உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 நவம்பர், 2011

காரணம் நானறியேன் .....


கண்கள் உறக்கம் அற்று,
கால்கள் தேடுதல் அற்று,
இதயமும் இயக்கம் அற்று,
தவிக்குது தவிக்குது...

ஏன் இந்த தவிப்பு,
எதற்கிந்த பிழைப்பு,
என் நிழலும் எனை பார்த்து
சிரிக்குது சிரிக்குது...

ஆறுதல் தந்தேனோ?
ஆற்றாமை மறைத்தேனோ?
என் நிழல் நீ என்ற
நினைவினில் இருந்தேனோ?
இன்று குழப்பம்
என்னை சூழ நடப்பதை
நானறியேன்....

நிழலென தொடர்ந்தவன்
நினைவினில் நிற்கிறான்.
நிஜத்தினை தெரிந்துமே,
ஏற்க மறுக்கிறான்...

நான் செய்த பிழையென்ன ?
உன்னை நானாய்
ஏற்க துணிந்திட்டேன்...
துணை வருவாய் என்ற
துணிவினில்,
பலரை எதிர்க்கத் துணிந்திட்டேன்..

அன்பாய் கரம் பற்றி
ஆறுதல் சொன்னவன்
மௌனத்தை பற்றிச் செல்கிறான்
புரியாத பேதை இவள்
அவன் மௌனத்தில்
வார்த்தையை தேடுகின்றேன்...

இது நான் அல்ல என்று
தெரிந்துமே,
என்னை நானாய் புதுப்பிக்க
முடியவில்லை,
நடப்பது எல்லாம்
அன்பின் மீறலில் நடக்கின்றதா?
புரியவில்லை..
இந்த புரியாத விதி மீறல்
என்னை பயமுறுத்துதடா...

என் செயல் அனைத்திலும்
உன் சிந்தனையே
வியாபித்து இருக்கும்
இந்த செய்கையின்
காரணம் நானறியேன்.....

செவ்வாய், 29 நவம்பர், 2011

புரிந்துகொள்ள முடியாதவர்கள்...
விட்டுப் பிரிந்த வார்த்தைகளிலும்,
கொட்டித் தீர்த்த கோவங்களிலும்,
மனதின் ரணம் மறைத்து,
இதழோரம் வலிக்கும்
புன்னகைகள் புரியவைக்கும்
வாழ்க்கை முறைகளை....

மௌனமாய் கடந்தாலும்,
குத்தல் பேச்சுகளின்
அஸ்த்திரத்தில் சிக்குண்டாலும்,
காயம் படாததைப் போன்ற
பழக்கங்கள் புரியவைக்கும்
வாழ்க்கை வழி(லி)களை..

புரிந்தவைகளையும்,
புரியாதவைகளையும்,
பிரித்துப் பார்த்து
பகிர்ந்து கொள்வதில்
புரிந்து போகிறது
வாழ்க்கையின் புரிதல்கள்...

பழகிப் போன வலிகளிலும்,
பாலாய்ப் போன பசிகளிலும்,
இன்னும் இன்னும் என
தாகம் கொண்ட தவிப்பிலும்,
சில நேரத் தனிமையிலும்,
தனல் கக்கும் இரவினிலும் ,
விடாது துரத்துகின்ற
கடமைகள் புரியவைக்கும்
வாழ்க்கையின் அர்த்தத்தை...

வாழ்க்கையில்
இன்னும் இன்னுமாய்
தேடல்கள் தொடர்ந்தாலும்
தேவைகள் நீண்டாலும்,
வாய்ப்புகள் வளர்ந்தாலும்,
புறம் தனில் சிரித்து
அகம்தனில் நடிக்கும்
சிலர் மட்டும்
இன்னும் புரிந்துகொள்ள முடியாதவர்களாய்............

சனி, 26 நவம்பர், 2011

எனக்கும் கவிதை தேவைப்படுகிறதுயாரோ ஒருவனுக்காய்
உள்ளிருக்கும் ரகசிய
ஆசை முடிச்சுகளை
நான் அறியாமல் அவிழ்க்கிறது
என் கவிதை...

