உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 27 மே, 2013

முத்தபுராணம்


 
சத்தமில்லாமல்
நம் சரித்திரம் சொல்லட்டும்
இந்த முத்தபுராணம்...

 உயிர் ஒப்பந்தமொன்றை
உதடுகள் எழுதுகிறது
முத்தமெனும்
 மையிட்டு

*
சொர்க்கமென்பதை
இரண்டாய் பிரித்து
உன் இதழாய் படைத்தானோ
இறைவன்...

 *
ஒரு துளியாய் விழுந்து
பிரவாகமாய்
உருவெடுக்கும் வித்தையை
எப்படி கற்றது
உன் முத்தம்...

*
உனக்காக ஒன்று
எனக்காக ஒன்றென
தனைக்காக்க தானாய்
வளருகிறது
இம் முத்தம்...

*
ஊடலை உடைக்க
உடன் எடுத்துவருகிறாய்
உன் முத்தத்தையும்
அதன் மொத்தத்தையும்.
.
*
உனக்கு ஊட்டையில்
மட்டும்
பசியேறி ஏறிகொள்கிறது
இம்முத்ததிற்கு.
.
*
இன்னுமொரு கவிதையென
கன்னம் காட்டுகிறாய்
கட்டுக்கடங்காமல் இதழ்கள்
எழுதித்தீர்க்கிறது
உன்னை.

*
அசலோடு வட்டியை
அடம்பிடித்து வாங்கும்
முத்த வட்டிக்காரனாய்
உன்னை முழுதாய் மாற்றியிருந்தது
இம்முத்தம்...

*
காமத்தின் சாவியிட்டு
காதல் திறக்கும்
ரகசிய வழி
முத்தம்
*
முதல் முத்தத்திற்கு
முகம் மூடுகிறாய்
விரலிடுக்கில் வந்து விழுகிறது
நாணமெனும்
முத்தம்..

*
 உலராமலே கிடக்கிறது
நீ உயிர்த்தொட்டு
எழுதிய கவிதையொன்று
இதழிலில்..

*
இதழ்கோப்பைதனை
மறுமுறையென்
இதழ்மாற்று
போதை தெளியட்டும்
இம்முத்ததிற்கு..
*
உனைக்கண்டதும்
கவியெழுத
காதல் கட்டெடுத்த
வார்த்தை
முத்தம்...

*

சத்தமில்லாமல்
நம் சரித்திரம் சொல்லட்டும்
இந்த முத்தபுராணம்...


ஞாயிறு, 26 மே, 2013

வெற்று மைதானம்
வெற்று மைதானமென
வெறுமை சூழத்தந்தாலும்
ஆடிக்களைத்த நிகழ்வுக்குள்
நிதானமாய் ஓடிவிளையாடுகிற
ஒற்றை பந்து
காதல்...

தோல்விகள் புரிந்தாலும்
தொடர்ச்சியாய் முயற்சிகள்,
அயற்சியை மறைக்க
அவ்வவ்போது
நினைவுகள்..

வலிக்கு வலியென
வழிகொண்டு தொடர
வார்த்தைகொண்டு அடைக்கிறாய்
இப்பெருவெளியை...

உடலுக்கும் உயிருக்குமான
தொடர்பு அறுபடும் நிலையிலான
இறுதி போராட்டத்திலும்
வசதியாய் வந்தமர்கிறாய்
சிறு இடைவெளி கடத்தும்
நிகழ்வுகளில்..

எத்தனை முயன்றும்
கிட்டாத வெற்றியில்
ஒரு பார்வையாளனைப்போல்
காத்திருக்கின்ற காதலுக்கு
சமாதானம்
சொல்லமுடியா வார்த்தைகளை
கைக்கு கொடுக்கின்றேன்

காதலென்பது
எழுதப்படாத தீர்ப்புகளில்
நிறைந்திருப்பதென்று....

-ரேவா

வெள்ளி, 3 மே, 2013

சரிபாதியானவளுக்காய் என் வாழ்த்து
வாழ்க்கை குறித்து பல வினாக்களுக்கு பதில் தெரியாது போனாலும் வாழ்தலுக்கான பிடித்தமென்பது நட்பைத்தொட்டுத்தான் ஆரம்பமாகிறது..சமயங்களில் பதில் இருந்தும் சொல்ல முடியா பல கேள்விகள், சூன்யவெளியொன்றை உருவாக்கி சுயம் தன்னை சுட்டெறிக்கும் நிமிடங்களில் வசந்தங்களை வாசலுக்கு கொண்டு வரும் வித்தையை கற்றுத்தான் வைத்திருக்கிறது நட்பு..அதனால் தான் என்னவோ நட்பு  அதன் கோட்டையை இன்னும் இன்னுமென  நீட்டித்து தேசமெங்கும் தன்னை வியாபித்திருக்கிறது...

எதையோ தேடச்சொல்லி கட்டளையிட்ட இருள் தேடியெடுக்கையில் நட்பெனும் வெளிச்சத்தை கையில் கொடுத்துப் பயணிக்கச்சொன்ன நாள் இன்னுமென் மனக்கண்ணில் விரிய, பெண்ணாய் பிறந்ததாலே தவறவிட்டவை பல இருக்கையில், உன் அருகாமை தானே எனக்கு அத்தனையும் கொடுத்தது... கூடிக்களித்த பொழுதுகள் ஒன்றா இரண்டாவென கூட்டிக்கழிக்க நினைத்தால் கூடிடும் நரையென்பது சுற்றிய சுற்றம் அத்தனையும் அறியும்,,,
பெண்களுக்கு வீட்டின் கட்டுப்பாடுகள் கால் சிலம்புகளனென   நாம் அறிந்தே இருந்தாலும், முகவரி தொலைத்த கடிதமொன்றின் உள்ளிருக்கும் செய்தியென அது நம்மை அலைக்கழித்துக்கொண்டே இருக்க, இருவருக்குமான அலைவரிசை ஒத்தேயிருத்தா ஒத்துழைத்ததால் கிடைத்ததா இந்த உறவென்று இதுவரை  தெரியவில்லை..ஆனாலும் இவ்வலைவரிசையை தெரிந்தே வைத்திருக்கிறது உன் பண்பலை..அதனால்தானென்வோ ஆட்டோகிராப் நோட்டைத்தாண்டி ஓட்டமெடுத்திருக்கிறது நம் நட்பு...

 நொடிக்கொரு முறை தொலைபேசவோ, அன்பை குறிப்பிட்ட பரிசாக்கவோ தெரியாத வக்கற்றவளின் வரிகளிது வாஞ்சையாய் உனைத்தேடிவருகிறது.. உன் அணைப்பின் சூட்டையும், அருகாமையின் தவிப்பையும் இழந்த இவ்வரிகளுக்குள் நீயிருக்கிறாய் என்பதாலே என்னை மறந்து உன்னை எழுதிக்கொண்டிருக்கிறேன்..இப்போதும் கூட உன் நேசத்திற்குரியவரோடு காதல் பாடியபடி நீயிருக்கலாம்..வாழ்த்த வார்த்தைகளை தேடி நட்பின் வெளிகளில் ஒரு பட்டாம்பூச்சியென பறந்து திரிகிறேன்  நான்...உன் நேச சிறகெடுத்து சுற்றி வருகிறேன்..பல வண்ணம் கொடுத்து என்னை  பயணப்பட வைத்த பல நட்பு அவரவர் திருமணத்திற்கு பின் இல்லாமல் போனதன் வலியொன்று போன வருடத்தின் இதே நாளிலும் கிடைக்கப்பெற்றேன்.. நேசத்தை எத்தனை முறை வலிக்க அடித்தாலும்  அதன் நிழலென்பதே நேசிப்பது தானே.. ஆனாலும் உன் விசயத்தில் மட்டும் வரம் வாய்த்தவள் நான்... வாய்ப்பு கொடுத்தவர் உன் நேசத்திற்குரியவர்...

 நாளை உன் முதலாம் ஆண்டு திருமண நாள். வாழ்த்துவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது... உனக்கான இந்த நாள் மட்டும் என்னோடு இருக்கிறது..முதல் வாழ்த்தாய் என் வார்த்தைகளிருக்கட்டுமென பிழையோடே பிழைசெய்கிறேன்... அடுத்துச்சந்திப்பில் பேசிச்சிரிக்க இவ்வரிகள் இருக்குமென உதட்டோர சிரிப்பில் உறுதிசெய்துகொள்கிறேன் என் நட்பின் சரிபாதிக்கு மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்... நல்லவைகள் உங்களை வந்து சேரவே நான் பெற்ற இம் முகநூல் உறவுகளோடு வாழ்ந்துகிறேன் உங்களை...வளங்கள் வரட்டும்... வாழ்த்துகள் கல்பனா, வாழ்த்துகள் .முரளி...