செவ்வாய், 22 அக்டோபர், 2024
செவ்வாய், 15 அக்டோபர், 2024
மழையின் பொழுதுகள்..
கண்களை மூடிக்கொண்டு மனம் ஒரு தியானத்திற்கு தயாரவது என்பது என்னளவில் என்றைக்கும் நடந்தது இல்லை.. தியானத்திற்காக உட்கார்ந்த இடம் ஒன்றாகவும், யோசனை அளவில் உட்கார்ந்து இருக்கிற இடம் வேறொன்றாகவுமே எப்போதும் இருந்திருக்கிறது. இதை மற்றவர்களிடம் கேட்டு அவர்களுக்கும் அப்படி தான் நடந்திருக்கிறது என்று தெரிந்த பிறகு தான், அப்பாடா என்ற ஒரு குரல் உள்ளிருந்து வந்தது. அதையும் மீறி கண்களை மூடி ஒரு தியானம் வசப்படும் இடம் என்பது, மழைக் காலங்களில் வெயில் தங்கிப் போன சுவற்றின் மீது, தங்க அடம் பிடிக்கிற மழையின் வாசத்தை நாசி முழுக்க உள்ளிழுக்கும் போது நடந்திருக்கிறது. அப்படி கண்களை மூடினால் கருத்தில் நிற்கிற ஒரே புள்ளி அந்த மழை வாசம் மட்டும் தான்.
மழை வந்தால் மொட்டை மாடியில் மட்டுமே பார்க்க முடிகிற ஜந்து நான். மழை நீரை சேமிக்கவென்று வீட்டில் அப்பா ஏற்படுத்திக் கொடுத்த நீளக் குழாய் வழியே, ஆர்வமாய் தவழ்ந்து வருகிற பிள்ளையை அள்ளியெடுத்து கொஞ்சுகிற ஒரு அன்பின் சாயலை எப்போதும் மழை பெற்றுவிடும்.. மழை வந்தால் மழை நீரில் மட்டுமே குளிப்பேன் என்ற சிறுவயது அடத்தை மணம் இப்போது கொள்ளுமா என்பதும் சந்தேகம் தான். வீட்டுச் செடிகளின் மீது மழைக் கழுவி விட்டுப் போன பின்னும் தங்கியிருக்கிற வாசம் மழைக்கானது மட்டும் தானே..
மழை நின்ற பின் அந்த சிமெண்ட் தரைகளில் கொஞ்சம் கொஞ்சமாய் மழையின் சுவடுகள் மறைய ஆரம்பித்தாலும், அந்த குளிர் ஈரத்தை மிச்சம் வைத்திருக்கும் தரையில் படுத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் குளிர் உடலுக்குள் ஏறி, மூக்கின் நுனி மேல் மழையின் கரத்தை பெற்றுவிடும் போது உடல் முழுதும் ஒரு மழையின் பெட்டகமாக மாறியிருப்பதாய் உணர்ந்திருக்கிறேன்.
மழை வந்தால் மாடியின் மறைப்பில் ஒரு பிளாக் காபி + இசை + பிடித்த புத்தகம் என்று என் வீட்டு மழைக்கு துணை இருக்கிறேன் என்று நானே சொல்லிக்கொள்கிற பைத்தியக்காரத்தனமும் நடந்தது உண்டு..
இன்றைக்கான மழையை மனம் நேற்றிலிருந்தே எடைபோட தொடங்கிவிட்டது.. மழைக்குப் பழகத் தொட்டுப் பார்க்கிற விரல்கள் போய், பயந்து விடுவிக்கிற விரல்களை சில நேரங்களில் இந்த மழை பெற்றுக்கொண்டது எப்படி என்ற கேள்வி மனதிற்குள் வரமால் இல்லை..
எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு சுயநலம் தன் மாபெரும் இருக்கையை இயற்கைக்கு முன்பு போட்டுக்கொண்டு உட்காரும் போதெல்லாம் இது நடக்கிறது தான்.. ஆனால் மழையால் வளர்ந்த எனக்கு மாபெரும் கவலையாக மாறியிருப்பது எல்லாம், யப்பா.. இந்த புத்தகங்களை மட்டும் காப்பாத்திட்டா போதும் மத்த எது போனாலும் மசுரே போச்சுன்னு மனசு சொல்றதை திரும்ப திரும்ப அச போட்டுட்டே இருக்கிறேன். சோழர்கள், மாமல்லபுரம், கோபல்ல கிராமம், பாறை ஓவியங்கள்ணு கண்ணுக்குள்ள படுற எல்லா புத்தகத்துக்குப் பின்னாடியும் ஒரு தனிமனிதனோட சேர்ந்த கூட்டு வாழ்க்கை இருந்திருக்கு.. அதுக்குள்ள காற்றும் மழையும் சேர்ந்தே தானே இருக்கு.. அப்போ அந்த புத்தகத்தை தொடுறது அந்தக் காலங்களை தொடுறதும் தானேன்னா, அந்த அழிவில்லாத இயற்கைய தொடுற மாதிரி தானே..
இதோ இங்க மழை வேகம் எடுத்திருச்சு.. கிரவுண்ட் ஃபுளோர் மக்களை பரிதாபமாக பார்க்கிற மக்களின் கண்கள் ஏனோ வதைக்கத் தொடங்குகிறது.. ஆனால் மழைக்கு கண் உண்டு.. நம்புறேன்.. ஆனா ஒண்ணு அழையா விருந்தாளி போல சட்டென்று வருகிற மழைக்கும், இந்த தேதியில் புயல் உருவாகி இருக்கு, மழை இத்தனை சென்டிமீட்டர்ல பெய்ய வாய்ப்பு இருக்குன்னு தீர்மானங்களோட தகவல் வழியா வந்து சேருற மழைக்கும் வேறு வேறான மனநிலை தேவைப்படுது தான்..
வியாழன், 10 அக்டோபர், 2024
சென்னையில் ஒரு மழை நாள்..
நேற்று இரவில் இருந்து சென்னையில் நல்ல மழை.. ஆட்டோவை புக் செய்துவிட்டு வெளியில் வந்து பார்த்த பிறகே மேலே இருக்கிற அந்த ஸ்டேட்மெண்டை சொல்ல முடிந்தது. ஓர் உணர்வு ஸ்டேட்மெண்டாக எப்படி உருமாறியது ?
திங்கள், 18 மார்ச், 2019
கவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )
இறுக்கத்தின் விளை நிலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டி தீர்த்திருக்கிற அருவியின் "கவனிக்க மறந்த சொற்களை" தான் இவ்வளவு சாதாரணமாக ஒரு தொகுப்பாக்கி இருக்கிறார்கள். சாதாரணமாக என்றா குறிப்பிட்டேன் மன்னிக்கவும் நீண்ட பெரும் சவாலிற்குப் பிறகு தொகுப்பாக்கியிருக்கிறார்கள்.
எப்போதும் போல இதையும் ஒரு அலை விளையாட்டென முதலில் ஆடத் தொடங்கினேன். முதல் நான்கு பக்கங்களிலேயே ஆட்டம் எல்லை மீறிப் போய் கொண்டிருப்பது எங்கேயோ கேட்க தொடங்கியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் உள் நகர்த்தியிருக்கிற அலைகளை வேண்டாம் என்று தள்ளிவிட்டு வெளியேற முடியாமல் தான் கரை தாண்டி பயணித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.
ஆக, மொத்த தொகுப்பும் பிடித்த குரல் வழி காலத்திற்கு ஒரு முறை வாசித்துப் பார்க்க வேண்டிய தொகுப்பாகியிருக்கிறது. தலைப்புகளில் இளைப்பாறினேன் என்று கூறியிருக்கிறேன் அல்லவா அவற்றில் ஒரு சில தலைப்புகள்...!
இருப்பதின் பிரதானம்
புதிய தாகத்தில் பறிபோன பழையதின் தடம்.
தீராக் கடலில் அலை விளையாட்டு
பொய்மான்
இலக்கமிடப்பட்ட இலக்குகளின் இலக்கணம்
இரவு நேரப்பாடல்
அசைவுகளின் அறியா கண்
(இதை கணம் என்று வேறு மாற்றி வைத்திருக்கிறேன்)
பெயர்களற்றவன்
நீயூரான் மரத்தின் இலை ஆடை
புன்னகையில் மறையும் பனிக்கூழ் மௌனம்.
சுழற்சியின் மாதாந்திரம் பிரசவிக்கும் நிறம்.
60 நாட் தூரத்தில் தெரிகிற கடலில் கரைக்கு வெகு அருகாமையிலான 10 நாட் தூரம் வரை வீசும் கலங்கரை விளக்கின் ஒளியை மட்டுமே
சுட்டிக்காட்டியிருக்கிறேன் மீதத்தை நீங்களும் நீந்திப் பார்க்க வேண்டி.
வாசிக்க வாசிக்க மிக இலகுவாக ஒரே அமர்வில் வாசித்து முடிக்கக் கூடிய ஒரு தொகுப்பாக (என்னளவில் மட்டும்) இருக்கிறது.ஆனால் அதன் அதிர்வு என்பது என்றைக்குமானது. மறுவாசிப்பு எப்போதும் அதே கடலின் வேறு வேறு பாதைகளை காட்டிக் கொடுக்கும் என்று நம்பியிருக்கிறேன். சரியான தேர்வுக்கு துணை நிற்கிற காலத்தை மழை விரல்களால் அணைத்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் க்கா...❤
ரொம்ப ரொம்ப ரொம்ப நாள் ஆச்சி இப்படி ஒரு புத்தகம் முடிந்த பிறகான மனநிலை வாய்த்து...😍
கவனிக்க மறந்த சொல்
ரேவா
யாவரும் வெளியீடு.
-மனோ அரசு
ஞாயிறு, 27 ஜனவரி, 2019
வாசிப்பும் கண்டுணர்தலும்
ஒரு வாழ்க்கை தோல்வியில் முடியும்போது வீட்டில் கிடைத்த நிழலும், பின் தானே தேடிக்கொண்ட காதலால் ஆராதனா சந்திக்கும் நெருக்கடியும், அதிலிருந்து அவள் வெளியேறுவதற்கு அவள் கையிலிருக்கிற சிந்தனையும் அதன் வழி பெற்ற அனுபவப்பார்வையும் அவளுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த நாவல் பேசுகிறதாய் என் வாசிப்பில் எனக்குத் தோன்றியது.
ஆராதனாவுக்கு தன்னை அழுத்தும் துயரங்களுக்கு மத்தியில் கனவுகள் பிடித்திருக்கிறது. அந்த கனவு, தான் விரும்பியதை அப்படியே உருவாக்கும் வல்லமை கொண்டிருப்பதாய் அவள் நம்பவும் செய்கிறாள். அந்த கனவும் நிஜமுமாய் அவள் தேடிப்பார்க்கும் வாழ்வில் நம்மையும் ஒன்ற வைப்பது இந்த தொகுப்பில் கையாளப்பட்ட மொழியின் அழகும் கூட.
தொகுப்பில் துயரத்தை மீறி நம்மை ரசிக்கவைப்பது அதில் கையாளபட்டிருக்கும் மொழி. அது அத்தனை ரம்மியமாய் நம்மை கதையோடு ஒன்றவைக்கிறது.
உதாரணமாக நாவலில் ஒரு இடத்தில்
துயரமான மனதை வெல்வது, அதை மறக்கவோ அதனை விட்டு ஓடி ஒளிவதோ அல்லது அவற்றை நினைக்காமலிருக்க பயிற்சி எடுப்பதோ இல்லை. கொதிக்க கொதிக்க அந்நினைவுகளை மனதிற்குள் இறுக்கி வைத்து பின் மெல்ல இளகுவதற்கு விட வேண்டும். கொதி நிலையிலிருந்து மெல்ல மெல்ல அது குளிர்நிலைக்கு வந்து, ஓரிடத்தில் உறைந்துவிடும். உறைந்த அந்நினைவுகளை எப்போது வேண்டுமெனினும் வெட்டி எடுத்துக்கொள்ளலாம். அது பெரும்பாலும் தேவையிருக்காது , ஆழமானவை தாமாகவே அவ்வப்போது மேலெம்பி வந்து நம்மை உள்ளிழுக்க முயற்சி செய்யும், அதனுடான சமரே இந்த வாழ்வில் பெரும் சவால்.
இப்படி ஆழமான அனுபவங்களை, ஆராதனா நிகழ்வுக்கும், நினைவுக்கும் இடையே பயணப்படும் அனுபவத்தை குறுநாவலாய் ஆக்கியிருக்கிறார் உமா பார்வதி..
கதையை ,கதையின் போக்கை அப்படியே சொல்வதில் என்ன சுவாரஸ்யம் இருந்திடப்போகிறது. வாசித்து உங்களுக்கான அனுபவங்களை நீங்களும் பெறலாம்.
எனக்கு இந்த குறு நாவல் ரொம்ப பிடித்திருக்கிறது.
நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள்
பதிப்பகம் : யாவரும்
ஆசிரியர் : உமா பார்வதி
வெள்ளி, 25 ஜனவரி, 2019
மீண்டும் தொடர்கிறேன்
சரியாக ஒரு வருடம் பிளாக்கரில் எந்த பதிவும் இடாமல் இருந்திருக்கிறேன். ஏதோ ஒரு மனநிலை எதையோ கடத்திக்கொண்டு வந்திருக்கிறது என்பதைவிட ஓர் உழைப்பிற்கு கொடுக்கமுடிந்த இடைவெளியாகவும் இதைக் கருதிக்கொள்கிறேன்.
கவனிப்பற்ற பொழுதுகளில் எனக்குள் நானே பேசிக்கொள்வதைப் போல் இலக்கிய உலகம் குறித்த எந்த புரிதலும் இல்லாத போதும் எந்த சத்தமும் இல்லாமல் இங்கே எழுதிச் சேர்த்த கவிதைகளை அது உருவாக்கிய வெப்பத்தை நினைத்துக்கொள்கிறேன்.
இனி வாசிப்பு எழுத்து பகிர்தல் என மீண்டும் இங்கே அதிகம் பதியவேண்டும் என்ற எண்ணம் உந்தித்தள்ளுகிறது.
அதற்கு முதலாய் போன வருட இறுதியில் வெளியான என் கவிதைத் தொகுப்பான கவனிக்க மறந்த சொல்லோடு வந்திருக்கிறேன்.
எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட சுவர்களைப் போல் இந்த இடம் எனக்கு அத்தனை வரம்..
தொடர்கிறேன்
-ரேவா
வியாழன், 19 ஜனவரி, 2017
அதுவரை இது நிகழாதிருக்கட்டும்
வக்கிரம் நிறைந்த மனதின் வெயில் வாட்டுகிறது
புறச்சூழலை
நாம் நம் அறைகளுக்குத் திரும்புகிறோம்
செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாக நம்பப்படுகிற அறை
ஓர் அட்டைப் பூச்சி
இன்க்கிரீஸ் மோடில் கூடுகிற குளிரின் எண்ணிக்கை
குசேலனின் கைப்பண்டம்
நமக்கு கவலைகள் இல்லை
வெயில் தீர்ந்துவிட்டதாய் நம்புகிறது
சொரணைக்குப் பழகிய தோலின் முதல் அடுக்குத் தகவல்
தனித்த செய்தியில் உரையாடுகிற
கைகள் கொண்டிருக்கிற பழக்கம்
ரோட்டோர ஓவியக் கைகளுக்குக் கிடைப்பதில்லை
ஆனாலும் யாம் தெரிந்தே செய்கிறோம்
இச்சில்லறைகள்
தரையில் விரிந்திருக்கும் பிரம்மாண்டத்தின் கண்களைக்
குருடாக்கப் போவதில்லை
விழுந்து கிடக்கிற ஒன்றின் தெளிவு
வானத்தை பார்க்கையில்
வசப்படுவதும் வானமாகவே இருக்கிறது
ஆனவரை அழிக்கிற உரிமையை மழைக்கே கொடுக்கிறோம்
சிறுதூரல் கிளப்புவது உஷ்ணத்தையென்றாலும்
உள்ளிருப்பது வெளியேறுதல்
பெருமழைக்குச் சமமே
அட்லீஸ்ட்
இந்த மழை
மனதின் வெயிலை புறச்சூழலின் வழியாவது குறைக்கட்டும்
அதுவரை இது நிகழாதிருக்கட்டும்