உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 மார்ச், 2016

டைரிக் குறிப்புகள் 3

நம் பயணங்களைத் தேர்ந்தெடுக்கிற உரிமை நம்மை விட்டுப் போனவர்களின் நினைவுகளுக்கும் உண்டு தானோ என்று இக்கணம் நினைக்கிறேன்..

விட்டுப் போனவர்கள் என்ற சொல்லின் புதிர்
நம் தேடலுக்கான விடை..


பிரித்துப் பார்ப்பதற்கும், பிரிந்து இருந்து பார்ப்பதற்குமான பார்வை வித்தியாசங்கள், தாய்மொழி கூடு பாய்கிற வேற்றுமொழியின் நாவினைப் போல்..

பிசகுதலை லயமென்று ஏற்றுக்கொண்டால்
பாடப்படும் பாடல்?


பிறழ்கிறேன்..

வெளிச்சங்களையெல்லாம் இருட்டடைக்கும் மெளனத்தின் வழியாய் எடுத்துக்கொண்ட கணத்தின் திரை விலகுதல், கொற்றவை நடனம்..

சொல்லின் சலங்கை நிலம் முழுதும் தெரித்து அதிர்கிறது.
அடங்க மறுக்கிறது மனதின் மேடை..
மூச்சுமுட்ட நிலம் பார்க்கும் வேர்வையில்,
பூக்கிறது பூக்காடு..


வாசம் வாசம் எங்கும் தனிமையின் கடல் வாசம்..

ஓர் அடர்பொழுதின் பிடிக்குள் உப்புக்காற்றின் சுவையோடு என்னை வந்த சேர்ந்த இந்த கலைஞனையும், அதற்கு பின் எனக்குப் புழங்கக் கிடைத்த வார்த்தைகளையும் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்..


காட்சிகள் மாறுகிறது,
கடலாகாது..


கடல்
என்னை ஒவ்வொருமுறையும் வெவ்வேறு ஆழத்தில் காவு வாங்கியிருக்கிறது...


அசைவற்று அதன் ஆழம் பழகுதலை, கிளிஞ்சல் பொறுக்கும் சிறுமியின் ஆவல் கைகளென அலையவிடுகிறேன்..

கடல் விரிகிறது,
புரியப்படாத மெளனத்தின் நீலத்தில்..
மூச்சடைக்கிறது,
நாசியேறிவிட்ட உப்பின் கரிப்பில்..


நான் கடலாவதை, கரை நின்று பார்க்கிற தனிமைக்கு என் மேல் அத்தனை காதல்..
தீண்டுகிறது இன்னும் தீராமல்..

ஷங்கர் டக்கர்.. 

அண்ணனின் வழியாய் அறியக்கிடைத்த பெயர்,
இன்றும் எனக்குள் பேசிப் பேசிச் சலித்த என் பெரும்பான்மை பொழுதுகளை, என்னிலிருந்து எனக்கு வேறாக்கித் தருகிற பாடல்கள் இவரது யூடியூப் பக்கத்தில்  நிறைந்து கிடக்கிறது..


நீ நினைத்தால் ஆகாததும் உண்டோ என்று மனம் உச்சக்கட்டமாய் கத்த ஆசைப்படுகிற வேண்டுதலில் தொடங்கி, ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடித் தோழி என்ற ஏக்கத்திலெல்லாம் நான் தொலைந்திருக்கிறேன்..

அண்ணனுக்குப் பிடித்த மன்மோகினி பாடலின் ஆண் மேல் எனக்கும் அத்தனை காதல்..

மொழிகள் பிடிபடுவதற்குள் நம்மைத் தொற்றிக்கொள்கிற, பால்பற்களுடைய உணர்வுகள் மட்டுமே, நம்மை மொழியறியும் முயற்சியை நோக்கி முரண்டுபிடிக்கும் குழந்தையாய் வளர்க்கிறது.


இன்றும் நான் முரண்டுபிடிப்பவள் தான்..

இந்த மதியத்தை எதுவுமற்றுக் கழிப்பதென்ற எண்ணத்தை மீறிக்கொண்டு வந்துவிட்ட இந்த கைகளையும், கேட்க ஆசைப்படுகிற இந்த பாடலையும்
உங்களோடு பகிர்வதில் நிம்மதியடைகிறேன். 


ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ




https://www.youtube.com/watch…
-ரேவா

சனி, 5 மார்ச், 2016

மனக்கிறுக்கல்கள் 20





கடந்த காலங்களின் மேல் கல்லெறிபவர்கள் மீது சமாதானம் உண்டாவதாக..

 நம் எளிய நேர்மைக்கு நேர்வது எதுவானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், திக்கெட்டும் விரிகிற உணர்வை ஊன்றுகோலாக்கி எழுந்துவிடுகிற மனம் மட்டுமே நம் பிரதானம்..

அத்தனை செல்வமும் உன்னிடத்தில் 
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் 
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் 
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில் 

இதன் மையத்தை தொட்டுவிட பிரயத்தனப்படுகிற வாழ்வின் முரண் புதிர்களே, நம் ஆசையின் சிக்கல் காடு. 

எங்கேயும் எழுந்துகொள்கிற விதையென குரல்கள், புதைந்து எழுகிற நேரத்தின் விருட்சம். பற்றிய கனவுகள் மனவேரின் துடிப்பு..

எதுவாகவோ விழுந்து, எதன்மூலமோ கிடந்து, பின் முளைக்கிற பொழுதுக்கான நீர்மையை வார்ப்பது நம் மன நிலமே அன்றி வேறெதுவாய் இருந்திடமுடியும். 

அன்பு செலுத்துவதும், பின் அது நகைமுரணாய் மாறி பிரசவிக்கிற துரோகத்திற்கும், இடையே எத்தனை எத்தனை நிறுத்தங்கள், எத்தனை எத்தனைக் கொண்டாட்டங்கள்..எத்தனைவிதமான உணர்வாட்டங்கள்..

ஊசலாட்டம் காட்டும் காலத்தின் முன் ஆடத்தெரிந்தவர்கள் பாக்கியவான்கள்.
அவர்கள் ஒப்பனைகள் இட்டுக்கொள்வதில்லை, நம் உடம்பொரு ஒப்பனைக்கூடம்.. அது களைகிற இடத்தில் இருக்கிற வெளிச்சம் பிரபஞ்சத்தின் சக்தி.

 நம்மை இறக்கிவிட பிரியப்படுகிற பிரியத்தின் எந்த நிறுத்தத்தில்  நாம் இறங்கிக்கொள்வது? எந்த கொண்டாட்டத்தின் கால்களை வாங்கிக்கொண்டு இனி அங்கே பயணப்படுவது என்பது மட்டுமே நம் மனமுதிர்வை வெளிக்காட்டுவிடுகிற சுருக்கங்கள்..

வயதின் சுருக்கம் வாழ்வாகிவிடுவதில்லை என்ற இடத்தில் இருக்கும் ஆழம், அனுபவத்தின் நீச்சல் கைகள்.. நீந்துதல் என்பது பிழைத்தலாகும் போது வாழ்தலின் பெயரில் மரணம் அதே வாழ்வாகி சம்பவிக்கிறது. 

இருப்பதற்கும் இல்லாமல் போவதற்குமான சொற்ப தூரமே வாழ்வாகிக் கிடக்கையில், கடத்தலென்ற சொற்ப வரிக்குள் நாம் கண்டு தெளிகிற வளைவுகள் எத்தனை.

ஓர் அணுவுக்குள் அடைபட்ட உயிரின் வளர்ச்சி, நம்மை அடைகாக்கிற இந்த பிரபஞ்சத்தின் நிலம் தரும் காருண்யம். அது நிராகரிப்பதில்லை என்பதே நாம் வாழும் மரணத்திற்கான உத்திரவாதம்..

இடைப்பட்ட இந்த தூரங்கள் இப்படித்தான் கடந்திடவேண்டுமென்றால், பணிதல் மட்டுமே சிறந்த மாணவர்களுக்கு அழகென்ற இடத்தை எடுத்துக்கொண்டு, தோள் தாங்குமளவு சுமக்கத் தயாரகும் பயணத்தை ஏற்றுக்கொள்வதே,  நீண்டு கிடக்கும் இந்த பிரபஞ்சத்தை அடைவதற்கான வழியாகவும் இருக்கிறது. 

வலியறிந்து வழி அடைவோம்..

இன்னும் பேசுவோம்..


ரேவா

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

டைரிக்குறிப்புகள் 2





தேய்பிறை..

இம்மாத பிப்ரவரி 2016 -ல் வெளிவந்த கணையாழி இதழில் என் கவிதையும் வந்திருந்தது இந்த வருட தொடக்கத்திற்கான உற்சாகத்தைத் தந்தது.

அண்ணன் ஜீவகரிகாலன் அவர்களின் சிறுகதையும், என் கவிதையும் அடுத்த அடுத்த பக்கத்தில் என்ற கூடுதல் சந்தோஷத்தோடு தான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். சமீபங்களில் பீடித்திருக்கிற சோம்பேறித்தனமோ அல்லது நம்மை நாமே நாமாய் கவனிப்பதில் ஏற்படுகிற சோர்வோ, இன்னும் சொல்லத் தெரியா ஏதோ ஒன்றால் வாசிப்பும் எழுத்தும் முரண்டு பண்ணுகிற வேலையில் வந்த கணையாழியைக்கூட எடுத்துபார்க்கிற மனம் வாய்க்காதது ஒரு தனிச்செய்திக்குப் பின் தான் உரைத்தது..

கதையின் தலைப்பு தேய்பிறை..

இந்த வருடத்தில் வாசித்த முழுக்கதை  என்பதில் சந்தோஷமும், அதைத் தாண்டி வாசிக்கக் கிடைத்த அனுபவம் கொடுத்த சுவை அலாதியானது..

கதையில் மொத்தம் எட்டுக் கதாபாத்திரப் பெயர்கள்.. கதைக்குள் இயங்குபவர்களாய் கண்ணன், கண்ணனின் தாயார், கண்ணனின் நண்பன் பிரகாஷ், கண்ணனின் தம்பி மற்றும் அப்பா.. 

பன்னிரண்டாம் வகுப்பில் அதிகமதிப்பெண் எடுத்தாலும் தனக்கு விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து அதில் நிறைவு பெற்றவனாய் வலம் வருகிற கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் மேல் அலாதி நம்பிக்கையை ஏற்றிவிடுகிற வர்ணனைகள்.. அது வாசிக்க வாசிக்க கண்ணனை நமக்கும் பிடித்துப் போகிறது.

உளவியல் படிப்பை தேர்ந்தெடுத்து அதே துறையில் ஒரு வேலைக்கும் தன்னை அமர்ந்துகொண்ட இடம் கண்ணனைப் பற்றிய ஒரு முடிவுக்கு எளிமையாய் வர உதவியிருக்கிறது. காரணம் தன் நண்பனுக்காக உளவியல் படிப்பை எடுத்து பின் பேங்க் தேர்வெழுதி ஒரு உத்யோகத்தில் உட்கார்ந்து கொண்ட பிரகாஷில் இருந்து இவன் வேறாய் தெரிவதே இந்த கதைக்கான ஒரு பிடியைக் கொடுத்து நம்மை பயணப்பட வைக்கிறது..

மரணத்தை எதிர்கொள்வது எப்படி என்பது தான் கதையில் மையக்கரு..

மரணம் என்பது ஒரு மார்கண்டேயச் சாவி.. அதற்கு வயதின் சுருக்கங்கள் விழுவதே இல்லை.. 

மொத்த கதையையும் இங்கே தட்டச்சு செய்துவிடுவேனோ என்ற பயம் என்னை இந்த கணம் சூழ்கிறது..

தந்தைக்கும் மகனுக்குமான உறவு, வளர்ந்த பிறகு நம்மை எப்போதும் வளர்க்கவிடுவதில்லை என்பதை கண்ணனின் அலுவல் விசயமான நேர தாமத்தை, கோபத்தோடு எடுத்தாளும் தந்தைக்கும், மகனுக்கும் இடையே சிக்கித் தவிக்கிற, தன் மகன் செய்கிற செயல்களால் பெருமைபட்டுக்கொள்கிற, நம் வீட்டுப் பெண்களைப் போலவே இந்த தாயும்..

