உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

முன்பை விட


*

இறுக்கமாக இருக்கமுடிகிறது
முன்பை விட நேர்த்தியாய் 


வெயில் பட்டுச் சிதறும் நீர்த்துளிக்குள்
ஒளிந்திருக்கும் வண்ணத்தை
நிலம் மட்டுமே உடுத்த முடிவது
எத்தனை பெரிய கொடுப்பனை


விளையாடுகிற கண்ணாம்பூச்சி ஆட்டம் 
காட்டிக்கொடுக்காத திசை நோக்கி இருத்தி வைக்கட்டும்
அகப்படாத யாவற்றையும்


கைகளை காற்றுக்கு ஒப்படைப்பதில்
விரிகிற வானம்
கைகளின் சிறகுகள்


பறப்பதில் எத்தனை சுதந்திரம்
இறுக்கத்தில் எத்தனை செளகர்யம்



- ரேவா

தற்காலிகத்தின் நிறம்


*

தற்காலத்தின் மீதேறும் எதுவொன்றையும்
பச்சோந்தியின் நிறமாக்குகிறது
காலம்


குதித்து விளையாடும் நீர்த்தவளைக்கு
மழைகாலத்தின் மீது
ஏன் இத்தனை காதல்


அடித்துப் பெய்தும்
வீழ்ந்து போகாத வேரின் போராட்டத்தை
மெச்சுவதற்கு நேரமில்லை 


வானவில் வளைவுகளை வார்த்தெடுக்கும்
மழைக்காலங்களை ஏன் நம்பவேண்டும்
அதுவும் இந்த கோடையில்?!


வெறித்துக் கடக்கும் எதுவொன்றையும்
தன்னிறமாக்கும் பச்சோந்தியின் கண்கள்
கொண்டு வரட்டும்
அசைவுகளுக்கேற்ற அத்தனை பார்வையையும்




-ரேவா
31-12-15
1.22pM

பனிக்கால இரவுகள்






 பனிக்கால இரவுகள் எத்தனை அழகானவை..

கொட்டும் பனியில் பாதம் ஊன்றி நடப்பது பனிக்குடத்தில் ஒரு புழுவைப் போல் கிடந்த பொழுதுகளை அறிவின் துணையோடு ஈரமாய் மனதில் தவழவிடுகிறது..

பிடித்த நேரத்தில் பிடித்த பாடலோ அல்லது பிடித்தவரோடு கொஞ்சமாய் உரையாடலோ கொடுக்கும் ஆனந்தத்தை விட, அழகால் நிரம்பித் தழும்பும் நிலவை கண்ணயராது பார்ப்பதில் இருக்கும் கிறக்கம் ஒரு பெரும் பித்து.. 

தனிமைக்கு துணையாய் சுடர்விடும் மெழுகு, தன்னை உருக்கி பின் தானாய் வளரும் பெண்மையின் உருவாய் எனக்கு எப்போதும் தெரிவது இந்த நிலவு..

ஒரு பெரும் சக்தியை எனக்குள் எப்போதும் பாய்ச்சுவது நிலவு...

மெளனத்தின் மொழி எதுவாய் இருக்குமென்ற நினைப்பு வரும்போதெல்லாம் நிலவும் கூடவே வருவதன் நிழல் வளர்க்கும் வெளிச்சம் இன்று வரை எனக்கு புலப்படவில்லை தான்..

யாருமற்று ஒரு இரவில் பரந்த கடற்கரையை அதன் ரகசியம் மிகுந்த அலைகளின் ஓசையை கேட்கவேண்டுமென்ற ஆசை என்னை அதிகமாய் திங்கும் போதெல்லாம் பெளர்ணமிப் பொழுதுகள் அந்த பசியை ஓரளவில் குறைத்திருக்கின்றன.

நிலவின் வெளிச்சத்திற்கு முகம் காட்டி அமர்வதோ இல்லை அதை குழந்தையின் கைபொம்மையென இழுத்துக்கொண்டு கதை பேசி நடப்பதும் எனக்கு அத்தனை பிடித்த விசயம்.. அது ஒரு தியானம் போலவே எனக்கு தோன்றும்..

