உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
அன்பு கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்பு கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஜூன், 2012

புரியாக்காலமது...




புழுதிமண் பரக்க
நாம்
விளையாண்ட விளையாட்டில்
விளையாட்டாய் விடப்பட்ட
வார்த்தைகளில் விரிசல்கண்ட
பிரியமது....

உண்மைக்கும் பொய்மைக்கும்
சரிக்கும் தவறுக்கும்
வித்தியாசம் பெரிதாய்  விளங்கிடாத
வயதுமது...

இருந்த பிரியங்களையும் 
புரிந்த சண்டைப்புதைமணலில்
புதைத்துக்கொண்ட
பருவமது...

கிட்டகிடைந்த அன்பிலிருந்து
கிட்டதட்ட பிரிந்த
வேளையது..

வேண்டுமென்றே தவிர்த்த நேரத்திலும்
வேண்டாமென்று இருந்த பொழுதிலும்
துயரம் நிறைத்து தூரமாகிப்போன
ப்ரியமது..


இன்று
காலம் நகர்ந்தாலும்
காயம் மறைந்தாலும்
உன்னைக்காணும் நாட்களில்
மட்டும்
நாம் சண்டையிட்ட
திண்ணைக்குப்பின்
தேடிப்பார்க்கின்றேன்
தவறவிட்ட பிரியமொன்றின்
புரியாக்காலத்தை....


வியாழன், 17 மே, 2012

புரியாத செயல்


கர்ணகொடூரமாய் நிகழ்ந்துவிடுகிறது
இந்நாட்களில்
இதுபோன்றதொரு
சம்பவம்.......

எவ்வளவு மென்மையானவற்றையும்
புறந்தள்ளிவிடுகின்றது
புரிந்தவரின் புரியாத
இந்த செயல்...

இந்த செயலுக்குப் பின்
எதோ ஒரு வலியும்
மூர்க்கத்தனமும்
மூர்ச்சையாகித்தான் கிடக்கின்றது...

ஏமாற்றபட்டதன் வலியும்,
ஏமாந்துபோனதன் கோவமும்,
நீண்ட நேர நினைவுத்தேடலும்,
கண்ணீரில் கொண்டுவந்து
முடிக்கின்றது..

முடிந்ததாய் நினைத்திருந்த
வேளையில்,
நம் பலவீனங்கள்
பழைய பிரியங்களை
கண்முன்னே
பிரிந்துப்போடுகின்றது...

பிரியமானவர்களின் பிரிவைவிட
பிரிந்தபின் அவர்களின்
பிரியமற்ற நினைவுகள்
தரும் வலியைவிட
கொடுமையான ஒன்று
இருந்துவிடுமா என்ன?
.



வெள்ளி, 11 மே, 2012

எனக்கு பிடித்தது தனிமை...



சமீபகாலமாய் என்னால்
தனிமைபடுத்தபட்ட
என் தனிமைக்கு
ஏதோ ஒரு வெறுப்பு
என் மேல் ...

நலம் விரும்பிகளையும்,
நட்புகளையும்,
எனக்கென இருந்த உறவுகளையும்
வெளித்தள்ளிவிட்டு 
ஒய்யார நடை நடந்துவருகின்றது
என் அறையெங்கும்...

தினம் வரும்
நலம்விசாரிப்புகளிலிருந்து,
நேசம் பரிமாறிடும் காதலிலிருந்து,
அன்பு தாங்கி வந்த
அத்தனை பேரையும்
வெறுப்பை சுமந்து செல்லும் படி
செய்கிறது...

கவிதைகளை கைக்கு
கிடைக்கசெய்துவிட்டு
காதலை தள்ளி வைக்கின்றது....

காலர நடக்கச்செய்துவிட்டு
நான்கு சுவர்களுக்கு நடுவே
கட்டிபோட்டுவிடுகிறது...

இப்போதெல்லாம்,
சுவர் பல்லியும்,
தேநீர் குவளையும்,
சில புத்தகங்களும்,
சில பல கவிதைகளுமே
சொந்தமென்றான பின்,

உண்மையாய் பழகி
உயிரினில் வைத்து
உரிமை பாராட்டுவதாய் நினைத்து
 உதறித்தள்ளும்  உறவுகளை விட
இந்த தனிமை
எனக்கு
பிடித்துதான் இருக்கின்றது...


                      முந்தைய பதிவு : என் பார்வையில் வழக்கு எண் 18/9


புதன், 7 மார்ச், 2012

என் வீடு


Thanks :Google

அவசியம் ஏதும் இல்லாவிடினும் 
என்னை ஆண்ட 
என் கனவு வீட்டை 
கவிதை செய்து வைக்கிறேன்...

கூரை வேய்ந்த வீட்டிலிருந்து, 
மாடிவீடாய் 
மறுஜென்மம் கொண்டது
அப்பாவின் வியர்வை காசில்...

அது வ்ரை வாயடைத்த 
கூட்டம்
 நான் பிறந்த வேளை என்றது.... 

என்ன சொல்ல 
என்வீட்டைப்பற்றி,
எனக்கு எல்லாமுமாய்
இருக்கும் 
இந்த வீடைப்பற்றி...