வெறும் செய்தியாய் இல்லாது போன மரணத்தை நாம் எப்படி எதிர்க்கொள்வது? ரத்தமும் சதையுமான நம் சுய நலத்தின் வலிகளை நாம் விரட்டி அடிக்கிற போது வருகிற கண்ணீரின் சுவைக்கு என்ன பெயர் இடுவது? என படிக்க படிக்க இருக்கிற மடிப்புகள் தான் இந்த கதைக்கு பலம்.. அதுவே இந்த டைரிக்குறிப்பில் என்னை எழுதத் தூண்டியிருக்கவும் வேண்டும்..

நம்புகிறேன்..

:)

தன் தாய்க்கு ஒரு மரணத்தை எதிர்கொள்வதை, தான் பெற்ற அல்லது விரும்பிய பட்ட அறிவால், அவள் மனதை தயார் செய்கிற இடம் எல்லாம் நாமும் கூடவே பயணப்படுகிறோம். வழி நெடுக saw படங்களில் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பரிபோகிற உயிர் யாருடையாதாய் இருக்குமென்பதில், இருப்பவர்களிடம் வெளிப்பட்டுவிடும் வாழ்வின் மீதான பற்றுதலை, இங்கே வேறாக வேகம் குறையாமல், நம்மையும் அந்த பதட்டத்திற்குள்ளே அழைத்துப் போன இந்த எழுத்தை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது..


குறியீடுகள் நம்மை ஒரு நீண்ட பயணத்திற்கு அழைத்துப் போவவை..அவைக்குள் எல்லைகள் இல்லா வெளி பரந்திருப்பதே ஒரு தேசாந்திரிக்கு கிடைத்திருக்கிற வரம் தான். அப்படியாக இந்த தேய்பிறை கதையில் இருக்கிற குறியீடுகள் அத்தனையும் சொல்லவந்த விசயத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது என்றே நம்புகிறேன்..

முடிவு என்ன என்பதை தேய்பிறையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்..

இந்த கதையை குறும்படமாய் எடுக்க இருப்பதாகவும் சொன்ன அந்த தகவலோடு என் கனவுகள் வளரத்தொடங்கிவிட்டது..

காணும் காலத்திற்காய் காத்திருக்கத் தான் வேண்டும்..

இனி சின்னச் சின்ன விசயங்களையும் இங்கே எழுதியே, அகப்படாத பலவற்றைத் தீர்ப்பதென்று முடிவெடுத்துவிட்டேன்.


குறிப்புகள் தொடரும்..



-ரேவா





சனி, 27 பிப்ரவரி, 2016

டைரிக்குறிப்புகள்






உடையவர்களே உரிமையானவர்கள்..

அண்ணனிடம் பேசிக்கொண்டிருக்கையில் சுவாசத்தை நெறித்த இரண்டே இரண்டு வார்த்தைகள் இவை.. அழைப்பேசியை துண்டித்து முடித்த பின்னும், விபத்தில் உடல் துண்டாவதை, உணர்வு, மூளைக்கு அனுப்பி அதை நாமே வேடிக்கை பார்க்கிற  போது, நம் கண்களில் இருக்கிற வலி போல இருக்கிறது இந்த வரிகள்..

சொற்களை நமக்கான ஏந்திவருகிற அத்தனை பேரும் நமக்கான தேவதைகள்...

மூச்சடைக்கிறது.. 

சுவாசிப்பதற்கு யாரேனும் கொஞ்சம் சொற்களைக் கொடுத்தால் தேவலாமென்று தான் இருக்கிறது. இருப்பென்பது எதிலிருந்து தொடங்குகிறது என்பதை இப்போதும் யோசிக்கிறேன்..

இருப்பது என்பது இருப்பாகுமா? அல்லது இல்லாத பின்னும் இடம் பிடிக்கிற சொற்களுடைய மனிதர்களின் இருப்பை, இருப்பென்று மட்டும் சொல்தல் சரியாகுமா? சொற்களோடு விளையாடும் அர்த்தங்கள் ஒரு கூட்டு சமையல் தான்.. விரும்பிய சுவையின் தேர்வு நமக்கான அருமருந்து.. 

யாரிடமும் இப்போதெல்லாம் சொற்களின் பொருட்டு மண்டியிட விருப்பமில்லை.. கூடுடைய பறவைகளை, அதன் திசையிலிருந்து பார்க்கிற கண்களைக் கொடுத்துவிட்ட காலத்தின் முன், அதன் பறத்தலை மரம் ரசிக்கிறது அல்லது  அது அப்படி தான் நிகழ்ந்தாகவேண்டுமென்ற வேரின் போக்கை தக்கவைத்திருக்கிறது.

கிளையுதிர்தலும், இலையுதிர்தலும் ஒன்றாவென்று வேரிடம் கேட்கும் மனதில், வேறிடம் இல்லையென்பதே வேர் அறிந்த ரகசியம் என்ற வார்த்தை விளையாட்டுகளில் மனம் லயிப்பற்றுக் கிடக்கிறது. ஆனாலும் எல்லாவற்றிலும் வேர்பிடித்திருக்கிறது. 

 நம்பிக்கையற்றுவிட்ட நம்பிக்கையிலே பிழைத்திருக்கப் பிரியப்படுகிறேன். நெருங்குவதற்கான கதவுகளை முழுக்க மூடிக்கொண்ட பின்னும், இருள் திறந்துவிடப் பிரியப்படுகிற சுவாசித்தலுக்கான வெளிச்சம் நிலவாய் மட்டும் இருந்துவிட்டுப் போகட்டும் என்பதில் மனம் கெட்டிப்படுகிறது.

 
என் டைரிகள் என்னை வந்து சேராத இந்த காலத்திலும்,  எனக்கான இடத்தை, நான் மட்டுமே வளர்க்கிற என் வனத்தை, தொலைந்த வழிப்போக்கன் ஒருவனின் பாடலில் தென்பட்ட சுகத்தைக் கொண்டு கடக்கப் பிரியப்படுகிறேன்..

.
 

மிச்சமிருக்கிறவரை அத்தனையும் செலவுகள் 

என்ற எனதிந்த வரிக்குள்ளே நான் பத்திரமாகிக்கொள்கிறேன்...



-ரேவா




வெள்ளி, 15 ஜனவரி, 2016

முகங்கள் (அருணா அக்கா)






மனிதர்கள் மீதான நம்பிக்கை தளர்ந்திடும் போதெல்லாம், தளர்வினும் மேலான அதிபலத்தை மனதிற்கு பாய்ச்சுபவர்களும் மனிதர்களாகவே தான் இருக்கிறார்கள்.

ஒன்றின் முகத்தை இன்னொன்றில்  நாம் பார்க்க நினைக்கும் போது ஏற்படுகிற அனுபவம்?!, நம் மனம் சார்ந்த அறிவின் விளக்கு..  

ஒளிச்சித்திரங்கள் நம் கைவண்ணங்கள்..  

அதில் ஒரு வண்ணம் இது  

அருணா அக்கா! சட்டென்று நாம் கடந்து போய்விடுகிற ஒரு சாமானிய மனுசி.. எனக்கும் அவர்க்குமான அறிமுகம் என் கல்லூரிக் காலங்களில் computer class க்கு அருகிலே Beauty parlour ஒன்றில் வேலைக்கு சேர்ந்த ஒருத்தியாகத் தான் எனக்குத் தெரியும்

சட்டென்று நம் மனிதத் திமிர் மீது ஏறிக்கொள்கிற நிறம் சில நேரங்களில் பச்சோந்தியை விட மோசமானது. அதை இன்றைய அனுபவத்தின்? வழியே உணர்கிறேன், அப்போதிருந்தே யாரையும் அருகில் அமர்த்திப் பேசுவதென்பது என்னளவில் கைவராத காரீயம்.. மனம் ஒத்துழைத்தால் மாறிப்போகிற என் சுபாவம் அருகிருப்பவர் மட்டுமே அறிந்த ஒன்று

தினமும் போய் வருவதில் அந்த முகம் ஏந்தியிருக்கும் சிரிப்பிற்கு பின்னிருக்கும் ஏதோ ஒரு பகிரப்படாத வேதனை வார்த்தைகள் தேடித் தவிப்பதாய் எனக்குத் தோன்றும். ஆனாலும் யார் வார்த்தைகளையும் அவர் அனுமதித்தாலும், வரையறைக்குள் வரையறை வைத்திருக்கிற என் அகராதி கொஞ்சம் அகராதி தான். :) 

முதன் முதலாய் Beauty parlour பிரவேசம். ஒரு வேற்றுகிரகவாசியாகிப் போன என் நிலையை இன்று நினைத்தாலும் எனக்கு சிரிப்புத்தான் வரும். அப்படியே என் சக தோழிகளோடு கிளாஸ் முடிந்ததும் வாய்ப்பிருக்கும் போதெல்லாம் பேசுகிற வாய்ப்பை முதல் முறை. நானே தேடிப் போய் அக்காவிடம் ஏற்படுத்திக்கொண்டேன். அதிகப் பிரசங்கித் தனமென்று மனம் சில நேரம் சொன்னாலும், நம்மால் கொடுக்க முடிந்த வார்த்தைகள் என்பது மீளமுடியாதென்ற நினைப்பில் இருப்பவர்களுக்கு ஒரு பெரும் பலம்..
அதை இப்போதும் நம்புகிறேன்

அது சரியாகுமா? இல்லையா என்றெல்லாம் தெரியாது, மனம் சில நேரங்களில் குருட்டுத்தனமாய் கையிலெடுத்துக்கொள்கிற மனதின் குணம் என்னை என்னளவில் நேர்மையாய் வழி நடத்தியிருக்கிறது என்றே இப்போதும் நம்புகிறேன்

வருடங்கள் பலவற்றை தின்றும், இப்போதும் எங்களிடம் தீராத வார்த்தைகள், எங்களின் வெயிலுக்கான நிழல். இதை அவரிடம் கூட நான் வெளிப்படுத்தியது கிடையாது. அவருக்கும் இதுபோன்றதொரு எண்ணமிருக்கிறதா என்றெல்லாம் கூட எனக்குத் தெரியாது. அன்பு ஓர் உள்ளார்ந்த அனுபவம். அது தன்னைத் தானே வெளிப்படுத்திக்கொள்ள நினைக்கும் தருணங்களைத் தவிர, மற்ற நேரங்களில் சும்மாய் கிடந்து அதை வேடிக்கை பார்ப்பது எனக்கு பிடித்த ஒரு விசயம்

அக்காவின் தனிப்பட்ட வாழ்க்கை மீதும், அதன் ரகசியங்கள் மீதும் எனக்கு எப்போதும் கேள்விகளோ, அந்த கேள்விகளோடான ஈர்ப்போ இருந்ததே இல்லை. புருவத் திருத்தத்திற்காக உட்காரும் நிமிடங்களில் கிடைக்கிற சொற்ப வார்த்தைகளோ அல்லது அந்த நிமிடங்களில் கிடைக்கிற மெளனத்தால் மனதில் பரவுகிற அமைதியோ எங்களுக்கு கொடுப்பது தனி பீல்.. 

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அக்காவின் வார்த்தைகள் ஒரு ஊற்றாகி என் முன் ஊறிக்கொண்டே கிடக்கும், அதை ஒரு பெளர்ணமியின் மொட்டைமாடி ரசித்தலைப் போல் அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பேன், காதுகளை வைத்து

சில நேரங்களில் அதீத உற்சாகமாகியிருக்கும் அவர் குரல், பல நேரங்களில் சலிப்பின் எல்லைக்குள் ஓர் தீவிரவாதத்தைப் பண்ணிக்கொண்டு நிற்கும். அப்போதெல்லாம் ஒரு கோமாளித்தனத்தை நான் ஏற்றுக்கொண்டுவிடுவது பின் வந்து பார்க்கையில் என்னை எனக்கே ஆச்சர்யப்படுத்துவது

அக்கா 35-ல் இருந்து 40 வயதிற்குள் இருக்கக்கூடியவள் என்பது இப்போதும் என் எண்ணம். திருமணமாகி 6 மாதத்திலே கணவனை இழந்து, கருவை சுமந்திருந்தவள் என்பது பழக்கத்தின் பின் நாட்களில் நான் தெரிந்துகொண்டது. அக்காவிற்கு வலது கண்ணில் சுத்தமாய் பார்வை இல்லை. இதையெல்லாம் இங்கே பதியவேண்டுமென்ற அவசியம் கூட இல்லை தான். இருந்தாலும் நம்மை நாம் சுமப்பதில், நம் கைமீறும் கட்டுப்பாட்டை சில நேரங்களில் கம்பேர் மைண்ட் என்னும் மோசமான சாத்தான் தட்டிப்பறித்திடாது இருக்கவே இதைச் சொல்கிறேன்

இருந்தாலும் இதுவும் ஒரு கம்பேரிசன் தான்
 எதற்கும் எதற்குமானது என்பது உங்களுக்கானது?  

வாழ்க்கையின் அத்தனை மேடுபள்ளங்களையும் ரசித்துக்கடப்பது என்பது அதை அப்படியே ஏற்பதால் மட்டுமே கிடைப்பது என்பதை சமீபங்களில் உணர்கிறேன்.. 

அக்காவிற்கு ஓரே பையன்..இப்போது அவன் கல்லூரி முதலாமாண்டு படிக்கிறான். அவன் பெயர் கூட எனக்குத் தெரியாது அல்லது ஞாபகத்தில் இல்லை

எப்போதும் குடும்பம் சார்ந்தோ இல்லை கைவிட்டுப் போன என் வேலை குறித்தோ என் நண்பர்கள், என் எழுத்து என எதாவது ஒன்றைக் குறித்தோ அன்றைய பேச்சு இருக்கும். எப்போதேனும் தப்பித் தவறி வந்துவிட்ட நாளிதழ்களில் என் கவிதையை படித்ததாகவும், ஒன்றுமே புரியவில்லை என்பதும் ஒரு புகாராக இருக்கும்.  

பார்வை குறைப்பாட்டால் தவறிவிடும் புருவத்திருத்தங்களின் கச்சிதத்திற்காய் சில நேரங்களில் வருகிற வாடிக்கையாளர்களிடம் திட்டுவாங்கிக்கொண்டு கைபிசைந்துகொண்டிருக்கிற அக்கா, என்னை எப்போதும் புருவத்திருத்தத்திற்கு வேறு இடத்திற்கு போகச் சொல்வாள், அவளுக்குத் தெரியாது, இது அவளை அணுக எனக்குக் கிடைத்த வாய்ப்பென்பது.  

நான் மறுத்திருக்கிறேன்..
பத்தோ பதினைந்தோ நாட்களில் வளர்ந்துவிடுகிற மயிர் என்னளவில்  
புற அழகை ஒத்திப்போடுவதால் என்ன கேடு நேர்ந்திடப்போகிறது


இதை ஒட்டி எப்போதும் எங்களிடம் வாக்குவாதம் உண்டு.. 
அந்த வாதங்களின் பிற்பாதியில் அவள் நேர்த்தியின் மீது அவளுக்கு நம்பிக்கையைக் கொண்டுவந்திருந்தது. ஆக அந்த வாக்குவாதங்கள் பின்னாட்களில் அப்படியே படிப்படியாக குறைந்தும் போயிற்று. 
 

அக்காள் சொந்தமாய் ஒரு பார்லர் தொடங்கினாள். கணிசமானபவர்களின் வருகை அவளுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கக்கூடும். 
தெம்பானாள்.. 

நவீனம் சில நேரங்கள் கொடூர அரக்கன்.  
தனக்குப் பொருத்தமில்லாதவரென்ற தன்முனைப்பு இல்லாதவரை தன் அசூரப்பசிக்கு விழுங்கிவிடும். நிறைய நவீன பார்லர்கள், வாய்க்குள் வராத ஆங்கிலப்பெயரில் அழகேற்றம் செய்ய, அது எதுவுமில்லா அவளும், அவள் பார்லரை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியும் காலத்தின் முன் ரசமிழந்து நிற்பதாய் எனக்குத் தோன்றும்

அவ்வப்போது அவள் பார்லர் சார்பில் நானும் கல்யாண பெண்களுக்கு மெஹந்தி இட்டும் விட்டிருக்கிறேன்

பின் நம் தனிச்சூழல், மனம்நம் வாழ்வு என்ற சுய நலப்போக்கு பார்லருக்குள் நுழையும் போதெல்லாம் நலம் விசாரிப்போடு எழுந்து வந்திருக்கிறேன்

நேற்று முன் தினமும் அப்படித்தான். பொங்கல் வேலைகளுக்கான ஏற்பில் உடல் சோர்வும், ஏதோ ஒரு மனச்சோர்வும்  இயங்கவிடாது இருக்கையில் அவள் கடைக்குள் சென்றுவிடலாமென்று தோன்றி சென்றுவிட்டேன்.. 

என் நண்பர்களை, பின் காலவட்டத்தில் ஓர் அரைப்புள்ளியாகக்கூட இல்லாமல், காணாமல் போவதை எல்லாம் அவள் பார்த்திருக்கிறாள், என் வார்த்தைகள் வெளிவராமல்.. அவளுக்குப் புரிந்திருக்கலாம். நான் என் மனதையோ வார்த்தைகளையோ சட்டென்று யாருக்காகவும் திறந்துவிடுவதில்லை. அவருக்கும் கூட..

நேற்று முன் தினம் சட்டென்று ஜெயகாந்தனைப் பற்றியும், புத்தரைப் பற்றியும், சுஜாதாவின் எழுத்துலகம் பற்றியும் அவள் பேச ஆரம்பிக்க நான் பிரம்மிப்பின் பித்தில் போய் நின்று கொண்டேன். சட்டென்று என்னை நானே ஒங்கி அறைவதைப் போன்ற உணர்வு. ஒரு உருவத்தின் மீது நாம் ஏற்றிக்கொள்கிற கனம் யாரின் கனம்? இதில் நம் அனுபவம் என்பது யாரின் கற்றல்? அல்லது யாருடைய கற்பித்தல்? ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி தொற்றிக்கொண்டது. அவளுக்கு பேஸ்புக் பற்றியும் அந்த மாய உலகத்தின் பின்னிருக்கும் விஷம அரசியல் பற்றியும், டிவிட்டர், கூகிளென்றும், உள்ளூர் விசயங்கள் குறித்தும் பேசியிருக்கிற எனக்கு ஏன் புத்தகங்களைப் பற்றி அவரிடம் பேசவில்லை என்று தோன்றியது

நாமே ஒரு யூகத்தில் எடுத்துக்கொண்ட அடுத்தவர்களின் அறிவை, நம் அறிவால் எந்தமுறையில் அளவிடுவது? அவள் நேற்றைக்கு ஒரு திறந்த புத்தகமாகி, எழுதா என் பக்கங்களில் எழுதிக்கொண்டிருந்தாள். நான் பிழைகண்டு நடுங்கிய சோர்வின் பிழைகளை அவள் பேசப் பேச திருத்திக்கொண்டே இருந்தேன்.. 

கிளம்பையில் எண்ணங்கள் வலிமையானது ரேவா என்றாள்
 
சட்டென்று தூக்கிவாரிப் போட்டது எனக்கு, என்னோடு இயங்குகிற என் அத்தனைபேருக்கும் தெரிந்த விசயம் நான் அடிக்கடி உபயோக்கிற வாக்கியம் இது.. மே பீ அவரிடமே கூட இதை நான் சொல்லியிருக்கலாம்.. 

நாம் கொடுக்கிற ஒன்று, நமக்கு வேறொன்றாய் திரும்பிவருவதை, எந்த ஒன்றின் ஒன்றால் என்று தேடிக் கொண்டிருக்கவேண்டிய தேவையில்லை. வருவதை ஏற்பதால் வாழலாம்.. 

அவரிடம் கனிவாய் பேசிவிட்டு, பழக்கப்படாத பொங்கல் வாழ்த்தையும் சொல்லிவிட்டு வந்தேன்.

 இனி அவளிடம் பேச நிறைய கதைகள் இருக்கிறதென்கிற உற்சாகம் எனக்கு போதுமானதாய் இருந்தது, எஞ்சிய விழாக்காலங்களைச் சுத்தப்படுத்த

இம்முறை புருவத்திருத்தம் முன்பை விட அழகாய் இருப்பதாய் என் தங்கை வேணி சொல்லிவிட்டாள்.. 

இதைவிட வேறென்ன வேண்டும், திருத்தம் வேண்டும் மனதிற்கான திருப்பத்திற்கு.. 

முகங்களைப் படிப்போம்..

இன்னும் பேசுவோம்

-ரேவா