உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 18 மார்ச், 2019

கவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )
இறுக்கத்தின் விளை நிலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டி தீர்த்திருக்கிற அருவியின் "கவனிக்க மறந்த சொற்களை" தான் இவ்வளவு சாதாரணமாக ஒரு தொகுப்பாக்கி இருக்கிறார்கள். சாதாரணமாக என்றா குறிப்பிட்டேன் மன்னிக்கவும் நீண்ட பெரும் சவாலிற்குப் பிறகு தொகுப்பாக்கியிருக்கிறார்கள்.
எப்போதும் போல இதையும் ஒரு அலை விளையாட்டென முதலில் ஆடத் தொடங்கினேன். முதல் நான்கு பக்கங்களிலேயே ஆட்டம் எல்லை மீறிப் போய் கொண்டிருப்பது எங்கேயோ கேட்க தொடங்கியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் உள் நகர்த்தியிருக்கிற அலைகளை வேண்டாம் என்று தள்ளிவிட்டு வெளியேற முடியாமல் தான் கரை தாண்டி பயணித்துக் கொண்டிருந்திருக்கிறேன். 

ஒவ்வொரு பக்கத்திற்கு ஆழம் அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில் கவிதைகளின் தலைப்புகளை பற்றிப் பிடித்து இளைப்பாற வேண்டியிருந்தது. மொத்த பயண நேரமும் இடைவிடாமல் அசைத்து பார்த்துக் கொண்டே இருந்த அலைகளில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் தான் என்னை சுதாரிப்பதற்கான காலம் வாய்த்தது. 

ஆக, மொத்த தொகுப்பும் பிடித்த குரல் வழி காலத்திற்கு ஒரு முறை வாசித்துப் பார்க்க வேண்டிய தொகுப்பாகியிருக்கிறது. தலைப்புகளில் இளைப்பாறினேன் என்று கூறியிருக்கிறேன் அல்லவா அவற்றில் ஒரு சில தலைப்புகள்...! 

இருப்பதின் பிரதானம்
புதிய தாகத்தில் பறிபோன பழையதின் தடம்.
தீராக் கடலில் அலை விளையாட்டு
பொய்மான்
இலக்கமிடப்பட்ட இலக்குகளின் இலக்கணம்
இரவு நேரப்பாடல்
அசைவுகளின் அறியா கண்
(இதை கணம் என்று வேறு மாற்றி வைத்திருக்கிறேன்)

பெயர்களற்றவன்
நீயூரான் மரத்தின் இலை ஆடை
புன்னகையில் மறையும் பனிக்கூழ் மௌனம்.
சுழற்சியின் மாதாந்திரம் பிரசவிக்கும் நிறம். 

60 நாட் தூரத்தில் தெரிகிற கடலில் கரைக்கு வெகு அருகாமையிலான 10 நாட் தூரம் வரை வீசும் கலங்கரை விளக்கின் ஒளியை மட்டுமே 

சுட்டிக்காட்டியிருக்கிறேன் மீதத்தை நீங்களும் நீந்திப் பார்க்க வேண்டி.
வாசிக்க வாசிக்க மிக இலகுவாக ஒரே அமர்வில் வாசித்து முடிக்கக் கூடிய ஒரு தொகுப்பாக (என்னளவில் மட்டும்) இருக்கிறது.ஆனால் அதன் அதிர்வு என்பது என்றைக்குமானது. மறுவாசிப்பு எப்போதும் அதே கடலின் வேறு வேறு பாதைகளை காட்டிக் கொடுக்கும் என்று நம்பியிருக்கிறேன். சரியான தேர்வுக்கு துணை நிற்கிற காலத்தை மழை விரல்களால் அணைத்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் க்கா...

 
ரொம்ப ரொம்ப ரொம்ப நாள் ஆச்சி இப்படி ஒரு புத்தகம் முடிந்த பிறகான மனநிலை வாய்த்து...😍
 
கவனிக்க மறந்த சொல் 

ரேவா
  யாவரும் வெளியீடு.

-மனோ அரசு 

 

0 கருத்துகள்: