உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 மார்ச், 2014

கதை படித்தல்

அடுக்களை வேலை
அத்தனையும் முடித்து
அலுப்பென சொல்லி
அயர்ந்து படுக்கையில்
கனவுக்குள் வந்து சென்றாள்
நேற்றைய கதை நாயகி
வைத்த இடம் தேடி
கைவசம் கிடைக்கையில்
துளிர்ந்திடும் கதை நாடி
வேகமாய் ஓடி
விட்ட இடம் பிடிக்கையில்
ஆண் முகத்தில் திலகமிட்டும்
பெண் முகத்தில் மீசை வைத்தும்
பூக்களுக்கு சிறகு வரைந்தும்
தன் கதையை பூர்த்தி செய்திருந்தான்
அப்புக் குட்டி


இடம் காலியாகிறது.

பேருந்து நிறுத்தம்
ஏற இறங்கவென ஆட்கள்
எல்லோருக்கும் பயணப்பட காரணங்கள்
எதேட்சயான உரையாடல்
எல்லோருக்குள்ளும் ஏதோவொரு தேடல்
எனைக் கடக்கும் கூட்டம்
எடையளக்கும் நோட்டம்
எதிலும் கவனமில்லை
இருந்தும் மறுக்கவில்லை
எதிரினில் தேனீர் கடை
சுற்றியபடியே ஒருவன்
இரண்டாவது சுற்றில்
கோப்பை தேனீர்
அத்தனையும் பருகிட
தீர்ந்துபோகிறது
இரவு

இன்றைய
என் கவலையைப் போலவேப்ரியப் பெருமழை

பார்வை மழை
பார்த்ததும் துளிர்விட


குட்டி நடனமொன்று
கொட்டையில் ஆட


மழைக்கு இசையோ
இல்லை
இசைக்கேற்ற மழையோ


அறியாது நானும்
அறிந்திட்டே பிழை செய்ய


தவறிவிழுந்த வார்த்தையில்
கிடைத்தவை அனைத்தும்
உன் ப்ரிய
பெருமழை தானோ பிரியத்தின் பைத்தியக்காரத்தனம்


பிரியத்தின் மதிப்புணர்ந்து திறந்தே வைக்கிறேன்
இக்கவிதை வாசலை வந்தமர்ந்து கொள்

கொன்றொழித்த விரதங்கள்
பேசக்கற்றறிந்த வேளையிது

வாஞ்சையின் மொழியிழந்து
வஞ்சனை குணம் புரிந்து
தப்பிப் பிழைத்த தருணத்தில்
சிறு ஆட்டின் தலையசைப்பாய்
வெட்டப்பட்ட கனவுகள்  


சின்னதாய் சிரிப்போ
சினேகப் பார்வையோ இல்லாது போயினும்
செத்தொழியென்ற வார்த்தையாவது
கொட்டிவிட்டுப் போ

சிதறிக்கிடக்கும் பிரியத்தின் தடங்களில் மேல்
புரண்டுடழுமென்னை பைத்தியக்காரியென்று
பெயர்சூட்டாமலிருக்கும்

இவ்வுலகு
 


 

தீர்ப்பின் முதல் துளி


யாருக்குத் தெரியுமென்பதைப் போல்
தெரியாமலே இருக்கிறது உன்னை பற்றிய
என் பதில்

எடுத்து வைத்தவைகளை எழுத்தில் வைப்பதைத் தவிர 

வேறேதும் தெரியவில்லை
எனதிந்த காதலுக்கு

பட்டாம்பூச்சியின் வண்ணங்களை சுமந்து வரும்
சிறகு போலவே
தூக்கிச்சுமத்தலின் சுகங்களை 

நினைத்து சுவைக்கிறது
இவ்வுணர்வு..