இன்று அதிகமாய் இருக்கும் குளிரால் அடங்கிப் போய்விட்ட வீதிகளை தூரத்து மாதா கோவில் மணிச்சத்தமும், அதிக காற்றால் செவிக்கு எட்டாது போன பைபிள் வாசகமும் தட்டிக் கொடுக்கின்றன. இன்று கிறிஸ்துபிறப்பென்ற நினைப்பு சட்டென்று அவர் பிறந்த தொழுவத்திற்கு இழுத்துச் செல்கிறது நிலவின் கைபற்றி..

சென்னையில் வேலையில் இருக்கும் பொழுதின் இடையே, பெளர்ணமிக் கடலை,அருகமர்ந்த பிடியின் சூட்டோடு தரிசித்த அந்த உப்பு வாசமும்,பிடித்தவர்களின் ஸ்பரிசமும் ஏனோ இந்த பனிக்காற்றில் அதிகம் கலந்திருப்பதாய் நாசி தூண்டிய செய்தியை, நிலவிற்கு முகம் காட்டி நடுங்கும் விரலோடு தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன்....

செல்போனில் பாடலை இசைத்தபடி.


பனிக்கால பெளர்ணமி இரவுகள் எப்போதும் அழகானவை என்று மட்டும் சுலபமாய் செல்லிடமுடிவதில்லை.



தூவானம் தூவத் தூவ
மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன்
என் மேலே ஈரம் ஆக
உயிர் கரைவதை நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்



-ரேவா


25-12-15
10:58pm

அது மட்டும்

கட்டுப்பாடுகள் அவிழ்ந்துவிடாது பயணப்படு
அது மட்டும்
அது மட்டுமே
கட்டுடைக்கட்டும்
பயணத்தின் மீதான அத்தனை ஒழுங்கையும்



இது

நொடி பிசகிவிடும் போது
வருடங்கள் கனக்கிறது 


இது எந்த நொடி பாரம்
இது எத்தனை வருட கனம் 


வலிக்கிறது..

பற்றுதலுக்கான திசையில் நிரந்தரத்தின் இருப்பின்மை



*
தற்காலிகம் வீடாவதில்லை நிரந்தரத்திற்கு 
இருந்தும் கட்டிக்கொள்கிறது

அனுமதிக்கிற காரணங்களின் நுழைவாயில்  
காட்டிக்கொடுப்பதில்லை  
மாறாக  
காட்சிப்படுத்துகிறது அசாதாரணத்தை சாதாரணமாய்

மேலெழும் ஆரம்பங்களின் அஸ்திவாரம்  
இலகுவாக்குகிறது 
 கட்டுமானங்களோடான தப்பித்தலை


முகவரியற்ற இருத்தலுக்கும்
முகவரியோடான இருப்பின்மைக்குமான வித்தியாசம்
தொலைதல் கணங்களாகையில்
மீட்டெடுக்கமுடியா திசை நோக்கிப் பறக்கிறது
கவனிக்க மறந்த சொல்லின் சிறகுகள்

இனி
தற்காலிகத்தின் திசை
விடியலில் நிறமேற்கிற சொல்லின் திசை
 

கருக்கூடா கேள்விகளின் பதில்



*
இது எந்தவகையான தவிப்பு

உயிரை விடுத்து சுயத்தை வருத்தும் பதில்

கூடுகட்டிக் கொண்ட அடைக்காக்கும் மனம் குஞ்சுடைய சொற்கள்

சூடு அனல் வெப்பம் தகிப்பு எதையும் ஈடுசெய்யா பிரசவித்தல்

இது எந்த வகையான தவிப்பு


தட்டுவதில் திறப்பது



*
இடமற்று இருப்பது இதமாய் இருக்கிறது

விலாசங்கள் தேடிச் சலிப்புற்ற பாதப் பிளவுகள்  
வளர்க்கிறது  
ஆயுள் ரேகையில் தீவுகளை

திரும்புதல் அறியா பயணம்  
சேர்தல்  
எல்லோரின் இலக்கு

இருப்பதை இடமென நினைப்பதில்  
தொலைகிற முகவரி  
எப்போதைக்குமான வீடுடைய விலாசம்