பெண் என்ற வட்டத்தில்
ஒளிந்து கொள்ள,
ஆளுமைகள் வாய்க்கு
அவி(ல்)லாகாமல் இருக்க,
ஒரு மனித புழுவாய்
என் சுயம் தேட
சிலநேரங்களில்,
எனக்கும் கவிதை
தேவைப்படுகிறது...

தனிமைச் சிறைகளை,
வாழ்வின் ரணங்களை,
நினைவின் சுமையினை,
பிரிந்த உறவினை,
உள்ளிருக்கும் ஏக்கத்தினை,
ஏமாந்த கதைதனை,
ஆனந்த நிகழ்வினை,
அழவைக்கும் நிஜத்தினை,
அன்பான  காதலை,
உள்ளிருக்கும் அன்பினை,
வருங்கால ஒருத்தனை,
வளம் சேர்க்கும் பொழுதினை,
உயிர் கொடுத்த நட்பினை,
என ஏதேனும் ஒற்றை
நிகழ்வில் நிதர்சனத்தை
புரியவைக்க,
நிகழ்கால வலியின்
சுவடை நிஜத்திற்கு
தெரியவைக்க,
புரியாமல் முடிந்து போன
வாழ்வியல் வலியில் இருந்து
என்னை மீட்டெடுக்க
எனக்கும் தேவைபடுகிறது
கவிதை...


என் சுயப்போராட்டத்தில்,
என்னை நான் வெல்ல,
நிஜங்களை நேசிக்க,
உறவுச் சுமைகளை சுகமாய் சுமக்க,
பழக்கப்பட்ட கவலைகளை
காகிதத்தில் சிறைவைக்கயென
எனக்கும் சில நேரங்களில்
கவிதை தேவைபடுகிறது....
ஆம் எனக்கும் கவிதை தேவைப்படுகிறது...

திங்கள், 21 நவம்பர், 2011

என்ன தான் இருக்கிறது உன் கண்களில்....
உன்னைக் காணும் போதெல்லாம்
கர்வப் படச்செய்யும்
அந்த கண்களில்
என்ன தான் ஒளித்துவைத்திருக்கிறாய்...

பட்டாம்பூச்சியாய் படபடக்கிறது
என் கண்கள்
உன் விழிகண்டு..

உன் பார்வை தீண்டும
ஒவ்வொரு நிமிடத்திலும்
பலவாறாய் எனக்குள்
நீ...

சிலநேரப் பார்வை
அரவணைப்பாய்,
சிலநேரப் பார்வை
கதகதப்பாய்..
சிலநேரப் பார்வை
குறுகுறுப்பாய்...
சிலநேரப் பார்வை
கண்டிப்பாய்...
என பலவாறு என்னை
மயக்கியும், கடத்தியும்,
கட்டளையிட்டும், காதலிட்டும்
பாடாய்படுத்தும் அந்த பார்வைக்குள்
என்ன (னைத்) தான் ஒழித்து
வைத்திருகிறாய்
சொல்.

திங்கள், 14 நவம்பர், 2011

வா இப்போதே காதலிப்போம்...


அம்மா என் பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
மறக்காமல் வந்து விடுகிறது 
உன் நினைவு...பேரழகை இன்னும் இன்னும்
அழகாக்குகிறது
நீ சூடிக்கொண்டு வரும் 
வெட்கம் 


விட்டுவிட நினைத்தாலும்
முடியவில்லை 
எதிலாவது  உன்னை நினைவு படுத்தும்
இந்த  நினைவுகளை..


சிறகில்லாமல் பறந்து வரும் 
காதல் பட்டாம் பூச்சி
நீ...
உன்னைப் பார்த்ததிலிருந்து
களவுபோன கண்களுக்குள் 
என் காதல் ஆடுது 
கண்ணாமூச்சி ...


முடியாது என்றாலும்
முடியும் என்ற
விருட்சத்தை எனக்குள்
விதைத்தது 
நீ...


என்னை கடத்திச் செல்லும்
உன் பார்வைக்கு பின்னே
தொலைந்து போகின்றன
என் கெட்ட பழக்கங்கள்...


