உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 19 டிசம்பர், 2011

மொத்தமாய் காதல் ♥♥♥




என்னுள் 
மோதித்தெறிக்கின்ற
உன் பார்வையில் எல்லாம்
அணு அணுவாய்
காதல்....


தேங்கிய நீரிலும்,
தெரிகின்ற நிலவதினில்
உன் முகம் காணும்
என் கண்களுக்குள் 
காதல்....


உன் விழி ஈர்ப்பில்
விதைக்கப்பட்டு,
எனக்குள் கருத்தரிக்கும்
என் கவிதைக்குள்ளும்
காதல்....


இருண்டு கிடக்கும்
இளமையதில்,
ஒளிந்து கிடக்கும் 
ஆசைகளை 
வெளிச்சமிட்ட உன் 
வெட்கப் புன்னகையில்
காதல்....


பேசி பேசி 
விடிந்த பின்னும்
தீராத வார்த்தைகளில்
இன்னும் இன்னும் தீராத
காதல்....


உன் மௌன கவியை
மொழிபெயர்க்கும்
என் செல்லக் கம்பனாய்
காதல்....


உன்னோடு பேசுவதாய்
எண்ணி, எனக்குள்ளே
பேசிக்கொள்ளும்
நேரத்தில் வந்துவிழும்
கவிதைகள்
காதல்....


கருமேகம் சூழ
தோகை விரித்தாட
காத்திருக்கும்,
வண்ணமயில் போல,
உனக்கான காத்திருப்புகள்
அத்தனையும் 
காதல்...


நீண்ட பயணம் அதில்
வழித்துணையாய்
வந்திட்ட 
உன்  நினைவுகளில் எல்லாம்
காதல்....


ஏதோ ஒரு தருணத்தில்,
என்னைக் கடக்கும் 
எல்லாரும் நீயாய் 
தெரிகின்ற விந்தை
காதல்...


வேண்டாம் என்று 
நினைத்த வேளையிலும்,
முடியாது என்று,
தவித்த வேளையிலும்,
நீயே வேண்டும்
என்ற தவிப்பு
காதல்.....

 தேவதை
உன்னை ஊரே
காதல் செய்ய,
நான் மட்டுமே 
உன் நேசிப்பை பெற வேண்டும்
என்ற தவம்
காதல்...


உன் புன்னைகைக்கும்,
நீ சூடும் பூவிற்கும்,
உடுத்துகின்ற உடுப்புக்கும்,
உதட்டுச் சுளிப்பிருக்கும்
வைக்கும் பொட்டுக்கும்,
விரல் இடுக்கில் விழுகின்ற
உன் கூந்தல் கற்றைக்கும்,
தவற விட்ட பேருந்திற்குமாய்
கவிதை சொல்லும்
என் கவிதை
அத்தனையிலும்
மொத்தமாய் காதல்....
♥♥♥♥

திங்கள், 5 டிசம்பர், 2011

மறந்து விடுகின்றேன்.!...?...!



பரபரப்பான நேரமது 
ஒவ்வொருவரும் ஒவ்வொரு 
விதமாய் 
கடந்து செல்கின்றனர் என்னை,
சிலர் சிரித்தபடி,
சிலர் சிணுங்கியபடி,
இன்னும் சிலர் 
ஏதோ சிந்தனையில் மூழ்கியபடி  
சிலர் எட்டாக்கனிக்கு வித்திட்டபடி, 
தினப்படி நடக்கும் 
செயல்களை திட்டமிட்டபடி,
கைக்குள் வந்துவிட்ட
காதலோடு உறவாடியபடி,
பசிக்கு மருந்தாகும் 
உணவிற்க்காய் உழைத்தபடி, 
தன்னுள் ஒரு உயிரை சுமந்தபடி,
கண்ணுக்கு விருதாகும் அழகை ரசித்தபடி,
முதுமையதை சபித்தபடி,
குழந்தையொன்று பொதி சுமந்தபடி,
இன்னொருவன் தோல்வியை 
தான் வெற்றியாய் புசித்தபடி,
இன்னும் சிலர் தன்னையே மறந்தபடி, 
சிலர் தனக்கான வரவை எதிர்பார்த்தபடி,
சிலர் தான் வாழும் வாழ்வை சபித்தபடி 
என ஒவ்வொரு முகங்களிலும்
ஏதோ ஒரு உறவின் முகப்பூச்சை 
உணரமுடிகின்றது..


