உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
நட்பு கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஒளித்துக்கொள்கிறேன்



இது
இப்படித்தான்..

ப்ரியத்தின் பொருட்டு
தள்ளிவைத்து பார்க்கப்படுகின்ற
இந்நிமிடங்கள்
சொல்லமுடியா மலட்டு தாயின்
பாசம் போன்றது...

பகிர்தலில் பழக்கப்பட்ட
என் பாஷைகள்
மொழியறியாது
ஸ்வரம்புரியாது
இசைத்துக்கொண்டே கிடக்கிறது
ஈனஸ்வரத்தில்

இந்த மெளனத்திற்கு
எத்தனையோ காரணமிருக்கலாம்
எடுத்துவைக்கும் காரணம் புரியாதுமிருக்கலாம்..

சின்னசின்ன செய்திகளில்
கொட்டிக்கிடக்கும் வார்த்தைகளில்
ஆசுவாசப்படுத்தும் பகிர்தல்களில்
கோர்த்துப்பார்க்கும் பிரியங்களில்
நிரப்ப முடியா
வெறுமை பெற்று அழைகிறது
உன்னிடம் பகிரா செய்திகள்...

காதுக்குள் எப்போதும் வந்துமிழும்
வீரிய வார்த்தைகள்
நமை விழுங்காதிருக்க
எனக்குளே ஒளித்துகொள்கிறேன்
உன் நட்பை
உனதிந்த வருத்தங்களோடு

செவ்வாய், 1 ஜனவரி, 2013

யாருக்கும் தெரியாமல்




சட்டென்று நீயெனை கடந்திருக்கலாம்
ஆனால்
கூடவே வந்த்தில்
கூடுதல் மகிழ்ச்சிதான்
எனக்கு

ஏதேதோ பேசுகிறாய்
எல்லா பேச்சுலும்
உணர்கிறேன்
உன் நேசத்தை

கைகளை நீட்டுகிறாய்
நட்பென்று சொல்லி
பற்றுதல் சுகமெனினும்
ஏதோ ஒன்று தடுக்கிறது

விடியல் மறந்த பேச்சுகளில்
விட்டுக்கொடுத்த சுபாவங்களில்
தட்டிக்கேட்கும் ஆளுமையில்
உன் வேரை உணர்கிறேன்

படர்தல் முடியாதெனினும்
உயிரோடு இருத்தலில்
உருக்கொள்ளட்டும்
என் அன்பு
உன் மீதான நட்பில்

பின்னாதாய்
எல்லோரைப்பற்றிய கவிதையொன்றில்
உன்னையும் சேர்த்திட துடிக்கிறாய்
பெயரற்ற இந்த கவிதைக்குள்
நீ இடம் பெற்றிருக்கிறாய்
என்பதை அறியாமல்

வியாழன், 6 டிசம்பர், 2012

அவசியம் தேவைப்படுகிறது


ஆழம் பார்க்காமல்
அதிகம் தேடாமல்
அவசரமாய் ஒரு திரைச்சீலை
அவசியம் தேவைப்படுகிறது
நமக்கு..

ப்ரியக்கண்கள் மத்தியில்
பிரியாமல் நமைத்தொடரும்
கேள்விகளை

பெரிதாய் - யாரும்
சட்டைசெய்யாத போதும்
சாட்டையடியாய் வந்துவிழும்
இப்பார்வைகளின் வீரியம்
விழித்திருப்பவனுக்கே
புரியுமாதலால்

இப்படியும்
அப்படியும்
எப்படியோ ஒப்பிட்டு
எதன் எதற்கோ
பொருளிட்டு
பொய்யை மெய்ப்பிக்கும்
பொருளில்லா
இவர் பொருளில்
புதைந்துள்ள
பொருளனைத்தும்
புறம் பேசும் மனமன்றோ...

ஓப்புக்காய் அன்புவைத்து
ஓயாமல் உழலும்
இவர் நாக்கில்
ஓப்புமை உயருமென்றால்
ஓங்கிவளரும் நம் நட்பின்
பொருள் தானென்ன?