பலரும் பலவாறு
நடந்து செல்ல,
நீ மட்டும் எப்படி
அழகோடு செல்கிறாய்.


நீ  அன்று சாதாரமாய் தான்
பார்த்தாய் என்னை ,
அன்றிலிருந்து  சதா உன்னைப் பார்ப்பதே
வேலையாகி விட்டது
எனக்கு...


அழகை சுமந்து வரும் 
கவிதை
நீ..
அந்த கவிதைக்கே
கவிபடித்த கலைஞன்
நான்..நீ நடந்து செல்லும் 
வீதியில் 
நடைபயில்கிறது 
என் காதல்...
கனவினில் கூட
தொடாமல் பேசும் 
உன்னை
தொட்டுவிட துடிக்கிறேன்,
நிலவைத் தொட்டவன்
நானாய் இருக்கட்டும் 
என்ற ஆசையில்,,,,


கொடுக்க கொடுக்க 
குறையாத செல்வம் 
கல்வியாம்!!!
கற்றுக் கொடு
எனக்கான காதல் கல்(ல)வியை...

என் கவிதைகளுக்கு
கிடைத்த 
மிகப்பெரிய பரிசு 
உன் வாசிப்பு...
என் காதலுக்கு கிடைத்த
மிகப்பெரிய  பரிசு
உன் நேசிப்பு..

கவிதையோடு
வாழ ஆசை எனக்கு,
அதற்காகவேனும் 
வா இப்போதே காதலிப்போம்...
திங்கள், 7 நவம்பர், 2011

நீ நான் நம் காதல்

தேங்க்ஸ் : கூகிள்


கண்ணாடியில் வீசிய
கல்லாய்
உன் பார்வைகள்,
என்னுள் சிதறிக்கிடந்தாலும்
ஒவ்வொன்றிலும் வித விதமாய்
தெரிகிறாய்
 நீ
காதலோடு...விதையிலே இருக்கும்
மரங்களைப் போல்,
உன்னுள் விதைக்காமலே
காத்திருக்கிறது,
என்னுள் வேர்கொண்ட
நம்  காதல்....

பார்க்காமல் இருக்க
ஆயிரம் காரணம் சொன்னாலும்
எப்படியும் பார்த்து விடுகிறோம்
ஒரு காரணத்தை வைத்து
அது
நம் காதல்...உனக்கு பிடிக்காதவைகளை
எனக்கு பிடிக்காதவைகளாய்
பிரித்துப்போடுகையில்
பிடித்துப்போகிறது
நம் பிரியம்...இதழ் பிரிக்காமல்
பேசும் வித்தையை
முதலில் நிறுத்தச் சொல்
உன் விழிகளிடம்.
நான் சந்திக்கையில்
பேசியே கொல்கிறது
புரியாத பாஷையில்..
 


உன்னைக் காணாத நேரத்தில்
பட படக்கும்,
உன்னை கண்ணடதும்
உன்னில் தொலையத்துடிக்கும்
என் மனது...
 


உன் இதழ் சிந்தும்
வார்த்தைகளை விட
எதுவும் கவிதையாய்
தெரியவில்லை
எனக்கு...
 


நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
பேசாத விஷயங்களை,
பிரிந்திருக்கும் போது
பேசிக்கொள்கிறது
நம் இதயம்..
 


நம் ஒவ்வொரு
சண்டைக்குப் பின்னும்
நம்மை புதிதாய்
காட்டுகிறது
நம் காதல்
 


உன் ஒவ்வொரு நாள்
பிரிவிலும்,
விட்டுப் போன பிரியங்களும்
வீசிப்போன புன்னகையும்,
காற்றோடு கலந்து கொண்ட
உன் பறக்கும் முத்தமும்
போதுமானதாய் இருக்கிறது
அடுத்த சந்திப்புவரை
என்னை மனிதனாய் வைத்திருக்க..

♥ 
 
நீ கொடுத்த
அன்புக்கு ஈடாய்
எதுவும் இல்லை என்னிடம்
என் காதலை தவிர..

♥ 
 
எனக்கு உலகமாய்
நீ
உனக்கு உலகமாய்
நான்
நமக்கு எல்லாமுமாய்
நம் காதல்.....

♥