உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 25 ஜூலை, 2011

மழலையின் ஏக்கம்வணக்கம் நண்பர்களே நலமா? சமீபத்தில்  தமிழ் திரை உலகை பெருமைப் படச் செய்த விஷயம், தமிழ் சினிமா வென்ற தேசிய விருதுகள். இதுவரை தமிழ்  சினிமா பெறாத எண்ணிக்கையில் வென்ற இந்த விருது, அனைவரின் கவனத்தையும், நம் தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பிப் பர்ர்க்க வைத்து இருக்கிறது...அதுக்கும் நான் இங்க சொல்லுறதுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்குறேங்களா, சம்மந்தம் இருக்கு, நம் தமிழ் சினிமா வென்ற விருதுகளில் தென்மேற்கு பருவகாற்று என்னும் படம் சத்தம் இல்லாமல், ஒரு சாதனை படைத்தது, அந்த படத்தில் வரும் கள்ளிக் காட்டில் பிறந்த தாயே என்னும் பாடல், அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது, என்னை மிக்கவும் கவர்ந்த அந்த பாடலின் தாக்கமே, இந்த பதிவுன்னு இங்க சொல்லிக்கிறேன்.. இந்த பதிவில் தகவல் தொழில் நுட்பப் பிரிவில் வேலை பார்க்கும் ஒரு தாய், அந்த தாயோட அன்புக்கு ஏங்குற குழந்தைன்னு, அவர்களோட உணர்வுகளை இந்த பதிவில சொல்ல நினைத்தேன்... வழக்கம் போல இந்த பதிவும், உங்கள் பார்வை பயணத்தில் பயணப் பட வைக்கிறேன்..


கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே....

நம்ம வீட்டுக் குருவிக்கும்,
வளக்கும் நாயிக்கும், 
என் அழுகை தான் புரியுதே,
உன் அன்பின் மடியில 
ஆசையா தூங்க, 
இந்த பிஞ்சு மனசு தவிப்பது,
உனக்கு புரியுதா?..

உன் அன்புக்கும், உன் தீண்டலுக்கும்,
உன் முத்தத்திற்கும், 
உன் அன்பு மொத்தத்திற்கும்,
எனக்கு வார இறுதி நாள் மட்டும் உண்டு...

கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..

ஏசி காத்துல வேலை செய்வா,
ஏழு லோகம் தாண்டியும் பேசிடுவா,
அன்பு மகன் என் நினைவு வந்தா,
அலைபேசியில் என் குரல் கேட்ப்பா,
பாவமப்பா...

கணினி பாத்தே அவள் காலம் தொலைப்பா,
என் காலம் வலமாக, அவள் இளமை தொலைப்பா,
நாளைக்கு தருகின்ற தாய்ப் பாலையும்,
புட்டிப் பாட்டிலுல சிறைபிடிப்பா,
தியாகமப்பா....

இரவு வரும்போது போகுறா,
பொழுது விடியும் போது தூங்குறா,
அவ உடம்ப இரும்பாக்கி உழைக்கிறா,
ஆசையாய் அவ மடிசாஞ்சா, 
அலுப்பா இருக்கு கண்ணான்னு அனுப்புறா,

கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..

அம்மா என் அம்மா 
என் அருகில் இல்லை,
ஆனாலும் அவ பாசமெனக்கு
புரியாமயில்லை,
அவ அன்பைத்தவிர எனக்கு,
எந்த குறையுமில்லை...

அம்மா காசு இல்லா வீட்டில் சிரிப்பு இருக்கு, 
படிக்காத அம்மா வீட்டில் பாசம் இருக்கு,
என் அம்மா நெஞ்சிலும் அன்பு இருக்கு,
அந்த அன்ப காட்ட அவளுக்கு நேரமிருக்கா?.....

அம்மா உன் அன்பில் என்ன வஞ்சம்மா,
அட்டவணை போட்டு
நீ கொடுக்கும் அன்புக்கு,
என் மனசு ஏங்குதம்மா..
நீ சமைக்கும் சமையல,
ஊட்டி விடச் சொல்லி,
இந்த பாவி மனசு தவிக்குதம்மா..

காசு பணம் எல்லாம் இருக்குது,
அது என் பாசத்த உங்கிட்ட குறைக்குது,
பணம் கொடுத்து வாங்குன,
வாடகை தாய்கிட்ட (ஆயா )

என் அன்பு முழுவதும் போகுது...
உன் பூ முகம் எனக்கு மறக்குது...

நாலு ஒன்னொன்னும் போகுது,
அது தூரமா உன்ன கட்டுது.
நான் மொத மொத உச்சரிக்கும்
அம்மா என்ற சொல்ல, 
நீ உச்சி முகர்ந்து கேட்கனும்னு தோணுது,
அந்த அம்மா என்ற சொல்லும்,
ஆயாவுக்கு சொந்தமாய் போகுது...

கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..


திங்கள், 18 ஜூலை, 2011

♥ ♥ ♥ உயிரினும் மேலான காதலுக்கு.....♥ ♥ ♥

நம் முதல் சந்திப்பில்
மௌனமாய் நீ கடந்தாலும்,
உன் காதல்
புரியாமல் இல்லை
என் இதயத்திற்கு...

 ♥ பிழைகளோடு 
நீ அனுப்பும்
கடிதத்திலெல்லாம்,
பிழையில்லாமல் தெரிகிறது
எனக்கான காதல்....
♥ உன்னை பற்றி
நினைக்கையில்
தானாய் வந்து ஒட்டிக்
கொள்கிறது,
உன் அழகும்,
உன் மீதான காதலும்.

♥ எப்போதோ நீ
பரிசளித்த,
கைகுட்டையில் புதைந்து
கிடக்கிறது,
உன் வாசத்தோடு
நமக்கான காதல்..
♥ நீ சாப்பிட்டு
மிச்சம் தரும்
மிட்டாய்களில் எல்லாம்
இனித்து கிடக்கிறது,
உன் காதல்...
♥ பொய்யாய் இருந்தாலும்
பேரழகி  நீ
என்னும் சொல்லில்,
சொக்கிப் போகிறது
என் காதல்...
♥ ஒவ்வொரு சண்டைக்குப்
பின்னும்,
சமாதானத் தூதுவனாய்
மாறிப் போன,
உன் முத்தத்தில்
ஒளிந்து கிடக்கிறது,
காதல்...
♥ உன்னை மாற்ற
நானும்,
என்னை மாற்ற
நீயும்,
காரணமாய் இருந்தது,
நம் காதல்..

கண்ணாடி முன் 
அழகாய் தெரியும் 
நீ,
என் முன் 
காதலாய் தெரிவது
ஏன்?.....
♥ உன்னை தொட்டுப் பேசும்
தென்றல்...
என்னிடம் கொட்டிச்
செல்கிறது,
உன் மீதான என் 
காதலை....
♥ ஒரு முத்தத்திற்காய்
தூங்குவது போல நடிக்கும்
அழகனே,
நீ நடிப்பது தெரிந்தும்,
நடிக்காமல் நான் கொடுக்கும்
முத்தமும் காதலே....
♥ என் நாட்குறிப்பு
ஒரு நாளும்
குறிப்பெடுத்துக் கொள்ள
மறப்பது இல்லை...
காதலோடு 
உன் பெயரை.....
♥ நீ குறும்பு செய்யும் 
போதெல்லாம்,
கோவம் வரவில்லை,
அசடு வழியும் 
உன் முகம் பார்த்து 
காதல் தான் வருகிறது..

 ♥ என் எல்லாக் கவிதைகளும்
உன் வாசிப்புக்கு 
பின்னே
முழுமையடைகின்றன,
என் வாழும் காலமும்,
உன்  நேசிப்புக்கு
பின்னே அர்த்தமடைகின்றன,
இந்த காதலால்...


 ♥ ♥ ♥ ♥ ♥ ♥

திங்கள், 4 ஜூலை, 2011

அவன் நினைவோடு நான்....

            அடர் இருளில், யாருமற்ற சாலையில், என் கைகளில்  பத்து விரல்கள் முளைத்த நேரம்....ஆம் என் அருகில் அவன்.....இருளோடு பயம் கொண்ட நானே, அவன் இருக்கும் நினைவால் இறுமாப்போடு வர, சிறு குழந்தைப் போல, பயம் கொண்டு என் கரம் பற்றிய அந்த நேரம், நட்பின் கதவினை உடைத்து எனக்குள் காதல் பிறந்த தருணம் அது....

       அந்த இருளுக்குள்ளும், என் இதயத்தில் சந்தோச இடியோசை....இந்த நிமிடம் இப்படியே முடிந்துவிட உள்ளுக்குள் மணியோசை...ஏதாவது பேசுவான் என்று நினைத்து, படபடக்கும் அவன் விழியை கவனிக்கையில் உணர்ந்தேன்...களவு போனது நான் மட்டும் அல்ல, அவனும் தான் என்று....

            என் விருப்பம் சொல்ல நினைத்த நேரத்தில் எல்லாம், ஏதோ ஒன்று தடுக்க, தப்பி பிழைத்தேன் நட்பின் முகவரியில்....இன்று அவன் கைத்தலம் பற்றிய நேரம்....மணவறைக் கோலங்கள் கண்ணில் தெரிய, சொல்லத் தெரியா சந்தோஷம் கொண்டேன்...

              இதுவரை பயணித்த பாதை, இன்று  புதிதாய் தோன்றியது  போல் உணர்வு...இதுவரை கடிந்து கொண்டே சென்ற, என் வீதியின் நீளம், இன்று சுகமாய் தெரிந்தது...எப்போதும் குலைத்து பயமுறுத்தும் நாயின் சப்தமும், சங்கீதமானது ..கண்ணில் பட்டதை எல்லாம் ரசித்தேன்...இன்றே புதிதாய் பிறந்ததாய் நினைத்தேன்..இதுவரை முளைக்காத சிறகெல்லாம், இன்றே முளைத்ததாய் உணர்ந்தேன்...

           அவன் செல்லும் நேரம் வந்தது....கைபிடிக்குள் இருந்த காதல், நட்பாய் மாறி நலம் விசாரித்து சென்றது...பத்திரமாய் செல்..போனதும் எனக்கு போன் பண்ணு...என்ற வார்த்தையில், விழித்துக் கொண்டது என் கனவு...இம்ம்ம் என்று பதில் சொல்லி, அவன் வீடு கடந்து நடந்தேன்...ஓசைகள் அற்ற வீதி, காற்றோடு கலந்து வரும் மண் வாசம், துளி துளியாய் கோலமிட ஆயத்தமான மழை,  அழகாய் தெரிந்த தனிமை, எல்லாம் சேர்ந்து அவன் நினைவோடு மறுபடியும் பயணப் படவைத்தது...

            என் வீடும் வந்தது...அம்மாவின் அன்பும், அப்பாவின் கரிசனமும், தம்பி, தங்கையின், சண்டையும் இன்று அந்நியமாய் தெரிந்தது....வெட்க்கித்து, இந்நிலையிலிருந்து மீள நினைத்தேன்....மீட்டிய வீணையின் நாதமாய், என் தலையணை அருகில் இருந்த பொம்மையை பார்க்கையில், பற்றி எரிந்தது அவன் நினைவுகள்...அவன் தந்த பரிசோடு, அவன் ஸ்பரிசம் கண்டு, அதோடு உறவாடினேன்....இரவில் அனைவரும் உறங்க, நான் மட்டும் விழித்திருக்கிறேன் காதலோடு....

            பொழுதும் புலர்ந்தது...இதுவரை நான் பார்க்காத சூரியன், என்னை புதிதாய் பார்த்து சிரித்தான்...சிட்டுக் குருவிகளும், மைனாக்களும் சத்தம் இடும் ஓசைகள் சங்கீதமானது...வீட்டுத் தோட்டத்தில் பூத்த மலர்களும், புன்னகையோடு அவன் வாசம் தந்தது... அவன் வாசம் தந்த பூக்களை சூடிக் கொண்டு,  சென்றேன்....புன்னகையோடு....

          அருகில் வந்தவன், நேற்று போனதும் ஏன் மெசேஜ் பண்ணல, என்ற அன்பான வார்த்தையை உதிர்க்க, பதில் சொல்ல தெரியாமல், அவன் விழி மொழிகள் வாங்கிக் கொண்டு, பதில் பேசாமல் இருந்தேன்..இருவருக்குள்ளும் இருந்திடும் காதலை உணர்கிறோம் என்றாலும், யார் முதலில் சொல்வது என்ற தயக்கமே, தண்டவாளமாய் நீள, நட்பின் பெயரில் இணைந்தே இருந்தோம்...

              ஓர் மாலை கோவிலுக்கு செல்வதாய் முடிவு செய்து, இந்த நட்புக்கு முடிவு கட்டிவிட, இருவரும் நினைத்தோம்....கோவிலுக்கு சென்று வழக்கம் போல், அர்ச்சனை செய்ய, அர்ச்சனை டிக்கெட் வாங்கி  வர சென்றவன், சாமி பெயருக்கு பதில், எங்கள் இருவரின் பெயரையும் எழுதிக் கொண்டு வந்தான்...அதுவரை பட படத்துப் பேசிய இதழ்கள், மௌனப் புன்னகையை மட்டுமே பதிலாய் தந்தது அவனிடம்...கோவில் பூசாரியும், எங்களை தம்பதியராய் நினைத்து, கடவுள் மாலையை எங்களுக்கு சூட, கடவுளின் தீர்ப்பும் நாங்கள் இணைவதே என்பதைப் போல் உணர்ந்தோம்...

           கோவிலை விட்டு வெளியே வந்தாலும், இருவர் மனமும் சந்தோஷத்தில், பேச வார்த்தைகள் தேடிக் கொண்டிருந்தது...அவன் சிந்தும் வெட்கப் புன்னகையை உள்வாங்கி, நானும் புன்னைகையை அவனுக்கு பதிலாய் தந்தேன்...கடவுளின் ஆசிர்வதமாய். சில மழைத்துளிகள் எங்கள் கைகளில்...

           நண்பர்களாய் இருந்தவர்களை, காலம் காதலர்களாய் மாற்றியது...காதலோடு அவன் தந்த அன்பு மொத்தத்தையும் ஆசையோடு பருகி வந்தேன்...விதி என்னும் வில்லன் என் வழி வந்து, எனக்கும் அவனுக்குமான இந்த பயணத்தை, தூரமாகிப் போடுவான் என்று கனவிலும் அறியேன்...

          எங்கள் பிரியம் இருவர் குடும்பத்திலும் தெரிய, அவர்கள் தரும் முடிவிற்க்காய் காத்திருந்தோம் காதலோடு...இறுதியில் சாதி என்னும் வில்லன், சிம்மாசனமிட்டு அமர்ந்தான் எங்கள் காதலின்  முன்னே... பின் இருவரும் சிறைபடுத்தப்பட்டோம், எங்கள் காதல் நினைவுகள் முன்னே.  இந்த பிரிவு தற்காலிகமானது என நான் நினைத்தாலும், அவனை விடுத்து, இயங்குதல் என்பது இயலாத செயல் என்று அவனும் அறிவான்...

          எப்படியும்  அவனோடு பேசிவிட நினைத்து, அவன் அலுவலகம் சென்றேன், காதலின் அன்பை அணு அணுவாய் பருகி வந்தவர்கள், நீண்டநாள் சந்திப்பிற்கு பின், பேச வார்த்தைகள் அன்றி, கண்ணீரில் நலம் விசாரித்தோம்.இணைந்து வாழ்வது என்றால், பெற்றோரின்  சம்மதத்துடனே இருவரும் இணைவது, இல்லையேல் இருக்கின்ற நிலையில், நிலையாய் இருப்பது என்று உறுதி வாங்கி, திரும்பி வந்தேன், எங்கள் மாறாக் காதலோடு..

         .எங்களின்  இந்த பிரிவு, சாதி என்னும் கண்ணுக்குத் தெரியா கௌரவப் பேயால் வந்தது... அந்த கௌரவப் பேய்கள் பிடித்தும் ஆடும் உறவுகளை, எங்கள் உண்மைக் காதலின் வலிமை மாற்றும், என்று நினைத்து அமைதிகாத்தோம்...இந்த காத்திருப்பில், அவனை விடுத்து,அவன் குரல் மொழிகள் கேட்காது,  நீளும் என்  இரவுகளில், நீங்காத அவன் நினைவுகள், என் தனிமையை சுட்டெரிக்கும் என்றாலும் .. என் அருகில் அவன் இல்லை என்று, நினைக்கும் பொழுதுகளில், என் அருகில் அன்பு சிம்மாசம் இட்டு, நினைவுகளில் காதல் செய்வான்...

         சின்ன சின்ன சண்டையின் போது ஏற்படும் பிரிவுகளின் காத்திருப்பு  எல்லாம்,  சமாதானம் எனும், அவன் அன்பான காதல் மூலம் நிரப்பப் படும்...இன்று?.... இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும், உன் கைபிடிக்க..ஆனாலும் உனக்கான இந்த காத்திருப்பிலும், வலி கலந்த சுகம் இருக்கத்தான் செய்கிறது... .என் பாசம் மொத்தத்தையும் ஒன்றாய் திரட்டி, நான் காதல் செய்த காதலனே, நீயில்லாது, பிடித்தங்கள் இல்லை என்பதை எப்படிப் புரியவைப்பேன், என் உறவுக்கு...

             உருகி உருகி உயிர் தேய்ந்த பொழுதுகளில் கூட, சாதியால், நம் அன்பை, புறம் தள்ளிய, நம் உறவுக்களுக்கு எப்படிப் புரியவைப்பது..என் உயிர் நீ என்றும், உன் உயிர் நான் என்றும்..

        ஒவ்வொரு தொடக்கத்தின் போதும், அதற்கான முடிவும் எழுதப்படுமாம்..நம்மக்கான முடிவும் வந்தது, உன் பெற்றோர், வேற திருமணம் செய்ய சொல்லி, வற்புறுத்துவதாகவும், நீ அதை தவிர்த்து  வருவதாகவும், உன் நண்பன் என்னிடம் சொன்ன நேரம், மரணம் தரும் வலி என்ன என்பதை உணர்ந்தேன், முதல் முறை....ஒரு முறை உன்னிடம் பேசிவிட நினைத்து, உன் நண்பனிடம் உன்னை வர சொல்லிவிட்டு உன் வருகைக்காய் காத்திருந்தேன், நம் காதல் நினைவிடத்தில்....

         உன்னை முதல் முதலில் காதலனாய், எனக்கு காட்டிய,  இடம் அல்லவா..என் காதலுக்கான கருவறை அல்லவா அந்த இடம்....அங்கே இருக்கையில், ஒரு வித அமைதியை இருவரும் உணர்வோம்...இன்று, கண்ணீர் பெருக்கெடுக்க, காரணம் புரியாமல் காத்திருக்கின்றேன்,   நீ தரும் பதிலுக்காய்...வெகு நேரம் கழித்து, வந்தவன் .சாதிக்காய், புறம் தள்ளப்பட்ட நம் காதலை சாதிக்க, மரணம் மட்டுமே வழி என்றான்.. சாவதென்று ஆன பின், அனைவரையும் எதிர்த்து வாழலாம்.  நம் காதலை, நாம் வாழும் வாழ்க்கையில், அவர்களுக்கு புரியவைக்கலாம்...சாவது என்பது முட்டாள் தனமல்லவா? என்று அவனிடம் உரைத்தாலும், ஏற்கனவே ஒரு முடிவோடு வந்தவன், என் முடிவுக்குள் வரமறுத்தான் என்பதை அவன் பார்வையில் உணர்ந்தேன்...

            மரணம் என்ற வார்த்தை மிரட்டல், தைரியமில்லாதோர், தான் காரீயம்   சாதிக்க பயன்படுத்தும் வார்த்தை, என்று அவன் சொன்னது எனக்கு நினைவு வர, சாவதென்று முடிவெடுத்துவிட்டால், இருவரும் ஒன்றாய், உறவை எதிர்த்து, வாழ்ந்து விடலாம், இல்லையேல், பெற்றவற்க்காய், தனித் தனியே பிரித்து போய், நமக்கான விருப்பங்களை சாகடித்து, அவர்களுக்காய், அவர்கள் விருப்பபடி வாழ்ந்து விடுவோம், என்று சொல்லி முடிப்பதற்குள், என்னிடம் அவன் எதிர்பாத்த பதில் வந்து விட்ட திருப்தியில், நானும் அதையே நினைத்தேன், என்று பதில் சொன்னவனின், முகம் பார்க்க முடியாமல் தலைகவிழ்ந்தேன்...

         கண்ணீர் என் காதல் நனைக்க, இருதயம் துடிக்க மறுக்க, உலகமே இருண்டதாய் ஒரு கணம் தோன்ற, என் வாழ்க்கை முழுவதும் வருவதாய் சொன்ன,  என்னவன் என்னை விலகிச் சென்றான்..எங்கள் காதல் ஆரம்பம் ஆன அந்த இடத்திலே, முடியும் என்று தெரியாமல் போனது...சிறு நேர அழுகைக்குப் பின், பயணப் பட்டேன் என் பாதையில், மழைத்துளி, என் கண்ணீர் மறைத்தது...இருவரின் காதல் பரிமாற்றத்தின் போதும், தோன்றிய மழை
நியாபகம் வந்தது...அன்று அட்ச்சதயாய்த் தெரிந்தது, இன்று நெருப்பு துண்டுகள்  மேலே பட்டது போல் சுட்டது, அவன் நினைவுகளுடன்.... 

        வாழ்க்கையில் காதல் மனிதனை பக்குவப்படுத்தும்..என் காதல், முதுகெலும்பில்லாத என்னவனின், இன்னொரு முகம் நான் அறிய காரணமாய் இருந்தது...விருப்பங்கள் எல்லாம், விருபுகின்ற ஒன்று கிடைக்கின்ற வரையில், என்பதும் புரிந்தது...

               அவனை மறத்தல் என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை, என்று, உறவின் முன், அவனை மறந்ததாய், பொய்யாய் நடிக்க, காலம் எனக்கு காதலோடு, வாழ்வியலையும் சொல்லிக் கொடுத்திருக்கிறது...அவன் இல்லாத இடத்தில், அவன் நினைவுகள் என் நாட்களை நிரப்பிக் கொண்டு இருக்கிறது...அவனுக்கு விதிக்கப் பட்ட வாழ்க்கையோடு, பொய்யாய் ஒரு வாழ்க்கைப் பயணத்தை அவன் தொடங்க,  அவன் தந்த காதல் நினைவுகளுடன், இன்னொருவரை, அவன் உறவில் நிரப்ப விருப்பமற்று, அவன் காதல் நினைவுடன் நான்..