உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 12 பிப்ரவரி, 2015

நிகழ்வின் பிரிவு


பூப்பெய்த பிள்ளையை ஈர விழியில் 
வாங்கிக்கொள்கிற தாயைப்போலவே தயங்கி நிற்கிறோம்

பேசத் தொடங்கும் முன்
புன்னகை மையிட்டு எழுதிப் பார்க்கவோ
பார்வை உரசலோ
எண் பரிமாற்றமோ
கை குலுக்கலோ
அமைதி உடைக்கும் எதுவோ
சட்டென்று நிகழும் கணத்திற்காய்
நீயும் காத்திருக்கலாம்

விலகி வந்த பின்னும்
விட்டுப் பிரியா தேசத்து வாசமென
மாறிப்போன பின்
இப்படியாய் நிகழும் சந்திப்புகளில்
பேசித்தான் புரியவைக்க வேண்டுமா என்ன?



-ரேவா

வழிப்போக்கனின் வீதி



ஷேர் ஆட்டோ
ஓட்டுபவனுக்கும் நீட்டுபவனுக்குமான 
பயணம்


*

பானிப்பூரி கடைக்காரன் திண்ணத் தருகிறான்
செரிக்காத சோம்பேறித்தனத்தில்
முதலாளித்துவத்தை


*

கரும்புச்சாறு கடை
சக்கையாய் பிழியப்படுகிறான்
ரோட்டோ வியாபாரி..

*

வேகத்தடை
தடைபோடுவதில்லை
முக்காடுக்குள் ஒளிந்திருக்கும் வாலிபத்தை

*சந்தை வியாபாரமானது புகழ்ச்சி
அறிவுரைகளெல்லாம் இனி
அழுகல் காய்கறிகள் தான்

*

நவீனச்சந்தையில் பாடிஸ்ப்ரே நூறு கொடுத்துவாங்கியாகிவிட்டது
இனி கட்டிக்கொள்ளும் அழகிகளைத்தேடித்தான்
ஓடவேண்டியிருக்கிறது
விளம்பரமும்
வாலிபமும்

*

திருவோடு ஏந்திவந்தவரை
பிச்சைக்காரனென்றவன்
கடந்துசென்றான் காசுபோடாமலே....

*

கோஷம் போட்டவன்
திரையில் வேஷம் போட்டான் மக்கள் தான் சொத்தென்று
வாக்குகள் குவிந்தன
திரைப்படமோ வெள்ளிவிழா
இறுதியில் வாய்கரிசிதான் ஆள்கிறது
எல்லோரையும்

*

சுரண்டிக்கொண்டேயிருக்கிறோம்
தியேட்டரிலும் மால்களெனும் பெயரில் 
சிறுவர்த்தகத்தையும்

வாழ்க ஜனநாயகம்

*

மேடைப்பேச்சு
சத்தமாய் பேசுகிறது காசு

*

திருவிழா நேரம்
ரோட்டோர கடை
கல்லாகட்டுகிறது காக்கிச்சட்டை

*

விடுமுறைதினம்
விரயமாகிறது
பகிர்தலும்
பணமும்

*

தமிழனென்றால் விருந்தோம்பல் தான்
தண்ணீர் மட்டும் இனி
பத்து ரூபாய்

தீர்மானங்களில் இசைக்கிறாய்




ஒரு சாமானியனைப்போல் என் முன் நிற்காதே

வேசம் களை
வெளுத்துப் போன சட்டை அவிழ்

மாந்திரீக வார்த்தைகளின் பின்னிருக்கும் நிர்வாணம் காண்
நிதானித்து பேசு
நிதர்சனத்தில் நில்
மூச்சுவாங்க உனைத்தேடு
கிடைத்ததில் பிழையிருந்தால் கண்ணீர் சிந்து
உண்மையிருப்பின் உயிர்தொட்டு உன்னைத் திருத்து
கருத்து சொல்வதாய் கடந்து விடாதே
காத்திருத்தலெனும் கெளரவம்
கைக்கு வருகையில் கொலைசெய்யும்
கண்டதையும் போட்டுடைக்கும்
இல்லாதது போலிருந்து
போகாத இடம் போகும்
போதையென்று கைக்கு வந்து
போகப்போக உனைக்குடிக்கும்
ஆம்
காமம் ஓர் அமிலம்
காதல் அதன் குவளை
அதனதனிடத்தில் அதன் செயல் சரி
என் வழியில் நீ தவறு


காமுற்றிருப்பினும்
உனை காதலிக்க நான் தயார்


அதற்கு முன் பெண்ணைப் படி
படித்தலென்பது வார்த்தைகளைத் தாண்டி வாதங்களிலும்
வாழுமென்பதை உணர்


பெண்ணாடுவது மார்புச்சூட்டின் கதகதப்பை
நெடுஞ்சாலை பயணத்தின் கைகோர்ப்பை
மாதவிடாய் நேரத்தின் தோளணைப்பை
உச்சிக்குழியில் காமம் பல்லிளிக்காத எச்சில் முத்தத்தை


இதற்கு சாமானியனைப்போன்ற வேஷமெதற்கு
வாழ்வென்பது ஒப்பனைகளைக்காட்டிலும்
ஒப்படைத்தலிலிருக்கிறதென்று உணர்
இப்பொழுது சொல்
என்னை காதலிக்கிறாயா இல்லை காமுற்றிருக்கிறாயா?

அடைமழை




வெளியே புயலின் பீதி

உள்ளே வரும் அத்தனையிலும்
காற்றோடு மரங்கள் சேர்ந்திசைக்கும்
பேய் இசையினைப் போலொரு 

பெரும் துயர்காட்சி

நெஞ்சடைத்து பெய்த பின்னும்
வெறிக்காத வானம்
வேடிக்கை இடிமின்னல்களென
எப்போதும் அடைமழைதான்
மனகாட்டில்.

கனவில் இருப்பு





இரவின் விரிப்பில் கச்சிதமாய் வந்தமர்கிறாய்

இந்த இடைவெளி அன்னியப்படுவதாய் நினைக்கையில்
ஆளுக்கொருமுறை அருகில் வர
அடைபட்டுப்போன இடைவெளி
அகம் மறைக்கா குணம் காட்ட
அளவெடுத்த நம் மெளனம்
ஆங்கே ஒர் இசைகொடுக்க

அளவின்றி வந்த தூரத்து அழுகுரல்
அடிமனதை துளைத்தெழுப்ப
விழித்துவிட்ட கனவொன்று
அவ்விடமே நிறுத்தி வைத்தது
உன்னை...

-ரேவா

கையளவில் உலகம்




உன்னிடம் தந்தையைத் தேடியலைகிறது மனம்

தாலாட்டோ
சின்னதாய் தலைகோதலோ
தோல்வியில் சொல்லிக் கொடுத்தலோ
வெற்றியில் பூப்பதோ
இல்லாமல் கூட போகட்டும் 


பற்றிய கைகளை மட்டும் விட்டுவிடாதே.....

கவலை




இனி கவலையில்லையென்ற பாவனையில்
எழுதத் தொடங்குகின்ற வரிகளுக்குள்
எங்கோ ஒளித்து வைக்கப்படுகிறது
கவலை குறித்த பயம்


பயமற்று தொடர்வதாய் நினைத்து
ஒவ்வொரு நிறுத்தத்திலும் தன்னை சரிசெய்து கொள்ள
ஆரம்பித்த இடத்தில்
ஒளித்துவைக்கப்பட்டதாய் நினைத்த கவலை
கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை அவிழ்த்துவிட
கவலைகுறித்த கவலையொன்றை
சுமந்து வருகிறது
இனி கவலையில்லையென்ற பாவனையில்
தன்னை எழுதிக்கொண்ட
ஒரு க(வலை)விதை...