
அனேகப்பெயர் வைத்தாகிவிட்டது
அதனாலென்ன
ஆண்டொன்று கூடும்பொழுதெல்லாம்
அவசரப்பிரிவு நோயாளியின்
வாழ்வை குறித்த பயமென
தொற்றிக்கொண்டே வருகிறது
நாட்களின் நகர்வை பற்றிய
இருள்...
இன்னதென்று சொல்லாமல்
இதனாலென தள்ளாமல்
தட்டப்படும் கதவுகளை
திறந்தே வைத்திருக்க
சலிப்புற்ற வார்த்தைகள்
சருகுகளாய் பெருநிலத்தில் பரவ
அத்தனையும் ஒரு மொழியெடுத்து
சுவாசப்பை நெறிக்க
கைகளை விரித்த படியே
காற்றில் நீந்த ஆரம்பிக்கின்ற கற்பனை
எனையுடுத்தி
உண்மையின் நிர்வாணம் மறைக்க
அவ்வவ்போது
எழும் கேள்விகள்- எதைக் குறித்தோ,
அதன் குறியுடைக்க கிளம்பும் கோபமெல்லாம்
இந்நாளில் இல்லாத உனைப்பற்றியே நீள
அவகாசமெதும் கொடுக்காத
தற்கொலைக்கு தயராகிறது
உனைப்பற்றிய என் குறிப்புகள்...
செத்துப்போ
கனவுகளை கொடுத்து
கனவினை விடுத்து
செத்துப்போ
வார்த்தையற்ற கவிதைக்குள்ளிலிருக்கும்
காதலும்
கோபமும்
சொல்லா மோகமும்
உனைத்தீண்டும் முன்
செத்துப்போ
விந்தற்ற விதைகொண்டு
மாதம் பூக்கும்
பூவினைத் தீண்டா வண்டென
தொலைந்துபோ
காட்சிகள் முடியும் மட்டும்
கனவுகள் தொலையும் மட்டும்
வாழ்க்கையே முட்டும் மட்டும்
வலிகொடுத்த உணர்வினை விட்டு
தொலைந்துபோ
வாழத்தகுதியற்ற அன்பைக்கொண்டு
வானம் படைத்த
உலகைவிட்டு
தொலைந்துபோ
அனேகப்பெயர் வைத்தாகிவிட்டது
அதனாலென்ன
பைத்தியக்காரியென்ற பெயரையும்
சேர்த்தெழுங்கள்
என் கனவுக் கல்லறையில்.......
ஒன்று
இரண்டாக
இரண்டு
நூறாக
கூடிக்கொண்டே போகிறது
உன்னைக் குறித்த
என் கேள்விகள்,
எல்லாக் கேள்விக்கும்
ஒற்றைப் புன்னகையை
பதிலெனக் கொடுத்தாலும்
போதுமானதாய் இல்லை
கேள்வியின் கோரப்பசிக்கு.
கொஞ்சமாய் அதை -நீ
மென்று விழுங்க
பதில்
தொண்டை நெறிக்கும் முன்
துடித்து விழிக்குதுன்
சுயமுகம்
இதுவரை காட்டியவை
கூட்டிச்சென்ற தூரத்திலிருந்து
திரும்புதல் முடியாதென்பதை
தொடர் மெளனமும்
சில கண்ணீர் துளிகளும்
சிறு தடுமாற்றமும்
எடுத்துரைக்க
மிச்சமிருக்கும் ப்ரியங்களை
எச்சமென
நீ புசிக்கையில்
இரவை புணர்ந்து
முடிக்கிறது
இன்னுமொரு பகல்..
இலக்கணங்கள் புரிந்தாலும்
நீ இன்னுமொரு
ஆண்
அவ்வளவே...
ஆளுக்கொரு பிரியம்
அடுக்க அடுக்கத் தொடரும்
அடுக்களை மட்டுமே
உலகமென விரியும்
பாரதியும், ஷெல்லியும்
கல்கியும் சாண்டில்யனும்
கூட்டு பொரியலுக்கு
இடையே
கூடவே இருக்கும்..
பெண்ணிய சிந்தனைகள்
பெண் விடுதலை
பேசிய கவிகளென
ஓரு மூலைக்குள் இருக்க
மூளையற்ற இவரன்பில்
அத்தனையும்
மூச்சிரையாகிக் கிடக்கும்
தொடர்பற்ற எந்தன் எல்லைக்குள்
எல்லைத்தாண்டா பயங்கரவாதம்
தாலியின் வேலியால் கிடைக்கும்
அடையாளமற்று திரியும்
எந்தன் உணர்வுக்கும்
அன்னையர் தினமென்றும்
மகளிர் தினமென்றும்
ஒரு நாள்வந்து தொலைக்கும்
அன்றைக்கும்
ஆளுக்கொரு பிரியம்
அடுக்க அடுக்கத்தொடரும்
அடுக்களை மட்டுமே
உலகமென விரியும்.
-ரேவா
இருப்பிடங்களை வெற்றிடமாக்கி
வெற்றிடங்களில் நுரைத்து தழும்பும்
நினைவுகளில் கோலேச்சில்
உன்னோடிருக்கிறேன்..
விடுவதாயும் இல்லை
விடைபெறுவதாயும் இல்லையென்ற
சமாதான சாஸ்திரங்களை
காதல்
கட்டவிழ்க்கும் காலமதில்
உன்னோடிருக்கிறேன்
சோகத்தின் அடர் இருளிலின்
கோரமுகத்திற்கு பயந்து
காட்சிகொண்ட
காட்டிக்கொண்ட தைரியத்தின்
பெரும் நிழலில்
காதலென்னை காட்டிக்கொடுக்க
உன்னோடிருக்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
உனதறைகள் திருடி
அவசியப்படுகையில் புணர்ந்து வெடிக்கும்
கவிதை விந்தின் பாய்ச்சலில்
உன்னோடிருக்கிறேன்
அவசியங்கள் காதலாகாதென்று
அறியவைக்க
அடர் இருளை போன்றதொரு
அமானுஸ்யம்
உனதருகில்
உண்டென உணர்ந்தும்
உன்னோடிருக்கிறேன்
நீ காட்டிக்கொடுத்தவைக்கு
காதலென்று பெயரிட்டு
கழுவிலேற்றும் கனவுகள்
எனதென்று அறிந்தும்
உன்னோடிருக்கிறேன்
வேறென்ன
எப்போதும் போல ஏமாந்த சிந்தாந்தம்
விடுவதாயும் இல்லை
விடைபெறுவதாயும் இல்லை
கொஞ்சம் கொஞ்சமாய்
இருட்டில் கலந்து
கரைந்து போகிற
சுயத்தின் சிதைவுகளை
ரசித்தபடியே
உன்னோடிருக்கிறேன்
-ரேவா
அவளைப்போலவே
நீங்களும் வரைந்திருக்கலாம்
உங்களின் எண்ணங்களிற்கான
ஒரு வட்டத்தை...
இதுவரை
அவள் வரைந்துகொண்ட
அவளின் கட்டுப்பாடுகளைக் குறித்த
கவலையோ
அதிலிருந்து மீளவேண்டுமென்ற
தவிப்போ
தோன்றவேயில்லை
அவளுக்கு
மேலும்
மேலும்
அவளை நெருங்கும் யாரும்
அவளை நெருங்காதிருக்க
கட்டுப்பாடுகளின் வட்டத்தை
நெருக்கிக்கொண்டே இருக்கிறாள்
உங்கள் எண்ணங்களை
பற்றியோ
இது அடிமைத்தனமென்று
நீங்கள்
குறிப்பதை குறித்தோ
எந்த கவலையுமில்லை
அவளுக்கு
என்றேனும் ஒரு நாள்
அவளை சரியாய் படிப்பதன்
பொருட்டு
தளர்த்தப்படலாம்
அவளின் கட்டுப்பாடுகளின் வட்டம்
உங்களுக்காய்
இதை உணர்ந்த தருணம்
உங்களுக்காய் மட்டுமென
ஒரு வட்டத்தை
வரைந்திருப்பாள்
நீங்கள் அறிந்திறாதபடி..
எதற்கும் பொருந்தாத
என் சுபாவத்தை
அலுவல் நிமித்தமாய்
அரிதாரமிட்டுக்கொள்கிறேன்...
இப்போதே நடந்தேறிவிடும்
பிரசவமாய்
பிதுங்கி நிற்கும் பேருந்தின்
ஓரத்தில் நிறுத்திக்கொள்கிறேன்
என்னை..
கையோடு கைதடவி
கைமாறும் காசுகளில்
கற்பை கட்டிவிட்டு
கண்பார்க்கும் கூட்டத்தில்
கண்ணகிகள் புன்னகைப்பர்
இது புதிதல்லயென்பதுபோல்
ஆண்களோடு சிரித்துபேசி
ஆடைகளில் கவனம் வைத்து
ஆயிரம் கண்கள் நடுவிலும்
அடக்கம் பேணி
ஆரம்பமாகும் அலுவலிலும்
அடுக்கடுக்காய் கட்டப்படும்
ஆயிரம் வேலி,
அத்தனையும் உடைந்தெறிந்து
அடுத்தபணி ஆரம்பிக்கையில்
எப்போது இரையாகுமென
தூண்டிலில் வார்த்தை தைத்து
வசமாய் வீசப்படும்
காமத்தின் அம்பை
யாருக்கும் தெரியாமல்
கடந்தாகவேண்டிய கட்டாயத்தில்
ஒவ்வொரு நாளும்
நீண்டு முடிகிறது
என் அலுவலக வேலை..
பணமென்ற ஒன்றிற்காய்
பழக்கப்பட்ட என் பழக்கங்களை
பூட்டிதைக்கிறேன்,
வீடு திரும்பையில்
பீறிட்டு அழும்
என் பழக்கத்தின் வலியை
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
எதற்கும் பொருந்தாத
என் சுபாவத்தை
அலுவல் நிமித்தமாய்
அரிதாரமிட்டுக்கொள்கிறேன்..
சிறுகுழந்தையைப்போல
கவனமீர்க்கிறது
உன் வருகை...
உன் வருகைக்கு பின்னான
நியாயங்கள் ஒவ்வொன்றையும்
அளந்துபார்க்க ஆயத்தமாகிறது
மனது...
உனக்கு பிடித்ததில் தொடங்கி
பிரியமற்றதாய் நீ தவிர்க்கும்
விசயங்களென அத்தனையும்
அறிந்துவைத்திருக்கிறது
இந்த மனது...
என்னை பற்றிய
உன் நிலைப்பாடு எதுவென்றறிய
என் நிலையிலே இருந்துபார்க்கிறேன்,-பின்
உன் நிலைப்புரியாது
நிதானமிழக்கிறேன்..
உன் ஆசைக்காய் வாதாடும்
மனம்- ஏனோ
என்னைப்பற்றி நினைப்பதேயில்லை..
பெண்ணென்று எல்லாவற்றிலும்
என்னை நிர்பந்திக்கும் மனம்
உன்னை எதிலுமே நிர்பந்திக்கவேயில்லை..
உனக்காய் சுயம் சுருக்கிய பொழுதுகளில்
எனக்குண்டான வலி
நீ அறியவே இல்லை..
பரீசிலணை செய்யாமலே
பலிகொடுக்கப்படுகின்ற
என் நெஞ்சத்து ஆசைகளை
அசைபோட
நீ ஒரு ஆடாய் கூட இல்லை..
அத்துமீறி அந்தரங்கம் திருடும்
கள்வனைப்போலல்லாது
சிறுகயிற்றின் நிமித்தம்
அன்னிச்சையாய் நடக்கும்
புணர்தல்
அதிகம் வலிகொடுக்கிறது,
உன் நேசிப்பின் தூரம் விளங்கியதன் பொருட்டு..
ஆயிரம் கனவுகளை சுமந்து
அரைகயிற்றில் அனைத்தையும்
தூக்கிலேற்றும் தந்திரம்
தெரிந்த ஆணே
உனக்கும் என் மூலம் பெண் பிறக்கலாம்..
(விதைப்பதை தான் அறுக்கமுடியும்.......)
 |
| நன்றி : கூகிள் |
பிறந்த அன்றே
கள்ளிப்பாலுக்கு
காவுகொடுக்கப்பட்டது
என் வாழ்க்கை..
விதியின் பயனாய்
வழியில்லா இடத்தில்
வக்கற்று பிறந்தேன்..
கருவில் இருக்கையிலே,
சிங்கமென்றான் அப்பன்,
சீமானென்றாள் அம்மா,
குலம் தழைக்க வரும்
வித்தென்றாள் பாட்டி..
நாள் தள்ளத் தள்ள
கருப்பையை முத்திக்கொண்டு
வந்து விழுந்த
என் உடலைக்கண்டு
அரைமயக்கத்தில்
ஆனந்த கண்ணீர்விட்டாள்
அன்னை..
ச்சீ பெண் என்றாள் பாட்டி
தானும் பெண்னென்பதை
மறந்து..
நகைவிற்கிற காசில்,
இதுக்கு கல்யாணமுடிக்கவா
கேள்வியோடு,
நாலு நெற்மணிகளை
அள்ளிக்கொண்டு வந்தார்
ஊர் பெரியவர்..
கொடிசுத்திவேற
பொறந்திருக்கு என்ற குரலால்
தாய்மாமன் இரக்கத்திற்க்கும்
இரங்கல் வாசிக்கப்பட்டது,
அங்கு..
பாரபச்சமின்றி,
எல்லார் குரலும் ஓங்கியடங்க,
புரிந்ததுயெனக்கு
பிறக்கையிலே
பாசக்கயிறோடு
வந்தவள நான் என்று..
தாயின் தனத்தில்
ஒரு சொட்டு பாலும்
அருந்தியறியா
எனக்குள் கள்ளிப்பால்
சொட்டு சொட்டாய்
செல்லச்செல்ல,
நான் வந்த உலகிற்கே
திரும்பிச்செல்கின்றேன்..
மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட
வேண்டுமாம்
எங்கே அந்த பாரதி,
கூட்டி வாருங்கள்
என் சிதைக்கு,
தீயிலெறியும் என் ஆசைக்கு
ஒரு இரக்கல்பா
எழுத...
ஆண்டிற்க்கொரு முறை
மகளிர் தினம்,
அங்கலாய்க்கவோ, ஆனந்தக்கூத்தாடவே
முடியவில்லை எமக்கு...
கைகளை கட்டிவிட்டு,
கர்ணம் பாயச்சொல்கிற
உலகிது...
சாதனைகள் புரிந்திடாலும்
சாகச வாய்களுக்கு
சாக்கடை புழுவானோம்...
கிடைத்தனயாவும் யாம்
நினைத்தனயன்றி,
இருப்பதைக் கொண்டே
மகிழ்ந்திட்டோம்...
அழுதிடும் மனதில்
சிரித்திடும் உதட்டினின்
துணையினால்,
துயரினை மறைத்திட்டோம்...
ஆளப்பிறந்தவராய் நீர் இருக்க
ஆக்க சக்தியென எம்மை
அழைத்திடும் காரணம்
அறியாது தவித்திட்டோம்...
யோசிக்க மறந்த மனிதரால்
யாம் இன்னும்
யாசிக்கும் நிலையிலே
இருக்கிறோம்...
சட்டங்கள் மாறுமோ,
சக்தி கை ஓங்குமோ,
உறவின் விலங்குகள்
தகறுமோ?
தொலைந்த எம் சுய முகங்கள்
கிடைக்குமோ?...
கேள்விகள் கொண்டு
வேள்விகள் செய்கின்றேன்...
யாருக்கு கேட்கும்
இந்த பெண்குரல்,
என்று தனியுமிந்த
அடிமையின் மோகம்....