இந் நிகழ்வுகளை 
உள்வாங்கியபடியே,
விறகில் அடுக்கிவைக்கப்பட்ட 
நேற்றைய மனிதனுக்கு தீமூட்ட 
மறந்து விடுகின்றேன்
வெட்டியான் என்பதை  மறந்து  ..
மூட்டிய தீயில் வெந்து சாகும்
மனித இச்சைகளைக் கண்டு
மறத்தும் விடுகின்றேன்
மனிதன் என்பதை மறந்து....

 முந்தய கவிதை : காணமல் போன அப்பா

சனி, 3 டிசம்பர், 2011

காணாமல் போன அப்பா....




இப்போதெல்லாம் அப்பாவின்
அடையாளம் காணவே இல்லை...

தொண தொணக்கும் வாயோடு
தான் வளர்ந்த விதத்திற்கும்,
நான் வளரும் விதத்திற்கும் ,
உள்ள வேறுபாட்டை சொல்லி சொல்லி
மெய்சிலிர்க்கும் அப்பா
இப்போ இல்லவே இல்லை...

அஞ்சுக்கும் பத்துக்கும்,
அறைவேளை உணவிற்கும்,
ஒதுங்க ஒரு சாண் இடத்திற்க்குமாய்
பாடுபட்டு கரைசேர்ந்த
தன் வாழ்வில்,
நான் அலச்சியமாய் கடக்கும்
ஒவ்வொரு விஷயத்திலும்
உள்ள கஷ்டத்தை சொல்லித் தந்த
அப்பா இப்போ இல்லவே இல்லை...

அழுகின்ற நேரத்தில்,
அரவணைக்கும் - என் 
ஆண் தோழனாய்,
விழுகின்ற நேரத்தில்,
தன் நிழல்கொடுத்து
இளைப்பாறுதல் தந்த
என் நிழலாய் எனைக் காத்த
அப்பா இப்போ இல்லவே இல்லை... 

நான் பெறுகின்ற ஒவ்வொரு
வெற்றியையும்,
தன் வெற்றியாய் வாஞ்சையோடு
கொண்டாடும் அப்பா
இப்போ இல்லவே இல்லை....

என் வசதிக்காய்
தன் வாய்ப்பை சுருக்கிக்கொண்டு
அதிலும் சுகம் கண்ட அப்பா
இப்போ இல்லவே இல்லை...

அப்பாவிற்கும், பெண்ணிற்க்குமாய்
வகைபடுத்தபட்ட வாழ்வில்
நட்பாய் புதுவரையறை
வகுத்து,
நட்போடு ஒரு தோழனாய்
வலம் வந்த என் அப்பா
இப்போ இல்லவே இல்லை..


ஆம் இப்போதெல்லாம்
அப்பாவின் அடையாளம்
இல்லவே இல்லை...
வயது ஆக ஆக ஒரு குழந்தையாய்
மாறிப்போன அப்பாவிடம்
இப்போதெல்லாம்
என் அப்பாவிற்க்கான  அடையாளம்
இல்லவே இல்லை...

எனக்கு வாழ்க்கைமுறையை
சொல்லித்தந்து,
 அதில் என் குழந்தையாய்
பயணிக்கும்
என்  குழந்தை (அப்பா) யி(வி)டம்
என் அப்பாவின் அடையாளம்
காணவே  இல்லை....



இந்த கவிதைக்கு முதல் ரசிகன் என் அப்பா, இந்த கவிதைய படிச்சதும் எனக்கு பிடிச்ச டெடி பியர்  கிபிட் பண்ணுனாரே...இத எதுக்கு சொல்றேன்னு பாக்குறேங்களா? எல்லாம் ஒரு காரணமாத்தான்.....