சுற்றியும் சொந்தம்
நிறைய, 
சந்தோஷத்திற்க்கு குறைவில்லாத 
பல நாட்களை தந்தது
இந்த வீடு...

மாமனென, சித்தியென 
புது உறவை 
தந்த வீடு..
நித்தம் விழாக்கோலம் 
பூணும் வீடு,,,

பொட்டல் காட்டில்
வியர்வை சிந்தி,
கால்வயிறு கஞ்சிக்கு
காட்டு வேலை செஞ்ச 
என் அப்பத்தாக்கு,
சொர்க்கமே 
இந்த வீடு..

சொந்த பிள்ளைகள
தவிர சொத்துயில்லை 
என்ற தாத்தாக்கு 
தெம்ப கொடுத்தது 
இந்த வீடு...

தான் பட்ட கஷ்டத்தை
என் பிள்ள பெறக்கூடாதுன்னு
அப்பா வைராக்கியத்திற்க்கு 
வைரமா கிடைச்ச வீடு..

பிறந்த இடம் தான் 
வளமில்லை
வாழுமிடமாது நம்ம காப்பாத்துமானு 
கேள்வியோட வந்த 
அம்மாவுக்கு 
கோடியா தெரிந்த வீடு...

வசதியா பொறந்தயெங்கள
வளமா வளத்த வீடு..
வருசம் ஆக ஆக
வயசான தாத்தா பாட்டின்னு 
வரவு ஒன்னு ஒன்னும் 
செலவு கண்க்குல 
சேர்ந்தப்ப, 
நாங்க இங்க தான் 
இருக்கோம்ன்னு அவங்க 
தலை சாய்த்த தடம் 
தரும் ஆயிரம் தெம்பு...

இன்னைக்கும் எனக்கு ஒரு 
கவலைனா, 
என் பாட்டி தலை வச்ச 
தடத்துல தான் 
என் கண்ணீர விதச்சு வைப்பேன்..

வெறும் செங்கலும், 
சிமெண்ட்டுமாய்
அடுத்தவங்க 
கண்ணுக்கு தெரிஞ்சாலும்,
என் முன்னோர்களின் 
வழித்தடமே 
இந்த வீடு...

வசதிகள் வந்தாலும், 
வந்த வழி மறக்காது
என்னை வளர்ந்த
என் உறவுகள
நினைவுகளால 
நான் நித்தம் காணும் வசதிய
தந்தது 
இந்த வீடு..

ஆயிரம் தான் அழகா 
பல விஷயமிருந்தாலும்,
அழுக்கு சேலையோட
என்ன காக்கும் 
என் அம்மாவா
எனக்கு எப்பவும் 
தெம்ப தருவது 
என் வீடு...








ஞாயிறு, 29 ஜனவரி, 2012

அவரவர் அனுபவம்





நண்பன் என்று 
பெயரிட்டு 
அறிமுகப்படுத்தியும் ,
ஆணுக்கும், பெண்ணுக்குமான
நட்பை சில உறவுகளிடம்
நியாயப்படுத்தவே முடியவில்லை..
அனைவரின் பயமும் 
அவரவர் அனுபவங்களில் 
கிடைத்த அவர்களாகவே இருக்கிறார்கள்..  









சனி, 3 டிசம்பர், 2011

காணாமல் போன அப்பா....




இப்போதெல்லாம் அப்பாவின்
அடையாளம் காணவே இல்லை...

தொண தொணக்கும் வாயோடு
தான் வளர்ந்த விதத்திற்கும்,
நான் வளரும் விதத்திற்கும் ,
உள்ள வேறுபாட்டை சொல்லி சொல்லி
மெய்சிலிர்க்கும் அப்பா
இப்போ இல்லவே இல்லை...

அஞ்சுக்கும் பத்துக்கும்,
அறைவேளை உணவிற்கும்,
ஒதுங்க ஒரு சாண் இடத்திற்க்குமாய்
பாடுபட்டு கரைசேர்ந்த
தன் வாழ்வில்,
நான் அலச்சியமாய் கடக்கும்
ஒவ்வொரு விஷயத்திலும்
உள்ள கஷ்டத்தை சொல்லித் தந்த
அப்பா இப்போ இல்லவே இல்லை...

அழுகின்ற நேரத்தில்,
அரவணைக்கும் - என் 
ஆண் தோழனாய்,
விழுகின்ற நேரத்தில்,
தன் நிழல்கொடுத்து
இளைப்பாறுதல் தந்த
என் நிழலாய் எனைக் காத்த
அப்பா இப்போ இல்லவே இல்லை... 

நான் பெறுகின்ற ஒவ்வொரு
வெற்றியையும்,
தன் வெற்றியாய் வாஞ்சையோடு
கொண்டாடும் அப்பா
இப்போ இல்லவே இல்லை....

என் வசதிக்காய்
தன் வாய்ப்பை சுருக்கிக்கொண்டு
அதிலும் சுகம் கண்ட அப்பா
இப்போ இல்லவே இல்லை...

அப்பாவிற்கும், பெண்ணிற்க்குமாய்
வகைபடுத்தபட்ட வாழ்வில்
நட்பாய் புதுவரையறை
வகுத்து,
நட்போடு ஒரு தோழனாய்
வலம் வந்த என் அப்பா
இப்போ இல்லவே இல்லை..


ஆம் இப்போதெல்லாம்
அப்பாவின் அடையாளம்
இல்லவே இல்லை...
வயது ஆக ஆக ஒரு குழந்தையாய்
மாறிப்போன அப்பாவிடம்
இப்போதெல்லாம்
என் அப்பாவிற்க்கான  அடையாளம்
இல்லவே இல்லை...

எனக்கு வாழ்க்கைமுறையை
சொல்லித்தந்து,
 அதில் என் குழந்தையாய்
பயணிக்கும்
என்  குழந்தை (அப்பா) யி(வி)டம்
என் அப்பாவின் அடையாளம்
காணவே  இல்லை....



இந்த கவிதைக்கு முதல் ரசிகன் என் அப்பா, இந்த கவிதைய படிச்சதும் எனக்கு பிடிச்ச டெடி பியர்  கிபிட் பண்ணுனாரே...இத எதுக்கு சொல்றேன்னு பாக்குறேங்களா? எல்லாம் ஒரு காரணமாத்தான்.....

புதன், 30 நவம்பர், 2011

காரணம் நானறியேன் .....


கண்கள் உறக்கம் அற்று,
கால்கள் தேடுதல் அற்று,
இதயமும் இயக்கம் அற்று,
தவிக்குது தவிக்குது...

ஏன் இந்த தவிப்பு,
எதற்கிந்த பிழைப்பு,
என் நிழலும் எனை பார்த்து
சிரிக்குது சிரிக்குது...

ஆறுதல் தந்தேனோ?
ஆற்றாமை மறைத்தேனோ?
என் நிழல் நீ என்ற
நினைவினில் இருந்தேனோ?
இன்று குழப்பம்
என்னை சூழ நடப்பதை
நானறியேன்....

நிழலென தொடர்ந்தவன்
நினைவினில் நிற்கிறான்.
நிஜத்தினை தெரிந்துமே,
ஏற்க மறுக்கிறான்...

நான் செய்த பிழையென்ன ?
உன்னை நானாய்
ஏற்க துணிந்திட்டேன்...
துணை வருவாய் என்ற
துணிவினில்,
பலரை எதிர்க்கத் துணிந்திட்டேன்..

அன்பாய் கரம் பற்றி
ஆறுதல் சொன்னவன்
மௌனத்தை பற்றிச் செல்கிறான்
புரியாத பேதை இவள்
அவன் மௌனத்தில்
வார்த்தையை தேடுகின்றேன்...

இது நான் அல்ல என்று
தெரிந்துமே,
என்னை நானாய் புதுப்பிக்க
முடியவில்லை,
நடப்பது எல்லாம்
அன்பின் மீறலில் நடக்கின்றதா?
புரியவில்லை..
இந்த புரியாத விதி மீறல்
என்னை பயமுறுத்துதடா...

என் செயல் அனைத்திலும்
உன் சிந்தனையே
வியாபித்து இருக்கும்
இந்த செய்கையின்
காரணம் நானறியேன்.....

திங்கள், 5 செப்டம்பர், 2011

என்ன பிடிக்கும் இந்த தேவதைக்கு

தேங்க்ஸ் டு கூகிள்


மங்கிய  ஆடையோடு
ஒப்பனையற்ற முகத்தோடு,
சமையலறை நெடியோடு,
அலுக்காமல் அங்கும் இங்கும்
சுற்றிவரும்
என் வீட்டு தேவதையின்
புன்னகையில்
எங்கள் மனபாரம் குறைந்து போகும்...

அவரவர்க்கு பிடித்தம் என்ன
அது அவள் மட்டும் 
அறிந்த வித்தை..
அப்பாவின் பசியறிந்து,
தங்கையின் ருசியறிந்து,
தம்பியின் குணம் அறிந்து,
எந்தன் மனமறிந்து,
நளபாகம் செய்யும் பாங்கு
அவளுக்கே வாய்த்த ஒன்று...

எனக்கு பிடிக்கும் என்பதால்
சிவப்பு நிற புடவையையும்,
தம்பிக்கு பிடிக்கும் என்று,
நெற்றியில் குங்குமமும்,
தங்கைக்கு பிடிக்கும் என்று,
தலைநிறைய மல்லிகையுமாய் 
எங்கள் பிடித்தத்தை பற்றிய 
அவள் இதயத்தின் பிடித்தம்
இதுவரை நான் அறிந்ததில்லை...

எனக்கு பிடிக்கும் என்று
ரோஜா செடிவளர்க்க,
தம்பிக்கு பிடிக்கும்  என்று, 
தொட்டி மீன்களுக்கு பெயர் வைக்க,
தங்கைக்கு பிடிக்கும் என்று,
மாலைநேர தொலைக்காட்சி நிகழ்சிகளை
தியாகம் செய்ய, என 
எங்கள் விருப்பத்தை
அணு அணுவாய் ரசிக்கும்
எங்கள் குழந்தைத் தாய்க்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரை நாங்கள் அறிந்ததில்லை...


என் எதிர்கால உறவிற்காய்,
உறங்காமல் கனவு காணவும்,
எங்கள் வரும் காலம்
வளமாய் மாற
அம்மனுக்கு விரதம்
இருக்கவும்,
எங்கள் செல்லச் சண்டையில்
சமாதான தூதுவனாய் மாறவும்,
பக்கத்து வீட்டுக்கு குழந்தைக்கு
பசிக்கையில் உணவூட்டவும்
எப்படி முடிக்கிறது
இவளுக்கு மட்டும்....


நாங்கள் சிரிக்கையில் சிரித்து,
அழுகையில் அழுது,
எங்கள் விருப்பத்தில் தன்
விலாசம் மறைத்த
என் தேவதைக்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரைத் தெரியவில்லை
எங்களுக்கு.....

திங்கள், 25 ஜூலை, 2011

மழலையின் ஏக்கம்



வணக்கம் நண்பர்களே நலமா? சமீபத்தில்  தமிழ் திரை உலகை பெருமைப் படச் செய்த விஷயம், தமிழ் சினிமா வென்ற தேசிய விருதுகள். இதுவரை தமிழ்  சினிமா பெறாத எண்ணிக்கையில் வென்ற இந்த விருது, அனைவரின் கவனத்தையும், நம் தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பிப் பர்ர்க்க வைத்து இருக்கிறது...அதுக்கும் நான் இங்க சொல்லுறதுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்குறேங்களா, சம்மந்தம் இருக்கு, நம் தமிழ் சினிமா வென்ற விருதுகளில் தென்மேற்கு பருவகாற்று என்னும் படம் சத்தம் இல்லாமல், ஒரு சாதனை படைத்தது, அந்த படத்தில் வரும் கள்ளிக் காட்டில் பிறந்த தாயே என்னும் பாடல், அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது, என்னை மிக்கவும் கவர்ந்த அந்த பாடலின் தாக்கமே, இந்த பதிவுன்னு இங்க சொல்லிக்கிறேன்.. இந்த பதிவில் தகவல் தொழில் நுட்பப் பிரிவில் வேலை பார்க்கும் ஒரு தாய், அந்த தாயோட அன்புக்கு ஏங்குற குழந்தைன்னு, அவர்களோட உணர்வுகளை இந்த பதிவில சொல்ல நினைத்தேன்... வழக்கம் போல இந்த பதிவும், உங்கள் பார்வை பயணத்தில் பயணப் பட வைக்கிறேன்..


கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே....

நம்ம வீட்டுக் குருவிக்கும்,
வளக்கும் நாயிக்கும், 
என் அழுகை தான் புரியுதே,
உன் அன்பின் மடியில 
ஆசையா தூங்க, 
இந்த பிஞ்சு மனசு தவிப்பது,
உனக்கு புரியுதா?..

உன் அன்புக்கும், உன் தீண்டலுக்கும்,
உன் முத்தத்திற்கும், 
உன் அன்பு மொத்தத்திற்கும்,
எனக்கு வார இறுதி நாள் மட்டும் உண்டு...

கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..

ஏசி காத்துல வேலை செய்வா,
ஏழு லோகம் தாண்டியும் பேசிடுவா,
அன்பு மகன் என் நினைவு வந்தா,
அலைபேசியில் என் குரல் கேட்ப்பா,
பாவமப்பா...

கணினி பாத்தே அவள் காலம் தொலைப்பா,
என் காலம் வலமாக, அவள் இளமை தொலைப்பா,
நாளைக்கு தருகின்ற தாய்ப் பாலையும்,
புட்டிப் பாட்டிலுல சிறைபிடிப்பா,
தியாகமப்பா....

இரவு வரும்போது போகுறா,
பொழுது விடியும் போது தூங்குறா,
அவ உடம்ப இரும்பாக்கி உழைக்கிறா,
ஆசையாய் அவ மடிசாஞ்சா, 
அலுப்பா இருக்கு கண்ணான்னு அனுப்புறா,

கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..

அம்மா என் அம்மா 
என் அருகில் இல்லை,
ஆனாலும் அவ பாசமெனக்கு
புரியாமயில்லை,
அவ அன்பைத்தவிர எனக்கு,
எந்த குறையுமில்லை...

அம்மா காசு இல்லா வீட்டில் சிரிப்பு இருக்கு, 
படிக்காத அம்மா வீட்டில் பாசம் இருக்கு,
என் அம்மா நெஞ்சிலும் அன்பு இருக்கு,
அந்த அன்ப காட்ட அவளுக்கு நேரமிருக்கா?.....

அம்மா உன் அன்பில் என்ன வஞ்சம்மா,
அட்டவணை போட்டு
நீ கொடுக்கும் அன்புக்கு,
என் மனசு ஏங்குதம்மா..
நீ சமைக்கும் சமையல,
ஊட்டி விடச் சொல்லி,
இந்த பாவி மனசு தவிக்குதம்மா..

காசு பணம் எல்லாம் இருக்குது,
அது என் பாசத்த உங்கிட்ட குறைக்குது,
பணம் கொடுத்து வாங்குன,
வாடகை தாய்கிட்ட (ஆயா )

என் அன்பு முழுவதும் போகுது...
உன் பூ முகம் எனக்கு மறக்குது...

நாலு ஒன்னொன்னும் போகுது,
அது தூரமா உன்ன கட்டுது.
நான் மொத மொத உச்சரிக்கும்
அம்மா என்ற சொல்ல, 
நீ உச்சி முகர்ந்து கேட்கனும்னு தோணுது,
அந்த அம்மா என்ற சொல்லும்,
ஆயாவுக்கு சொந்தமாய் போகுது...

கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..


திங்கள், 18 ஜூலை, 2011

♥ ♥ ♥ உயிரினும் மேலான காதலுக்கு.....♥ ♥ ♥

நம் முதல் சந்திப்பில்
மௌனமாய் நீ கடந்தாலும்,
உன் காதல்
புரியாமல் இல்லை
என் இதயத்திற்கு...

 ♥ பிழைகளோடு 
நீ அனுப்பும்
கடிதத்திலெல்லாம்,
பிழையில்லாமல் தெரிகிறது
எனக்கான காதல்....
♥ உன்னை பற்றி
நினைக்கையில்
தானாய் வந்து ஒட்டிக்
கொள்கிறது,
உன் அழகும்,
உன் மீதான காதலும்.

♥ எப்போதோ நீ
பரிசளித்த,
கைகுட்டையில் புதைந்து
கிடக்கிறது,
உன் வாசத்தோடு
நமக்கான காதல்..
♥ நீ சாப்பிட்டு
மிச்சம் தரும்
மிட்டாய்களில் எல்லாம்
இனித்து கிடக்கிறது,
உன் காதல்...
♥ பொய்யாய் இருந்தாலும்
பேரழகி  நீ
என்னும் சொல்லில்,
சொக்கிப் போகிறது
என் காதல்...
♥ ஒவ்வொரு சண்டைக்குப்
பின்னும்,
சமாதானத் தூதுவனாய்
மாறிப் போன,
உன் முத்தத்தில்
ஒளிந்து கிடக்கிறது,
காதல்...
♥ உன்னை மாற்ற
நானும்,
என்னை மாற்ற
நீயும்,
காரணமாய் இருந்தது,
நம் காதல்..

கண்ணாடி முன் 
அழகாய் தெரியும் 
நீ,
என் முன் 
காதலாய் தெரிவது
ஏன்?.....
♥ உன்னை தொட்டுப் பேசும்
தென்றல்...
என்னிடம் கொட்டிச்
செல்கிறது,
உன் மீதான என் 
காதலை....
♥ ஒரு முத்தத்திற்காய்
தூங்குவது போல நடிக்கும்
அழகனே,
நீ நடிப்பது தெரிந்தும்,
நடிக்காமல் நான் கொடுக்கும்
முத்தமும் காதலே....
♥ என் நாட்குறிப்பு
ஒரு நாளும்
குறிப்பெடுத்துக் கொள்ள
மறப்பது இல்லை...
காதலோடு 
உன் பெயரை.....
♥ நீ குறும்பு செய்யும் 
போதெல்லாம்,
கோவம் வரவில்லை,
அசடு வழியும் 
உன் முகம் பார்த்து 
காதல் தான் வருகிறது..

 ♥ என் எல்லாக் கவிதைகளும்
உன் வாசிப்புக்கு 
பின்னே
முழுமையடைகின்றன,
என் வாழும் காலமும்,
உன்  நேசிப்புக்கு
பின்னே அர்த்தமடைகின்றன,
இந்த காதலால்...


 ♥ ♥ ♥ ♥ ♥ ♥

திங்கள், 27 ஜூன், 2011

திமிருக்கு அவனென்று பேர்


      நீ என்னைக் காதலிப்பதாய் சொல்லி, வெகு நாட்கள் ஆகிவிட்டது தெரியுமா என்றேன்...
 

உன்னைக் காதலிப்பதாய் சொன்னவன் நான் தானே..!!

"பிறகு எப்படி மறப்பேன்" என்றான்.. 

பிறகு "ஏன் எனக்கு அன்பாய் எதுவும் வாங்கித் தரவில்லை" என்றால்

"உன் காதல் மொத்தமும் என்னக்காய் இருக்கட்டும் என்று தான், பாகுபடுத்தும் பரிசுப் பொருள்களை வாங்கித் தரவில்லை" என்றான் திமிராய்.... 

பரிசுப் பொருட்கள் வாங்கித்தந்தால் , அன்பு கூடும் என்று தானே என் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்....என்று கேட்டால்,

 
"அட அசட்டுப் பெண்ணே, போன மாதம் உன் பிறந்த நாளுக்காய் பரிசளித்த, கரடி பொம்மை உன் படுக்கை அறையை அழகுபடுத்துகிறது என்று நீ தானே சொன்னாய்"...
 

"ஆம் நான் தான் சொன்னேன்"....

"உன் இரவை அழகு படுத்த, அழகாய் நான் இருக்கையில், என்னைவிட அதிக முத்தம் வாங்கிய  அந்த கரடி பொம்மை, உன் அன்பை என்னிடம் இருந்து பிரித்தது உண்மை தானே" என்றான்....

"நீ கொடுத்த பொருள் என்றதால், கூடுதல் பிரியம் கொண்டேன் அந்த கரடி பொம்மையுடன் இதில் என்ன தவறு" இருக்கிறதென்றேன் வழக்கம் போல,

"இருக்காத பின்னே, நான் இருக்கிற இடத்தில், அந்த பொம்மை இருக்கையில்"......என்று அவன் தொடங்கிய வார்த்தையின் அர்த்தம் புரிந்தவளாய், அதட்டினேன் செல்லமாய்...



 

 

        ஒரு மாலையில், அழகுப் பொருட்கள் வாங்க செல்வதாய் தீர்மானித்திருந்தேன், "நீயும் வருகிறாயா" என்று அவனை அழைத்தேன்....அமைதியாய் வந்தவன், கொஞ்சம் அமைதி கலைத்து, 

"எதற்கு இத்தனையும் வாங்குகிறாய்" என்றான்..."

அழகுப் பொருட்கள், என்னை அழகுபடுத்திக் கொள்ளத்தான்" என்றால்,
அதெல்லாம், அழகா இருக்கிறவங்க போட்டாத்தான் அழாகா இருக்கும்...நீ போடதே"....என்றவன், என் விழி நீரின் அர்த்தம் புரிந்தவனாய், "உன்னை அழகுபடுத்தும், உன் அழகு சாதனம் நான் இல்லையா" என்றான் அனைவர் முன்பும்.....

"உனக்கு வரவர திமிர் அதிக மாகிடுச்சு டா"...என்றால்
 

"அழகு சேர்ந்தால் திமிர் வரத்தானே செய்யும்"
 

"ஆமா இவரு பெரிய ஆண் அழகன்", என்று சொல்லி முடிப்பதுக்குள்

"என் அழகி நீயும், என்னுள் கலந்து விட்டதால், கொஞ்சம் எனக்கும் திமிர் பிடித்து விட்டது தான்" என்றான் திமிராய்...
 



            இணையத்தில் உலாவி கொண்டு இருக்கையில், அவன் இருப்பது தெரிந்து, அவனை தொடர்பில் அழைத்தேன்......வெகு நேரம் ஆகியும் ஒரு பதிலும் இல்லை...கோபம் கொண்டு, "இனி என்னோடு பேசாதே" என்று இணைப் துண்டித்தால்..


"பேசாட்டி போடி" என்று பதில் அளித்தான் திமிராய்.....
"போடா பிசாசே".... என்றால்,
 

"என் தூக்கத்தை களவாடிய குட்டி பிசாசு நீ தான்"... என்றான் வழக்கம் போல காதலோடு....
 

"ஏன் ஆன்லைன் ல இருந்த பேசமாட்டியா?"....
 

"பேசுவேனே"...
 

"அப்பறம் ஏன் என் கூட பேசல"......
 

"இல்லை நீ எவ்வளவு தூரம் எனக்காய் துடிக்குறேனு, பார்க்க இது போல செய்தேன்"...
"பரவா இல்லை...இந்த மெசேஜ் ஓட சேர்த்து 108 ஆகிடுச்சு".....

"உனக்கு திமிரா, இந்நேரம் ஸ்ரீ ராம ஜெயம் எழுதுனா ஒரு புண்ணியமாவது கிடைச்சிருக்கும்....போயும் போயும் உன் பேர போய், உனக்கே மெசேஜ் பண்ணிருக்கேன் பாரு, என்ன என்ன சொல்லுறதுன்னு எனக்கே தெரியல"...

"அதனால என்ன உனக்கு தான் நான் காதல் வரம் கொடுத்திருக்கேன்ல...இந்த 108 காதல் ஜெயத்துக்கும், நான் ஒவ்வொரு முத்தம் பரிசளிக்கிறேன்...சம்மதமா" என்றான்....

"போ"....என்றேன் திமிராய்...




                  "எதுக்காக என்ன காதலிக்கனும்னு உனக்கு தோனுச்சுன்னு" விளையாட்டாய் அவனிடம் கேட்டேன் ஒரு நாள்,

"முதலில் உன்னை சும்மா தான் பாத்தேன்...அப்பறம் சும்மா சும்மா பாத்தேன்...நீயும் என்ன பார்க்கிறேன்னு தெரிஞ்சதுக்கப்பறம் உன்ன தான் காதலிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்" என்று சொன்னவனை, இடைமறித்து, 

"நான் உன்ன பாக்கவே இல்லையே"

"நடிக்காத டி....என் அத்தைகிட்ட, அதான் உன் அம்மாகிட்ட நான் உன் வீட்டுக்கு வராதது குறித்து, பேசுனியே" ...
 
"ஆமா  நீ என் அத்த பையன் ஆச்சே....எங்க வீட்டுக்கு வராம இருக்கேனு கிட்டேன்" இதுல என்ன தப்பு இருக்கு...
 

"இம்ம்ம் அப்போ ஏன் சாய் னு என் பேரோட உன் பேரையும் உன் டைரி ல எழுதி வச்சயாம்"...

"ஒய் நான் உன் பேர எழுதுனது உனக்கு எப்படி தெரியும்",

"என் அத்தை அத பாத்து, என்கிட்ட சொல்லிட்டாங்க"...

ஐயோ இது அம்மாவுக்கு தெரியுமா?...
 

தெரியும்...என் மாமாவுக்கும் தெரியும்...

என்ன குண்டப் போடுற?...என் அப்பாவுக்கும் தெரியுமா?

"ஆமா தெரியும்....ஒரு ஞாயிறு  உங்க வீட்டுக்கு சாப்பிட வந்த போது, உன் அம்மாகிட்டயும், உன் அப்பாகிட்டயும் உன்ன காதலிக்கிறேன்னு சொல்லி சம்மதம் வாங்குனதுக்கப்பறம் தான், என் காதலை  உங்கிட்ட சொன்னேன்"...  

"எனக்கு தலைய சுத்துது...ஒரு குடும்பமே, என் கிட்ட இருந்து இதை மறைச்சிடுச்சே"...சரி அம்மா அப்பா நீ என்ன காதலிக்கிறேன்னு சொன்னவுடனே என்ன சொன்னங்க...?" என்று அவன் தரும் பதிலுக்காய் ஆவலோடு காத்திருந்தேன்...

அவனோ, "உன் நிலமைய நினைச்சா பாவாமா இருக்கு சாய் னு சொன்னங்க"...   

"இப்படிலாம் பேசுனா, நான் அழுவேன்" என்றால்...
 

"அழு இனி காலம் காலத்துக்கும் நான் தானே உன்ன கட்டிக்கிட்டு அழனும் என்று
கண் சிமிட்டி" சொன்னான் திமிராய்.....

அவன் திமிரும்...அவனின் திமிரும் அழகும் என்றுமே அழகுதான்....




LOVE IS A COMMITMENT...NOT JUST AN ENTERTAINMENT.............

புதன், 22 ஜூன், 2011

காதலோடு நான்...


நீ பேசிவிட்டு போனதிலிருந்து
இருப்புக் கொள்ளவில்லை
இதயம்....
மறுபடி ஒருமுறை
உன் குரல் கேட்க
காத்திருக்கிறது ஆவலோடு..
.

நான் சொல்லவருவதை
சொல்லி முடிப்பதற்குள்,
சிக்கிகொண்ட என் வார்த்தைகளை,
அழகாய் கண்டெடுத்து
விடுகிறது,
உன் வெட்க்கச் சிரிப்பு...
.
அனைவரிடமும் நட்பாய்
பழகும் நீ,
என்னிடம் என் எண்ணம்
அறிய, சாமர்த்தியமாய்,
வார்த்தைகளில்  வேவு
பார்ப்பது ஏன்?....   
.

அளவின்றி பேசுபவள் நான்,
உன் , பார்வை
தாக்கத்திருக்கு பிறகு
அளந்து அளந்தே  பேசிகின்றேன்...
 .

சத்தம் இல்லாமல் யுத்தம்
செய்வது காதலாம்...
கற்றுத் தந்தது,
நீ கொடுத்த ஓற்றை 
முத்தம்...
.

நீ விரும்பி கேட்கும் 
பாடல்கள் யாவும்,
நான் கேட்கையில்
இரட்டை அழகு கொள்கிறது...
உன் நினைவோடு....
. 

உன் விசாரிப்புகளுக்கு
பிறகு,
சுகமாய் தெரிகிறது
என் காய்ச்சல்.....
 .

மழையில் உன் குடைக்குள்,
வரவேண்டும்
என்ற எண்ணத்தில்,
நான் மறைத்து வைத்த குடையை,
என்னைப் போல்
நீயும் மறைத்து வைத்ததால்,
மழையில் நனைந்த,
நம் காதலை என்ன செய்வது....
 .

எண்ணிக்கை முக்கியமில்லை
என்று,  மிட்டாய்க் கேட்க்கும்
பிள்ளைபோல்,
அழுது வடித்து,
நீ முத்தம்
கேட்க்கும்  அழகுக்கே
ஆயிரம் முத்தம் கொடுக்கலாம்....
  .  

நம் காதலை மறைக்க
ஆயிரம் பொய்கள் 
சொல்லியாகிவிட்டது,
என்றால்,
அரைக் கல்யாணம் முடிந்து
விட்டதா என்று,
கண் சிமிட்டி காதல் செய்கிறாய்....
.  

காதல் அவஸ்த்தையானது தான்,
காத்திருக்க சொல்லிவிட்டு,
வேலைப் பளு என்று
நீ அனுப்பும்
குறுந்தகவலை எரிச்சலோடு
பார்க்கும் போது....
. 

கவிதையில் எல்லாம்
சொல்லிவிட முடியாத
உன் காதலை,
உன்னோடு இருக்கும் போது
உணர்கின்றேன்..
இது உனக்கே உண்டான
ஒன்று...
 .

விலகி விலகி
சென்றாலும்,
விருச்சமாய் நீ
எனக்குள்ளே...
.

( வணக்கம் நண்பர்களே நலம் தானா?.....மறுபடியும் பதிவுலகம் வந்தாச்சு, இனி வழக்கம் போல, என் பதிவுகளுக்கு வருகை தாருங்கள்.... )

திங்கள், 6 ஜூன், 2011

தூரமாகிப் போனவன்...


*** புன்னகை சிந்தியே,
என் உயிர் பறித்தவன்,
வாழ்வியல் வளர்ச்சிக்கு,
முழு வடிவம் தந்தவன்...
பசாங்கில்லா அன்பை
பருக தந்தவன்...
என் பத்து மாத கருவறைக்கு,
மதிப்பை தந்தவன்..
 தாய்மையின் அன்பினை
அறிய காரணமானவன்...
மனதின் சோகங்களை,
அருகில் இருந்து
களையக் கற்றுத் தந்தவன்...

** இன்று,
என் அன்பின் பிடியில் இருந்து,
விரும்பிப்பிரிகின்றான்....
எவனோ ஒருவனைப் போல
அவன் நகர்ந்தவேளை,
தூரமாக்கியது 
என் அன்பை என்று, 
அன்று
தெரியாமலே போயிற்று....
கண்குளிர அவன் 
கல்யாண கோலத்தை
காண ஆசைப்பட்டு,
இன்று கரைந்து 
கொண்டிருக்கிறேன்,
கானல் நீர் கனவுகளில்...

** நிதர்சன உணமைகளை
தாங்கிக்கொண்டு,
எதிர்கால வாழ்விற்காய்,
நினைவுகளை துரத்தி,
நிஜங்களை கொளுத்தி,
பொய்யாய் சிரிக்க,
காலம் எனக்கு
வாழ்வியல் முறையைக்
கற்றுக்கொடுத்திருக்கிறது....

** ஆனாலும்
சில வேலைகளில்,
பழைய நினைவுகள்,
என் இதயத்தை பிளக்கும் 
வலியை உணர்கின்றேன்.....
பத்து மாதம் சுமந்த
வயிராயிற்றே.....எங்கனம்
மறப்பேன்....
தூரமாகிப் போன
என் மகனை...


அன்புடன்
ரேவா

வியாழன், 5 மே, 2011

உனக்காக ஓர் வாழ்த்து




* உன் பிறந்தநாள் அன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்....

* அம்மாவின் ஆண்பிள்ளைக்
கனவுக்கும், 
அப்பாவின் தலைமுறை
விந்துக்கும்,
வளம் தந்த,
செல்ல மகன்  நீ தானே...

* தத்தி தத்தி நீ நடக்க
தங்க மயில் ஆடுதுன்னு,
சொல்லிவச்ச பாட்டிக்கு,
இன்றும் சொக்கத் தங்கம்
நீ தானே...

* கொஞ்சிப் பேச ஒரு அக்காவும்,
சண்டை போட மறு அக்காவும்,
சமாதானம் பண்ண
குடும்பமுமாய்,
நாம் அடித்த கூத்துக்கள்
நெஞ்சுக் கூட்டில்
நினைவுகாளாய் ஏராளம்...

* நிலாச் சோறு ஊட்டிய
நாளும்,
உன் கைபிடித்து
உன்னை நான் பள்ளியனுப்பிய
நாளும்,
அப்பா உனக்கு வாங்கித்தந்த
பொம்மைக்காருக்காய்
உன்னிடம் சண்டை போட்ட
நாளும் என,
அழகான நம் மழலைக் காலம்
மனக்கண்ணில் ஓடுதடா....

* காலங்கள் உருண்டோட,
கனவுகளும் சேர்ந்தோட,
காலத்தின் கோலத்தில்
பொறுப்புகளும் சேர்ந்தாட,
நெருங்கியே இருந்த
நம் அன்பு,
இன்று,
உன் வேலைப் பயணத்தால்,
இருமடங்கு அதிகமாக,
இதுவரை உன் அருகில் இருந்து 
வாழ்த்திய நான்
வார்த்தையைத் தேடுகிறேன்...

* வெயிலும், மழையும்
உன்னை நெருங்காம
பொத்திப் பொத்தி
வளர்த்த நாட்கள்,
புழுதி  நிறைந்த
மாநகரில் நீ அலையத் தானோ?.....

* கஷ்டமே அறியாமல்,

காத்திட்ட
எங்கள் அன்பின்,
பொறுப்புக்காய் பொருள்
சேர்க்க புறப்பட்டாய்.....

* இங்கு பிடி சோறும்
நீ இன்றி 
உள்ளிறங்க மறுத்து
உள் நாட்டு கலவரம்
செய்யும்
காரணம் அறிவாயோ?...

* இன்று உந்தன் பிறந்த நாளில்,

கடவுள் உன்னை காத்திடவும்,
காலம் நம்மை கரைசேர்த்திடவும்,
வக்கத்த உன் அக்கா
வெறும் வார்த்தையிலே வாழ்த்துகின்றேன்..

* வயோதிகம் வந்தாலும்,
வளமாக நீ வாழ,
வாஞ்சையோடு வாழ்த்துக்கிறேன்...
ஏழுப்பிறப்பென்பதில்,
எனக்கு நம்பிக்கை இல்லை...
அப்படி ஒன்று இருப்பின்,
என் ஏழுபிறவிக்கும்,
அன்னையாக, தந்தையாக
தம்பியாக, தங்கையாக
நீங்களே  வேண்டும்
என்று,
இல்லாத கடவுளிடம்
மண்டியிட்டு வேண்டுகின்றேன்....

* உன் பிறந்தநாள் அன்று,

உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்....  
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி....

என்றும் நீ நலமாய் வாழ வாழ்த்துகிறோம்...





( சாக்லேட்ஸ் எடுத்துக்கோங்க...இன்னைக்கு என் தம்பிக்கு பிறந்தநாள்....இன்னைக்கு பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்......)