உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

டைரிக்குறிப்புகள் 2





தேய்பிறை..

இம்மாத பிப்ரவரி 2016 -ல் வெளிவந்த கணையாழி இதழில் என் கவிதையும் வந்திருந்தது இந்த வருட தொடக்கத்திற்கான உற்சாகத்தைத் தந்தது.

அண்ணன் ஜீவகரிகாலன் அவர்களின் சிறுகதையும், என் கவிதையும் அடுத்த அடுத்த பக்கத்தில் என்ற கூடுதல் சந்தோஷத்தோடு தான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். சமீபங்களில் பீடித்திருக்கிற சோம்பேறித்தனமோ அல்லது நம்மை நாமே நாமாய் கவனிப்பதில் ஏற்படுகிற சோர்வோ, இன்னும் சொல்லத் தெரியா ஏதோ ஒன்றால் வாசிப்பும் எழுத்தும் முரண்டு பண்ணுகிற வேலையில் வந்த கணையாழியைக்கூட எடுத்துபார்க்கிற மனம் வாய்க்காதது ஒரு தனிச்செய்திக்குப் பின் தான் உரைத்தது..

கதையின் தலைப்பு தேய்பிறை..

இந்த வருடத்தில் வாசித்த முழுக்கதை  என்பதில் சந்தோஷமும், அதைத் தாண்டி வாசிக்கக் கிடைத்த அனுபவம் கொடுத்த சுவை அலாதியானது..

கதையில் மொத்தம் எட்டுக் கதாபாத்திரப் பெயர்கள்.. கதைக்குள் இயங்குபவர்களாய் கண்ணன், கண்ணனின் தாயார், கண்ணனின் நண்பன் பிரகாஷ், கண்ணனின் தம்பி மற்றும் அப்பா.. 

பன்னிரண்டாம் வகுப்பில் அதிகமதிப்பெண் எடுத்தாலும் தனக்கு விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து அதில் நிறைவு பெற்றவனாய் வலம் வருகிற கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் மேல் அலாதி நம்பிக்கையை ஏற்றிவிடுகிற வர்ணனைகள்.. அது வாசிக்க வாசிக்க கண்ணனை நமக்கும் பிடித்துப் போகிறது.

உளவியல் படிப்பை தேர்ந்தெடுத்து அதே துறையில் ஒரு வேலைக்கும் தன்னை அமர்ந்துகொண்ட இடம் கண்ணனைப் பற்றிய ஒரு முடிவுக்கு எளிமையாய் வர உதவியிருக்கிறது. காரணம் தன் நண்பனுக்காக உளவியல் படிப்பை எடுத்து பின் பேங்க் தேர்வெழுதி ஒரு உத்யோகத்தில் உட்கார்ந்து கொண்ட பிரகாஷில் இருந்து இவன் வேறாய் தெரிவதே இந்த கதைக்கான ஒரு பிடியைக் கொடுத்து நம்மை பயணப்பட வைக்கிறது..

மரணத்தை எதிர்கொள்வது எப்படி என்பது தான் கதையில் மையக்கரு..

மரணம் என்பது ஒரு மார்கண்டேயச் சாவி.. அதற்கு வயதின் சுருக்கங்கள் விழுவதே இல்லை.. 

மொத்த கதையையும் இங்கே தட்டச்சு செய்துவிடுவேனோ என்ற பயம் என்னை இந்த கணம் சூழ்கிறது..

தந்தைக்கும் மகனுக்குமான உறவு, வளர்ந்த பிறகு நம்மை எப்போதும் வளர்க்கவிடுவதில்லை என்பதை கண்ணனின் அலுவல் விசயமான நேர தாமத்தை, கோபத்தோடு எடுத்தாளும் தந்தைக்கும், மகனுக்கும் இடையே சிக்கித் தவிக்கிற, தன் மகன் செய்கிற செயல்களால் பெருமைபட்டுக்கொள்கிற, நம் வீட்டுப் பெண்களைப் போலவே இந்த தாயும்..

வெறும் செய்தியாய் இல்லாது போன மரணத்தை நாம் எப்படி எதிர்க்கொள்வது? ரத்தமும் சதையுமான நம் சுய நலத்தின் வலிகளை நாம் விரட்டி அடிக்கிற போது வருகிற கண்ணீரின் சுவைக்கு என்ன பெயர் இடுவது? என படிக்க படிக்க இருக்கிற மடிப்புகள் தான் இந்த கதைக்கு பலம்.. அதுவே இந்த டைரிக்குறிப்பில் என்னை எழுதத் தூண்டியிருக்கவும் வேண்டும்..

நம்புகிறேன்..

:)

தன் தாய்க்கு ஒரு மரணத்தை எதிர்கொள்வதை, தான் பெற்ற அல்லது விரும்பிய பட்ட அறிவால், அவள் மனதை தயார் செய்கிற இடம் எல்லாம் நாமும் கூடவே பயணப்படுகிறோம். வழி நெடுக saw படங்களில் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பரிபோகிற உயிர் யாருடையாதாய் இருக்குமென்பதில், இருப்பவர்களிடம் வெளிப்பட்டுவிடும் வாழ்வின் மீதான பற்றுதலை, இங்கே வேறாக வேகம் குறையாமல், நம்மையும் அந்த பதட்டத்திற்குள்ளே அழைத்துப் போன இந்த எழுத்தை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது..


குறியீடுகள் நம்மை ஒரு நீண்ட பயணத்திற்கு அழைத்துப் போவவை..அவைக்குள் எல்லைகள் இல்லா வெளி பரந்திருப்பதே ஒரு தேசாந்திரிக்கு கிடைத்திருக்கிற வரம் தான். அப்படியாக இந்த தேய்பிறை கதையில் இருக்கிற குறியீடுகள் அத்தனையும் சொல்லவந்த விசயத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது என்றே நம்புகிறேன்..

முடிவு என்ன என்பதை தேய்பிறையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்..

இந்த கதையை குறும்படமாய் எடுக்க இருப்பதாகவும் சொன்ன அந்த தகவலோடு என் கனவுகள் வளரத்தொடங்கிவிட்டது..

காணும் காலத்திற்காய் காத்திருக்கத் தான் வேண்டும்..

இனி சின்னச் சின்ன விசயங்களையும் இங்கே எழுதியே, அகப்படாத பலவற்றைத் தீர்ப்பதென்று முடிவெடுத்துவிட்டேன்.


குறிப்புகள் தொடரும்..



-ரேவா





0 கருத்துகள்: