்கிற மாதிரி தெரியல, என் நோட்ட பாத்து எழுதுடின்னு சொல்ல, அவளும் பாத்து எழுத, என் கிரகம் அத மிஸ் பாத்துருச்சு, என்ன ரேவதி புது பழக்கம்ன்னு குச்சிய வச்சு தலையில அடிச்சாங்கப்பாருங்க, அடங்கொன்னியா, உங்க வீட்டு ரத்தமில்ல எங்க வீட்டு ரத்தமில்ல, கணக்கு நோட்டு ஃபுல்லா ஒரே ரத்தம், கடைசில வீட்டுக்கு தெரிஞ்சு அப்பா பள்ளிக்கூடத்துக்கு வர, பள்ளிக்கூடத்துக்கு வர, பள்ளிக்கூடத்துக்கு வர, அட இருங்கங்க சொல்லிக்கிறேன், எங்க ஸ்கூல்ல இருக்கிற எல்லா டீச்சருக்கும் எங்க அப்பா தான் நகை செஞ்சு தருவாரு, அதால எல்லா டீச்சரும் அப்பாக்கு தெரியும் எல்லார்ட்டையும் போய் அந்த மிஸ் பண்ணுணத சொல்ல, ஸ்கூலே அல்லோலப்பட்டு, அந்த மிஸ் அழுக ஆரம்பிச்சிடுச்சு. அப்பறம் நமக்கு ஒரு வாரம் லீவு அய் ஜாலி...

இந்த மாதிரி நம்ம ரவுச சொல்லன்னும்னா அதுக்கே ஒரு தொடர் பதிவு போடனும், அதால அடுத்து 8கிளாஸ் வாங்க, நான் படிச்ச அந்த கிறிஸ்டியன் ஸ்கூல்ல, அங்க  8ம் வகுப்பு வரை தான், அதால 8 படிக்கிற புள்ளைகள டூர் கூட்டிட்டு போவாங்க, அப்படிதான் அன்னைகும் டூர் கூட்டிட்டு போறாங்க நானும் போகனும்ன்னு சொன்னோங்க, என் அப்பாட்ட, என் அப்பா என்ன விட மாட்டின்டாறு. விடுவோமா நம்ம, நானும் நல்ல புள்ளையா கெஞ்சிப்பார்த்தேன், அடுத்து அழுது பாத்தேன் என் அப்பா மசியல, சரி இது சரிபட்டு வராதுன்னு ஸ்கூலுக்கு கிளம்பிட்டேன், நான் ஸ்கூல் வேன்ல தான் எப்பவும் போவேன், அவங்களுக்கு நான் இறங்கிற இடம் தெரியும்ல, சாயங்காலம் எப்பவும் நான் இறங்கிற இடத்துல இறங்காம, என் பாட்டி வீட்டுக்கு அப்பா வர சொல்லிட்டாங்கன்னு சொல்லி இறங்கிட்டேன்...

 நான் வீட்டுக்கு வர டைம் ஆகியும் வாராததலா, அப்பா ஸ்கூலுக்கு வர, நான் கிளம்பி போயிட்டேன்னு சொல்ல, ஹி ஹி இருங்க சிரிச்சுகிறேன்....காதல் படத்துல ஜஸ்வரியாவ காணோம்ன்னு அவங்க அப்பத்தா கத்துமே அது மாதிரி கத்தி என் அப்பத்தா ஊறயே கூட்டிட்டாங்க... நான் என் அம்மாச்சி வீட்டுல உக்காந்து தாத்தாட்ட ஊறுக்கு போக, காசு தேத்திட்டு இருந்தேன்,ஹி ஹி. நான் சொல்லாம வந்தது தாத்துவுக்கு தெரிய, கடைசி, என் தாத்த என்ன கூட்டிட்டு என் வீட்டுக்கு போக, இங்க தாங்க சர்பிரஸ் இருக்கு, சரி எல்லாரும் சேர்ந்து நம்மள கும்ம போறாங்கன்னு நினைச்சேன், ஹி ஹி ராங் கால்குளேசன், குடும்பமே கட்டி புடிச்சு அழுவுது... உடனே அப்பா கிளைமேக்ஸ் ல வர சிவாஜி  சார் மாதிரி, அழுதுட்டே நீ டூர் தானே போகன்னும் போ போ போயிட்டு வான்னு சொன்னாறு பாக்கன்னும் அங்க நிக்கிறா ரேவதி...அப்பறம் ஒரு வழியா டூர் போயிட்டு வந்தாச்சு, 8ம் வகுப்பும் நல்ல படியா படிச்சு முடிச்சாச்சு...