இச்சிநேகத்தின் சிறு நாடி
சில்லு சில்லாய் நொறுங்கிப்போக
சிக்கிட்ட
இம்மனிதருக்காய்

ஆழம் பார்க்காமல்
அதிகம் தேடாமல்
அவசரமாய் ஒரு திரைச்சீலை
அவசியம் தேவைப்படுகிறது
நமக்கு..


- ரேவா

திங்கள், 10 செப்டம்பர், 2012

நண்பேன்டா ( நட்பு காலம்)



உயிர்வாழ்வதற்கான
ஒற்றைத் துளி 

நீர்

உன் நட்பு.....


*
என் எல்லாமுமாய்
மாறிப்போன
எனக்கான சுயம்
நீ

*


 

திங்கள், 18 ஜூன், 2012

இப்படியாய் சில அறிமுகம்.....



என் நண்பனின் நண்பனாய்
முன்பொரு தருணத்தில்
நீ
எனக்கு அறிமுகமானதாய்
ஞாபகம்....

 இன்று
பரஸ்பர அறிமுகத்துக்குபின்
சிக்கன சிரிப்பில்
சிறைபிடித்துக்கொண்டேன்
உன் சிநேகத்தை..

உள்ளுக்குள் ஒர் உராய்வு
உந்தன் விழிகள்
என்னை நோக்குகையில்..
வெளிகாட்டா வகையில்
கடந்து சென்றேன்
அவ்விழியிடம்...

பேசிக்கொண்டே நீ இருக்க
கேட்டுக்கொண்டே நான் மறக்க
தொலைத்திருந்தோம்
சில மணி நேரங்களை...

தூரத்தில் கடக்கும் ரயிலிருந்து
தூரல்விழும் மழையில்,
தொடங்கி
எதிர் இருக்கை குழந்தையின் சிரிப்புயென
அர்த்தமில்லாமல் அடித்து பெய்தது
நம் உரையாடல்.....

உன் தோளில் நான் உறங்கிப்போக
தூக்கிவைத்தால் கலைந்திடுமோயென்று
என் கவனமீர்த்தாய்
கலைந்த தூக்கத்தின் நடுவே...

கேட்க நான் மறந்து
கொடுக்க நீ மறந்த
தொலைபேசி எண்ணில்
தொலைக்கப்பட்டிருந்தது
எப்போதும் போல
இந்த இரயில் சினேகிதமும்..........


சனி, 16 ஜூன், 2012

புரியாக்காலமது...




புழுதிமண் பரக்க
நாம்
விளையாண்ட விளையாட்டில்
விளையாட்டாய் விடப்பட்ட
வார்த்தைகளில் விரிசல்கண்ட
பிரியமது....

உண்மைக்கும் பொய்மைக்கும்
சரிக்கும் தவறுக்கும்
வித்தியாசம் பெரிதாய்  விளங்கிடாத
வயதுமது...

இருந்த பிரியங்களையும் 
புரிந்த சண்டைப்புதைமணலில்
புதைத்துக்கொண்ட
பருவமது...

கிட்டகிடைந்த அன்பிலிருந்து
கிட்டதட்ட பிரிந்த
வேளையது..

வேண்டுமென்றே தவிர்த்த நேரத்திலும்
வேண்டாமென்று இருந்த பொழுதிலும்
துயரம் நிறைத்து தூரமாகிப்போன
ப்ரியமது..


இன்று
காலம் நகர்ந்தாலும்
காயம் மறைந்தாலும்
உன்னைக்காணும் நாட்களில்
மட்டும்
நாம் சண்டையிட்ட
திண்ணைக்குப்பின்
தேடிப்பார்க்கின்றேன்
தவறவிட்ட பிரியமொன்றின்
புரியாக்காலத்தை....


ஞாயிறு, 29 ஜனவரி, 2012

அவரவர் அனுபவம்





நண்பன் என்று 
பெயரிட்டு 
அறிமுகப்படுத்தியும் ,
ஆணுக்கும், பெண்ணுக்குமான
நட்பை சில உறவுகளிடம்
நியாயப்படுத்தவே முடியவில்லை..
அனைவரின் பயமும் 
அவரவர் அனுபவங்களில் 
கிடைத்த அவர்களாகவே இருக்கிறார்கள்..  









ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

வரமாய் வந்த நட்பு



நீ என்னைத் திருத்தி தான் 
கொடுத்தாய்,
உன் நட்பால் திருப்பம் பெற்றது
என் வாழ்க்கை...

* 
எப்போதோ விட்டு போன
காதலை விட ,
விலகாமல் நீ தரும்
ஆறுதலில் அழுத்தமாய்
உன் நட்பு....

*
சண்டைகளுக்குப் பின்னும்
நான் தோள் சாயும்
இன்னொரு அன்னையாய்
உன் நட்பு...

*
எனக்கு வேண்டியதை
நான் வேண்டாமலே
நீ கொடுத்தபோதும்,
உனக்கு வேண்டியதை
உரிமையோடு 
நீ எடுத்த போதும்,
அழகாய் தெரிந்தது 
உன் நட்பு...

*
என் சந்தோஷத்தை
இரட்டிப்பாக்கவும்,
என் வேதனையை
இல்லாமல் போக்கவும்,
மருந்தாய் வந்தது
உன் நட்பு...

*
எனக்காய் நீயும்,
உனக்காய் நானும்,
உள்ளார்ந்த தோழமையில்,
உயிர் சிலிர்ந்த பொழுதுகளில்
காலம் மறந்த வேளைகளில்,
என அத்துணை காலங்களிலும் 
கூட இருந்தது 
 நட்பு...

*
என் புன்னகையில்
புன்னைக்கைக்கும்
இன்னொரு இதழாய்,
என் வலிகளை தாங்கும்
இன்னொரு இதயமாய்,
எனக்காய் இருப்பது 
உன் நட்பு.....

*
உணர்தலில் பேசி,
உயிர்வரை நேசித்து,
என் பிரச்சனையில் 
அவள் சிலுவை சுமந்து,
அன்பில் சிறகை 
எனக்காய் கொடுத்து,
என்னை அவளாய்
நேசிப்பது,
நட்பு...

*
வாழும் நேரத்திலும்,
நான் வீழும் நேரத்திலும்,
என்னைத் தாங்கிப் பிடிக்கும்,
இன்னொரு தோளாய்
நட்பு...

ஆம்............
என் வாழ்வின் 
வரமாய் வந்தது 
உன் நட்பு 




  பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்......................என் வாழ்வின் துணை நின்ற அத்துணை இனிய இதயத்திற்கும்  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்............... 

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

என் இனிய நண்பனுக்கு




* நேற்றைய பொழுதுகள் மகிழ்வாக,
இன்றைய பொழுது சுகமாக,
நாளைய பொழுது வளமாக,
 நீ மகிழ்ச்சியின் மடியில்
தவழ்ந்திட
உன் இனிய பிறந்தநாளில்
வாழ்த்துகிறேன்...

*  என் இனி(ணை)ய நட்பே..
உன்னைப்பற்றி சின்ன கவி
நீ  கேட்க     
என் செல்ல கவிதை உன்னைப்பற்றி
என்னசொல்ல இக்கவியில்..

* இதயம் இல்லா இயந்திரத்தில்
இணையம் மூலம் நான்
கண்டெடுத்த நல் இதயம்
கொண்ட உன்னைப் பற்றி சொல்லவா?

*  இல்லை
முகவரி தெரியா என் கவிதையை
என் தோல்வியாய் நீ நினைத்து
எனக்காய் பிரம்மனிடம் 
சண்டையிட்ட உன்  அன்பை
பற்றி  சொல்லவா ?

* எதைச்சொல்ல இந்நாளில்,
கரைசேரா  என் கவலைகளில்
நான் மிதக்க என்னை கரைசேற்ற
என் நட்பே...


* என் தாய்க்கு இணையாய்
நீ தரும் நட்பின் அன்புக்கு,
ஒரு தோழியாக இந்த கவிதையையே
கொடுக்க முடிகிறது உன்  பிறந்த நாள் பரிசாக...

* என் புது மலரே,
மாறாத புன்னகை  கொண்டு
நீ  பூத்திடவே
இந்த தோழியின் விருப்பம்,
நல் இயற்கையும் அதற்கு உதவும்..

* என் உயிர் நண்பா நீ இன்று
உதித்தநாளில் ,
நல் மாற்றம் ஒன்று உன்னை
தேடிவர மாறாத என் நட்பு கொண்டு
வேண்டுகிறேன்...

* நட்பால் என் உயிர் நுழைந்து
இன்று அதே நட்பால்
என் நண்பானாய்
என் உயிரில் வாழ்கின்ற
என் இனிய  நண்பனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

* குறைவற்ற உன் குணத்தோடும்,
குறையாத உன் பண்போடும்,
குறையில்லா புகலோடும்,
குறைவில்லாமல் நீ வாழ்த்திட
வேண்டுகின்றேன்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா...
happy birthday muras
 
( இந்த  ஸ்வீட் அஹ எடுத்துக்கிட்டு என் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு போங்க நண்பர்களே...)


அன்புடன்
ரேவா




வியாழன், 3 பிப்ரவரி, 2011

திரும்பிப் பார்க்கிறேன்


* கனவுகள் கொன்றுதின்ன,
கடமைகள் கொஞ்சம் தின்ன,
நிகழ்வுகளில் கனவுகளை,
சாத்தியமாக்கப் போராடும் 
வாழ்வில், கடந்த கால 
என் கல்லூரி வாழ்வைத் 
திரும்பப் பார்க்கிறேன்....

* மாயங்கள் நிறைந்த 
உலகில் அன்பில் மையல்
கொண்டு, ஆனந்தமாய்
நட்போடு பவனிவந்த
காலமது....

* குறும்புகள் உடன்கொண்டு 
குழந்தையாய்   கல்லூரியை 
சுற்றிவந்து,
பலர்கவனம் கவர்ந்த 
முத்தான காலமது...

* ஆணென்றும் பெண்ணென்றும்,
வரையறைகள் வைக்காமல்,
எம் வையத்து வாழ்நாளில் 
மகிழ்ச்சியாய் இருந்த காலமது...

* சிறிய உணவு பாத்திரத்தில்,
பலர்கைகள் பதிந்து, நிறைவாக 
உணவு உண்ட காலமது..

* சோதனைகள் தெரியாமல்,
வேதனைகள் அறியமால்,
நமைக் காக்கும் கவசமாய் 
நட்பின் கருவறையில் 
நிம்மதியாய்  வாழ்த்த
மூன்றாண்டு காலமது...

* உடலாக, உயிராக 
உதிரத்தில் ஒன்றாக,
துடிக்கின்ற இதயத்தில்
இருக்கின்ற அறையாக,
அணுஅணுவாய் எம் 
அங்கம் கலந்த 
அன்பு நட்போடு
அழகாக களித்த காலமது...

* முளைக்காத வாலெல்லாம்
முளைத்திட்ட நேரமது...
ஆசிரியர் போல் பலர்குரலில் பேசி 
நட்பின் சிரிப்பின் மூலம் 
கண்ணீர்த்துளியை     
பரிசாக வாங்கிய காலமது...

* வெளியுலகம் அறியாமல்,
நயவஞ்சகம் புரியாமல்,
நான் எனதென்று இல்லாமல் 
எல்லோரும் சரிசமமாய்
இருந்த்திட்ட காலமது...

* போட்டியில் பரிசுகள் தந்த 
மகிழ்ச்சியைவிட 
என் நட்புதந்த 
ஆனந்தத்தை அனுபவித்த 
காலமது...

* பிரசவவலி கண்ட தாய்ப்போல,
பிரிவின் வலி உணர்ந்தாலும்,
பிறக்கும் மாற்றத்தில்,
பிரிவின் ரணங்களோடும்,
எதிர்காலம் நமக்காய்
ஒளித்து வைத்திருக்கும்
சுவராஸ்யங்களை தேடி
பயணித்த கல்லூரி
இறுதி காலமது...

** இன்று,
முகவுரையும் மறந்துபோய்,
முகவரியும் தொலைந்துபோய்,
குரலொலியில் அடையாளம்தான் காண,
காலமென்னும் காந்தமது,
இழுத்த இழுவைக்கெல்லாம்
சுழன்று சுழன்று ஓடுகின்றோம்...

* மனைவியாக, கணவனாக,
குழந்த்தைக்கு பெற்றோராக,
முதுமைக்கு பிள்ளையாக,
வாங்கிய கடனுக்கு கடனாளியாக,
பொறுப்புகள் அதிகரிக்க,
நட்பு தரும் அன்பு மட்டும்
  என்றும் அனாமத்து சொத்தாக 
வாழ்க்கையெனும்
இறுதிநிலைக் குறிப்பை சமன் செய்கிறது...


* கனவுகள் கொன்றுதின்ன,
கடமைகள் கொஞ்சம் தின்ன,
நிகழ்வுகளில் கனவுகளை,
சாத்தியமாக்கப் போராடும் 
வாழ்வில், கடந்த கால 
என் கல்லூரி வாழ்வைத் 
திரும்பப் பார்க்கிறேன்....


அன்புடன்
ரேவா


( நான் வணிகவியல் மாணவி அதான் சொத்து பொறுப்புன்னு கொஞ்சம் வறுத்திருப்பேன்...பொறுத்துக்கோங்க...)

முந்தய பதிவு : அவள் இல்லாத நாட்கள் 
 

சனி, 30 அக்டோபர், 2010

ஊன்றுகோலாய் நீ



  வீழ்வதும், வாழ்வதும்,
அவரவர்  விதி என்றால்,,,
வீழ்ந்த நான் எழுவது
உன் மொழியாலே....

  தோல்வி என்பது,
என்  எழுத்தாய்  என் கவியில் இருக்க...
தோற்றது நான் என்று பலர்
எள்ளி நகைக்க...
இதுவே உன் வெற்றி என்று
எனக்கு உத்வேகம்  தந்தது
நீ .

ஆண்மையின் பலத்தால்
பலர் ஆயிரம் விதைக்க,
ஒற்றை கவியில் நான்
என்னை விதைக்க,
தோல்வி என்பது தோற்பதில்
இல்லை,
தோற்ற ஒன்றின்
தோற்றத்தில் இருந்து தொடர்வது,
தொடர்ந்த ஒன்றின் அனுபவத்தில்
இருந்து அமைவது என்று எனக்கு
புரியவைத்தவன் நீ...

  உணர்வுகள் என்பது பொதுவென்றிருக்க,
உணர்த்திடும்  நெஞ்சம் உணரட்டும்
என் மொழியை...
உரைத்திடும் நெஞ்சம்
ஒதுங்கி நிற்கட்டும்....
 என்று என் கவிக்கு உணர்ச்சி தந்த 
என் நட்பின் கவிதை இலக்கணமே ..
நீ,

என் வடிவங்கள் எல்லாம்
காலம் தந்த மாற்றம்,
என் மாற்றம் எல்லாம்
என் நட்பு நீ தந்த தோற்றம்...

என் கவிக்கு மறுவடிவம்
தந்த என் மாற்றுத் தாயே ....
என் கவிதையின் ரசிகன் நீ...
என் கவிதையின் காட்சிக்கு கலங்கரை விளக்கம் நீ....
என் கானல் கவிதையின் தூண்டுகோல் நீ...
என்னை தாங்கி பிடிக்கும் ஊன்றுகோல் நீ...
உத்வேகம் தரும் புது இலக்கணம் நீ...
ஆம் பலர் அர்த்தத்தில் அகப்படாத இலக்கண மீறல் நீ!!!

தோழனே!!!!!

வீழ்வதும், வாழ்வதும்,
அவரவர்  விதி என்றால்,,,
வீழ்ந்த நான் எழுவது
உன் மொழியாலே...
ஆம்
அன்பு கொண்ட உன் மொழியாலே....

அன்புடன்
ரேவா