ஆர்பரிக்க
ஆரவாரம் செய்ய
ஆழ்ந்து பருக
காலத்தடம் பதிக்கவென
காத்துக்கிடக்கிற கடலளவு ஆசையில்
கரைந்து போகிறது காலம்

வாழ்க்கைச்சாலையில்
ஏதாவதொரு சந்திப்பில்
முட்டித் திரும்பிகிற நினைவுக்கு பின்
விபத்துகள் நேராவண்ணம்
சீர்தூக்கி வைக்கிறேன்
உனக்கான காதலை

நிபந்தனைகள் ஏதுவுமில்லை
நிர்பந்தங்கள் ஏற்படவில்லை
இல்லாமையில் இன்னும் இன்னுமென
விழுந்து கரையத்தொடங்குகிற
கடைசி துளி
தீர்வதற்குள் தீர்ப்பெழுத
வா....விரியும் உலகின் மதில் சுவர்

ஆளுக்கொரு பிரியம் 
அடுக்க அடுக்கத் தொடரும்
அடுக்களை மட்டுமே  உலகமென விரியும்

பாரதியும், ஷெல்லியும், கல்கியும் சாண்டில்யனும்
கூட்டு பொரியலுக்கு இடையே

கூடவே இருக்கும்

பெண்ணிய சிந்தனைகள்
பெண் விடுதலை பேசிய கவிகளென
அத்தனையும் ஓரு மூலைக்குள் இருக்க
மூளையற்ற இவரன்பில் அத்தனையும்
மூச்சிரையாகிக்கிடக்கும்

அடையாளமற்று திரியும்
எந்தன் உணர்வுக்கும்
அன்னையர் தினமென்றும்
மகளிர் தினமென்றும்
ஒரு நாள்வந்து தொலைக்கும்

அன்றைக்கும்
ஆளுக்கொரு பிரியம்
அடுக்க அடுக்கத்தொடரும்
அடுக்களை மட்டுமே
உலகமென விரியும்


 

பற்றுதல் சுகம்
எதையாவது பற்றிக்கொள்ளுதல்
தேவையாய் இருக்கிறது
பல நேரங்களில்

கனவுகளின் வாசத்தை
வசப்படுத்தும் நிமிடங்களில்,

காத்திருப்பின் மூலம்
அலைக்கழிக்கப்படும் நேசத்திடம்,

ஒரு தோல்வியின் போது
நொருங்கி உடைகின்ற மனதிடம்,

அனுதாபங்களின் பிடியில்
சிக்கிக் கிடக்கின்ற சுயத்திடம்

எதைச் சொல்லவேண்டுமோ அதைச்சொல்லாது
தவிக்கின்ற கவிதைகளிடம்

தனித்திருக்கும் பிடிதனில்
லாவகமாய் கிடைக்கும் நினைவுகளிடம்

மரண நேரத்தின் யோசிப்புக்கு பின்
உயிர் உணர்த்தும் தவறுக்காய்
தவறி விழும் கண்ணீரிடம்

எப்படியாவது
இணங்கிப்போய்விட வேண்டுமென்ற
இயல்பைத் தொலைக்கும்
இல்லாமைகளிடமென
 
இடைமறிக்கும்
இவ்வெல்லா உணர்வுக்கு பின்னும்
எதையாவது பற்றிக்கொள்ளுதல்
தேவைப்படுகிறது பல நேரங்களில்


கற்பனையாளனுக்காய்

வாழத் தொடங்குவதற்கான வாய்த்தலை 
கோடிட்டு காட்டா காலத்தின் முன்
திராணியற்று நிற்கிற கனவுக்குள்
நீயுண்டு நெஞ்சம் நிறைய நிகழ்வுசார் 

காதலுண்டு

உணர்வுக்கு சிக்கா உடையணிந்து கொண்டு
உனைத் தேடுதல் அசெளகர்யமெனப்பட்டாலும்
மெல்ல மெல்ல அருகமர்ந்து தலைகோதிவிடுகிற
விரலினைத்தருகிறாய் கால்முளைக்கா
எந்தன் கனவுக்குள்

கற்பனையில் உனைத்தேடி
கனவுதனில் நிதம் வாடி
நிஜத்தினில் ஓடுகின்றேன்
சிறகற்ற பறவையைப்போல்..

பிய்தெரியமுடியா உந்தன் கனவுகளெனக்கு
சிறகுகளான பின் சிக்கனமென்ன
இச்சிறுபிள்ளைக் கனவுக்கு

உனைத்தேடி அலைந்திட்டேன்
கனவதில் நீ கிட்ட காத்திருந்தவள்போல
காதலுண்டிட்டேன்


மெய்யுணர்வில் கொஞ்ச்ம் கெஞ்சுதல்
மொழி அறிந்திட்டேன்
நாணமெனும்
தாழிட்டேன்
நாள் கணக்கில்
இவ்வுணர்வில் கட்டுட்டேன்
 
கனவுப் பசிக்கு உணவாகி
மெல்ல மெல்ல
உனைத் தின்றிடத் துடிக்கும்
இக்கவிதையின்
கருதனில்
உன்னை வைத்து
என்னை எழுதிட்டேன்..

எழுதியவை
எழுந்து நின்று
என்றேனும் உனை சேர்க்குமென்ற
 நம்பிக்கையில் இக்கவியை முடித்திட்டேன்..

கானல் தகிக்கும் பொழுது


ஒரு பாலைவனத்தை யாருமற்று
கடப்பது போன்றிருக்கிறது
இந்நாட்கள்

தனிமை தகிப்புகளுக்குள்
கிளையுயர்த்தி ஆறுதல் தருகிற
நிழலுக்குள் நீயிருக்க

எப்போது வருமென்று வானம் பார்க்க
தொடங்கியிருக்கிறது
வார்த்தைக்குள் சிக்காத மேகக்கூட்டமொன்றுநேசமில்லாமல் இல்லை.

ஒரு விசாரிப்பில்
உன் இருப்பை உறுதிசெய்து கொள்கிறாய்


எல்லோரிடமும் உரக்க பேசுகிறாய்
என் செவிகேட்கும்படியான சத்தத்தில்


உனை மெளனமாக்க
ஒரு வார்த்தை போதுமென்ற போதும்
அதைச்செய்யாதே முடித்துக்கொள்ளும்
இக்கவிதைக்குள்ளும் நேசமில்லாமல் இல்லைவிரசமெனும் புழுக்கம்

ஒரே வார்த்தைதான்
வேறு வேறு குரல்களில்
வாளெடுத்து வீசிப்போகிறது

நேற்றையவனின் வார்த்தை
இரவினைத் தொட்டு
இன்றும் தன்னை எழுதிக்கொண்டிருக்க


ஏதோ ஒரு பிழையில் தப்பித்து வெளியேறுகிறது
கொடுக்கப்பட காத்திருந்த 

முத்தங்களுக்கான மன ஒத்திகை

நிதானித்து திரும்புவதற்குள் இன்னுமொரு புன்னகை
அதே போலொரு பேச்சென
முந்தயதின் தடமொன்றை விட்டுச்செல்கிற
நியாபக நியாயங்களைத்தாண்டி


வேறு வேறாய் போர்த்திக்கிடக்கும்
முகங்களுக்குள் வியர்த்திருப்பதெல்லாம் 

விரசமெனும் புழுக்கம் மட்டுமே 


கூர் ஆயுதம்பார்வை கத்தி
குத்தி
கிழித்து
ரத்தம் வழிய
சதை
பிண்டமாகும் வரை
வழிய விடுகிறாய்
உன் ஆண்மையை


துயர் தரும் பார்வைதான்
உன்னை வெளிக்காட்ட
ஒரு குண்டூசி எடுக்கும் அவகாசம் போதுமானது பட்டாம்பூச்சி மனது

நிலைத்திருத்தலைப்பற்றிய கவலையின்றி
பறந்தலைகின்ற வண்ணத்துப்பூச்சிக்கு
வாழவொரு ஏற்றயிடம் எனதறையில்லையென்று
எப்படிச்சொல்வது

வர்ணம் ஆட்சிசெய்யும் அதனிடத்தில்
எடுத்துக்கொள்ள எனகேற்ற நிறம்
எதுவுமில்லையென்பதை
விளக்கணைத்து உறுதிசெய்தேன்


மின்விசிறியின் கூர்நாக்குகளதை
எப்படியும் காவுவாங்குமென
உயிர்கொடுக்காது உறங்கவைத்தேன்

படபடத்து ஓய்ந்து
என் பக்கம் வந்தமர்ந்து
வண்ணங்களால் முத்தமிட்டு பறந்த சென்ற
அதனிடம் சொல்ல எனக்கொன்றும் வார்த்தையில்லை
அதன் நினைப்பு எப்படியோ?

கிட்டாதவைகளின் வழி
இப்படி ஒரு முடிவு
ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்
என்பதால் பெரிதாய் ஏமாற்றமில்லை....

ஏற்றம் கொண்டு வரும்
எந்த ஒரு நாளின் நிமிடமும்
தொடங்கி வைத்ததில் தானே
வந்து வி(மு)டியும்..

கிட்டாது போதலின் அசெளகர்யங்கள்
பற்றி கவலையில்லாது போயினும்
நினைவின் தடத்திலிருந்து
நீங்காது இருப்பது தான்
பேரிழபபை அவ்வவ்போது
கண்ணில் நிறுத்துகிறது...

பேரிரைச்சலோடோ
இல்லை
தனியொரு இடத்தில்
உரக்க வசைபாடுதலில் ஊடோ
நாவினால் வருடி
தீயச்சொற்களில் உறவை
எரிப்பதில் மூலமோ
உன்னை விடுவிப்பேன்
எனதிந்த வலிகளோடு

எப்படியும்
வலிகள் கொடுக்க
இவ்வனாந்திரத்தில் வந்தமரும்
சில உயிர் பறவைகளுக்காய்
காத்தே கிடக்கிறேன் கிளைகள் விரித்து

வேறென்ன
சம்பிரதாயமெனும் சாட்டையெடுத்து
நீ வீசக்காத்திருக்கும்
அவ்வார்த்தைக்காய் காத்திருக்கிறேன்
சீக்கிரம் வா

அடுத்ததொரு வலிக்கு
ஆயத்தமாகவேண்டும்
நான்....

இப்படியாக
உன்னை பத்திரப்படுத்திய குறிப்பு தான்
காயந்த ரோஜாவின்
வண்ணத்தோடு மிச்சமிருக்கிறது
என்னிடம்

இவையே போதுமானது தான்
நான் தனிமையில்லை எனும் நிலையை
எடுத்துரைக்க

காத்திருந்த தருணங்களில்லாம்
காண முற்படுகின்ற பிம்பம்
என்னை அனுமதிப்பதில்லை
இது நானென்று

ஆனாலும் தனிமையுடைத்து
உருவாகிவிடுகிறது
இப்படியாக
ஒரு கவிதை

வண்ணங்களில் வளர்கிற உணர்வு

உன்னை யாரென்று சொல்ல
உன்னைத் தொட்டே வரைகிறேன்
எனதிந்த சித்திரத்தை


புள்ளியில் ஆரம்பமாகி
பூகோளம அமைத்த இதனிடத்தில்
அத்தனை சுகந்தமில்லையென்றாலும்
வெகு சிரத்தையோடு வரைகிறேன்


ப்ரியங்களுக்கென பச்சையையும்
கோவங்களுக்கென சிவப்பையும்
தாபங்களுக்கென நீலத்தையும்
நட்புக்கென்று வெள்ளையையும்
எனக்கேற்ப எடுத்துவைத்து
எழுதிக்கொண்டிருக்கிறேன்


உங்களின் விருப்ப நிறங்களை
சிலாகிப்பதாய் நினைத்து
என் சித்திரத்தில் நீங்கள் தீட்டிப்போகும்
இக்கருப்பு நிறம்
எந்த தயக்கமுமின்றி
உங்களை அதன் நிறத்தில் சேர்த்துக்கொள்ள


விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கும்
இதனை யாரென்று சொல்ல
நீங்கள் கொஞ்சம் தனித்திருக்க வேண்டும் தான் 


கேள்விகளில் நீயிருக்கிறாய்

என்னக்கொடுத்துவிட போகிறாய்
உன்னைக்கொடுத்து....

நேசத்தையா
தோள்சாய்தலில் கிடைக்கும் இன்பத்தையா
ஆண் முன் அழுகையை மறைக்காது
அழவிடும் நம்பிக்கையையா?
நான் காணாத உலகையா
கனாக்காணும் கனவையா
நண்பனையா
கணவனையா
இல்லை
ஓர் ஆணையா


என்னக்கொடுத்துவிட போகிறாய்
உன்னைக்கொடுத்து
இத்தனை அழகில்லை

அந்திவானம்
அத்தனை அழகில்லை
இதுவரை

வரையறை வைத்து
வரைந்திட்ட வாழ்வில்
உன் வர்ணம் கொண்டு
புதுவர்ணம் கொடுத்தாய்


உயிர்கிளியின் கூண்டுகள் தன்னை
வான்நோக்கி பறந்திட
திறந்திட்டாய்


சிறகசைப்பின் வெகுதூரக்கவனிப்பில்
வந்துசேர கிடைத்திட்ட இடமதில்
சலசலக்கிற ஆறும்
சந்தமாய் பேசும் காடும்
மெளனமாய் உன்னை என்னிடம் சேர்க்க


அடர்ந்திருக்கும் இவ்வானில்
பார்க்க கிடைக்கும் முழு நிலவும்
மடிகொடுத்து உன்னை நிறைக்க
நீ அருகிருக்கும்  அந்திவானம்
இத்தனை அழகில்லை
இதுவரை


அடையாளம்
இணைந்துவிட்டதாய் இறுமாப்புகொள்கிறோம்
நானென்றவற்றை எடுத்து
நாமென்று திருத்தம் செய்கிறோம்
அடிக்கொருமுறை அலைபேசியில்
சொல்லும் ஐ லவ் யூவில்
அன்பை அளக்கிறோம்
அப்படியே வார இறுதிகளில்
இடம் மாறிப் போகிற சமையலும்
மாதமொரு சினிமா

தோணும் பொழுதில் காலாற நடை
தோழமையைப்போல் பாவித்தலில்
சுயம் தொலையாத நிர்பந்தம்
இத்தனையையும் தாண்டி
தன்மானம் தேடிடும் மனதிடம்
இன்னும் மிச்சமிருக்கிறது
சக மனுஷிக்கான அடையாளம் 


நாட்குறிப்பில் உன் சினேகம்
தொலைந்த நாட்குறிப்பு
சினேகத்தின் குறிப்புகளை
உள்வைத்தபடியே ரகசியம் காக்க

ஆண் நட்பு என்பதால்
அதிகம் கவனிக்கபட்டாய்
என் தோழிகள் வட்டத்தில்
விட்டில் பூச்சிகள் மொய்க்கும்
வெளிச்சமென
உனைச்சுற்றியே பேச்சுகள்

அத்தனை பூசிமொழுகளிலும்
உருக ஆரம்பித்தது
சினேகத்தின் மெழுகு

உன் அப்பா அப்பாவாய் அறிமுகமானார்
அம்மாவும் அப்படியே
நமக்கான இடம்
கூடுதல் நெருக்கங்களோடு
இம்முறையும்
சினேகத்தின் போர்வையில்

ஒரு தனிமைப்படுத்தலில்
வந்து போன இடைவெளி
எங்கோ உன்னை நிரப்ப
எப்போதாவது வரும் அழைப்பு
இன்னும் ஞாபகப்படுத்துகிறது
தொலைந்த நாட்குறிப்பில்
உன்னைத் தொலைத்த
சினேகத்தின் குறிப்புகளை