அடுத்து 9க்கு வேற ஒரு ஸ்கூல் இந்த பள்ளிக்கூடத்துல இருந்து வேற ஒரு சுழலா தெரிஞ்சது அந்த ஸ்கூல்.. என் பழைய ஸ்கூல்ல எல்லா டீச்சரையும் எனக்கு தெரியும், எல்லாரும் அந்த டீச்சர்ங்கிற உறவை தாண்டி ஒரு நட்போட இருப்பாங்க, இந்த ஸ்கூல் அப்படி இல்லை, ஏதோ ஆயுச முடிக்க எமனோட இருக்கிற சித்திரகுப்த்தன் கையில கணக்கு நோட்டேட சுத்துவாறுங்கிற மாதிரி எல்லா டீச்ச்ர் முகத்துலயும் ஒரு இறுக்கம், அப்பறம் அதுவே பழகி ஒரளவுக்கு நட்பு வட்டம் கிடைச்சிருச்சு.. சின்ன பிள்ளையாய் இருந்து, இதுதான் உலகம்ன்னு கொஞ்ச கொஞ்சமாய் புரிய ஆரம்பிச்சது, என் விளையாட்டுத்தனமும் வீண்புத்தனமும், அடியோட மாறிப்போச்சு, அடுத்து 10 கிளாஸ், இதுவரைக்கும் படிப்ப பத்தி எந்த அக்கறையும் இல்லாம அலட்டிக்காம படிச்சு நல்லாவே ஸ்கோர் பண்ணுணேன், ஆனா இந்த 10 வகுப்புல குடும்ப சூழல் கொஞ்சம் மாற, நம்ம வீட்டுல மூத்த பொண்ணாச்சே, அங்கயும் கவனிச்சு, இங்கயும் கவனத்த செலுத்த முடியல.
கால் ஆண்டு தேர்வுல, கணக்குல ஒற்றை படை எண் தான் நம்ம மதிப்பெண், நம்ம முடியாத அதிர்ச்சி, கிட்டதட்ட செத்துகூட போயிடலாமான்னு யோசிக்க வச்ச தருணம்ன்னு சொல்லலாம்...

ஸ்கூல் நிர்வாகம் அப்பாவ வரச்சொல்ல, அப்பாக்கு பெரிய அசிங்கத்த உண்டு பண்ணிட்டேன்னு மனசு கெடைந்து தவிக்கிது, என்ன காரணம்ன்னு என் வகுப்பு மரகதம் டீச்சர் அப்பாட்ட கேக்க, அப்பா வீட்டு சுழல அவங்கட்ட சொல்ல, மிஸ் என்ன பாத்து, இந்த வயசுல புள்ளைங்கள படிக்க விடுங்க, உங்க குடும்ப பாரத்த அது தலையில ஏத்தாதிங்கன்னு சொல்ல, ரேவதிக்கு டீசிய வாங்கிட்டு போங்க, அடுத்த வருசம் வந்து சேர்த்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்க, அப்பறம் ஒரு வழியா அப்பா பேசி சமாதனம் பண்ணி வச்சு, உத்திரவாதம் கொடுத்துட்டு போனாரு, அன்னைக்கு  முடிவு பண்ணுனேன், இனி என் அப்பா ஸ்கூலுக்கு வந்தா, இவர் பொண்ணு தான் ரேவதியான்னு சொல்ற அளவுக்கு இருங்கன்னும்னு நினைச்சேன் அத செயல்ல காட்டவும் ஆரம்பிச்சேன். ராத்திரி பகலா படிச்சேன், கிட்ட தட்ட சைக்கோ அளவுக்கு, என் குடும்பமே நான் படிக்கையில முழிச்சிருப்பாங்க, என் வயசான அப்பத்தாவையும் சேர்ந்து, அப்பறம் பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சது, ஒரளவுக்கு நல்ல மார்க் கிடைச்சது..

அடுத்து நமக்கு சின்ன வயசுல இருந்தே ஆடிட்டர் ஆகனும்ன்னு ஆசை, அது என்னவோ தெரியல, அரசியல்வாதில இருந்து, எல்லா துறை சார்ந்தவங்களும் சம்மந்த பட்ட ஒரு ஆளுனா ஆடிட்டர் தான். அதால காமர்ஸ் குருப் எடுத்தாச்சு, அக்கவுண்ட்ஸ் விரும்பி படிச்சதால புரிச்சுச்சா, இல்லை எப்படி புடிச்சதுன்னு தெரியல ஏன்னு கேக்குறேங்களா? என் அக்கவுண்ட்ஸ் மிஸ் எப்பவும் தண்ணி அடிச்சா பசங்க எப்படி மப்புலயே இருப்பாங்க அது மாதிரியே இருக்கும், கடைசில எல்லாரும் சேர்ந்து ஹெட் மிஸ் கிட்ட சொல்ல, அவங்களும் அவங்க எடுக்கிற கிளாஸ் அஹ கவனிக்க, எங்க பொண்ணுங்களுக்கு பற்று வரவு எங்க போடனும்னு கூட தெரியாத அளவுக்கு அவங்க கோச்சிங் இருந்தது. அப்பறம் அந்த டீச்சர மாத்த 4 மாசம் பிடிச்சது, அந்த நாளு மாசம் வரைக்கும் நானும், என் பிரண்ட்சும் தான் பாடம் எடுப்போம். இப்படியே 11 வகுப்பு நல்ல நட்புகளோட அந்த வயசுக்கே உண்டான குறும்பு தனத்தோட நிறைவடைந்தது.

அடுத்து 12ம் வகுப்பு, அந்த வகுப்புக்கோ உண்டான டென்சன், எப்பவும் புத்தகத்தோடயே முட்டிமோதுற காலம்ன்னு ரொம்ப வேகமா போனது, ஆனா அங்கயும் என் குறும்பு தனத்துக்கும், சேட்டைக்கும் அளவில்லாம தான் போனது, இந்த காதலர் தினம், காதலர் தினம்ன்னு ஒன்னு வருமே,அந்த ஒரு தினம் நாங்க படிக்கும் போதும் வந்தது, மீசை முளைக்காதது எல்லாம் லெட்டரோட சுத்துது.. நம்ம எப்பவும் படையப்பால வர ரஜினி மாதிரி பெரும் படையோட தான் சுத்துவோம், பெண்ணுகளுக்கு காதல சொல்ல காத்துகிடக்கிற நெறையா பசங்கள ஒட ஒட விரட்டுன காலம் அது..அதோட எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம, வேறுபாடுகள் இல்லாம, நமக்கு ஒன்னுனா உயிர் வரை துடிக்கிற பாசமான நட்புகளை கொடுக்கிறதும் இந்த பள்ளிக்காலம் தான், பரிட்சையும் வந்தது, பொண்ணுங்களுக்கே உண்டான கண்ணீரோடு, ஆட்டோகிராப் நோட்டுக்குள்ள அடைக்கலம் புகுந்தது எங்க நட்பு.
உனக்கு கல்யாணம்னா நான் வரேன், எனக்கு முந்தி கல்யாணம்னா நீவான்னு பெறும் பாலான வாசகங்களால நிறைச்சது ஆட்டோகிராப் புத்தகம்... பள்ளி இறுதி தேர்வுல, பள்ளியில இருக்கிற அத்தனை இடத்துக்கும் கண்ணீரோட விடைகொடுத்துட்டு வந்து, மாசம் ஒரு கிழமை சந்திப்போம்ன்னு வழக்கமான பாணில விடைகொடுத்தோம் நட்புக்கு...

என்ன தான் நம்ம வாழ்க்கையில எத்தன நட்பு வந்தாலும், எதையும் எதிர்பார்க்காம, எந்த விகர்ப்பமும் தெரியாம அமையிற நட்புன்னா அது பள்ளி பருவ கால நட்பு தான், அதே மாதிரி ஒரு மனுசன் அசைபோடுற மறக்கமுடியா நிகழ்வுகள்ல பசுமையான நினைவுன்னா அதுவும் பள்ளிக்காலம் தான்... பல பதிவுகள் எழுதுனாலும் நம்ம மனசுக்கு நெருக்கமான பதிவுகள் ல இந்த பதிவும் ஒன்னுன்னு நிச்சயம் சொல்லலாம்...நெஞ்சுக்கூட்டில் இனிக்கும் நினைவுகளுடன்,  என் சுய புலம்பலை தொடர் பதிவா எழுத அழைப்பு விடுத்த தமிழ்வாசி அண்ணனுக்கு நன்றிகள்...


(பதிவின் நீளம் அதிகமே, என்னை மன்னிச்சு சகோஸ்ஸ்ஸ்ஸ்)வியாழன், 8 மார்ச், 2012

மாறுவது எப்போது
ஆண்டிற்க்கொரு முறை
மகளிர் தினம்,
அங்கலாய்க்கவோ, ஆனந்தக்கூத்தாடவே
முடியவில்லை எமக்கு...

கைகளை கட்டிவிட்டு,
கர்ணம் பாயச்சொல்கிற
உலகிது...

சாதனைகள் புரிந்திடாலும்
சாகச வாய்களுக்கு
சாக்கடை புழுவானோம்...

கிடைத்தனயாவும் யாம்
நினைத்தனயன்றி,
இருப்பதைக் கொண்டே
 மகிழ்ந்திட்டோம்...

அழுதிடும் மனதில்
சிரித்திடும் உதட்டினின் 
துணையினால்,
துயரினை மறைத்திட்டோம்...

ஆளப்பிறந்தவராய் நீர் இருக்க
ஆக்க சக்தியென எம்மை
அழைத்திடும் காரணம் 
அறியாது தவித்திட்டோம்...

யோசிக்க மறந்த மனிதரால்
யாம் இன்னும்
யாசிக்கும் நிலையிலே
இருக்கிறோம்...

சட்டங்கள் மாறுமோ,
சக்தி கை ஓங்குமோ,
உறவின் விலங்குகள்
தகறுமோ?
தொலைந்த எம் சுய முகங்கள்
கிடைக்குமோ?...

கேள்விகள் கொண்டு
வேள்விகள் செய்கின்றேன்...
யாருக்கு கேட்கும்
இந்த பெண்குரல்,
என்று தனியுமிந்த
அடிமையின் மோகம்....

புதன், 7 மார்ச், 2012

என் வீடு


Thanks :Google

அவசியம் ஏதும் இல்லாவிடினும் 
என்னை ஆண்ட 
என் கனவு வீட்டை 
கவிதை செய்து வைக்கிறேன்...

கூரை வேய்ந்த வீட்டிலிருந்து, 
மாடிவீடாய் 
மறுஜென்மம் கொண்டது
அப்பாவின் வியர்வை காசில்...

அது வ்ரை வாயடைத்த 
கூட்டம்
 நான் பிறந்த வேளை என்றது.... 

என்ன சொல்ல 
என்வீட்டைப்பற்றி,
எனக்கு எல்லாமுமாய்
இருக்கும் 
இந்த வீடைப்பற்றி...

சுற்றியும் சொந்தம்
நிறைய, 
சந்தோஷத்திற்க்கு குறைவில்லாத 
பல நாட்களை தந்தது
இந்த வீடு...

மாமனென, சித்தியென 
புது உறவை 
தந்த வீடு..
நித்தம் விழாக்கோலம் 
பூணும் வீடு,,,

பொட்டல் காட்டில்
வியர்வை சிந்தி,
கால்வயிறு கஞ்சிக்கு
காட்டு வேலை செஞ்ச 
என் அப்பத்தாக்கு,
சொர்க்கமே 
இந்த வீடு..

சொந்த பிள்ளைகள
தவிர சொத்துயில்லை 
என்ற தாத்தாக்கு 
தெம்ப கொடுத்தது 
இந்த வீடு...

தான் பட்ட கஷ்டத்தை
என் பிள்ள பெறக்கூடாதுன்னு
அப்பா வைராக்கியத்திற்க்கு 
வைரமா கிடைச்ச வீடு..

பிறந்த இடம் தான் 
வளமில்லை
வாழுமிடமாது நம்ம காப்பாத்துமானு 
கேள்வியோட வந்த 
அம்மாவுக்கு 
கோடியா தெரிந்த வீடு...

வசதியா பொறந்தயெங்கள
வளமா வளத்த வீடு..
வருசம் ஆக ஆக
வயசான தாத்தா பாட்டின்னு 
வரவு ஒன்னு ஒன்னும் 
செலவு கண்க்குல 
சேர்ந்தப்ப, 
நாங்க இங்க தான் 
இருக்கோம்ன்னு அவங்க 
தலை சாய்த்த தடம் 
தரும் ஆயிரம் தெம்பு...

இன்னைக்கும் எனக்கு ஒரு 
கவலைனா, 
என் பாட்டி தலை வச்ச 
தடத்துல தான் 
என் கண்ணீர விதச்சு வைப்பேன்..

வெறும் செங்கலும், 
சிமெண்ட்டுமாய்
அடுத்தவங்க 
கண்ணுக்கு தெரிஞ்சாலும்,
என் முன்னோர்களின் 
வழித்தடமே 
இந்த வீடு...

வசதிகள் வந்தாலும், 
வந்த வழி மறக்காது
என்னை வளர்ந்த
என் உறவுகள
நினைவுகளால 
நான் நித்தம் காணும் வசதிய
தந்தது 
இந்த வீடு..

ஆயிரம் தான் அழகா 
பல விஷயமிருந்தாலும்,
அழுக்கு சேலையோட
என்ன காக்கும் 
என் அம்மாவா
எனக்கு எப்பவும் 
தெம்ப தருவது 
என் வீடு...
திங்கள், 5 மார்ச், 2012

பொய் கோபம்

THANKS: Googleஇந்த நேரம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துவிடும் நித்யா இன்று தான் அலுவலகம் கிளம்பும் நேரமாகியும் வராததை அடுத்து அவளுக்கு போன் செய்தான் பிரபஞ்சன்... அவள் போன் அணைத்து வைக்கப்பட்டது என்ற செய்தி அவனுக்கு பதட்டத்தை வரவைக்க, நித்யாவின் அலுவலகத்திற்க்கு தொடர்பு கொண்டான், அங்கும் அவள் கிளம்பி போய் வெகு நேரமான செய்தி அவனுக்குள் இடியாய் இறங்கியது...

அவள் தோழிகள் நம்பருக்கும் தொடர்பு கொண்டு, அங்கும் எதிர்ப்பார்த்த செய்தி கிடைக்காததை அடுத்து வருத்தமும், பயமும் கலந்து கொள்ள கதவு திறக்கும் ஓசை கேட்டு, ஜன்னலை பார்த்தான், வருவது அவள் தான் என்று தெரிந்து, நிம்மதியடைந்தாலும், அவள் அலட்சியமாய் வந்தது, பிரபாவுக்கு கோவத்தை ஏற்படுத்தியது...

என்ன பிரபா மணி 7ஆச்சு நீ இன்னும் office போகலயா?

நான் போறது இருக்கட்டும் நீ எங்க போன இவ்வளவு நேரம்...

அவன் வார்த்தையில் இருக்கும் கோவத்தை உணர்ந்தவளாய், சாரி டா, ரீமா அவ பெண்ணுக்கு ட்ரஸ் எடுக்க என்ன கூட்டிட்டு போனா அதான் இவ்/ளோ நேரம் பிரபா.. சாரி

உன் சாரி யாருக்குடி வேணும்... இவ்வளவு நேரம் வரலையே ஒரு போன் பண்ணி சொல்லிருக்கலாம்ல நானாவது நிம்மதியா offlice கிளம்பி போய் இருப்பேன் ல..

இல்லை போன்ல சார்ஜ் இல்லைடா? அதான்......

போன வாரம் நான் என் ஃப்ரண்ட்ஸ் ஒட அவுட்டிங்க் போகும் போது, என் போன்ல சார்ஜ் இல்லை அதான் உனக்கு போன் பண்ணி சொல்லமுடியலன்னு சொன்னதுக்கு எவ்வளவு கோவப்பட்ட, உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?

பிரபா அது வேற இது வேற?

எப்படி டி வேற வேற ஆக முடியும் சொல்லு.....

இப்போ ஏன் வந்ததும் வராததுமா சண்டை போடுற. நீ offlice போ டைம் ஆச்சு...

காரணம் கேட்டா கிளப்ப சொல்றயா? என்ன ஒரு பொறுப்பில்லாத பதில் நித்தி, நீ வரலன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா?

பிரபா நீ இந்த பயத்த தெரிஞ்சுக்கனும்னு தான் அப்படி பண்ணேன் சாரி டா...

என்ன நித்தி சொல்ற?...

ஆமாம் ஒவ்வொரு வீகெண்ட்லயும், நீ உன் ஃப் ரண்ட்ஸ் ஒட போயிடுற, சில நேரம் உன் ஃப் ரண்ட்ஸ் கம்பெல் பண்றாங்கன்னு டிரிங்ஸ் எடுத்துக்கிற, நீ வீடு வந்து சேர்ர வரைக்கும், நான் படுற பாடு எனக்கு தான் தெரியும் நடுவுல ஒரு போன் பண்ணுறது கூட கிடையாது, நான் பண்ணாலும் switch off....
காரணம் கேட்ட சார்ஜ் இல்லைனு சொல்லுவ...எத்தனை தடவ தான் இதே உப்பு சப்பில்லாத காரணத்தையே கேட்கிறது... நீ புரிஞ்சுக்கனும்னு தான் இப்படி பண்ணேன்... நான் எப்போவோ வீட்டுக்கு வந்துட்டேன்... என் பீல் உனக்கு புரியனும்னு தான் ரீமா பிளாட் ல கொஞ்சம் நேரம் இருந்தேன்... உன் cap வந்தும் நீ போகலனு தெரிஞ்சதும் தான், மனசு கேட்காம வந்தேன்... நீ கிளப்பு பிரபா டைம் ஆச்சு...

வாயடைத்து போய் பதில் எதுவும் சொல்லாமல் மெளனமாய் சென்றான் பிரபா...

பதில் எதும் சொல்லாமல் அவன் செல்வதை வருத்ததோடு பார்த்தாள்... சற்று நேரத்தில் கைபேசி சிணுங்க, பிரபாவிடமிருந்து செய்தி,  sorry nithi  just now i realized my mistake,  hereafter i wont do it... dinner is on the table. please do take them. I love you de :))))))) 

 நான் எதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுக்கோடா... I TOO LOVE YOU HONEY...
 நமக்கு பிடித்தவர்கள் மீது நாம் காட்டும் கோவமும் ஒரு அன்பே.............ஞாயிறு, 4 மார்ச், 2012

என் நண்பன் போல யாரு மச்சான்...


வணக்கம் பதிவுலக உறவுகளே.... இன்னைக்கு ரொம்ப சந்தோசமான நாட்கள்ல ஒன்னுன்னு சொல்லலாம்.. என் நண்பனோட திருமணம் இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்க போகுது...தவிர்க்க முடியாத சூழ்நிலை அதால என்னால போகமுடியாட்டியும் மனசு முழுசும் வசந்தோட கல்யாண நிகழ்வுகளில் வட்டமிட்டுகிட்டு இருக்குன்னு தான் சொல்லணும்.. இத ஒரு வாழ்த்து பதிவாவோ, இல்ல எனக்கும் வசந்துக்கும் இருக்கிற நட்ப தெரிய படுத்துறதுக்காகவோ இத பதிவ எழுதல, முழுக்க முழுக்க சந்தோஷம் என்ன தொற்றிக் கொள்ள, வசந்தோட  மண வாழ்க்கை ரொம்ப சந்தோசமா அமையணும்னு எனக்கு தெரிஞ்ச வழிகளில் என் சந்தோசத்த பகிர்ந்துக்கிறேன்...

எனக்கு பதிவுலகம் வந்து கிடச்ச நல்ல நட்புல வசந்தோட நட்பும் முக்கியமான ஒன்று... என்னோட குறைகளையும், நிறைகளையும் சுட்டிக்காட்டுற  நண்பன்னா அதுல கண்டிப்பா வசந்த்தும் இருப்பார்.. கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுதோ இல்லையோ அது எனக்கு தெரியாது, ஆனா நல்ல நட்பு சொர்க்கத்தையே நம்ம காலடியில கொண்டு போடுற சக்தி படைச்சது... என்னோட நட்பும் அப்படித்தான்.. ஒரு நட்புக்குள்ள கண்டிப்பான தந்தையும், அன்பான அம்மாவும், பாசத்த கொடுக்கிற சகோதர உறவுகளும், ஒழிஞ்சிருக்கும்.... ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கும் இடையே இருக்கிற நட்ப, மத்தவங்க அவங்க பார்வைக்கு ஏத்த மாதிரி ஈஸி யா விமர்சனம் பண்ணிடலாம்... ஆனா நட்போட கண்ணியம் மாறாம நடக்குற பல நல்ல நட்புல வசந்தோட நட்பும் ஒன்று... ஏதோதோ எழுதனும்னு வந்தேன், ஆனா வார்த்தைகள் தடுமாறுது..

வசந்தோட அன்புள்ளத்துக்கு, எல்லாமும் நல்லாவே நடக்கும்கிறது என் திடமான எண்ணம்.. என் நண்பனோட மணவாழ்க்கை மிகச் சிறப்பாய் அமையும், அமையட்டும், அதற்க்கு எல்லாரும் சேர்ந்து வாழ்த்துவோம்....
எண்ணங்கள் வலிமையானால் எல்லாமே இனிமையாகும் இது என்னோட ஆழமான நம்பிக்கை...வசந்தோட எண்ணங்கள் என்னைக்கும் அழகானவை... அவர் நினைச்ச அத்துணை மாற்றங்களும், ஆசைகளும், கனவுகளும், இன்னும் தொட ஏங்கிற வெற்றிகளும், ஆக மொத்தம் அத்துணை எதிர்பார்ப்புகளும், இந்த மணவாழ்க்கை மூலம் கிட்டட்டும், கிட்டுவதற்கு அன்பெனும் கடவுள் அருள் புரியட்டும்...

ஆயிரம் தான் சொல்லுக என் நண்பன போல யாரும் கிடையாது.... i know you are the best vasanth... happy married life.....

ஏதோதோ யோசிச்சும் கவிதை கைக்கு வர மாட்டிக்குது... நல்ல நட்பே ஒரு கவிதை மாதிரி தான், அதால இன்னைக்கு நோ கவிதை...மணமக்கள் புறப்பட தயாராகிறார்கள்...வழிவிடுங்கள்....வசந்தங்கள் அவர்கள் வாசல் வீசட்டும்...திருமண நாள் வாழ்த்துக்கள் வசந்த், ஜோதி