உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 22 அக்டோபர், 2024

நானும்.அவளும்



வடபழனி முருகன் கோயில் ஒன்னு சார்.. 

டிக்கெட் எடுத்துக் கொண்டு பக்கத்தில் உட்கார்ந்த பெண்ணும் நானும் சினேகமாய் ஒரு புன்னகை செய்துகொண்டோம்..

எப்போதேனும் இப்படி சில அபூர்வ கணங்கள் தோன்றுவதுண்டு..

கோயில் வந்தா சொல்லுறீங்களா என்றாள் அந்த பெண்.

பதிலுக்கு சிரித்தபடி சரியென தலையசைத்தேன்.

ஃபோனில் மூழ்கிப் போனவள் சிரிப்பு மட்டும் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.  

தன் காதுகளை ஏதோ ஒரு காமெடி சோ ஷார்ட்ஸ்கு ஒப்புக் கொடுத்திருந்தவள் பிறகு ஹெட் போனை கழற்றி தன்னுடைய லேப் டாப் பேக்கில் வைத்தாள்..

இன்னும் முருகன் கோயிலுக்கு எத்தனை ஸ்டாப் என்று என்னிடம் கேட்டாள்..

யோசித்துவிட்டு இன்னும் 4 ஸ்டாப் இருக்கு, நான் வந்ததும் சொல்றேன்..

மறுபடியும் பரஸ்பரம் புன்னகை..

பிறகு ஃபோனில் அந்த பெண் முதலில் irtc ஐ திறந்து ஏதோ ஒரு ஊரின் பெயரை போட்டு டிக்கெட்டை தேடுகிறாள்..

தலை உள்ளுக்குள் நடந்த உரையாடலை நகலெடுத்து தலை அசைவை பிரதியாக்குகிறது..

பின் அதே irtc+ இன்னொரு தேதி அதிலும் ஏமாற்றம்.

பின் இன்னொரு தேதி.. அதே தலையசைப்பு.

பின் redbus, abibus, intercity எல்லா booking ஆப் -பயும் திறந்து பார்க்கிறவள் முகத்திற்குள் அய்யயோ என்ற சொல் கச்சிதமாய் உட்காந்து கொண்டது 

பின் எல்லாவற்றையும் close all கொடுத்து நிறுத்திக் கொண்டவளின் கைகள் படபடவென்று பஸ் கம்பிகளை தொட்டுத் தொட்டு மீண்டது..

பெரிய ஷாப்பிங் மாலில் எப்படியோ வழி தவறி மாலுக்கு உள்ளே வந்து விட்ட காகத்தின் பரிதவிப்பை போல, அவள் கைகள் படபடத்த அந்த நிமிடத்தின் உள்ளூர மொழியை யோசித்தபடி இருந்தேன்.  

 "நீங்க தீபாவளிக்கு டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா" என்றாள்.

புருவம் உயர்த்தி அவளை ஆச்சர்யமாக பார்க்க" எப்படி கண்டு பிடிச்சன்னு கேட்க நினைத்து, பின் filter இட்ட புகைப்படமாக என் வார்த்தைகள் இன்னும் இல்லை" என்பதாக  அவளிடம் தஞ்சம்.அடைந்தது...

மறுபடியும் அதே சிரிப்பு..

" ம் ம்.. இல்லைடி என்ன பண்ணப் போறேன்னு தெரியல.. போனஸ் எல்லாம் இல்லை.. இந்த மாசம் பாதி நாள் வேலைக்கே போகல, இதுல எந்த முகத்தை வச்சுக்கிட்டு ஊருக்கு போக.. என்று பேசிக் கொண்டிருந்தவளின் தோளைத் தட்டி "உங்க ஸ்டாப் " என்றேன்.

ஃபோனில் பேசியபடியே கீழே இறங்கிவள்,  பேருந்து கதவை மூடுவதற்குள் என்னை பார்த்து கையசைத்தாள்..

பதிலுக்கு அவள் இருக்கையில் என் கனத்த லேப் டாப் பேக்கை வைத்தபடி அடுத்த என் நிறுத்தத்திற்கு தயாரானேன்..

தன்னை தன்னிடமே வைத்துக்கொள்ள தெரியாதவர்களின் சொற்கள் வழியாக பெய்கிற மழையை மழையாக மட்டுமே தான் பார்க்க வேண்டுமா .

தீபாவளி இரவு வெடித்த பட்டாசுகள் காலையில் காகிதக் கோலங்களை நிறைத்து வைத்திருப்பது போல இன்றைய இரவு அவளின் கலங்கிய விழிகளால் நிறைந்து இருக்கிறது..

0 கருத்துகள்: