உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 மே, 2013

சரிபாதியானவளுக்காய் என் வாழ்த்து




வாழ்க்கை குறித்து பல வினாக்களுக்கு பதில் தெரியாது போனாலும் வாழ்தலுக்கான பிடித்தமென்பது நட்பைத்தொட்டுத்தான் ஆரம்பமாகிறது..சமயங்களில் பதில் இருந்தும் சொல்ல முடியா பல கேள்விகள், சூன்யவெளியொன்றை உருவாக்கி சுயம் தன்னை சுட்டெறிக்கும் நிமிடங்களில் வசந்தங்களை வாசலுக்கு கொண்டு வரும் வித்தையை கற்றுத்தான் வைத்திருக்கிறது நட்பு..அதனால் தான் என்னவோ நட்பு  அதன் கோட்டையை இன்னும் இன்னுமென  நீட்டித்து தேசமெங்கும் தன்னை வியாபித்திருக்கிறது...

எதையோ தேடச்சொல்லி கட்டளையிட்ட இருள் தேடியெடுக்கையில் நட்பெனும் வெளிச்சத்தை கையில் கொடுத்துப் பயணிக்கச்சொன்ன நாள் இன்னுமென் மனக்கண்ணில் விரிய, பெண்ணாய் பிறந்ததாலே தவறவிட்டவை பல இருக்கையில், உன் அருகாமை தானே எனக்கு அத்தனையும் கொடுத்தது... கூடிக்களித்த பொழுதுகள் ஒன்றா இரண்டாவென கூட்டிக்கழிக்க நினைத்தால் கூடிடும் நரையென்பது சுற்றிய சுற்றம் அத்தனையும் அறியும்,,,
பெண்களுக்கு வீட்டின் கட்டுப்பாடுகள் கால் சிலம்புகளனென   நாம் அறிந்தே இருந்தாலும், முகவரி தொலைத்த கடிதமொன்றின் உள்ளிருக்கும் செய்தியென அது நம்மை அலைக்கழித்துக்கொண்டே இருக்க, இருவருக்குமான அலைவரிசை ஒத்தேயிருத்தா ஒத்துழைத்ததால் கிடைத்ததா இந்த உறவென்று இதுவரை  தெரியவில்லை..ஆனாலும் இவ்வலைவரிசையை தெரிந்தே வைத்திருக்கிறது உன் பண்பலை..அதனால்தானென்வோ ஆட்டோகிராப் நோட்டைத்தாண்டி ஓட்டமெடுத்திருக்கிறது நம் நட்பு...

 நொடிக்கொரு முறை தொலைபேசவோ, அன்பை குறிப்பிட்ட பரிசாக்கவோ தெரியாத வக்கற்றவளின் வரிகளிது வாஞ்சையாய் உனைத்தேடிவருகிறது.. உன் அணைப்பின் சூட்டையும், அருகாமையின் தவிப்பையும் இழந்த இவ்வரிகளுக்குள் நீயிருக்கிறாய் என்பதாலே என்னை மறந்து உன்னை எழுதிக்கொண்டிருக்கிறேன்..இப்போதும் கூட உன் நேசத்திற்குரியவரோடு காதல் பாடியபடி நீயிருக்கலாம்..வாழ்த்த வார்த்தைகளை தேடி நட்பின் வெளிகளில் ஒரு பட்டாம்பூச்சியென பறந்து திரிகிறேன்  நான்...உன் நேச சிறகெடுத்து சுற்றி வருகிறேன்..பல வண்ணம் கொடுத்து என்னை  பயணப்பட வைத்த பல நட்பு அவரவர் திருமணத்திற்கு பின் இல்லாமல் போனதன் வலியொன்று போன வருடத்தின் இதே நாளிலும் கிடைக்கப்பெற்றேன்.. நேசத்தை எத்தனை முறை வலிக்க அடித்தாலும்  அதன் நிழலென்பதே நேசிப்பது தானே.. ஆனாலும் உன் விசயத்தில் மட்டும் வரம் வாய்த்தவள் நான்... வாய்ப்பு கொடுத்தவர் உன் நேசத்திற்குரியவர்...

 நாளை உன் முதலாம் ஆண்டு திருமண நாள். வாழ்த்துவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது... உனக்கான இந்த நாள் மட்டும் என்னோடு இருக்கிறது..முதல் வாழ்த்தாய் என் வார்த்தைகளிருக்கட்டுமென பிழையோடே பிழைசெய்கிறேன்... அடுத்துச்சந்திப்பில் பேசிச்சிரிக்க இவ்வரிகள் இருக்குமென உதட்டோர சிரிப்பில் உறுதிசெய்துகொள்கிறேன் என் நட்பின் சரிபாதிக்கு மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்... நல்லவைகள் உங்களை வந்து சேரவே நான் பெற்ற இம் முகநூல் உறவுகளோடு வாழ்ந்துகிறேன் உங்களை...வளங்கள் வரட்டும்... வாழ்த்துகள் கல்பனா, வாழ்த்துகள் .முரளி...








செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஒளித்துக்கொள்கிறேன்



இது
இப்படித்தான்..

ப்ரியத்தின் பொருட்டு
தள்ளிவைத்து பார்க்கப்படுகின்ற
இந்நிமிடங்கள்
சொல்லமுடியா மலட்டு தாயின்
பாசம் போன்றது...

பகிர்தலில் பழக்கப்பட்ட
என் பாஷைகள்
மொழியறியாது
ஸ்வரம்புரியாது
இசைத்துக்கொண்டே கிடக்கிறது
ஈனஸ்வரத்தில்

இந்த மெளனத்திற்கு
எத்தனையோ காரணமிருக்கலாம்
எடுத்துவைக்கும் காரணம் புரியாதுமிருக்கலாம்..

சின்னசின்ன செய்திகளில்
கொட்டிக்கிடக்கும் வார்த்தைகளில்
ஆசுவாசப்படுத்தும் பகிர்தல்களில்
கோர்த்துப்பார்க்கும் பிரியங்களில்
நிரப்ப முடியா
வெறுமை பெற்று அழைகிறது
உன்னிடம் பகிரா செய்திகள்...

காதுக்குள் எப்போதும் வந்துமிழும்
வீரிய வார்த்தைகள்
நமை விழுங்காதிருக்க
எனக்குளே ஒளித்துகொள்கிறேன்
உன் நட்பை
உனதிந்த வருத்தங்களோடு