*
மீண்ட கணத்திலிருக்கும்
வாழ்தலைப் போல்
வரமாகிற எதுவொன்றையும்
சாபத்திற்கு நிகராய் பத்திரப்படுத்துகிறோம்
பக்குவங்கள் மண்டியிடும் திருச்சபைக்குள்
பாவங்களை மழுங்கடிக்கும்
மன்னிப்புகள்
உண்டு
தெரிந்தே செய்கிறோம்
மன்றாடல்
கூப்பாட்டுக் குரலாகிடும் போது
கூரையொழுகும்
சமாதானம் கொண்டுவருகிறது
பாத்திரங்கள் கொள்ளத்தக்க பெரு மழையை
நிரம்புதலும்
நிரம்பி வழிதலும் நிராயுதமாக்க
வழித்தடங்கள்
சாபத்திலிருக்கும் வரத்தை பிரித்தெடுக்கிற
அன்னப் பறவையாகிவிடுகிறது
நிர்பந்திக்கப்படுவதில் இருந்து விரிகிற
வழியற்ற தடங்களின்
பாதை
அடர்வனமாக்குகிறது
மீண்ட கணங்களை
*
குறியீடுகளால் நிரம்பியிருக்கும் நீர்த்தேக்கத்தில்
நீயாகவே பிரதிபலிக்கிறாய்
இம்மை
ஒரு
கரை
பிரமை
மறுகரை
கடலெனும் மாயை
மழையாய்
பொழிகிறது நிலத்தில்
காதைப் பிளக்கும்
இடிச்சத்தம்
கண்கூசச் செய்கிற
மின்னலொளி
அலைக்கற்றை வழியாய்த் துண்டிக்கச் செய்கிற
அறிவு
தொடர்பற்றதின் மோனநிலை
சூரியன் பார்க்க நிற்கிற நிமிடம்
இருட்டுகிற அறை
வெளிச்சமேற்றுகிறது படிமத்தின் மாடத்தில்
புரிவதில்லை
சொல்லின் முதல்
தோள்
ஊடுருவுகிற
மடிப்புகள்
விளங்காத கிரணக்
குறைபாடு
வளர்கிறாய்
இருள் குடித்து
ஆடுகிறாய்
காற்றை இசைத்து
அனைத்தையும் துறந்து ஆட்கொள்கிறாய்
விழி மூடிய
புத்தனின் புன்னகை
கொண்டு
விளங்காதிருக்கிறாய்
ஆசை துறக்கும்
ஒப்பீடு
உவமைக்குப் பொருந்துவதில்லை
உவமேயப் பார்வையில்
பிரதிபலிக்கிற நீர்த்தேக்கம்
மடை திறக்கிற
சொல்
இக்குறியீடு