-ரேவா

நினைவுச் சாலை

நினைவுச் சாலை
உன் பெயர் பதாகை தாங்கியே வரவேற்க
அடைதலைப் பற்றிய குறிப்புகள்
எண்களில் அடைபட
ஆசுவாசப்படுத்த
கோப்பை தேனீரோ
வேகம் கூட்டும் நினைவுந்தோ
போதுமென்றாலும்
இதே சாலை
உனக்கு எதைக்கொடுத்துச்சென்றிருக்குமென
குறிப்பில் அடைபட்டுப்போன
இந்நாளில் தான்
கண்டு தெளிந்தேன்
நினைவு நெடுச்சாலைகள்
விபத்துபகுதியென்றுநேரத்தின் காட்சி
இது அதன் பெயரால்
அப்படியே அழைக்கப்படும்

தனக்கான அந்தரவெளிகளோடு
தனித்தே தான் இருக்கும்


துயரத்தின் காட்சியையும்
பாவத்தின் நீட்சியையும்
துரத்தும் பாவனையை
தொடர்ந்தே தான் கொடுக்கும்


தப்பிக்கும் நேரமும்
தப்பிழைக்கும் காலமும்
தப்பாமல் தவறுக்குள்
வரவொன்றை வைக்கும்


இருப்பின் ஓடமதும்
சுழல் காற்றின் கையில் சிக்கி
சிருங்காரமாய் ஆடும்


ஆடுமிந்த ஆட்டமது
முடிந்த பின்னும்
முயற்சிக்கு முற்றுவைத்து
முடிவைத்தேடி தொடருமிதை
அதுவென்றே
நல்லுலகம் கூறும் 

நன்றி கீற்று, அதீதம்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24506%3A2013-07-26-04-07-04&catid=2%3Apoems&Itemid=265

http://www.atheetham.com/?p=5487

தனித்திருக்கும் சொற்களின் பெருநிலம்

இதுவே இறுதியாக இருக்கட்டுமென
எண்ணிக்கொள்கிறேன்
எண்ணிக்கை பிடித்து

மெளனம் தான் என் வீடு
வார்த்தைகளின் வழி
நீ வந்து சேரும் வலி
கொஞ்சம் தூரம் தான்

சொற்களற்ற இப்பெரு நிலம்
உண்ட களைப்பை உனக்கு கொடுக்கலாம்
அல்லது
திரும்பிப்போதலின் சாத்தியத்தை விதைக்கலாம்
எதையாயினும் எடுத்துச் செல்

எதிர்ப்புக்காட்டாமலிருக்கத்தான்
எழுப்பிவைத்திருக்கிறேன் இவ்வீட்டை
போகும்வழியில் எங்கேனும் எதிர்படலாம் 

புதையுண்ட என் சொற்கள்

அவற்றிடம் சொல்லிவிடு
தனித்திருக்கவே விரும்புகிறேன்
நான்  

ஒரு நாளின் நாளை

நேற்றைய பொழுதை உண்டு களைப்பதற்குள்
தயாரகிவிட்டது 

இன்று
இன்றை மென்று செரிப்பதற்குள்
விடிந்து விடுகிறது

நாளை
நாளை வாழ்ந்து பார்ப்பதற்குள்
வந்து விழுகிறது

மற்றொரு நாளை
இப்படியே தான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது
இந்த நாளை


உயரங்களில் தொலைந்தவை
வட்டத்தில் வரையப்பட்ட ஒன்றை
மாற்றுகையில் ஆதாரப்புள்ளி மட்டும் 

அரைவட்டம் எடுத்துக்கொள்ள

எஞ்சியவற்றை எடுத்துத்தின்னத் தொடங்கிய தனிமை
பார்ப்பவற்றையெல்லாம் கேட்டு அடம்பிடிக்க
எதைக்குறித்து இத்தேர்வென்று
தெரியாமலே விட்டுவைத்தேன்


நாற்சுவராயினும் நான் மட்டும் இருக்கும்

இவ்வுலகம்
யாவரும் வந்தமர மறுக்கும்
பாலையின் கோடையைக் கொடுக்க


காற்று வந்து கதைகேட்கும்
மெளனம் அதை மொழிப்பெயர்க்கும்
சுவர் பல்லியது இசையமைக்கும்
கடிகார ஓசையதும் ஓயாது உரையாடும்
இருளின் வெளிச்சமே இரவின் விலாசமாகும்
இப்படித்தான் எப்போதுமென பூனையது நெட்டிமுறிக்கும்
சினேகமாய் கனவு வந்து புறமுதுகில் தட்டிக்கொடுக்கும்
பருகக்கிடைத்த தேனீரிலும் ஆடை விழுந்து உறவாடும்
பசித்திருக்கும் சில சொற்களுக்கும்
பசியாற -கனவுருவம் பலியாகும்


பசியாறா நினைவதுவும்
பாதிவழியிலே கிடந்தழுக
சுவருடைத்து பெய்த மழை
அதன் வழியே கீழிறங்க
மழைக்குப் பின் வேறாகியிருந்த இவ்வறையின்
வேரறிதல் எளிதன்று

எளிமையாய் சொல்வதென்றால்
எஞ்சிய சொற்களையும் தின்ன தருவேன்
சன்னலில் வீடமைத்த என் வீட்டுக் குருவிக்கு


கேட்பதில் இருக்கிறாய்
எனக்கே எனக்காக உன்னிடம்
எதையும் கேட்கபோவதில்லை
நான்

யாராகவோ நானாகிவிட்ட போதிலும்
யாருக்காகவோ காத்திருக்கும்
இந்நிமிடத்திலும்
எதையும் கேட்க போவதில்லை
நான்

காத்திருத்தலில் கிடைத்த
கவிதையும்
காயம் படுகையில் கிடைத்த
நிமிர்தலும்
வாழ்தலுக்கு வழி செல்லிப்போகும்
இந்நேரத்திலும்
எதையும் கேட்கபோவதில்லை
நான்

முடிந்த மட்டும்
என் பெயரை தவிர்
என் குறும்செய்தி அழி
அன்பு பரிமாற்றத்தில் நானிட்ட
நெற்றி முத்தத்தை சுட்டெறி
அப்படியே என் எண்ணையும்
இங்கொன்றும் அங்கொன்றுமென
சுற்றியலையும் இப்பிரியத்திற்கு
நீண்டதொரு சமாதிசெய்
அதற்கு முன்
எனக்கொரு முத்தமிடு

இனியும்
எனக்கே எனக்காக உன்னிடம்
எதையும் கேட்கபோவதில்லை
நான்நினைவின் அமர்வு

உன் அமர்தலுக்கு காத்திருந்த
நாற்காலியொன்றில்
அமர நேர்ந்தது இன்று

அதுவரை உயிரற்றதென்று நினைத்த
அதன் குறிப்பில் கிடைத்தது
உன் நினைவு

நாற்காலி பேசுவதென்பது நம்பமுடியாதவை தான்

மறந்து போனதை பேசுவதென்பது
அதைவிட
சாத்தியமில்லாததும் தான்
அதனால் தான்
உன் அமர்தலுக்காக காத்திருந்த
நாற்காலியிடம் சொல்லாமலே வந்துவிட்டேன்
உன்னை எடுத்துக்கொண்டு...

சனி, 22 மார்ச், 2014

கானல் தடம்

என் சொற்களை
எங்கோ ஒளித்துவைத்திருக்கிறது
உன் கடல்

ஒரு அலை
அல்லது
ஒற்றை படகு

குறைந்தபட்சம்

கானலாவதன் சாத்தியங்களையாவது
குறைக்கட்டும்